சமூகப் பிரக்ஞையோடு எழுதப்படுகிற இலக்கியங்கள் அத்தனைக்குமே, அநீதிக்கு எதிரான போர்வாளை கூர்தீட்டக்கூடிய தன்மை உண்டு. அத்தன்மையில் இருக்கிறது முகிலினி நாவல். கோவை மாவட்டத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது பவானி ஆறு. அந்த ஆறு மீட்கப்பட்டதற்கான வரலாறைப் பேசுகிறது நாவல்.

mugiliniநம்மைச் சுற்றிப் புரையோடிக் கிடக்கிற சாதியம், வர்க்கம், முறைசாராப் பொருளாதாரம் இவைகளைத் தீர்மானிக்கும் உள் மற்றும் புற அரசியல் குறித்த தெளிவு, நமக்கு எப்போதும் தேவைப்படுகிறது.அப்போதுதான் அதைக் களைவதற்கான அவசியமும் தேவையும் பிடிபடும். அதற்கான வீச்சை தன் எழுத்துக்களில் நாவலாசிரியர் முன்னெடுத்து இருக்கிறார்.

இந்த நாவலை, சமூகத்தின் எந்தத் தளத்தில் நின்றும் விமர்சிக்க முடியும். நுவல்பொருள் அடிப்படையில் தொழிலாளர்கள் இயக்கம், விவசாயிகள் இயக்கம் என்ற இரண்டு இயக்கங்களின் இயங்குதளத்தில் படைப்பியல் பார்வையை நோக்கலாம்.

முகிலினி நாவல், கோவை மாவட்டத்தின் வாழ்க்கைச் சூழலைப் பேசுகிறது. ஒரு பஞ்சாலை எப்படி உருவாகிறது? ஏன் உருவாக வேண்டும்? கோவை எப்படி தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆனது? உள்ளூர் முதலாளிகளுக்கும் அரசுக்குமான புரிதல், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசுக்குமான ஒப்பந்தங்கள், இடதுசாரி இயக்கங்களின் துவக்கம், தொழிலாளர்கள் போராட்டம், இயக்கங்களுக்கு இடையேயான கருத்து முரண்கள்,முதலாளி, தொழிலாளி, ஏழை பணக்காரன் என்கிற வர்க்கப் பின்புலத்தில் அடித்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் இழப்புகள், மாசுக்கட்டுப்பாடு, நதிநீர் பிரச்சனைகள், மக்கள் எழுச்சி, விஸ்கோஸ் போராட்டத்தின் வெற்றி, சிறு வணிகத்தை இல்லாமலே செய்த வால்மார்ட் தந்திரம். மறு காலனியாதிக்கத்தின் சந்தையில் சிக்கித் தவிக்கும் இயற்கை வேளாண்மை, பெண் அரசியலின் போதாமைகள், பெரும் முதலாளிகளுக்கும் அரசுக்கும் இடையே குழப்பத்தில் நிற்கும் இன்றைய மக்களின் உளவியல் சிக்கல்களை, சமகால அரசியலை கதாபாத்திரங்கள் ஊடாக ஆவணப்படுத்தியிருக்கிறது முகிலினி நாவல்.

கதைக்களம்

நாவல் 1953 இல் துவங்குகிறது. கண்ணம்மநாயுடு சரஸ்வதி மில் முதலாளி. கோவைப் பஞ்சாலை அதிபர்களுள் மிக முக்கியமானவர்.. மகன் கஸ்தூரிசாமி நாயுடு. 1939 இல் இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் இறந்து போகாமல் மகன் வீடு திரும்பியதே பெருமாள் கருணை எனக் கண்ணம்மநாயுடு பொறுப்புகள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு துறவு வாழ்க்கைக்குச் சென்று விடுகிறார்.

சந்தை இழக்கும் பஞ்சாலைகள்

இந்தியாவில் பஞ்சு மில்கள் அதிகம். ஆனால், பருத்தி பாகிஸ்தானில் விளைந்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் எதிரொலியால், பஞ்சு பற்றாக்குறையில் ஏழு கோடி பேர் சந்தை இழந்தனர். நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் மில் முதலாளிகள் தடுமாறினர். ஏறக்குறைய பஞ்சாலைகள் மூடப்பட்டன. இந்தச் சூழலை எப்படி சமாளிப்பது என கஸ்தூரிசாமி யோசித்தார். அவர் மனைவி சௌதாமினி நன்கு படித்தவர். தொழில் நிர்வாகத்தின் நெளிவு சுழிவுகளை சமாளிக்கும் திறமைசாலி. பருத்திக்கும் பட்டுக்கும் மாற்று, செயற்கை இழைதான் எனச் சௌதாமினி அந்த நேரத்தில் உறுதியாக முடிவெடுத்தார். அதற்காகத்தான், கடந்த முப்பது ஆண்டுகளாக மரத்துண்டுகளில் செயற்கைப் பஞ்சு தயாரிக்கும் முன்னனி நிறுவனமான இத்தாலியான விஸ்கோஸாவின் தூதுவரான பெர்னார்டினோ, கஸ்தூரி சாமியின் சரஸ்வதி மில் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். “பிரிட்டிஷ் அரசு உங்கள் நெசவுத் தொழிலை அழித்துவிட்டது. இந்தியாவிலிருந்து ஆடைகள் ஏற்றுமதி செய்வதை 200 ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்துவிட்டது. இந்தியா காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டு முன்னேறத் துடிக்கும் இளம்நாடு. நாம் இணைந்து செயல்படுவோம்” என்ற பெர்னார்டினோவின் பேச்சு, முகிலினியை களங்கப்படுத்த அடிகோலும், மறுகாலனியாதிக்கத்தின் துவக்கப்புள்ளியாக இருந்தது.

