“கவிதையின் சித்தாந்தம் என்ன என்பது இதுவரை எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு படைப்பின் வெற்றி என்பது அது கொண்டிருக்கும் உண்மையைப் பொறுத்தது” என்பார் என் பள்ளி ஆசிரியர் கந்தசாமி. வெற்றி என்பது அப்படைப்புக்கும், வாசகனுக்கும் உள்ள நெருக்கம் எனக் கொள்ளலாம். அந்த வகையில் முகுந்த் நாகராஜனின் இந்தத் தொகுப்பு, அது கொண்டிருக்கும் எளிமையாலும், நேர்மையாலும் வாசகனோடு நெருக்கம் கொள்கிறது. அதுவே இப்படைப்பின் வெற்றியாக நான் கருதுகிறேன்.

2003ல் வெளிவந்த “அகி” தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்ட முகுந்த் நாராஜனின் இரண்டாவது தொகுப்பு “ஒரு இரவில் 21 சென்டிமீட்டர் மழை பெய்தது”. எந்த வார்த்தை ஜாலமும், பாசங்கும் இல்லாமல் புதுக்கவிதைகளுக்குரிய அத்தனை சுதந்திரத்தோடும் வாசகனிடம் நேரடியாக, மிகத் தோழமையாக பகிர்ந்து கொள்வது இத்தொகுப்பின் சிறப்பு

தமிழில் குழந்தை இலக்கியம் என்று தனியாக குழந்தைகளுக்காக எழுத்தாளர் ரேவதி போன்றோர் இயங்கி வந்தாலும் குழந்தைகளைப் பற்றிய இலக்கியம் என்பது வெகு அரிதாகவே உள்ளது (அதாவது குழந்தைகளைப்பற்றிய பதிவுகள்). அவற்றுள் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் கவின்குறுனூறு என்னைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தகுந்தது. அதற்குப் பிறகு என்னைக் கவர்ந்தது முகுந்த் நாகராஜனின் இந்த தொகுப்புதான். ஆனால் இவற்றுள் சில கவிதைகள் வேறுபட்டிருந்தாலும் சொல்லும் தொனியில் ஒர் அழகான குழந்தைத்தன்மை தென்படுவதாக நான் உணர்கிறேன்.

வீட்டிலோ, தெருவிலோ நடந்த ஒரு சம்பவத்தை, குழந்தைகள், அவர்களுக்கேயான மழலை மொழியில் தன் வகுப்புத் தோழர்களோடு பகிர்ந்து கொள்வதை பார்த்திருக்கிறார்களா? அதை அழகாக பதிவு செய்கிறார்.

அந்த சின்னக் கல்லை மெதுவாக
உதைத்து உதைத்து முன்னேற்றி
தன் கூடவே பள்ளி வரை
அழைத்துக்கொண்டு போகும் காரியத்தில்
கவனமாக இருந்தவள்
எதிரே வந்த தெரு நாயைக்
கொஞ்சம் தாமதமாகத்தான்
கண்டுகொண்டாள்.
அமைதியான அந்த நாய்க்கு
பயந்து விலகிய போது
சின்னக் கன்றுக்குட்டி ஒன்று
பின்னால் இருந்து ஓடி வந்து
அவளை சற்றே உரசிச் சென்றது
கூட்டிக் கொண்டு வந்த கல்லை
அப்படியே விட்டுவிட்டு
விரைந்து நடந்தாள்,
முகத்தில் ஆர்வம் பொங்க.
இந்த சம்பவத்தை தன்
தோழிகளுக்கு எல்லாம் எடுத்துச் சொல்ல
அவளுக்கு
ஒரு பீரியடு போதுமோ,
ரெண்டு பீரியடு ஆகுமோ.

