காலம், எல்லை கடந்து நாட்டை வளப்படுத்திச் செல்லும் பதினோறு நதிகளைப் போல, பதினோறு கட்டுரைகளின் மூலம் இலக்கியங்களின் ஊடே, இலக்கியவாதிகளின் ஊடே கடந்து தமிழிலக்கிய வரலாற்றுக்குள் வருகிறது, முனைவர் ஆ.மணவழகனின் ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இந்நூல். சங்கத் தமிழ் குறித்து மூன்று; கவிதை மற்றும் படைப்பாளர்கள் குறித்து ஐந்து அறிவியல் தமிழ் குறித்து ஒன்று இணையத்தமிழ் குறித்து இரண்டு என, பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழ் ஆய்வு நிறுவனங்களில் ஆய்வுக் கட்டுரைப் பூக்களாக வழங்கியவற்றைத் தொகுத்தளித்து மாலையாக இந்நூலை செவ்வியல் தமிழணங்கிற்குச் சூட்டியுள்ளார்.

தமிழ் மட்டுமே தெரிந்தவர்களைவிட, பிறதுறைப் புலமையும் பயிற்சியும் அறிந்தவர்களால் தமிழ்மொழிக்கு சிறந்த பங்களிப்பைத் தரமுடியும். அத்தகையோரே தமிழ்மொழியின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தேவையாக இருக்க முடியும். இந்நிலையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகவும் தொழில்நுட்பம் மற்றும் கணினி-இணையப் பயிற்சியும் அறிதலும் கொண்டவர் தம்பி ஆ. மணவழகன்.

தமிழ்க்கோட்பாடுகளில் களவு-கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டு, மாத ஊதிய மையத்தில் கவிதை நூல்களுடன் கடமைப் பயணத்தைத் தொடங்கும் காளையர்கள் மத்தியில், திட்டமிட்டு தொலைநோக்குடன் ஆக்கம் நிறைந்த கட்டுரைகளுடன் இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு தடம் காட்டுபவராகத் திகழ்வது பராட்டுக்குரியது.

சமயங்களிலும் நவீனகாலத்திலும் மேலைநாட்டு ஆய்வுகளின் புதியபோக்குகள் புதுமை போற்றுதலாகவும் அவர்களது அறிவு மேம்பாடாகவும் கீழை நாட்டினரால் கருதப்படுகின்றன. அவர்கள் அரசியல்-பொருளாதார-சமூகச் சூழல்தான் அதற்கான முக்கிய காரணங்கள். நவீன கலை-இலக்கிய ஆய்வுப் போக்குகளில் அவர்கள் கையாளும் ‘கலைச்சொற்களும்’ பொருண்மைகளும் புதிய தோற்றங்களைத் தரலாம். ஆனால் அவற்றின் உள்ளார்ந்த கூறுகள் செம்மொழிகளின் பண்டைய இலக்கியங்கள் தொட்டே அமைந்து கிடப்பன இயல்பாகவுள்ளது. பண்பட்ட மொழியாகிய பைந்தமிழ் மொழியின் பண்டைய இலக்கியங்களில் இத்தகைய அணுகுமுறைகளை மேற்கொண்டதன் விளையே சங்க இலக்கியங்களில் மூன்று கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கம் பெற்றுள்ளது.

எந்த ஒரு நிறுவனத்தின் திட்டமும் செயலும் ஏன்? அந்த நிறுவனம் சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியும் மேன்மையடைய வேண்டுமென்றால், அவற்றின் மேலாண்மை (நிர்வாகம்) திறம்பட இருக்க வேண்டும். இன்று நிலம்-நீர்-நெருப்பு-காற்று-ஆகாயவெளி ஆகிய ஐம்பூதங்களையும் நிர்வாகம் செய்ய பூமியில் பலதுறைகள் செயல்படுகின்றன. ‘மேலாண்மை’ என்ற சொல் அனைவரையும் ஈர்த்த ஒன்றாக இருக்கிறது. இத்தகைய மேலாண்மையின் கூறுகள் சங்க காலத்திலேயே பழந்தமிழர் வாழ்க்கையில் காணப்பட்டமையும் கையாளப்பட்டமையும் பற்றி விளக்குகிறது முதன் இரண்டு கட்டுரைகள்.

