அண்மையில் ‘பெரியார் ஒருவர்தான் தலித் தலைவர் அம்பேத்கரியல் பார்வை’ என்ற தலைப்பில் சென்னைப் பெரியார் திடலில் தோழர் வே. மதிமாறன் ஆற்றிய உரையை இணைய தளத்தில் காண நேர்ந்தது. முற்றிலும் புதிய கோணத்தில் பெரியாரை மிகச் சரியான முறையில் அணுகி இருந்தார்.

தன் உரையில் தொடக்கத்திலேயே பெரியாரின் பார்வை ஒரு எக்ஸ்ரே பார்வை அதில் எந்த வகையான பக்கச் சார்புக் கண்ணோட்டத்திற்கும் (NO SENTIMENTS) இடமில்லை என்று துல்லியமாக வரையறுப்புச் செய்திருந்தார்.

‘கும்புடுறேன் சாமி’ என்பது அடிமைச் சொல். ‘நமஸ்காரம்’ என்பது ஆதிக்கச் சொல். ‘வணக்கம்’ என்பதே கலகச்சொல் என் முன்னுரையுடன் தன் உரையக் கலகலப்போடு தொடங்கும் மதிமாறன், ‘வணக்கம்’ என்ற சொல்லின் கதாநாயகனாகப் பெரியாரை காண்பது பொருத்தமே.

இந்த இடத்தில் கடந்த காலத்தின் ஒரு வரலாற்றுப் பதிவையும் அவர் நம் கண்முன் வைக்கிறார். காரைக்குடிப் பகுதியில் முந்தைய தன்மான இயக்க வீரர்களான முதுபெரும் தோழர்கள் என்.ஆர். சாமி, காரைக்குடி இராம. சுப்பையா போன்றவர்கள் நடுத்தெருவில் நின்று கொண்டு போவோர் வருவோர்க்கெல்லாம் ‘வணக்கம்’ ‘வணக்கம்’ என்று கூறி இந்தச் சொல்லை மானமீட்புச் சொல்லாக அறிமுகப்படுத்தியுள்ளது எண்ணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

பெரியார் மீது தொடர்ந்து கூறப்பட்டு வரும் பழிப்புரைகளின் மிக முதன்மையானது ‘அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் பகைவர் (தலித் விரோதி) என்பதுதான். இப்பழிச்சொல்லை மறுத்து மிக நேர்மையான பல கருத்துகளைத் தோழர் மதிமாறன் தன் உரையில் முன் வைக்கிறார். தாழ்த்தப்பட்டோர் மீது இழைக்கப்படும் கொடுமைகள் பற்றித் தாழத்தப்பட்டோரிடமே சென்று பேசிக் கொண்டிருப்பது மிகப் பெரிய மோசடி. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் பிறக்க நேர்ந்த பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டில் வாழ்ந்த எல்லாப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் நடுவிலும் போய்த்தான் தாழத்தப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகத் தொடரந்து பேசினார். போராடினார்.

தேவர், வன்னியர், முதலியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச்சாதியர் பெருமளவில் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும் மிகக் கடுமையான சொற்களால் அவர்களின் சாதி ஆதிக்கத்தைக் கண்டித்தார் எனத் தோழர் மதிமாறன் குறிப்பிடும் கருத்து மிகப் பரவலாக எடுத்துச் செல்லப் பட வேண்டிய உண்மைக் கருத்தாகும். ‘பறையர் பட்டம் தொலையாமல் உங்கள் சூத்திரப் பட்டம் தொலையவே தொலையது’ எனப் பல கூட்டங்களில் பெரியார் பேசியுள்ளதை இங்கே நினைவுகூரலாம்.

முதுகளத்தூர் கலவரத்தின் போது மற்றெல்லா வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளும் முத்துராமலித் தேவர் பக்கம் நிற்க, பெரியா ஒருவர்தான் தேவரைக் கைது செய்து சிறையில் போடக் காமராசரை நெருக்கினார் என்ற உண்மை வரலாற்றையும் தோழர் தம் உரையில் பதிவு செய்துள்ளார். தீண்டப்படாதார் எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தனியே ஒதுக்கி வைத்து, அவர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ஆதிக்கச் சாதியனரின் கருத்தியலில் மிகமுதன்மையானது அவர்கள் ‘மாட்டுக்கறி உண்ணுவோர்’ என மட்டமாகக் கருதும் இழிந்த மனநிலைதான். இதற்குத் தனது உரை வழி சரியான சவுக்கடி தருகிறார் மதிமாறன்.

உணவுப் பிரிவில் சைவம், அசைவம் என இருவகை உண்டு. இதவே மோசடியானது. இதில் அசைவப் பிரிவில் இரண்டு வகை நடைமுறையில் உள்ளது அதை விட மோசடியானது. 1. மாட்டுக்கறி உண்போர் 2. மாட்டுக்கறி தவிர்த்த மற்றெல்லாப் புலால் உணவு வகையும் உண்போர்.