செயற்கை இழைகள்

செயற்கை நூல் இழையில் இரண்டு வகைகள் இருந்தன. ஒன்று மூங்கில், யூகலிப்டஸ் மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழை. இரண்டாவது, நைலான், டெரிலின், பாலியெஸ்டர் போன்ற சிந்தடிக் இழை. விஸ்கோஸ் பைபர். சூரிய ஒளியைப் போல் மினுமினுப்பும் பருத்தியைப் போல் குணமும் இருந்ததால் ரே + காட்டன் ரேயான் ஆனது. அதன் மூன்று கோடிரூபாய் முதலீட்டுத் தொகைக்கு பயந்து, மற்ற மில் முதலாளிகள் ஒதுங்க ஆரம்பித்தனர். அத்தனைத் தொழில் துறைகளிலும் தன் கிளை பரப்பியிருந்த நீண்டகால நண்பரான ஜனார்த்தனனுடன் சேர்ந்து கஸ்தூரிசாமி, டெக்கான் ரேயான் செயற்கை இழைத் தயாரிப்பை துவங்குகிறார்.

தொழில்மயமாதலின் துவக்கப்புள்ளி

இத்தாலியில் உள்ள விஸ்கோஸாவில் இருந்து டன் கணக்கில் செயற்கை இழை உற்பத்தி செய்யப்பட்டது. விஸ்கோஸாவே அட்டைகளாக்கி இந்தியாவிற்கு அனுப்பும். இழைகளை வெண்மையாக்க சுண்ணாம்பும், கந்தக அமிலமும் பல மடங்கு தேவைப்படும். அமிலத்தை டெக்கான் ரேயானே உற்பத்தி செய்யலாம் என்றும், மீதமுள்ளதை வெளியே விற்கலாம்.சுண்ணாம்பு மேட்டூரிலும் அரியலூரிலும் கிடைக்கிறது. மூலப்பொருட்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் தண்ணீர் பத்து மடங்கு தேவைப்படும், அப்போதுதான் பவானி சாகர் அணைக்கட்டிற்கு அருகே உள்ள சிறுமுகையில் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் கையகப்படுத்தி கஸ்தூரி சாமியின், டெக்கான் ரேயான் செயற்கைப் பஞ்சாலை அமில வீச்சத்தோடு வான் உயர புகையை கக்கத் தொடங்கியது.

தொழிலாளிகளுக்கு வேண்டிய உதவிகள், நிறைவான ஊதியம் எனக் கஸ்தூரிசாமி வைத்திருந்தார். கண்ணம்மநாயுடு காலத்தில் தொழிலாளிகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். குழந்தைத் தொழிலாளர்கள் கொண்டு உழைப்பு உறிஞ்சப்பட்டது. ஆனால், கஸ்தூரி, ஆலையின் தொழிலாளர்களிடம் காட்டும் கரிசனத்தால், அவரைத் தெய்வமாகவே மதித்தனர். இவ்வாறாக, தொழில்மயமாதல் என்பது, கோவைப் பஞ்சாலைப் பெருக்கத்தில் முதன் முறையாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.

அரசு கட்டுப்படுத்தும் அன்னியச் செலாவணி

ஆலை தொடங்கிய ஆறுமாதத்தில் கஸ்தூரிசாமிக்கு பெரும் சிக்கல் ஒன்று வந்தது. நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை சமாளிக்க அரசு திணறியது. அன்னியச் செலாவணிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தது. டெக்கான் ரேயானுக்குத் தேவையான மரக்கூழ் அட்டைக்காக, இத்தாலியின் விஸ்கோஸாவிற்கு லட்சக்கணக்கில் கஸ்தூரிசாமி பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். இதுபோன்ற பெரும் அளவில் இறக்குமதி செய்யும் ஆலைகள், நிறுவனங்கள், அரசின் பார்வையில் உறுத்தத் தொடங்கின. மூன்று நாட்களான பேச்சு வார்த்தைக்குப் பிறகு, அரசுக்கும் டெக்கான் ரேயானுக்கும் ஒரு ஒப்பந்தம் நடந்தது.

செயற்கை இழைக்குத் தேவையான மரக்கூழை இனி ரேயானே உற்பத்தி செய்து கொள்ளலாம். முதல்கட்டமாக ஒரு நாளைக்கு 100 டன். முதல் ஒரு ஆண்டுக்கு 1 டன் மரக்கட்டைகளை 1 ரூபாய் விலைக்குத் தர அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதற்காக, ஊட்டி, கூடலூர், கொடைக்கானல் பாதையில் உள்ள 40,000 ஏக்கர் மரக்காடுகளில் டெக்கான் ரேயானுக்குத் தேவையான மரங்களை வெட்டிக் கொள்ள உதவுமாறு வனத் துறைக்கு அரசு கட்டளையிடுகிறது. இதன் பின் விளைவாக மலைப்பகுதிகள் பெரும் நிலச்சரிவை சந்தித்ததும் நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை முன்னமே எதிர்பார்த்துதான் கஸ்தூரி சாமி, மரக்கூழ் பிரிவிற்கான கட்டமைப்பையும் கழிவு நீர்த் தொட்டிகளையும் ஏற்பாடு செய்கிறார்.

மார்க்கெட் விலையைவிட 40% குறைவான விலைக்குக் கொடுக்க அரசு ஒப்புக் கொள்கிறது. 1967 ஆம் ஆண்டு 5 கோடி செலவில் மரக்கூழ் பிரிவு அன்றைய முதலமைச்சர் கொண்டு அடிக்கல் நாட்டப்படுகிறது. ரேயான் இழை உற்பத்தி ஒரு நாளில் 25 இல் இருந்து 60 டன்னாக உயர்கிறது. ஒரு நாளில் 300 டன் பஞ்சு, 1200 டன் காகிதம், 175 டன் கந்தக அமிலம் அரசின் வரிச் சலுகையோடு, சலுகை விலையோடு உற்பத்தி பெருகியது.

குடால் கமிஷன் செயல்பாடு

சௌந்தரராஜன். சௌதாமினியின் அப்பா. பிரபலமான வக்கீல். நியாயமான காங்கிரஸ்காரர். நிலச்சுவான்தார். முக்கியமாக காங்கிரஸ் தலைவர். தாகூரின் கர் பாயிரே புத்தகத்தை தன் அருகிலேயே வைத்திருப்பவர். தாகூரின் சாந்தி நிகேதன், காந்தியின் சர்வோதயத்திலும் தீவிரப் பற்றுள்ளவர். அந்நிய நிறுவனங்களிடம் பெற்ற பண உதவிகளைக் கொண்டு பள்ளிக் கூடங்கள், சுகாதார நிலையங்கள், பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சிகள் போன்ற நலத்திட்டங்களை செய்து வருகிறார். 1982 இல் புருஷோத்தம் தாஸ் குடால் தலைமையில் அமைக்கப்பட்ட குடால் கமிஷன், வரவு செலவு கணக்குகளோடு ஆஜராகச் சொல்லி சௌந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பினால் இறந்து போகிறார்.