அன்று பழந்தமிழர் வாழ்வில், உணவின்தேவை, வேளாண் குடியைக் காத்தல், மனிதவளம் காத்தல், மழைவளம் பெருக்கும் வழிகள், நீர் ஆதாரங்களை அதிகரிக்கச் செய்வது, மண்வளம், உற்பத்திப் பெருக்கம், விளைநிலம், வேளாண் தொழில்வளம், வேளாண் கருவிகள் ஆகியவற்றின் முறைமைகளைப்,பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. உழவின் பெருமையை உலகுக்கு உணர்தியவர்கள் இன்று உணவுக்குப்படும் பாடுகளை எண்ணுகையில் இந்தப் பழந்தமிழ் வேளாண்மேலாண்மைக் கட்டுரை ஒருவேளை பசியாறியது போலுள்ளது.

இரண்டாவது கட்டுரை ‘சங்க இலக்கியத்தில் நீர்மேலாண்மை’. தாகம் தீர்க்கத் தண்ணீரைத் தேடியதைப் போல் தற்காலச் சிக்கலை தவிர்த்து வாழ்ந்த பழந்தமிழர் வாழ்வின் நீர் மேலாண்மை அறிய முயன்றதன் விளைவாக இக்கட்டுரை அமைந்துள்ளது. நவீன புள்ளி விவரங்களோடு தொடங்கும் இக்கட்டுரை நீர்நிலைகளின் தேவை, நீர்த்தடுப்பு, மழைநீர்ச் சேமிப்பு, பாசனம், குடிநீர், மழைவளம் பெருக்கும் வழிகள் ஆகிய நிலைகளில் பழந்தமிழர் கையாண்ட எளிமையான நீரியல் தொடர்பான தொழில்நுட்பங்களை இலக்கியச் சான்றுகளோடு விளக்குகிறது.

மனிதன் வசிக்கும் வீடுகள் அவன் சமூகத்தேவைகளான ஆலயம், அரண்மனைகள், வணிக வளாகம், பொழுதுபோக்கு போன்ற பொதுவான, நாட்டின் வடிவம் எல்லாவற்றையும் வனப்பும் அமைப்பும் செய்தன கட்டுமான தொழில்நுட்பம். இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பத் துறை இதுவே எனலாம். இத்துறையில் பழந்தமிழர் நிலையைப் பற்றி அறிந்த விளைவுதான் ‘பழந்தமிழர் கட்டுமான நுட்பங்களும் பயன்பாட்டுப்பொருள்களும் எனும் கட்டுரை.

பருவநிலைக்கேற்ற முறையில் மாட மாளிகைகள், நகரம்,மாநகரங்கள், சுகாதாரம், பொழுதுபோக்கு, அரண்கள், அரங்குகள், நீர்நிலைகள், பாதுகாப்பு அரண்கள், துறைமுகங்கள், போன்றவற்றை திட்டமிட்ட முறைகளும், கட்டுமான பொருள்களும் ஆகிய பல்வேறு நிலைகளில் பழந்தமிழரின் தொழில்நுட்பங்களை இலக்கியச் சான்றுகளுடன் விளக்குகிறது.

கவிதையும் படைப்பாளிகளும்

எழுத்தாய்வு, சொல்லாய்வு, நூற்பதிப்பு ஆகியவற்றில் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்து தனித்துவம் பெற்ற தமிழ்ப் பேராசிரியராகவும், பன்பொழிப் புலமையும் பன்னூற் பயிற்சியும் பெற்றிருந்த சென்ற நூற்றாண்டு தமிழறிஞர் செல்வக்கேசவராயர் படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை, கடந்த நூற்றாண்டுகளின் பெருமைக்குரிய தமிழறிஞர்களின் சிறந்த பணிகளை அடுத்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தமிழ்த்துறையாளர்களது கடமையை நமக்கு உணர்த்துமாறு அமைந்துள்ளது.

‘இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப்பாரை உயர்த்தவேண்டும்’ ‘அன்னயாவினும் புண்ணியங்கோடி/ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ போன்ற கல்வியல் தொடர்பான உன்னதவரிகளை உலகுக்களித்த உலகியல் தீர்க்கதரிசி மாகாகவி பாரதியின் கல்வியியல் தொலைநோக்குச் சிந்தனைகளை தொகுத்து விளக்கும் முயற்சியில் விளைந்த கட்டுரை. ‘பாரதி - கல்வியியல் தொலைநோக்கு’ என்பது. தமிழ் வழிக்கல்வி, பாடத்திட்டம், வரலாறு, புவியியல், சமயம், சமூகம், பொருளாதாரம், அறிவியல், தொழிற்கல்வி, பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், இலவசக் கல்வி உள்ளடங்கிய கல்வியியல் தொடர்பான பாரதியின் பல்நோக்கு கருத்துகளை விளக்கும் கட்டுரையாக அமைந்துள்ளது.