ஓட்டலில் பார்சலுக்கு ஆர்டர் தருவித்து விட்டு காத்திருக்கும் வேளையில், அப்பாவின் கைகளில் அமர்ந்து, வேகமாகவும், லாவகமாகவும் சர்வரால் மடிக்கப்படும் பார்சல் ஒவ்வொன்றையும் உரிமை கொண்டாடும் குழந்தைகளின் தனித்த இயல்புகளை ரசித்திருக்கிறீர்களா? முகுந்த்தின் நுட்பமான பதிவு,

எதனாலோ அந்த தோசையை
பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.
அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு
அந்த தோசையைச் சுட்டிக்காட்டி
அது தன்னுடையது என்று
முன்பதிவு செய்துகொண்டது
இதை கவனிக்காமல் அந்த தோசையை
என் பார்சலில் வைத்துக்
கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.
மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு
வெளியே வரும்வரை
திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்
என் கை நடுங்கிக் கொண்டிருந்தது.

அம்மாக்கள் மட்டும்தான் குழந்தைகளின் மொழிகளையும், நுட்பங்களையும் உண்ர்வார்கள். உலகமே நின்று போய்விடும் என்றாலும் கூட குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவதையே குறிக்கோளைக் கொள்ளும் தேவதைகள் அம்மாக்கள். ஒரு அம்மா தன் குழந்தையின் செல்லப் பிழைகளைக் கூட வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லி புளகாங்கிதம் அடைகிறாள்,

போனவாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
“சொந்தமாக விழுந்து உடைஞ்சி போச்சு”
என்ற வாக்கியத்தை பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்திவைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக்கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.

முகுந்த்தின் உவமைகள் குறிப்பிடத்தகுந்தவை. பல முறை கையாளப்பட்ட சலிப்பூட்டும் உவமைகளை தவிர்த்து புத்தம் புதியவைகளை கையாள்கிறார்.

ஒவ்வொரு துளியும் நாவில்
எலுமிச்சம் பூவாய் பூத்து
பவுடர் போட்டுவிட்ட கைக்குழந்தை போல்
மென்மையாக நழுவியது

சனிக்கிழமை ஒளிபரப்பாகி வந்த தொலைக்காட்சித் தொடர் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டு விட்டதால், சனிக்கிழமை போல் தோற்றம் கொண்ட வெள்ளிக்கிழமையை அழகான உவமை கொண்டு விளக்குகிறார்,

பெரிய அக்காவின் உடை அணிந்து கொண்டு
விளையாடும் குட்டித் தங்கையை
வேடிக்கை பார்ப்பது போல்
வெள்ளிக்கிழமையை வேடிக்கை பார்த்தேன்".

கடைசியாக,

என் பங்கு சூரியனை
நான் பல வழிகளில்
செலவழித்துவிட்டேன்
மாரியம்மன் கோயில் வாசல்
பெட்டிக்கடையில் வாங்கிய
ஃபிலிமில் ஊடுருவி
............................
..............................
என் பங்கு தீர்ந்துவிட்டது
இப்போது என் நிழல் கிழே விழுவதில்லை

என்று முடியும்போது, தீர்ந்துபோன நம் பங்கையும், கிழே விழாத நிழாத நம் நிழலையும் உணர்கிறோம். மீதமிருக்கும் ஐம்பது காசுக்கு தரப்படும் எல்லா மிட்டாய்களும் நம்மைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். ஆனால் அம்மிட்டாய்களுக்குக்கிடையில் உள்ள தனித்த சுவையை குழந்தைகள் மட்டும்தான் அறிவார்கள்.

அம்மிட்டாய்களுக்குக்கிடையில் உள்ள
நுட்பமான வேறுபாட்டை அறிய
நம் எல்லோருக்கும் வேண்டும்
குழந்தை மனது

என்று கவிஞர் யுகபாரதி குறிப்பிடுவது போல், முகுந்த் நாகராஜனின் இந்த நுட்பமான பதிவுகளை உணர நமக்கும் வேண்டும் குழந்தை மனது.

- ஜெயாராமசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It