பசுமைப் புரட்சி – போர்டு பவுண்டேஷன்

1959.லேயே இந்திய உணவு நெருக்கடியும், அதை எதிர்கொள்ளும் வழிகளும் ( Indian food crisis and ways to face it) குறித்த அறிக்கையை போர்டு பவுண்டேஷன் வெளியிடுகிறது. 1966க்குள் இந்தியா மிகப் பெரிய பஞ்சத்தை சந்திக்கும். இந்திய விவசாயத்தை நவீனமாக்க வேண்டும். அதி நவீன வீரிய விதைகளையும், ஒட்டு ரகங்களையும், செயற்கை உரங்களையும் கொண்டு விளைச்சலை அதிகரிக்க வேண்டும். மகசூல் இருமடங்காக வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவை பஞ்சத்திலிருந்து யாரும் காப்பாற்ற முடியாது என்று அந்த அறிக்கை கூறியது.

நாடு முழுவதும் உணவுப் பஞ்சம் மோசமாகிக் கொண்டே சென்றது. இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் போர் பல பின்னடைவுகளை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இந்தியாவை குற்றம் சுமத்திய மேற்கத்திய நாடுகள், போர்டு பவுண்டேசன் பரிந்துரைகளை அரசு கருத்தில் கொண்டதும் நிலைய மாற்றிக் கொண்டன. அதிக உரங்களை உள்வாங்கி ஏகப்பட்ட மகசூல்களைத் தரும் என்று நம்பப்பட்ட பிலிப்பைன்சின் உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஐ.ஆர்.8 அரிசி ரகங்கள், கலப்பின வீரிய விதைகள் நிலம் இறக்கப்பட்டன. இந்த நவீன இந்திய விவசாயத்திற்கு பசுமைப்புரட்சி என்கிற பெயர் மாற்றம் உருவாக அரசும் பெருமுதலாளிகளும் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

மீண்டும் டெக்கான் ரேயான், தன் அடுத்த கட்ட முன்னேற்றமாக அனைத்து நிறுவன இயக்குனர்களையும் ஒன்று கூட்டியது. கஸ்தூரி சாமி நிறுவனங்களின் மூளையாகச் செயல்படக்கூடிய சௌதாமினி பேச ஆரம்பித்தாள். இன்னும் ஐந்து வருடங்களில் உலக வங்கி 2200 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்போகிறது. அதில் 870 கோடி ரூபாய் உரங்களுக்கு ஒதுக்கப் போகிறார்கள். ஏற்கெனவே ஸ்பிக் நிறுவனம் களத்தில் இருக்கிறது. டாடா பெர்டிலைசர்ஸ் களத்தில் இறங்கப் போகிறார்கள். நவீன உரங்கள் முழுவதும் வேதியல் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவது. ரேயான் கந்தக அமிலம் தயாரிப்பதால் இதில் அனுபவம் உண்டு என்கிறாள். கூட்டத்தின் முடிவில், டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ் என்ற மூன்றாவது பெரிய உர நிறுவனம் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் ரேயான் நிறுவன உற்பத்தி கட்டுக்குள் இருந்ததால், வெளியாகும் கழிவு நீர் முறையாக சுத்தப்படுத்தப்பட்டு பவானி ஆற்றில் கலக்கப்பட்டது. உற்பத்தி பெருக்கத்தால் நாளடைவில், பவானியின் நிறம் கருப்பாகத் தொடங்கியது. ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகள் பொட்டல் நிலமாக மாறத் தொடங்கின.

பன்னாட்டு நிறுவனங்களின் பங்குப் பிரச்சனைகள்

1983 இல் கஸ்தூரி சாமிக்கு மீண்டும் மிகப் பெரிய நெருக்கடி வந்தது. எப்போதும் வரும் தொழில் பிரச்சனையை விட இது வேறுவிதமாக இருந்தது. ஆலைகள் புகையை வெளியிடக்கூடாது. நீர்நிலைகளை அசுத்தப்படுத்தக் கூடாது. என்ற ஐரோப்பா முழுவதுமான தொடர் போராட்டங்களால் இத்தாலியின் விஸ்கோஸா புதுப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டது. போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் இத்தாலி, செயற்கை இழையை விடுத்து, அமெரிக்க நிறுவனங்களோடு இணைந்து ராணுவத் தளவாடங்களை தயாரிக்கத் தொடங்கியது. அதனால் அதன் இந்தியச் சொத்துக்கள் அனைத்தும் துபாயில் உள்ள சபியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கஸ்தூரியின் மகன் கிருஷ்ணகுமார் துபாய் செல்கிறார். அதற்குள், டாட்டா பிர்லாவின் பங்குகளை அதிகம் வைத்திருக்கும் செவந்த் ஹெவன் கன்ஸ்ரக்ஷன் கம்பெனியின் முதலாளி கேண்டி, சபியாவின் பங்குகளையும் வாங்கி விடுகிறார். இத்தாலியானா விஸ்கோஸாவின் 24% பங்குகள், ஜனார்த்தனின் 15% பங்குகள், கஸ்தூரிசாமியின் 12% பங்குகளின் பெரும்பான்மையானது கேண்டியின் நிறுவனத்துள் முடங்கிப் போகின. ஜனார்த்தனின் இறப்பிற்கு பின்பு, சொத்துக்கள் அவர் மகன்களுக்கு எழுதி வைக்கப்பட்டிருந்தது. மகன்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், அந்தப் பங்குகளும் கேண்டியின் வசம் சென்றது. கேண்டியை மீறி இனி டெக்கான் ரேயானை செயல்படுத்த முடியாத நிலையை கஸ்தூரி உணர்ந்து கொள்கிறார். பங்குகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தி மிக அதிக லாபத்திற்கு கேண்டியிடம் விற்று விடுகிறார். டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. கூடவே சப்மெர்சிபிள் பம்ப்புகள் செய்யும் தொழிற்சாலைக்கான வேலைகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா என டெக்கானின் சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது.

