ஆசிரியர்: ப. திருமா வேலன்
வெளியீடு: ‘தென் திசை’-வெளியீடு
கேகே புக்ஸ் பி.லிட்.,
19, சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்)
தியாகராயர் நகர், சென்னை-17

நூலின் முன்னுரையிலிருந்து...

பெரியார் இன்னும் முழுமையாக அறியப்படாத மனிதராக இருக்கிறார். அவரை தங்களவராக சொந்தம் கொண்டாடியிருக்க வேண்டிய கம்யூனிஸ்ட்டுகள், வறட்டு நாத்திகர் என்றும் நிலபிரபுத்துவவாதி என்றும் ஜனநாயகம் மறுத்த சர்வாதிகாரி என்றும் புறம் தள்ளி அவதூறு சேறு பூசியதை தமிழகத்தின் கெட்டகாலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தாஷ்கண்டில் (1922) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு, கான்பூரில்(1925) முதல் மாநாடு கூட்டினாலும் தமிழகத்தில் அந்த கொள்கையை அறிமுகப்படுத்தும் அடிப்படை வேலைகளுக்கு ஆரம்பமாக இருந்தவர் பெரியார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதில் தொடங்கி, சோவியத் பூமி பற்றிய நிலவரத்தை அறிமுகப்படுத்தியது வரையிலான (1930-1935) தொடக்க நிலை ஆண்டுகள், கம்யூனிஸ்ட் கட்டுமானத்தை தமிழகத்தில் நிலைநிறுத்த பெரியாரின் முக்கிய பங்களிப்பானது. எடுத்துப் பார்த்துக் கொள்ள மூலப்புத்தகம் எதுவும் இல்லாத சுயசிந்தனையாளரான பெரியாரின் அருகில் இருந்து வசப்படுத்தாமல், விலகி நின்று விமர்சனங்களை செய்ததன் விளைவு கம்யூனிஸ்ட் இயக்கமும் பெரியார் இயக்கமும் வேறுவேறு திசையில் பயணித்தது.

ஆனாலும் பெரியார், கம்யூனிஸ்ட் அடிப்படை தத்துவங்களுக்கு முரணாக வாழ்நாளில் எந்தக் கட்டத்திலும் பயணிக்கவில்லை. இயக்கம் காத்து, தத்துவத்தை முன்னெடுக்கலாம் என்று பெரியார் 1935 இல் சொன்னதை, இருபதாண்டுகள் கழித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றியது வரலாறு.

பெரியாரின் இயக்கத்தை சுயநல மரியாதையாகவும், பரந்துபட்ட இடதுசாரி சூழ்ச்சியாகவும் காட்ட முயற்சிக்கும் விமர்சனங்களின் பின்னால் இருக்கும் சுயநலத்தையும், சூழ்ச்சியையும் தான் தேர்தலுக்கு தேர்தல் நாடு பார்த்து வருகிறது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்களும் பெரியாரை தங்களது நெருங்கிய சக்தியாக ஏற்று வருவது வரவேற்கத்தக்க மாற்றம்.

இப்படியொரு சூழலில் பெரியாரின் ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ என்ற கட்டுரை மீண்டும் வெளியே வருகிறது.

பெரியார் சோவியத் சென்று வந்த பின்னால், அவரது ஒவ்வொரு அசைவையும் பிரிட்டிஷ் அரசு கண்காணித்தது. ‘குடிஅரசு’ இதழில் தனது எண்ணங்களை, சுற்றுப் பயணத்தை, பேச்சை மறைக்காமல் பெரியார் வெளியிட்டு வந்தது அரசுக்கு வாய்ப்பாக அமைந்தது. அவை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேலிடத்துக்கு அனுப்பப்பட்டு வந்தன. இன்னும் அமைப்பு ரீதியாக, தமிழகத்தில் முழுமையாக கட்டமைக்கப்படாத கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக செல்வாக்குமிக்க தலைவராக இயங்கிய பெரியார் பிரச்சாரகராக மாறிக் கொண்டிருப்பதை தட்டி வைக்க நினைத்த அரசு, அவரது எழுத்துகளுக்கு தடை போடலாம் என்று முதல் முடிவு எடுத்தது.

“இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” என்ற தலையங்கம் ‘குடி அரசு’வில் 29.10.1933-ல் வெளியானது. இன்றைய அரசாங்கம் பணக்காரர்களுக்கு சார்பாக இருக்கிறது. பொதுமக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்படும் பணம் கூட இவர்களுக்கு தான் பயன்படுகிறது, கல்வித் துறையில் பணியாற்றும் உயர்சாதியினர் ஊதியம் என்ற பெயரால் இந்த வரிப்பணத்தை வாங்கிச் சென்று விடுகிறார்கள் - என்று இந்த தலையங்கத்தில் பெரியார் குற்றம் சாட்டினார். ஏழைகளிடம் வசூல் செய்த பணத்தை பணக்காரர்களும், பதவியில் இருப்பவர்களும் பிரித்துக் கொள்ளும் இந்த அமைப்பு முறைக்கு, ‘கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம்’ என்று பெயரும் கொடுத்தார். இந்த ஒன்றுக்காவது இன்றைய ஆட்சியானது அழிக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பும் சொன்னார்.

இந்த தலையங்கம் அரசு துவேஷம் என்ர பெயரால் பெரியார் மீது பாய காரணமானது. எழுதியவர் என்ற முறையில் பெரியாரும் ‘குடிஅரசு’ வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் (பெரியாரின் தங்கை) எஸ்.ஆர்.கண்ணம்மாவையும் கைது செய்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையும் பெரியார் எம்மாதிரியான எதிர் வினையாற்றினார் என்பதும் உணர வேண்டியவை. அவருக்கு இந்த கைது நடவடிக்கை மனதளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதைவிட, என்னைப் போன்ற மனிதர்களை சிறைக்குள் ‘சாமி’ மாதிரி கவனித்துக் கொள்கிறார்கள் என்று வெளியே வந்து சொன்னது ஆச்சர்யமானது. சிரமப்பட்டதாக அவர் கதை சொல்லவில்லை.

பெரியார் அப்போது கைதானது ஏழாவது தடவை என்று பட்டியலிட்டது ‘குடி அரசு’. இப்படிப்பட்ட அரிய தகவல்கள் அனைத்தும் பெரியார் நடத்தி வந்த ‘குடி அரசு’ இதழ்களில் இருந்து முழுமையாக எடுத்தாளப்பட்டது.


 

Pin It