தம்மை இன்று சைவர்களாக (மரக்கறி) உணவளார்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்கள் வேத காலம் முதலே மாடு, குதிரை உள்ளிட்ட எல்லாவற்றையும் அடித்துக் கொன்று தின்றிருக்கிறார்கள். வரலாற்றில் ஈடிணையில்லாத வேத மறுப்பாளனாக பார்ப்பனியத்தின் மாபெரும் எதிரியாகத் தோன்றினான் புத்தன். உழவுத்தொழில் செய்யவே மாடுகள் இல்லாதபடி இரக்கமற்ற இந்தப் பார்ப்பனர்கள் வேதத்தின் பேரால் யாகம் என்ற பொய்யுரையால் எல்லா மாடுகளையும் அடித்துக் கொன்று தின்ற அட்டூழியத்தை எதிர்த்துப் புத்தன் தோன்றுகிறான். மாடுகளைப் பாதுகாக்க எழுந்த இயக்கமே புத்தனின் இயக்கம். புத்த மத்தின் வீச்சால் பார்ப்பனியம் ஆட்டம் காணுகிறது.

எப்படியேனும் தங்கள் மதத்தைப் பாதுகாத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் பார்ப்பனர்களுக்கு உருவாகிறது. அதன் விளைவாகவே தாங்கள் மிகவும் விரும்பிச் சுவைத்து உண்டு வந்த மாட்டுக்கறி உணவைத் துறந்து சைவ உணவுககு அவர்கள் மாறுகிறார்கள்.

அண்ணல் அம்பேத்கரின் இந்த அரிய கருத்தைத் தகுந்த இடத்தில் மேற்கோளாக்கிவுள்ள மதிமாறன், ரிக் வேத காலத்தில் எங்கும் பார்த்தாலும் தீக் குண்டம் எரிந்து கொண்டிருந்தது. மாடு, குதிரை போன்றவை எப்போதும் அதில் வெந்து கொண்டிருந்தன என மிக அழகாக எடுத்துக் காட்டி பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தை அம்பலபடுத்துகிறார்.

மாடு உண்ணார் மேலோர், உண்போர் கீழோர் என்கிற வஞ்சகமான பரப்புரையை பார்ப்பனர் வெற்றிறெச் செய்து விட்டனர். மிகக் கூர்மையாக நோக்கினால் இந்திய வரலாறு என்பதே பார்ப்பனியத்திற்கும் பவுத்தத்துக்குமான போராட்டமே என அணண்ல் அம்பேத்கர் சொன்னதை தனது உரையில் நிரூபிக்கிறார் தோழர் மதிமாறன்.

இஃது மிக மிக அருமையானதோர் கருத்தாகும். ‘ஆச்சாரம் கடைபிடிப்பத்தல்’ என்பதே தீண்டாமைக்கு உரம்பாச்சும் உயிர்ச்சொல் வாழ்வியல் நடைமுறை என்கிற தோழர் மதிமாறனின் கூற்று மிகவும் நுட்பமானது.

‘பெரியாரின் இறுப்புகளில் ஒன்று, அவர் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை மக்களிடையே பரவலாக அறிமுகப்படுத்திய கலகச் செயல்தான். இந்தியாவிலேயே இடைநிலைச்சாதியார் நடுவில் இதனை முன்னெடுத்த ஒப்பற்ற தலவர் பெரியார் ஒருவரே என்ற மதிமாறன் கூற்றில் உடன்படதார் யார்?

பொதுவில் வைணவன்- சைவன் போராட்டமும் இந்த அடிப்படையில்தான் நடந்துள்ளது. இரமாயணத்தில் இராமன் வைணவன் அவனுக்கு எதிரியாக காட்டப்படும் இராவணன் சைவன். தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் கூட, பெரியார் இராமாயணம் எரிக்கப்பட வேண்டும் என்று சொன்ன போது வாய் மூடிக் கிடந்தார். ஆனால் பெரியபுராணமும் கூடவே எரிக்கப்படவேண்டும் என்று சொன்னபோது, ‘பார்த்தீரா பார்த்தீரா, பெரியார் ஒரு வைணவர்; அதனால்தான் அவர் சைவத்தை எதிர்க்கிறார்’ என்று சொன்ன மோசடிக்கருத்தியலையும் மதிமாறன் அம்பலப்படுத்துகிறார். அவர் தன் உரையின் இடையே, பெரியார், முழுச் சோம்பேறியான குசேலனின் கதையையும் குத்திக் கிழித்துள்ள பாங்கை நகைச்சுவையோடு பதிவுசெய்கிறார்.

தோழர் மதிமாறன் உரையில் மிக முதன்மையான மற்றொரு பகுதி பெரியார் தலித் தலைவரான அயோத்திதாசரை வேண்டுமென்றே இரட்டடிப்புச் செய்துவிட்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை மறுத்துள்ள பாங்குதான்.