பவானி ஆறு - கருந்தார்

டெக்கான் ரேயான் ஆலை, கேண்டியின் பொறுப்பில் வந்தது. கிராஸிம் நிறுவனத்தை விட பல மடங்கு உற்பத்தி பெருக்க போட்டி ஏற்பட்டது. கட்டுக்கு அடங்காத உற்பத்தி பெருக கழுவு நீர் சுத்திகரிப்பிற்கான அவகாசம் இல்லாமல் தொட்டிகள் நிரம்பி நிரம்பி வழிய ஆரம்பித்தன. டன் கணக்கில் சுண்ணாம்பு மூட்டைகள் கொட்டப்பட்டன. தொழிற்சாலையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாற்றமெடுத்து, வெள்ளி போல் வெண்மையாகப் பிரவாகம் எடுத்து ஓடிய பவானி ஆறு, கருப்பு மையாக தார் போல் கலங்கி நின்றது. மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் பருக வந்த மான்கள் செத்து மடிந்தன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்த கிணற்று நீர் நாற்றமடித்து கருப்பாக மாறியது. கரும்பு ஆலைகள் மூடப்பட்டன. அந்தத் தண்ணீர் குடித்த ஆடுகள் மாடுகள் இறந்தன.அதன் குடல் பகுதியில் கருந்தாராக தண்ணீர் நிரம்பியிருந்தது. தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர் இரவு பகலாக ஆற்றுக்குள் பாய்ந்து கொண்டே இருந்தது. ஆலைக்குத் தேவையான நல்ல நீர், ஆறு உற்பத்தியாகும் மலைப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு குழாயை கிருஷ்ணாநகர் பகுதிக்கு இணைப்பு கொடுக்குமாறு நிர்வாகத்திடமும் அரசியல் வாதியிடமும் மக்கள் கெஞ்சிப் பார்க்கின்றனர்.

எதற்கும் யாரும் செவி சாய்க்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆற்று நீரும், விளைநிலங்களும் விஷமாகிப் போகின. கழிவுநீரை சுத்திகரிக்கும் அதி நவீன லிண்டாக்ஸ் பிளாண்ட் அமைப்பதாக ஆலை நிர்வாகம் வழக்குக்கு புறம்பாக இரண்டு ஆண்டுகளைக் கடத்துகிறது. பழைய உள்ளூர் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, பம்பாய், பூனா, பீஹாரிலிருந்து வேலை அனுபவம் மிக்க துடிப்பான இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லாமல், மாசுக்கட்டுப்பாட்டு விதி முறைகளையும் தாண்டி ஆலை, உற்பத்தி செய்து கொண்டே இருந்தது. வாழ வழியின்றி மக்கள் கொந்தளித்தனர். முதன் முறையாக சுற்றுச்சூழல் மாசுபடுவது தொடர்பான வழக்கு மக்களால் பதிவு செய்யப்பட்டது. டெக்கான் ரேயான் ஆலை மூடப்பட்டது. தொழிலாளர்கள் குடும்பம் பசியும் பட்டினியுமாய் கடன் வாங்க ஆரம்பித்தனர். ஒரு பக்கம், ஆலையைத் திற. வேலை கொடு. வயிற்றில் அடிக்காதே என்ற தொழிலாளர்கள் போராட்டம். ஆலையைத் திறக்காதே, கழிவு நீரைத் கலக்காதே. தண்ணீரை மாசுபடுத்தாதே என்கிற விவசாயிகள் போராட்டம்.

காலங்காலமாக நம்மிடையே ஒரு சிக்கல் இருக்கிறது. காவிரிப் பிரச்சனை என்றால் டெல்ட்டா விவசாயிகள் மட்டுமே மண்ணில் புதைந்து போராடுகிறார்கள். சிறுவாணி என்றால் தனிப்பட்ட கொங்கு மாவட்ட விவசாயிகளின் பிரச்சனை. ஒரு மாவட்டத்து விவசாயிகளின் பிரச்சனைகள் மாநிலத் தேக்கம் இல்லையா? இந்தியப் பிரச்சனையாக அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டாமா? அதற்கு அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையாகத் திரள வேண்டும். இந்தக் கருத்தைதான் நாவலும் வலியுறுத்துகிறது.

கோவையில் ஆலைக்கு எதிராக கோவை நதிநீர் சங்கம் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுகிறது. அனைத்து இயக்கத் தோழர்களையும் ஒன்றிணைப்பது என முடிவெடுக்கிறார்கள். அதற்காக தொழிற்சங்க தலைவரை சந்திக்கச் செல்கிறார்கள். “ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்க முடியாது. சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வையுங்கள் பிறகு நாங்கள் வருகிறோம்” என்கிறார் அவர்.

இந்த நாட்டுடைய மண்ணைவிட ஆறுகளை விட வேறென்ன முக்கியம் உங்களுக்கு என ஒரு விவசாயச் சங்க இளைஞன் எரிச்சல் அடைகிறான்.

“தொழிலாளர் இயக்கம் பலவீனப்பட்டுப்போன இடங்களில் முதலாளிகள் மதவாத இயக்கங்களை வளர்க்கிறார்கள்.கடந்த 40 ஆண்டுகளில் அடைந்த சாதனை எல்லாம் உலகமயமாக்கலில் அழிந்துவிட்டது. தொழிலாளர் இயக்கத்தை பூஜ்ஜியத்திலிருந்து திரும்பவும் கட்ட வேண்டியிருக்கிறது. எங்களால் மீதியிருக்கும் தொழிலாளர்களை விட்டுத்தர முடியாது என்கிறார்”.

“இளைஞன் பதில் பேசாமல் இருந்தான். தன்முன்னால் இருப்பவர் எதிரியல்ல என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும்” என நாவலாசிரியர் சொல்கிறார்.

“நீங்கள் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. இனி வருங்காலங்களில் கட்சி இவைகுறித்து கவனத்துடனிருக்க வேண்டும். நாம் எதிரிகள் அல்ல. சேர்ந்து போராடுவதற்கான களத்தை இனி விழிப்புடனிருந்து உருவாக்குவோம். எதாவது ஓரிடத்தில் பாதைகள் இணையும்” என்கிறார் தலைவர்.