பாரதியின் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பான கவிதைகளுக்கு கிடைத்த வரவேற்பு அவரது கட்டுரைகளுக்குத் கிடைப்பதில்லை. இக்கட்டுரையில் ஆய்வாளர் மணவழகன் பாரதியாரின் கவிதைச்சான்றுகளை விட பல்வேறு கட்டுரைச் சான்றுகளைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பாரதியாரின் கட்டுரைகளைப் படிக்கத்தூண்டும் ஆர்வம்தனை மேலிடச்செய்யும்.

50 ஆண்டுகள் இலக்கிய பணியாற்றிய க.நா.சு. ‘எழுத்து’ இயக்கத்தில் தொடக்கத்தில் ‘மயன்’ என்ற பெயரின் கவிதைகள் எழுதினார். விமர்சன உலகில் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் சூழலை ஏற்படுத்திக் கொண்டவர். இவருடைய அபிப்பிராயத்தில் உடன் படுவோரும் வேறுபடுவோரும் இவர் என்ன சொல்லுகிறார் என்பதை அக்கறையுடன் கவனிப்பார்கள்.

இத்தகைய க.நா.சு.வின் கவிதைத் தடத்தை தனது கட்டுரைகளுள் ஒன்றாக்கிய விதம் குறிப்பிடத்தக்கது. க.நா.சு கவிதைகளின் இடைவெளி, தனித்தன்மைகள், வேறுபட்ட கவிதைப் போக்குகள், பிறவதன்மைகளை கவிதைச் சான்றுகளுடன் விளங்ஙியுள்ளது இக்கட்டுரை. பழைய இலக்கியங்களுக்குள் பாய்ந்து சென்று கருத்துகளைத் திரட்டும் மணவழகன், புதிய இலக்கியங்களிலும் புகுந்து வரத் தெரிந்தவர் என்பதை இக்கட்டுரை காட்டுகிறது.

‘என்னுயிரைத் தூக்கி எறிந்து தமிழணங்கே! அன்னை நினதுயிராய் ஆவேன் நான்’ என்று சூளுரைக்கும் தமிழ்ப் பேனாவால், ‘கொடியொடு படையொடு முடியொடு/ தமிழின விடுதலை கிடையாதோ?’ என, வீறுகொண்டு கவிதை படைக்கும் ஈழ தேசியக் கவியாக வாழ்ந்துவரும் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகளில் ‘மொழி, இனம், நாடு’ என்னும் கட்டுரை இந்நூலில் அமைந்துள்ளது. கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகளில் இவற்றைத் தவிர வேறு எவை இருக்க முடியும் என்று ஆவேசமாகத் தோன்றும். அந்த ஆவேசத்தைத் தணித்து ஒரு இயல்பான சுவாசத்தை அடையச் செய்வதாய் இக்கட்டுரை நிதானித்துச் செல்கிறது.

உயிர்ப்புள்ள உணர்ச்சிகளைத் தரும் கவிதைகளில் தமிழ்மொழியின் இனத்தின் பெருமைகளைப் பேசுவதோடு, இன்று அதன் இழிநிலையைச் சுட்டுவதும், மொழிச்சிறப்பை உணராதவரைப் பழிப்பதும், எதிரிகளை எச்சரிப்பதும் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை கட்டுரை கருத்துகள் சான்றுடன் தெளிவுபடுத்துகின்றன.

