"யார் கம்யூனிஸ்ட்"

"அச்சமற்றவன். சுயநலமில்லாதவன். பொதுநலத் தொண்டன். எங்க தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்பவன். மொத்தத்துலே நல்லவன் ”

"அப்படீன்னா காந்தி கம்யூனிஸ்டா “

"அதுக்கு மேலே".

"அதுக்கு மேலே" என்ற யுகபாரதியின் சிறுகதையில் இந்த உரையாடல் இடம்பெற்றிருக்கிறது.

மனிதர்களை அடையாளம் காட்டுவதில், அடையாளம் கண்டு கொள்வதில் யுகபாரதியின் சிறுகதைகள் தன் பங்கைச் செலுத்துகின்றன எனலாம். குறும்பாக்கள், குறும்படம் , மொழிபெயர்ப்பு என்று படைப்புத்தளத்து முயற்சிகள் கொண்ட யுகபாரதியின் இத்தொகுப்பில் அமைந்துள்ள 15 கதைகளில் பாதிக்கும் மேற்பட்டவை புதுவை சுதந்திரப் போராட்டம், பொதுவுடமைத் தோழர்களின் வாழக்கைப் பின்னணியைக் கொண்டவை என்பது இத்தொகுப்பின் விசேசத்தன்மை என்று எண்ணுகிறேன். இதைத் தவிர கதைகளுக்குள் அமைந்திருக்கும் நுண் அரசியலை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. புதுச்சேரி மனிதர்களின் சாதாரண வாழ்வியலைக் கொண்ட கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன.

பிரஞ்ச் அதிகாரி லஞ்சம் கொடுத்து உளவு வேலைக்கு ஒருவரை கேட்கும் போது அதை மறுத்து குரல் எழுப்புவதைப் பார்க்கிறோம். பேப்பர் போடும் பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர் உயிரை பலி வைத்து அவரின் பணியைச் செய்கிறார். சாதாரண கொலுசு போடும் ஆசை நிறைவேறாமல் குடும்பத்தையே அலைக்கழிக்கிறது. "சிவப்புச் சட்டையைப் பார்த்தாலே வெட்டுங்கடான்னு சொல்றவனும் "ப்ப்பா இவன் கொம்யூனிஸ்ட்டு ப்ப்பா” ந்னு யாராவது சொன்னாப்போதும் அவனை உண்டு இல்லன்னு பண்னிட்டிடு வாடான்னு ஆளனுப்புகிறவனும்தான் கொலைகாரனுங்க. தோழர் நாம செய்யறது தற்காப்பு" என்று போராட்ட களத்தில் பலர் தென்படுகிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் வந்தேறிகள் என்று அடையாளம் காட்டப்படும் மனிதர்கள் அந்நியமாகும் அவலம் காட்டப்படுகிறது. சாதாரண குடும்பப்பிரச்சினைகள் தற்கொலைக்கு கொண்டு செல்கின்றன. "தலை கொடுப்பதும், தலை எடுப்பதும் விடுதலைக்கே" என்று தங்கள் வாழக்கையை பலர் விடுதலைக்காக கொடுக்கிறார்கள். வெள்ளெலி சாப்பிட்டு ஜீவிக்கிறவர்களும் காணப்படுகிறார்கள். மணித்துளி முதல்வரின் ஆசை கல்விச்சீர்திருத்தம், குழந்தைகளீன் நலனில் அமைகிறது.

புதுவையின் பொதுவுடமை இயக்கவரலாற்றில் தோழர் சுப்பையாவின் பங்கு மகத்தானது. அவரைப் பற்றிய குறிப்புகள், அவரின் வாழக்கையிலிருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட பல கதைகள் இதில் அமைந்துள்ளன. வரலாற்றின் ஒரு பகுதியாக பல கதைகளை கட்டமைத்திருக்கிறார்.

குழந்தைகள் பற்ரிய அக்கறையை இவரின் குறும்பாக்கள், "குருவி தலையில் பனங்காய்" குறும்படம், மற்றும் கவிதைகளில் காணலாம். இத்தொகுப்பில் அந்தக் குறும்படம் சிறுகதை வடிவமாகியிருக்கிறது. அன்பு என்ற கதையே கூட சிறுவர்களுக்கான கதைதான். அன்பு, செல்வம், வெற்றி இவற்றில் நமக்குத் தேவையானது எது என்ற வழிகாட்டலின் மையமாக அது இருக்கிறது. மற்றைய கதைகளிலிருந்து தனித்து நிற்கிறது. கதைகளின் கட்டமைப்பில் எளிமை போர்த்தப்பட்டாலும், நுணுக்கமான சித்தரிப்புகளும், விவரிப்பும் இல்லாத எலும்புக்கூடாக கதைகள் அமைக்கப்பட்டிருக்கும் பலவீனம் உறுத்தவே செய்கிறது. “இது பத்திரிக்கை இல்லடா. . போர்வாள்" என்று ஒரு கதையின் உரையாடல் தெரிவிக்கிறது. இதில் நம்பிக்கையும் தத்துவார்த்த திடமும் கொண்ட யுகபாரதியின் படைப்புகள் புதுவை மண்ணின் நல் விளைச்சலாய் தொடர்கிறது.

(இரண்டு உரூபாய் : புதுவை யுகபாரதியின் சிறுகதைகள் ரூ 120/ நண்பர்கள் தோட்டம் வெளியீடு புதுச்சேரி)

- சுப்ரபாரதிமணியன்

Pin It