“தோழர்கள் தங்களோடு இணைய வேண்டியவர்கள். அவர்களை இழந்தது யார் தவறு என்கிற கேள்வி கௌதமுக்கு எழுகிறது”. இந்தப் புள்ளியை புரிய வைத்ததுதான் தோழர் முருகவேளின் சிறப்பு. நாவல் தன் வாசகர்களுக்குச் சொல்லவந்த தீர்வாகவும் இதைக் கருதலாம்.

ஏறக்குறைய, பத்தாண்டுகள், கோவை மாவட்ட விவசாய மக்களின் எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவாக பவானி என்கிற முகிலினி ஆறு மீட்கப்பட்டது. டெக்கான் ரேயான் பஞ்சாலை நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது.  

ராஜூ

சிறுமுகையில் ரேயான் ஆலையில் வேலை செய்தவர் ராஜூ. ராணுவத்தில் நாயக் பணி செய்தவர். தமிழ் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் தீராக் காதல் உடையவர். தமிழின் வீரத்திற்கும் பண்பட்ட வாழ்விற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர். பால்யகாலத்தில் நொய்யலாறு ததும்பும் வெள்ளலூரில் ராஜூவும் ஆரானும் கைகோர்த்து திரிந்தவர்கள். வறுமையினால் வசந்தா மில்லில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்தனர். சாதியக் கொடுமையும் ஒரு காரணமாக இருக்க, ராஜூ சிறுமுகையில் புதிதாக துவங்கப்பட்ட ரேயான் ஆலை, கிருஷ்ணாநகருக்கு குடிவருகிறார். ஆலை தொடங்கி முதன்முதலில் கோனிங் பிரிவில் தொடங்கிய கந்தக அமிலத்தின் நாற்றம். கம்பெனி முழுக்க பரவி விடுகிறது. அங்கு வேலை செய்தவர்களின் கண்கள் வீங்கியிருந்தன. கண்ணுக்கு மண்ணை அள்ளி போட்டதுபோல் சிவந்து எரிந்தன. எல்லோருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் மூச்சு விட முடியாமல் ஆஸ்துமா வந்து 57 வயதில் ராஜூ இறந்து போகிறார். மனைவி மரகதம் ஆசிரியை. இவர்களது மகள் மணிமேகலை. மணிமேகலையின் கணவர் சொக்கலிங்கம். அவரும் ரேயான் கம்பெனியில் பணியில் இருந்தவர். இவர்களின் மகள் ஆனந்தி. பொறியாளர். பெங்களூர்-இல் வேலை செய்கிறார். மகன் கௌதம் வழக்குரைஞர்.

ஆரான்

ஆரானுக்கு ஆறு குழந்தைகள். வசந்தா மில்லில் வேலை செய்தவர். உரிமை மீட்டெடுப்பு, தொழிற்சங்க போராட்டங்கள், கேட் மீட்டிங் என இயக்கத்தில் தீவிரமாகத் தன்னை ஐக்கியப்படுத்தியவர். கோவை மில் தொழிலாலர்களிடையே கேட் கூட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்கத் தலைவர் குட்டி என்பவரால்தான். ஆரான் இயக்கத்தில் சேர்கிறார். “ரவுடிகளைத் திருப்பி அடிப்பது வீரம் மட்டுமல்ல.எதிர்கால செயல்பாடுகளை மனதில் கொண்ட ஒரு அரசியல் நடவடிக்கை என்பதைப் புரிய வைத்தார். செங்கொடியையும், அரிவாள்,சுத்தியலையும் அதன் தத்துவத்தையும் ஆரானுக்கு புரிய வைத்தார்.”

பிளேக் நோயால் குடும்பத்தை இழந்தவர் ஆரான். மீண்டும் அந்த நோய் ஊருக்குள் பரவியபோது, கெளம்புங்கடா! ஊரக் காப்பாத்த. பாட்டாளி வர்க்கத்துக்கு இல்லாத அக்கறை எவனுக்குடா இருக்கு என குட்டி இயக்கத் தோழர்களை ஒன்றுசேர்க்கிறார். இந்த உந்துதலால்தான் தீவிரப் போராளியாக ஆரான் மாறுகிறார். ஓரளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாமல், கடைசி வரை பசியும் பட்டினியுமாய் ராஜூவிடம் அரிசி வாங்கும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

கஸ்தூரி-யின் பேரன் ராஜ்குமார் பாலாஜி.

அமெரிக்காவில் எமோரி பல்கலைக் கழகத்தில் MBA படித்துவிட்டு இந்தியா திரும்புகிறான். அவன் சமகால சந்தை நிலவரத்தை சிந்தித்து ஒரு திட்டத்தை உருவாக்குகிறான். இயற்கை வேளாண்மை, இயற்கை உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்து குடும்ப உறுப்பினர்களுடன் பேசுகிறான். இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது. ஐரோப்பா, அமெரிக்காவில் சந்தைப் படுத்துவது சுலபம். முதலில் அதிகம் கெட்டுப்போகாத தானியங்கள், பருப்புகள், மூலிகைகளை உற்பத்தி செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள்.கஸ்தூரிசாமி நிறுவனம் உரத்தயாரிப்போடு இஸ்ரேலிய நிறுவனத்தின் கூட்டாக உயர்ரக தக்காளி விதைகளையும் மார்க்கெட் செய்கிறது. தற்பொழுது கண்ணம்மநாயுடு டிரஸ்ட் என ஒன்றை உருவாக்கி, இயற்கைக்குத் திரும்புவோம் என 30க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பயிற்சியும் உதவியும் வழங்குகிறார்கள். புதிதாக உருவான கண்ணம்மநாயுடு ட்ரஸ்ட். சௌந்தரராஜனின் பழைய அமைப்போடு இணைந்து 70 ஆண்டுகள் அனுபவம் என வெளிநாட்டு நிதி உதவி பெறுகிறது. சுமார் மூன்று நான்கு ஆண்டுகளில் ராஜ்குமார் பாலாஜியின் இயற்கை உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம், அமெரிக்கத் தொண்டு நிறுவனமான எண்டேவர் நிறுவனத்தின் அங்கமாக மாறுகிறது.