கிராமத்தவரைவிட கிராமங்களின் இருத்தலியம், துணையும் தோழமையும் உறவுகளும் கண்ணெதிரே சிதைந்து கொண்டிருக்கும் நிகழ்வேதனை, மக்களினும் மேலாக நேசித்த மாக்களும் அழிகின்ற அவலம், பிழைத்தல் பொருட்டு நகரம் நகர்ந்தாலும் குருதியோட்டத்தில் மறதியாகாத மண்ணின் நினைவுகள் இப்படிக் மண்சார்ந்த விதைகளில் மண்சார்பு கட்டுமான பொருட்கள் (கரு, உரி,முதற்பொருகள், இன்னும உவமைகள், வடிவம், உத்திகள் மொழி) எல்லாமே மண்சார்ந்து அமைந்து போவது இயல்பாகிக் கிடக்கின்றன. தங்கள் வேதனைகளுக்கு நிவாரணமாக சுகம் தடவிய வலி மாத்திரைகளை நாள்தோறும் உண்பவர்களாய் மண்சார்ந்த கவிஞர்கள்...அவற்றையே கவிதைகளாகவும் தருவதை இக்கட்டுரை கண்களில் நீர்த்திரையிடுகிறது.

அறிவியல் தமிழ்குறித்து குரல்கள் எழுகின்ற அளவிற்கு செயல்கள் நடைபெறுகின்றனவா? என்ற கேள்விக்கான பதிலாக ‘அறிவியல் தமிழ் ஆய்வுகள்’ என்னும் கட்டுரை அமைகிறது. அறிவியல் தமிழ் தொடர்பான அறிவியல் மொழி, கலைச் சொற்கள், தமிழாக்கம் ஆகிய நிலைகளை விளக்குவதோடு அதற்கான இதழ்கள், மற்றும் அமைப்புகளைப் பற்றிய தகவல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அறிவியல் தமிழ் படைப்பில் அறிவியல் அறிஞர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் கூட்டு முயற்சி வலியுறுத்தப்படவேண்டியது. அறிவியல் தமிழாக்கத்தில் தமிழறிஞர்களை நாடுதல் தேவையற்றத்து என்ற சிலரின் கூற்றும் செயலும் அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தேக்கத்தை விளைவிக்கும் என்பதே உண்மை (ப.129) என்ற கட்டுரையாளரின் கருத்தும் விளக்கமும் தொடர்புடையவர்கள் ஒப்புக்கொண்டு செயல்பட வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறது.

தமிழின் எதிர்காலவியலை எதிர்கொள்ள இணையத் தமிலக்கியம் குறித்த கவனமும் ஆய்வுகளும் அடிப்படைத் தேவைகளாகின்றன. இந்நூலாசிரியரின் நோக்கும் தமிழ் எதிர்காலவியலைச் சந்திக்கப் போகும் அவரது போக்கும் இணையம் குறித்த இரண்டு கட்டுரைகளில் இந்நூலில் தர வைத்துள்ளது. ‘நாளும் இன்னிசையால் நல்லதமிழ் வளர்ப்போம்’ என்ற நிலை மாறி, ‘நாளும் இணையத்தால் இனிதே தமிழ் வளர்ப்போம்’ என்ற நிலையை அடைந்துள்ளோம்’ (ப.153) என்று மணவழகன் குறிப்பிடுவது, இடைக்காலத்தில் பக்தி இயக்கங்களால் ஏற்பட்ட தமிழிலக்கியச் செழிப்பைப்போல், இக்கால இணைய இயக்கம் தமிழிலக்கியத் தளத்தைச் செழித்தோங்கச் செய்யும் என்ற நம்பிக்கையை வெற்றிக்கு இட்டுச்செல்கிறது.

இணையங்களில் சிறப்பிடம் பெறும் கவிதைகளம் பற்றிய கட்டுரைக் கருத்துகள் கவிதைகள் சிறப்பாக உள்ளன.

‘வங்கியின் வயிற்றை நிரப்பும் வேகத்தில் / எங்கள் மனசை பட்டினியிடாதே
நான் வேண்டுவதெல்லாம் / ஐந்திலக்க அமெரிக்க டாலர்ளை விட
நலமென உன் கரம் எழுதும் - ஒரு / நான்கு வரி கடிதம்தான்’
என்ற கன்னியாகுமரியில் பிறந்து அமெரிக்காவில் பணியாற்றும் சேவியரின் கவிதை;

‘இருந்தும் இல்லாமல் / போனதைத் தவிர / மற்ற எல்லாம்தான் / இருக்கிறது/
மனிதர்களைத் / தனிமைப் படுத்தும் விஞ்ஞான வளர்ச்சி/

என்ற புகாரியின் கவிதை; இக்கவிதைகள் போன்ற பல நல்ல கவிதைகள் இணையப் பார்க்க முடியாத வாசகர்களுக்கு கட்டுரை மூலம் வாசிக்கும் வாய்ப்புகளுக்குப் பாராட்ட வேண்டும்.

