கவிதை என்பது மனதின் ஆழம் வரை சென்று ஆலாபனை செய்வது, உயிரின் நரம்புகளில் உயிரோவியமாய் உணர்வுகளைத் தீட்டவல்லது. நல்ல கவிதை மனவெளிகளில் மழை பொழியச்செய்து சிந்தனைகளுக்கு உயிர்கொடுக்கும்.

நான்கு இதழ்கள் எழுதும் நவரசகவிதை முத்தம். முத்தத்தை மையமாக வைத்து கவிதைச்சிற்பம் செதுக்கியிருக்கிறார் கவிஞர் ஜெ.நம்பிராஜன்.

உன் மேல் உதடு சூரியன்...
கீழ் உதடு சந்திரன்
ஒரே முத்தத்தில்
உருக வைக்கும் வெயிலையும்
உறைய வைக்கும் பனியையும்
என் மேல் செலுத்துகிறாய்.

என்ற கவிதையை வாசிக்கும் பொழுது மனம் காதலின் உருகுநிலைக்கும் உறைநிலைக்கும் சென்று திரும்புகிறது. ஊடலின் தாழ்ப்பாள், கூடலின் திறவுகோல் முத்தம்.முத்தத்தின் சுவை எது? இனிப்பா, புளிப்பா, கசப்பா? (ரசனைக்கு அப்பாற்பட்டது).

நீ விவசாயி
நான் விளைநிலம்
என்னுள் மோகத்தை விதைத்து
முத்தத்தை அறுவடை செய்கிறாய்.

என்னும் வரிகளில் முத்தத்தின் வாசனை உயிரின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது.

உன் ஒவ்வொரு முத்தமும்
ஓர் முள்
அதை...
மறு முத்தத்தால் தான்
எடுக்க வேண்டும்.
உன் இதழ் தேனடை
அதில் தேனெடுக்கும் போது மட்டுமே
தேனீக்கள் கொட்டுவதில்லை.
எத்தனை முறை குடித்தாலும்
தீராத மதுப்புட்டி
உன் இதழ்
எவ்வளவு குடித்தாலும்
ஆசை அடங்காத பெருங்குடிகாரன்
நான்.

போன்ற கவிதைகளில் கவித்துவ வாசனை மனதை ஆக்கிரமிக்கிறது.
யுத்தங்கள் - இரு நாடுகளைப் பிளவுபடுத்தும்
சத்தங்கள் - இரு செவிகளை ரணப்படுத்தும்
முத்தங்கள் - இரு இதயத்தை வசப்படுத்தும்
அந்த வகையில் சத்தமில்லாமல் யுத்தம் செய்கிறது முத்தத்தின் நிறைகுடம் எனும் இக்கவிதைத் தொகுப்பு.
நேசமுடன்
பா.விஜய்

முத்தத்தின் நிறைகுடம்
ஜெ.நம்பிராஜன்
வெளியீடு: ஜெயஸ்ரீ பதிப்பகம்
விலை: ரூ30/-

Pin It