சுவாமிஜிகள் எப்படி உருவாகுகிறார்கள்? இந்த நாவலில், ராணுவத்தில் இருந்து வந்த திருமகன் எப்படி ஆஸ்மான் சுவாமியாக மாறினார்? ராஜ்குமார் பாலாஜிக்கும் அந்த சுவாஜிக்குமான இயற்கை உணவுப் பொருள் சந்தை ஒப்பந்தம் எப்படி நடக்கிறது? ஒரு தேசியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த பாலாஜியின் சகோதரி சித்ரிதா….. ஏன் திடீரென தாளவாடி மலையடிவாரத்தில் 25 கிராமங்களில் இயற்கை உணவு மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்? இதன் உள் அரசியல், வாசகர்கள் பக்கம் விடப்பட்டிருக்கிறது. ஆகமொத்தம், இயற்கை உணவு ஏற்றுமதியில் கண்ணம்மநாயுடு டிரஸ்டின் லாபம், மில்லியன் கணக்கில் எண்ணப்பட்டது.

காடும் மலையும் பின்ணிப் பிணைந்த மக்கள் வாழ்வியல் நாவலில் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது. வன விலங்குகளின் வாழ்வியல் முறைக்குள் தங்களைப் பிணைத்துக் கொண்ட ஆதிகுடிகள் இன்றைக்கு என்ன ஆனார்கள். வனத்துறை ஆக்கிரமிப்பிற்கு பிறகு அவர்களின் வாழ்வாதாரம் என்ன? விலங்குகளோடு இயைந்து வாழ்ந்த பூர்வகுடிகளை வெளியேற்றும் ஏகாதிபத்தியத்தின் பின்புலம், இவைகள் சரடு போல் சொல்லப்பட்டிருக்கிறது. அணைக்கட்டில் நடக்கும் விவசாயம் பற்றிப் பேசுவது அரிய தகவல். தண்ணீர்க்காடு, பாங்காடு. அணையில் நீர் வற்றிய நேரம், சதுப்பு நிலத்தில் விதைகள் பாவி விவசாயம் நடக்கிறது. இது தண்ணீர்க்காடு. பாங்காடு என்பது ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் அணையின் மேட்டுப்பகுதி.

மலையிலிருந்து வந்து அணைக்கட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேர்கிற இடப்பிரச்சனை, தங்கள் குடிசையை தக்க வைக்க கணவனை இழந்த ரெங்கம்மா இரவு நேரங்களில் பதுங்கியிருந்து, எதிரிகளை ஆயுதங்களால் தாக்குவது பதிவு செய்யப்படிருக்கிறது.

சந்துரு

டெக்கான் ரேயானால் மரம் வெட்டும் வேலைக்கு சென்று கைகால் மறத்து வாழ்க்கையைத் தொலைத்த மேலத்தாவளம் மலைப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - மயிலாள் இவர்களின் பேரன் சந்துரு. இவன் ஒருபோதும் அந்த ஆலைக்குள் நுழைந்துவிடக் கூடாது படிக்க வேண்டும். என மிகுந்த சிரமத்தில் சந்துருவை கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்கள். வறுமையினால், நண்பன் மூர்த்தி மற்றும் கோவிந்தன் வகையறாவுடன் சேர்ந்து மூடிக்கிடந்த ஆலையின் மோட்டார்களையும் செப்புக் கம்பிகளையும் திருடி கொலைப்பழிக்கு ஆளாகி கைது செய்யப்படுகிறான்.

கௌதம்

ராஜூவின் பேரன் கௌதம். இளம் வக்கீல். வயதான ஆரானின் போராட்ட வாழ்க்கையை உள்வாங்கியே வளர்ந்தவன். தாத்தா ராஜூவைப் போல் அல்லாமல் இடதுசாரி சிந்தனையோடு மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறான். நம்மாழ்வார் ஐயா அவர்களின் இயற்கை வேளாண்மையில் நாட்டம் ஏற்பட்டு நண்பர்கள் விவசாயம் செய்கிறார்கள். அதற்கு பர்ணசாலை எனப் பெயர் வைக்கிறார்கள். அதில் ஏற்பட்ட நெருக்கடிகள். சந்துருவும் கௌதமும் நண்பர்கள். சந்துருவை சிறையிலிருந்து மீட்பதற்காக கௌதம் எடுக்கும் முயற்சிகள். இயற்கை விவசாயம் என்பது வாழ்க்கை என்பதில் தீர்க்கமாக இருந்த திருநாவுக்கரசுக்கும் விடுதலை செய்யப்பட்டு தன் சொந்த மலைப்பகுதி மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவனாக மாறியிருக்கும் சந்துருவுக்கும் இடையில் பொதுத்தன்மையோடு கௌதம் நிற்கிறான். இருவருமே அவர்களுக்கான பாதையை தீர்மானித்துவிட்டார்கள். இவர்களுக்கு எப்போதும் துணை நிற்கவேண்டும் எனக் கௌதம் முடிவெடுக்கிறான். ராஜூ முகிலினியைத் தன் குடும்பத்தில் ஒருத்தியாகப் பார்த்தார். முகில்களிலிருந்து வருபவள். முகிலைப் போன்றவள். அத்துடன் பவானி என்கிற வடமொழிச் சொல் பிடிக்கவில்லை என்பதால் பவானி ஆறுக்கு குறியீடாக முகிலினி என ராஜூ பெயர் வைக்கிறார். அதையேதான் தன் மகளான மணிமேகலைக்கும் சொல்லிக் கொடுத்தார். அவள் மகனான கௌதமும் முலினியை நேசிக்கத் தொடங்குகிறான். கடும் போராட்டங்களுக்குப் பிறகு நதி மீட்கப்படுகிறது. கௌதம், முகிலினி ஆற்றில் கால் வைக்கிறான். திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த இடி மின்னலோடு பெரும் மழை பொழிகிறது. தன் கலங்கத்தைத் தானே துடைத்துக் கொண்டு சுழித்து ஓடியது முகிலினி.