‘எதிர்காலவியல் பற்றிய விழிப்புணர்வு எல்லாத் துறையினருக்கும் வேண்டியச் சூழலில் இருக்கின்றோம். மொழி இலக்கியம் சார்ந்தவன் என்ற முறையில் மணவழகன், ‘இணையத் தமிழும் எதிர்காலவியலும்’ என்ற நோக்கில் ஒரு கட்டுரை படைத்துள்ளார். கணினி, இணைய அறிவின்றி ஒருவர் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாது. இணையத்திற்கேற்ற தமிழ், இணைய பக்கங்கள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள், கணினிமொழி மென்பொருட்கள் தொடர்பான விவரங்களை அடைப்படை முதல் கற்றறிந்திடும் நிலையை அனைவரும் பெறவேண்டிய அவசியத்தை இக்கட்டுரை உணர வைக்கிறது.

தனது முதல் நூலான, ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையில், எல்லைக்கோட்டைத் தொட்டுவிட ஓடுவோர் மத்தியல் தன் எல்லைக்கோடு எதுவென கண்டுவிட ஓடும் ஓட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் (முன்னுரையில்). தன் எல்லைக் கோட்டினை அடையாளம் கண்டு அதற்கான தடத்தைத் தேர்வை செய்துவிட்டார் இனி இலக்குதான் முக்கியம்.

இந்நூலின் பதினோறு கட்டுரைகள் கடந்தகாலம் (சங்ககாலம்), நிகழ்காலம் (கவிதையும் படைப்பாளிகளும்), எதிர்காலம் (அறிவியல்+இணையதமிழ்) ஆகிய முக்காலத்து மொழி இலக்கியம் குறித்த கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளைக் கொண்டமைகிறது. இந்நூலின் ஒவ்வொரு கட்டுரைகளும் அந்தந்த துறைசார்ந்து மாணவர்களுக்குப் பாடமாக வைக்கலாம். அதற்குரிய தகுதியும் தரவுகளும் உள்ளது. இந்நூல் கட்டுரைகள் பலதொடர் ஆய்வுகளுக்கு வழிவகுகின்றன. தமிழ் செம்மொழி என்பதற்குரிய அறிதலுக்கும், உணர்த்துதலுக்கும் இதுபோன்ற இளம் தலைமுறை ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படக்கூடியன. இன்றைய இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு சிறந்த முன்னோடியாக உருவாகி வருகிறார் தம்பி மணவழகன்.

இக்கட்டுரைகளின் மொழிநடை இயல்பாக மிகை அலங்காரம் தவிர்க்கப்பட்டு தொடர்வாசிப்பிற்கேற்றவாறு அமைந்துள்ளது.

ஆசிரியருக்கு பல்துறை ஈடுபாடு இருந்தபோதும், கட்டுரைகளுக்கு ஏற்ற களங்களில் நின்று கருத்துக்கள்கூறும் பாங்கு பாராட்டுக்குரியது.

கட்டுரை முடிவுகளில் கட்டுரையின் சாரத்தைத் துளிகளாகத் தந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல் சேகரிப்பும் சான்றாதாரங்கள் தருதலும் அவரது உழைப்பைக் காட்டுகின்றன. இணைப்பாகத் தந்திருக்கும் தமிழ் இணைய பக்கங்கள் (143 இணையதள முகவரிகள்) பயன்தரத்தக்க பணியாகும்.

கால அடிப்படையில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பென்ற போதும் நூலிற்கு ஒரு பொருள் இயல்பை வலிய புகுத்திட வாய்ப்பிருந்தது. இது இயல்பாக அமைந்தது. உறைவிடன் , உணவு போன்ற அடிப்படை வாழ்க்கை குறித்த கட்டுரைகளோடு ‘உடை’ பற்றிய கட்டுரையும் இருந்தால் சிறப்பாக அமையும். வருங்காலங்களில் பொருள் அடிப்படையில் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட நாலாக வருவது முழுமையான ஆய்வுகளைத் தமிழுலகிற்கு மணவழகனிடமிருந்து பெற்றுத்தரும்.

நூல் - சங்க இலக்கியத்தில் மேலாண்மை
ஆசிரியர் - முனைவர் ஆ. மணவழகன்
பேராசிரியர், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.
வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை.

Pin It