ஆழ்கடலில் மூழ்கி அரிய முத்து எடுப்பது போலவும், பூமியைக்குடைந்து பொன் எடுப்பது போலவும் தம் சீரிய சிந்தனை மூலம் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவார்ந்த எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாகக் கருத்துக் கருவூலத்தை வாரி வழங்குவது கணியன்பாலன் அவர்களின் படைப்பாகும்.

சங்கப்புலவர்பாடிய மன்னர்களின் காலத்தை ஐயத்திற்கு இடமின்றி எல்லாரும் ஏற்றிப் போற்றும் வண்ணம் ஆய்ந்து நிறுவியதுடன் சங்ககால சமுதாயத்தின் ஒப்புயர்வற்ற பெருமித வாழ்வை நூல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பூட்டியுள்ள பெட்டியைத் திறந்து உள்ளே உள்ள செல்வத் திரளைக் காட்டுவது போல நமது முன்னோர் வாழ்ந்த சீரிய வாழ்வை நமக்குக் காட்டியுள்ளார்.

அவர்களது நூல்கள் வாசகர்களுக்குப் பயனுடைய பற்பலப் புதிய செய்திகளைக் கூறுவதுடன், ஆய்வாளர்களுக்கு கலங்கரை விளக்கமாகவும், பல புதிய ஆய்வுகட்கு வழிகாட்டியாகவும் அமைந்திருப்பதை யாவரும் அறிவர்.

அவ்வகையில் அதிகம் பேசப்படாத பல அரிய பண்டைய தமிழக அறிவுச் செல்வங்களை அதன் சிறப்பை உலகம் போற்றும் உன்னதமான சில விழுமியங்களை அறிமுகப்படுத்தும் விதமாக ‘தொல்கபிலர்’ என்னும் இந்நூல் அமைந்துள்ளது.kaniyanbalan book on tholkabilarதொல்கபிலர் கி.மு. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழர். எண்ணியம் என்னும் ஒரு உயரிய முற்போக்குச் சிந்தனை மரபை உருவாக்கியவர். தொல்கபிலர் தமிழ் அறிவு மரபின் தந்தை எனப்படுகிறார்.

ஆவூர் மூலங்கிழார் தனது புறம் 166ஆம் பாடலில் தொல்கபிலரை ‘முதுமுதல்வன்’ என்றும் அவரது எண்ணியத்தை ‘முதுநூல்’ என்றும் கூறுகிறார். சித்தர் பத்ரகிரியார் அவரை ‘ஆதிகபிலர்’ என்கிறார். வடமொழிநூல்கள் அவரை ‘கபிலமுனி’ என்று புகழ்கிறது. பாகவத புராணம் அவரைக் கடவுளின் அவதாரம் என்கிறது. சில நூல்கள் அவரை ‘அசுரர்’ என்கின்றன.

அவர் தோற்றுவித்த எண்ணியம் ஒரு முழுமையான 24 கூறுகளையுடைய தத்துவார்த்த மெய்யியல் அறிவியல் கோட்பாடு. அது உபநிடதத்திற்கு முற்பட்டது. தொல்கபிலர் புத்தருக்கு முற்பட்டவர். புத்தரின் ஆசிரியர்கள் இவரை அறிவர். கீதை, பாரதம் உட்பட பின் தோன்றிய அனைத்து நூல்களிலும் எண்ணியக் கருத்துகள் நிரம்பி வழிகிறது. வடமொழியாளர் கபிலர் என அறிவர். ஆனால் பலர் அக்கபிலர் தமிழரான தொல்கபிலர் என்பதை அறியார். எண்ணியம், சாங்கியம் என வடமொழியாளரால் அழைக்கப்படுகிறது.

புறம் 194ஆம் பாடலைப் பாடிய பக்குடுக்கை நன்கணியார் சாங்கியத்தை வளர்க்க ஒரு சங்கம் ஏற்படுத்தி அதன் தலைவராக விளங்கி இந்திய அளவில் பரப்பினார். அடுத்து மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனையாளர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

நரிவெரூர்த்தலையார் (புறம் 193) பூதவாதம் என்னும் உலகாயதத்தைச் சேர்ந்தவர். இவர் உத்தேசவாதம் என்ற சிதைவுக்கோட்பாட்டை வளர்த்தெடுத்தார். கணாதர் சிறப்பியம் எனும் வைசேடிகத்தைத் தோற்றுவித்தார். புறம் 366ஆம் பாடலைப்பாடிய கௌதமனார் நியாயவாதம் எனப்படும் அளவியலைத் தோற்றுவித்தார். பூரணகாயபர் தற்செயல் கோட்பாட்டை உருவாக்கினார்.