நடுநிலையோடு ஆராய்ந்தால் அண்ணல் அம்பேத்கரே அயோத்திதாசரை குறிப்பிடவில்லை. அவர் இலட்சுமிநரசு என்கிற தலித் அல்லாத தலைவரைதான் பாராட்டி எழுதியுள்ளார். என். சிவராஜ் அவர்களைப் பாராட்டி இருக்கிறார். ஆனால், உண்மையில் பெரியார், ‘அயோத்திதாசர் தனக்கு முன்னோடித் தலைவர் என்று பதிவு செய்துள்ளார்.

‘அம்பேத்கர் என் தலைவர்’ என்று தன் தலைமேல் வைத்துக் கொண்டாடி இருக்கிறார். உண்மைகள் இப்படி இருக்கப் பெரியார் மீது வேண்டுமென்றே பழிசொல்வது அபாண்டமானது என்கிற நேர்மையான பதிவைத் தன் உரையில் மதிமாறன் வெளிப்படுத்துயுள்ளார்.

தமிழில், பார்ப்பனர் அல்லாதர் இயக்கம் கண்டுள்ள வெற்றியை - நீதிக்கட்சி அரசை அம்பேத்கர் பாராட்டியுள்ள தகவலையும் மதிமாறன் மறவாமல் பதிவு செய்துள்ளார்.

இப்போதுகூட கோயில் நுழைவுப் போராட்டத்தில் தவறான ஒரு செய்தி தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராடத்தை முன் நின்று நடத்தியவர் வைத்தியநாத அய்யர் என்ற தவறான கருத்தையும் தோழர் மதிமாறன் தமது உரையில் மறுத்துள்ளார். உண்மையில் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துக்கொண்டு சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தான் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளனர்.

1939 ல் மதுரைக் கோயில் நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே 1929 ல் ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் போராட்டம் நடைபெற்றது. குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் உள்ளிட்டோருடன் ஏராளமான தாழ்த்தப்பட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். கோயிலுக்குள் சென்ற எல்லோரையும் வெளியே வரமுடியாதவாறு மூன்று நாட்கள் ஆதிக்கசாதியார் பெரியபூட்டாக போட்டு அடைத்து வைத்து விட்டனர். அந்த மூன்று நாள்களும் கோயிலுக்குள் அடைப்படிருந்த தோழர்களுக்குப் பெரியாரின் மனைவி நாகம்மையார்தான் தனது வீட்டில் உணவு தயாரித்துத் தந்து கொண்டிருந்தார். வெளியூர் சென்றிருந்த பெரியார் வந்தபிறகுதான் தோழர்கள் வெளியே வந்தனர் என்ற செய்தியையும் மதிமாறன் தன் உரையல் பதிவு செய்துள்ளார்.

ஆக, தொடக்கம் முதல் இறுதி வரை கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றலுடன் அமைந்த ஒளி- ஒலி குறுந்தகடாக வெளிவந்துள்ள இவ்வுரைப் பொழிவைத் தோழர்கள் அனைவரும் கேட்டுப் பயன்பெறலாம். மதிமாறனுக்கே உரிய நையாண்டி, நுட்பமான எள்ளல், எதிரிகள் மீது போடும் கிடுக்குபிடி போன்றன இந்தப் பேச்சிலும் உண்டு.

தோழரின் உரையில் நான் முரண்படும் ஒரே இடம் அவர் தனித்தமிழை ஆதிக்கவாதிகளின் மொழி, பூர்ஷ்வாக்களின் மொழி என்று குறிப்பிட்டுள்ள கருத்தியலைத்தான்.

மறைமலையடிகள் தனித்தமிழ் பேசினார் என்கிறார். பாவாணர் பேசியதும் தனித் தமிழ் தானே! தாழ்த்தப்பட்ட சேரி மக்களிடம்தான் இன்றும் தமிழ் உயிர்ப்போடு வாழ்கிறது என்கிறார். அதெற்கென்ன காரணம்? தாழ்த்தப்பட்ட மக்களின் பேச்சு வழக்கில்தான் பிறமொழி கலவாத தமிழ் அதிகளவில் இடம் பெற்றுள்ளது என்பதுதானே?

தோழர் இக்கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதிக்கம் எங்கிருந்து வந்தாலும் எதிர்ப்போம். சாதியக் கருத்தியலை எதிர்ப்போம். ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் ஒற்றுமையைக் கூர்மை படுத்துவோம்.

- கவிஞர். தமிழேந்தி

தோழர் வே. மதிமாறனின் இந்தப் பேச்சு காணொளிக் குறுவட்டாக (Video DVD)அபசகுனம் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது

*
அபசகுனம் வெளியீடு --/ கோவை / விலை ரூ.35.
97508 71000 -/ 91594 30004

Pin It