சாதியம் - நகரமயமாக்கல்

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ராஜூவுக்கு நேர்ந்த கொடுமைகள் நாவலில் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. ஆனால், அந்த வலியை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் நீ சாதியைச் சொல்லிதான் ஆகணும் என்கிற அடக்கு முறைக் கேள்விகள் எழுந்தபோதெல்லாம், ஒரு ஆறாத வடுபோல் அவர் மனதில் பதிந்து இருக்கலாம். “ஊரிலேயே ராஜூ மட்டும்தான் ஜாதியை மாற்றிச் சொல்பவன் . மறவர்களுக்கு அது வரவே வராது. உனக்கு மரியாதை வேண்டுமென்றால் இதெல்லாம் செய்யத்தான் வேண்டும் என்பது ராஜூவின் நினைப்பு”

“சாமிக்கு சாதி உண்டா? உண்மையிலேயே சாமியா?அல்லது எவனாவது வெறுமனே தூக்கத்தில் உளறுகிறானா? அந்த நிமிடம் ராஜூவுக்கு வீடுபோய் கூட்டில் அடைந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பு இருந்தது” அந்த தாக்கம்தான், மேல்சாதிக்காரர்களை வெறுப்பதைவிட அவர்களைப்போல் மாறிவிடுவது அவனுக்கு எளிதாகத் தோன்றியது என்கிறார் நாவலாசிரியர்.

நொய்யல் ஆறு நடைபழகும் அன்னம். அவளுக்கு வேறு வேறு இடத்தில் வேறு வேறு மனிதர்கள். முகிலினி அப்படியல்ல. காட்டுயானையின் கம்பீரம். அவளுக்கு எல்லாமே ஒன்றுதான் என நகரமயமாதலுக்கு சாதி எப்படிக் காரணமாக இருக்கிறது என்பதனை நொய்யல் ஆறையும் முகிலினியையும் ஒப்புமைப்படுத்தி சொல்லியிருக்கும் விதம் சிந்திக்கத்தக்கது. அதன் பொருட்டுதான், தன்னைப் பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்வதும், மகளுக்கு சங்கீதம் கற்றுக்கொடுக்க பிரயாசைப்படுவதும், இலக்கியங்களில் ஆர்வம் வர முயற்சி செய்வதும், அவளை உயர்படிப்பில் சேர்த்து விடுவதும்.

ஆனால், அதற்குள்ளும் ஒரு உளவியல் சிக்கல் இருந்தது. மற்றக் குழந்தைகள் போல் எளிமையாக வாழ வேண்டும். தனக்குப் பிடித்ததை தான் செய்ய வேண்டும் என்கிற மனப்போக்கு. மணிமேகலையிடம் வளர்ந்து வந்தது. தான் வசதியாக இருப்பதால் மற்ற குழந்தைகள் தன்னோடு சரிசமமாகப் பழகவில்லை என்ற கோபம் இருந்தது. அதனால்தான் ராஜூ சொல்லியும் கேட்காமல் மணிமேகலை தன் குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்த்துவிடுகிறாள். புத்தரின் பேராக இருந்தாலும் மாடர்னாக இருக்க வேண்டும் எனக் கௌதம் எனப் பெயர் வைக்கிறாள். அவளுக்கு யாரையோ பழி வாங்கிவிட்ட சந்தோசம் இருந்தது என நாவலில் சுட்டப்பட்டிருக்கிறது. இந்த மணிமேகலை கதாபாத்திரம் அழுத்தமான எதையோ ஒன்றைச் சொல்ல வருவதுபோல் நம்மிடம் தயங்கித் தயங்கி நிற்கிறது.

முகிலினி என்று பெயர் வைத்த ராஜூவும் அவரின் தலைமுறைகளும்தான் முகிலினியிடம் தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

மாடித்தோட்டம் அமைக்க மண்ணிற்குப் பதில் தேங்காய்நாரை அடித்து கட்டியாக்கும் ஹைட்ராலிக் க்ரோ பேக் மெஷின் தயாரிக்கும் விக்டர், கண்காட்சிகள், கருத்தரங்குகள் என இயற்கை உணவை தொழிற்படுத்தும் வெண்ணிலவனும் நடப்பியலை பேசக்கூடிய மிகத் தேவையான கதாபாத்திரங்கள்தான்.

3000 கிலோ மீட்டர் நீளமும், அகலமும் கொண்ட இந்தியா ஏன் மாடித்தோட்டம் போடவேண்டும்.? ஏன் விளைநிலங்களில் தென்னை வளர்த்து நாரை ஏற்றுமதி செய்ய வேண்டும்? ஏன் நமது மலைகள் எல்லாம் டீ, காபி, ரப்பர், யூகலிப்டஸ் என்று பணப் பயிர்களால் நிறைந்திருக்க வேண்டும்? அவரவர்க்கான தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்றால் பிறகு அரசு எதற்கு? என கௌதம் கேட்பது, சமூகத்தின் முன் வைக்கப்படுகிற கேள்வி. நாவல் வாசகரின் மனதில் சென்றடைய வேண்டும் என இயங்குவதும் இந்த நோக்கத்தில்தான்.

அழகுநிலையத்திற்காக பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யும் வர்ஷினியின் கனவு உலகம் ஒருபக்கம். அடிப்படைத் தேவைகள் இல்லாமல் பசியும் பட்டினியுமாய் சாகக்கிடக்கும் மக்களை எண்ணி வருத்தப்படுவதும், திருநாவுக்கரசுக்கு உதவுயாக இயற்கை விவசாயத்தில் இறங்கமுடியாத வேதனையுமாக கலங்கும் கௌதமின் சமூகத் தேடல் மறுபக்கம். இதற்கிடையே இருவரின் காதல் மிக அழகாக சித்திரிக்கப்பட்டுள்ளது. மாறவே மாறாத ஒரு அரசியல் தளத்தில் இருந்து மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆரானைப் போல கௌதமை இந்த நாவலின் பொதுநாயகனாகப் பார்க்கிறேன். கௌதம் கதாபாத்திரம் நாவலாசிரியர் முருகவேளாகத் தெரிகிறார்.