இவர்கள் தோற்றுவித்த கோட்பாடுகள் அனைத்தும் அறிவியலையும் பொருள்முதல்வாத மெய்யியலையும் அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு என்கிறார் கணியன்பாலன்.

இவை தமிழ்நாட்டில் தோன்றுவதற்கான சூழ்நிலையை ஆசிரியர் விளக்குகிறார். நிலையான நகர அரசுகளைக் கொண்டதாகவும், உலகில் முதலில் இரும்பைக் கண்டறிந்ததாகவும், மலைபடுபொருளான வாசனைப் பொருள் மூலம் உலகளாவிய வணிக உறவு கொண்டதாகவும், குறியீடு எழுத்தைக் கண்டறிந்ததாகவும் தொழில்நுட்பம், கலை, இலக்கியம் போன்றனவற்றை உடையதாகவும், பொருள்முதல்வாத மெய்யியலைக் கொண்டதாகவும் இருந்ததுதான் மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனையாளர்கள் தோன்றுவதற்கான காரணம் என்கிறார்.

இவைகளைக் கற்க வடமொழியாளர் பலர் தமிழகம் வந்தனர். சாங்கிய காரிகை, சாங்கிய சாரம், சாங்கிய சூத்திரம், சரக சம்கிதை (மருத்துவநூல்) முதலிய பல நூல்கள் பலரால் எழுதப்பட்டன. ஆனால் இவை பெரும்பாலும் எண்ணியத்தின் 24 கூறுகட்குப் பதிலாக புருடன் என்பதைச் சேர்த்து 25 கூறுகள் எனக் கூறுவதுடன் எண்ணியத்தில் இல்லாத தெய்வீகத் தன்மையையும் ஆன்மீகவாதத்தையும் எண்ணியத்தில் புகுத்துபவனாக உள்ளன.

பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதிய சங்கரர், இராமானுசர் ஆகியோர் கடவுள் மறுப்பும், வேதாந்த எதிர்ப்பும் உள்ள காரணத்தால் எண்ணியம் போன்றவற்றை எதிர்த்தனர். வேதாந்த எதிர்ப்பின் காரணமாக மூலநூல்கள் பல திருத்தப்பட்டன; இடைச்செருகல்கள் சேர்க்கப்பட்டன; பலநூல்கள் அழிந்தன; அழிக்கப்பட்டன. புசியமித்திர காலப் பிராமணப்பூசாரிகள் இதனைச் செய்தனர்.

சமணம், பௌத்தம் குறித்தக் கணியன் பாலனின் கருத்து முக்கியமானது. சிலர் சமண பௌத்தம் வைதீகத்திற்கு எதிரானது என்று அவற்றை ஆதரிப்பர். இந்த சமண பௌத்தக் கருத்துகள் எண்ணியம், உலகாயதம், வைசேடிகம், போன்ற பொருள் முதல்வாதச் சிந்தனை மரபுகளை எவ்வளவு கடுமையாக எதிர்த்துப் போராடின, அவைகளை அழித்து ஒழித்தன என்பதை மறந்து விடுகிறார்கள் என்கிறார்.

எண்ணியம் மேற்கு உலகிலும் கிழக்கு உலகிலும் பரவியது. மேற்கத்திய அறிஞர் பித்தகோரசு எண்ணிய மெய்யியலையும், ஏழிசையையும், எண் கணக்கையும் தமிழகம் வந்து கற்றார் என்று கூறும் அறிஞர் குணாவின் கருத்தைக் கணியன்பாலன் ஏற்றுக் கொள்கிறார்.

இசுட்ராபோ இந்தியாவில் பித்தகோரசு இசை கற்றார் என்பார். அன்றைய இந்தியா என்பது பழந்தமிழகமே. ஆல்பர்ட் பர்க் என்பார் பித்தகோரசு அரக்கோணத்தில்தான் முக்கோணத்தின் கரணத்தைக் கணக்கிடுகிற தேற்றத்தைக் கற்றறிந்தார் என்பார். இது போன்று தமிழர்க்குப் பெருமைதரும் பல வெளிநாட்டவர் கூற்றுக்களை கணியன்பாலன் கண்டறிந்து கூறுவது பாராட்டுக்குரியது.

ஐந்திரம் பற்றிய உண்மை விளக்கம் விவரிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர் என்கிறார் பனம்பாரனார். அனுமன் ஐந்திரம் கற்றதாகக் கூறுகிறார் கம்பர். சாணக்கியர் ஆன்வீக்சி என்பதை எண்ணியம், ஓகம், உலகாயதம், என்ற மூன்றின் பொதுப்பெயராகக் கூறினார். வேதங்களைவிட ஆன்வீக்சி மேலானது என்றார் சாணக்கியர். வேதத்தைவிட ஐந்திரம் மேலானது என்கிறார் கம்பர். எனவே ஐந்திரமும் ஆன்வீக்சியும் ஒன்றே எனலாம். சாணக்கியர் குறிப்பிடும் எண்ணியம் ஓகம், உலகாயதம் ஆகிய மூன்றோடு ஓகம் சார்ந்த சிறப்பியம், அளவையியல் ஆகிய அனைத்துப் பொருள்முதல்வாத மெய்யியலையும் ஐந்திரம் எனலாம்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய இரண்டில் மட்டுமே எண்ணிய மெய்யியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன எனலாம்.

கணாதர் இயற்றிய நூல் கிடைக்கவில்லை. ஆனால் அவரது சிறப்பியம் குறித்துக் கூறும் பிற்கால நூலாகிய ‘அகத்திய தர்க்க நூற்பா’ என்ற நூலையும், பக்குடுக்கை நன்கணியார் வரலாறு கூறும் ‘சாமண்ண பாலசூக்தம்’ எனப்படும் பாலி மொழியில் எழுதப்பட்டுள்ள நூலையும் கணியன்பாலன் அறிமுகம் செய்கிறார். நரிவெரூத் தலையார், அசிதகேச கம்பாளர் என அழைக்கப்படுவதை அறிகிறோம்.

வட இந்திய-மேனாட்டு அறிஞர் கூறும் பல கருத்துகள் ஆழமாகவும் அகலமாகவும் விவாதிக்கப்படுகின்றன.

தோன்றியம் (தாந்திரீகம்) மிகப் பழமையானது. சிந்துவெளி நாகரிகத்திலிருந்து காணப்படும் தோன்றியத்தின் அடிப்படைக் கொள்கைகள் எண்ணியத்தின் கொள்கைகள் போலவே உள்ளன. கபிலரின் சாங்கியத் தத்துவம் தோன்றியம் என அழைக்கப்படுவதாகக் கூறுகிறார் சங்கரர். தாந்திரீகம் பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. பெண்களின் மகப்பேறு, உற்பத்தி என்பதால் வளமைச் சடங்குகளில் பெண்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

இரிக் வேதக் கடவுளர்கள் மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள். இதனை இரிக் வேதப்பாடல்கள் உறுதி செய்கின்றன. உலகின் எல்லாப் பழங்குடி மக்களது கடவுளர்களும் மானுட மூலம் கொண்டவர்களே. பழந்தமிழகத்தில் நில தெய்வங்களும், குலதெய்வங்களும், நடுகல் தெய்வங்களும் வணங்கப்பட்டனர். கொற்றவை, சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்) வருணன் ஆகிய நில தெய்வங்களும், குலதெய்வங்களும், நடுகல் தெய்வங்களும் தமிழர்களின் முன்னோர்கள்தான், முப்பாட்டன்மார்கள்தான்.

இதற்குச் சான்றாக வள்ளுவரது 50 ஆவது குறளான

 ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும்

 தெய்வத்துள் வைக்கப் படும்’

என்பதை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர் கணியன்பாலன்.

வட இந்தியாவில் நகர அரசுகள் உருவாகி வளர்ச்சியடையும் முன்னரே மகதப்பேரரசு தோன்றிவிட்டது. தமிழ்நாட்டில் நகர அரசு தோன்றி வளர்ச்சியடைந்து எழுத்தறிவு தோன்றி, சாதாரண மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்ததை அகழாய்வுகள் மெய்ப்பிக்கின்றன. செவ்வியல் இலக்கியம் படைக்கப்பட்டது. தேர்ந்த இசைப் பயிற்சியும் பெற்றிருந்தனர். மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு உருவாகியிருந்தது. ஆனால் மகதத்தில் எழுத்தறிவும் இல்லை. எந்த இலக்கியமும் தோன்றவில்லை. இசைச் சாகித்தியம் எதுவும் உருவாகவில்லை. பிறவற்றிலும் பெரிய வளர்ச்சி இருக்கவில்லை. ஆகவே மகதப் பேரரசைவிட தமிழக நகர அரசுகள் பன்மடங்கு மேலானது எனத் தெரிகிறது.

தமிழ் இலக்கிய இலக்கணம் மூலம் எண்ணிய மெய்யியல் குறித்தப் பல சான்றுகளைக் கணியன் பாலன் தருகிறார்.

அண்டவியல் – ஐம்பூதக்கோட்பாடு எண்ணியத்திற்கு உரியது. புறநானுற்றின் இரண்டாம் பாடல் மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் என்று தொடங்கும் பாடல் இதனை விளக்குகிறது. இதே பூதவாதக் கோட்பாடு,

“நிலம்நீர் தீவளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்”

என்ற தொல்காப்பிய நூற்பாவாலும் கூறப்படுகிறது. இதே கருத்து பரிபாடலில் திருமால் குறித்த இரண்டாம் பாடலிலும் கூறப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.

உயிரினங்களின் தோற்றத்திற்கு அறிவியல் அடிப்படையாக விளங்கும் எண்ணியத்தின் பரிணாமக் கோட்பாடு தொல்காப்பியத்தில்,

‘ஒன்று அறிவது உற்று அறிவதுவே’

என்று தொடங்கும் பொருளதிகார நூற்பா மூலம் விளக்கம் பெறுகிறது

எண்ணியத்தின் இன்பவியல் கோட்பாடு

‘எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது’

என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவால் விளக்கம் பெறுகிறது.

இவ்வாறு எண்ணியக் கோட்பாட்டுடன் உள்ள தமிழ்நூல்த் தொடர்பை பல சான்றுகளின் மூலம் கணியன்பாலன் தெளிவாக விளக்குகிறார்.

தமிழிய வட இந்தியச் சிந்தனைகளில் உள்ள வேறுபாட்டைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் கணியன் பாலன்.

1.தமிழியச் சிந்தனையில் ஐம்பூதம் என்பது நீர், நிலம், தீ, வளி, வெளி ஆகியன. வட இந்தியச் சிந்தனையில் வெளி இல்லாத நான்கு பூதங்கள் மட்டுமே உண்டு.

2.எண்ணியம் எனும் சாங்கியத்தில் 24 கூறு உள்ளது என்கிறது தமிழ்ச் சிந்தனை. வடசிந்தனையில் புருடனைச் சேர்த்து 25 கூறுகள் உள்ளது.

3.சிறப்பியம் என்னும் வைசேடிகத்தில் தமிழ்ச் சிந்தனைப்படி ஏழு பொருள்கள். வட இந்தியச்சிந்தனையில் இன்மை இல்லாத ஆறு பொருள்கள் மட்டுமே உண்டு.

4.நூலுக்கான தந்திர உத்தி, தமிழ் மரபில் 32. வட இந்தியச்சிந்தனையில் 36 உத்திகள்.

5.தமிழ் மரபில் மனித வாழ்வின் அடிப்படை மூன்று. அவை அறம், பொருள், இன்பம். வட இந்தியச் சிந்தனை மரபில் மூன்றுடன் வீடு சேர்த்து நான்கு என்பர்.

எண்ணிய மெய்யியல் கருத்துகளைப் பரிபாடல், மணிமேகலை, நீலகேசி ஆகிய மூன்று நூல்கள் வாயிலாக ஆய்வு செய்யும் கணியன் பாலன், இந்த மூன்றும் தமிழ் நூல்கள் ஆயினும் காலப்போக்கில் இடைச்செருகல், வட இந்தியச் சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளல் காரணமாக அவற்றில் எண்ணிய மெய்யியலுக்கு மாறுபட்ட கருத்துகள் புகுந்து விட்டதாகக் கூறுகிறார்.

அண்டம் குறித்த நவீன அறிவியல் சிந்தனைகளில் பலவும் அன்றே எண்ணிய மரபில் உள்ளதை இரண்டையும் ஒப்புமை செய்து வியப்புடன் எடுத்துக் காட்டுகிறார்.

குறிப்பாக இசுடீபன் ஆக்கிங், அண்டம் எல்லையோ, விளிம்போ, இல்லாமல் தன்னிறைவு கொண்டதாக இருக்கும். அதற்குத் தொடக்கமோ, முடிவோ இருக்காது. அது என்றும் இருந்து கொண்டேயிருக்கும். ஆகவே படைத்தவருக்கு இங்கு இடமில்லை. எண்ணிய மெய்யியலும் படைப்புக் கடவுள் தேவை இல்லை என்று கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மூலச்சிறப்புடைய பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனையின் சிறப்பை இந்திய - மேனாட்டு அறிஞர்கள் கூற்றுக்களைக் கொண்டு இந்நூல் பலவாறு விளக்கம் தருகிறது. இந்நூல் காலத்தின் தேவை.

தமிழா! இதோ உன் முப்பாட்டன் உனக்கு அளித்த அரிய பெரிய சொத்துக்கள் இவை என்று இந்நூல் மூலம் காட்டுகிறார் கணியன் பாலன்.

இதுபற்றி அறியவும் ஆய்வு செய்யவும் முற்படும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாக கையேடாக உதவும் என்பதில் ஐயமில்லை.

எதிர்காலத் தமிழியல் ஆய்வுக்குப் பழமை துலக்கும் புதுமைப் படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இத்தகு சிறப்பான நூலை வழங்கிய ஆய்வறிஞர் கணியன்பாலன் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.

- முனைவர் புலவர் செ.இராசு,  முன்னாள் தொல்லியல் கல்வெட்டியல் துறைத் தலைவர்,  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

Pin It