பெண் அரசியல்

தேர்தல் நேரங்களில் வாக்களிப்பதற்கோ அல்லது தேர்தலில் நிற்பதற்கோ குடும்பத்தில் உள்ள ஆண்களின் பரிந்துரைகளும் கண்டிப்புகளும் இன்னமும் பெண்களுக்கு தேவைப்படுகிறது. தன் மகன் ஒரு கட்சியைச் சொல்லி அதற்குத்தான் ஓட்டுபோட வேண்டும் என்று சொன்னதற்காக வாக்குச்சாவடி வரும் பெண்ணும். மேசையில் ஏறி நின்று மேற்கூரையில் வாக்குச்சீட்டை செருகும் பெண்ணின் செயலும் நகைப்பிற்குரியது. என்றாலும். அதுதான் உண்மை. இன்றைக்கும் பெண்களுக்கான அரசியல் தெளிவு விசாலமாக இல்லை.

கட்டமைப்பு

நீண்ட காலங்களைத் தாண்டி வருவதாக இருந்தாலும் சரி. பெரும் நிகழ்வுகளைக் கூறுவதாக இருந்தாலும் சரி.அதைக் குறிப்பால் ஒற்றை வரியில் கடந்துபோகிற உத்தியை சில இடங்களில் அழகாகக் கையாண்டிருக்கிறார்.

முகிலினி குறித்த வர்ணனை, தொழிலாளிகள் முதல் மாதம் சம்பளம் வாங்கும்போது துணிமணிகள் வாங்குவது, இறைச்சி உண்பது என உற்சாகமாக விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்தக் காட்சி, முதலாளிகள் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் பேசுவது லாபங்களைக் கொண்டாவது போன்ற கள விவரிப்புகள், ஆலை கொள்ளையடிக்கப்படும் காட்சி போன்ற பல வர்ணனைகள், கோவை மாவட்டத்தைச் சூறையாடிய பிளேக் நோயின் தீவிரம் குறித்த விவரணைகள், நம்மை சம்பந்தப்பட்ட அந்தக் களத்தில் இறக்கிவிடுகிறது.கிட்டத்தட்ட 487 பக்கங்கள் தொய்வில்லாமல் வாசிக்க வைக்க முடிகிறது என்பதே நாவலாசிரியருக்கான மிகப் பெரிய வெற்றி.

டெக்கான் ரேயான் ஆலை மூடப்பட்ட பிறகு, ஆதங்கத்தில் மக்கள் அதிலுள்ள பொருள்களைத் திருடுகின்றனர். அதில் பாலத்தில் கோவிந்தன் வகையறாவுக்கும் மற்றுமொரு கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சிகள், திரைப்படக் காட்சி போல விறுவிறுப்பாக கண்முண்ணே விரிகின்றன.

காலத்தை குறியீடுகளால் உணர்த்துவது ஒரு கலை. நாவலில், ஸ்டுடிபேக்கரில் தொடங்கி, மெர்சிடிஸ் பென்ஸ், ஆஸ்டின், லிமோசின், ஆல்டோ, ஐ. டென் வரை அந்தந்த காலகட்டத்துக்கான கார்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் ராஜூ, ஆரான் போன்றவர்களை அவன் என அழைப்பதும் சில அத்தியாயங்களுக்கு பிறகு அவர் என குறிப்பிடுவதிலும் வயதிற்கு கொடுக்கப்படும் கால மரியாதையை உணரமுடிகிறது.

நாவலாசிரியர் வழக்குரைஞர் என்பதால் குற்றப்பிரிவுகள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. உண்மையானத் தரவுகளால் தர்க்கத்துடன் கூடிய உரையாடல்களில் நாவல் நகர்கிறது,

ஒரு நாவலில் கதாபாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்லும் அல்லது அந்தக் கதை தனக்கான பாத்திரங்களை உருவாக்கிக் கொள்ளும். ஆனால், உணர்வுகளை ஆவணப்படுத்துவதும், ஆவணங்களை உணர்வாக்குவதும் மிக மிகச் சிக்கலான விசயம். இந்த இரண்டையுமே கையிலெடுத்து அழகியலாகப் படைத்திருப்பது சவாலான உத்தி.

சில கவனக் குறைகள் இருக்கின்றன. சமூகத் தளத்தில் நின்று போராடக் கூடிய பெண் கதாபாத்திரங்கள் இருந்திருக்கலாம். ஆனாலும், வாசிப்பிற்கு நெருக்கமான எளிமையான நடை. டார்வின் சொல்லி வைத்ததுபோல எளியதை வலியது வென்று கொண்டேதான் இருக்கிறது. முதலாளிகள் முதலாளிகளாகவே வாழ்கிறார்கள், தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதை வாசிப்பின் ஊடாக நாவல் எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

இனி ஒரு உலகப்போருக்கு வாய்ப்பில்லை. தவணை முறையில் ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்தியம் கற்றுக் கொண்டுவிட்டது

என்ற பேராசிரியர். தொ.பரமசிவம் ஐயாவின் கூற்று முற்றிலும் உண்மை. இதிலிருந்து சமூகம் எப்படி மீளப்போகிறது தெரியவில்லை. அதற்கான வெளிச்சத்தினை, ஒரு படிப்பினையாக, முகிலினி நாவல் முன்னெடுத்து இருக்கிறது.

இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் கட்சி நிலைகள், காமராஜர், அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள், வினோபாபாவே, ஜெ.பி. - காந்தியப் பிளவுகள், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் இவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் இவைகளையும் நாவல் பேசியிருக்கிறது.

நியாயமான உரிமைக்காகப் போராடுகிறவர்கள் இடதுசாரிகள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தேவையான இணக்கமான அரசியல் பார்வையை முன்னிறுத்தி, மக்கள் எழுச்சியாகக் கொண்டு செல்பவர்கள் கம்யூனிஸ்டுகள். மார்க்சீயப் பார்வையில் இடதுசாரி சிந்தனையோடு ஒரு கலகக் குரலாக, மக்களின் போராட்டக் குணத்தை வலியுறுத்துகிற முகிலினி நாவலை ஆய்வுக் களத்தில், கம்யூனிச நாவலாக முன்னெடுக்கலாம். இதுபோன்ற சமூக அக்கறையுள்ள படைப்புகளை பொன்னுலம் பதிப்பகம் பதிப்பித்து வருகிறது. சமூக செயற்பாட்டாளர் திருப்பூர்.குணா பாராட்டிற்குரியவர். 

முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி