எடுத்துரைப்பிற்கான ஆதார சக்தி, எதை எடுத்துரைப்பது என்பதைக் குறித்த நிச்சயமான நிலைப்பாடு; இப்படி ஒன்றை நிச்சயப்படுத்திக் கொண்டு எழுதத் தொடங்கியவுடன் அது வேறு எங்கெங்கோ எடுத்துச் சென்றுவிடும் என்பதும் உண்மைதான். ஆனாலும் தொடங்குவதற்கு நிச்சயக்கப்பட்ட பொருள் ஒன்று தேவை. ஜே.ஜே.சில குறிப்புகள் என்ற இந்தப் பிரதி அப்படி ஒன்றை நிச்சயத்துக் கொண்டு தொடங்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிவது அரிது. ஒன்றையும் மையப்படுத்தாமல் பன்முகமாகக் கிளைகளைப் பெருக்கிக் கொண்டே போகிற ஒருவிதமான ஆலமரத்து எழுத்து முறையாக இருக்கிறது.

“ஜோசஃப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5-ஆம் தேதி, தனது 39-வது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள், இறந்தான்”

என்று ஜே.ஜே-யைக் குறித்துச் சொல்லப் போகிற ஓர் எழுத்து என்பது போன்ற ஒரு பாவனையில் தொடங்குகிறது நாவல். ஆனால் இந்த முதல் வாக்கியத்தை அதாவது பகுதியைத் தயாரிப்பதற்கு மிகப்பெரும் கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாவலாசிரியர் முதல் வாக்கியத்தில் தனது முகவரியின் முகத்தைப் பதித்து விடுகிறார் என்பதனால் முதல் வாக்கியத் தயாரிப்பிற்குப் பெரிதும் உழைப்பும் கவனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவலின் முழுமை பற்றிக் கவலைப்படாமல் அதன் ஒவ்வொரு பகுதியும் முழுமை போல முன்னிறுத்தப்பட்டு முழுக்கவனத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பத்தி அல்ல பெரிது. அந்தப் பத்தியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்கியமும்தான் பெரிதும் கவனத்திற்குரியது. ஒவ்வொரு வாக்கியத்திலும் அதன் பகுதிகளான வார்த்தைகள்தான் இன்னும் அதிகமான கவனத்திற்குரியது. அதைவிடக் கவனத்திற்குரியது கால்புள்ளி, அரைபுள்ளி, முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகளும். இப்படி அணுகப்பட்டிருக்கிறது இந்த நாவலின் எடுத்துரைப்பு முறை. இங்கே ஜே.ஜே முக்கியம் அல்ல. ஒவ்வொன்றும் மிக முக்கியம். அதே நேரத்தில் எந்த ஒன்று மட்டும் முக்கியமானதாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் முக்கியமானது. இதன் மூலம் பிடிமானமற்ற ஒரு வெளியை உற்பத்திச் செய்வதை நோக்கி இந்தப் பிரதி நகர்கிறது. பிடிமானத்திற்குள் அகப்படாதவைகள்தான் நீடித்த கவர்ச்சியை மனிதர்களுக்குள் பிறப்பித்த வண்ணம் இருக்கின்றன.
 
எந்த ஓர் எடுத்துரைப்பிற்கும் இடமும் காலமும் முன் நிபந்தனை. அதற்கேற்ப இந்தப் பிரதியிலும் இடமும் காலமும் வருகின்றன. ஆனால் ஓர் இடம்; ஒரு நிகழ்ச்சி; ஒரு காலம் ஒரு நிகழ்ச்சி என்பது இல்லை; பன்முகப்பட்ட இடங்கள்; பன்முகப்பட்ட காலங்கள்; முன்னும் பின்னுமான காலங்கள்; மேலும் கீழுமான இடங்கள்; காடும் கடலும் கற்பாறையுமான நிலங்கள். எந்த ஒன்றிலும் குவிமையப்பட்டுவிடாமல் சிதறடித்துக் கொண்டே நகர்கிறது பிரதி. வாசகன் காலூன்றி நின்று பார்ப்பதற்கென்று ஓரிடம் கொடுக்காமல் இயங்குகிறது பிரதி. இதேபோல் போலிகளிலிருந்து உண்மைகளுக்குப் பயணிக்க ஆசைப்படுகிற பிரதி போலப் பாவனை காட்டிக் கொண்டே உண்மையென ஒன்று இல்லை என்கிற சூனியத்திற்குள் வாசகர்களை இழுத்துப் போகிறது பிரதி.

மனிதன் துன்ப வலியில் கிடந்து துடிக்க வெளியே இருந்து காரணிகள் வினைபுரிய வேண்டும் என்பது இல்லை. அவனே துன்பத்தின் காரணகர்த்தவாக இருக்கிறான். அவனுக்குள்ளேயே துன்பம் ஆயிரம் கண்ணோடு இருக்கிறது. பிறந்ததிலிருந்து இறப்பிற்குப் பயந்து கொண்டே ஆனால் ஆழ்மனத்திற்குள் அதையே அவாவி அலைவது போல் மனிதன் துன்பத்தை அவாவுகின்றவனாக அடிப்படையில் இருக்கிறான். சத்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்த நினைவுகளைக் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின் பாலு நினைத்துப் பார்;க்கிறான். அவர் விடை பெற்றுக் கொள்ளும் போது ‘அங்கும் இங்கும் பார்க்காதே’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. பாலு இப்படி மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான்:-

சத்தியானந்தஜீ, இப்போதும் அங்குமிங்கும் பார்க்கிறேன். ஒன்றையே மட்டும் பார்க்க முடியவில்லை. மனத்தின் இந்த அவஸ்தைக்கு நீங்கள் அன்று சொன்ன சமஸ்கிருதப் பெயர் எனக்கு மறந்துவிட்டது. ஆனால் அந்த அவஸ்தையின் நல்ல உதாரணமாக இருந்து கொண்டிருக்கிறேன். எதிலும் கொஞ்சம் நம்பிக்கை. எதிலும் கொஞ்சம் அவநம்பிக்கை. இதுவல்ல அது என்று தேடிப் போவது. பின், அதுவும் அல்ல என்று உட்கார்;ந்து விடுவது. சோர்ந்து படுத்துவிடுவது. செய்ய எதுவுமில்லை என்று சும்மா இருப்பது. மீண்டும் ஏதோ ஒன்று தூண்ட, ஏதோ ஒன்று பிடித்திழுக்க எழுந்து ஓடுவது. சத்தியானந்தஜீ, உங்கள் வார்த்தை எனக்குப் பயன்படவில்லை. மறுபக்கம் பார்க்காது ஒன்றைப் பார்ப்பதால் கிடைக்கும் தெளிவு எனக்கு வேண்டாம். இரண்டையும், இருபதையும், முடிந்தால் அவற்றுக்கு மேற்பட்ட பக்கங்களையும் பார்த்துக் குழம்பி, அவஸ்தைப்பட்டு, அழிந்துபோகப் பிறந்தவன் நான்.(ப.26)

பாலுவின் இந்த அணுகுமுறைதான் இந்தப் பிரதியின் அணுகுமுறையாகவும் இருக்கிறது. இன்பம் துன்பம், நல்லவன் கெட்டவன், கடவுள் சாத்தான், உயர்ந்தவன் தாழ்;ந்தவன் என்கின்ற பொதுவான இருமைகளைக் கடந்து கவனமாகப் பயணிக்க முயற்சிக்கிறது இந்தப் பிரதி. ஆனால் நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்கின்ற இருமைக்குள் இருந்து கிடைக்கிற மின்னல் வெட்டுகளைக் கொண்டுதான் இந்தப் பிரதி தயாரிக்கப்பட்டிருக்கிறது. பிரதி முழுவதும் உண்மை, உன்னதம், மெய்மை, மேனிலைப்படுத்துவது என்கின்ற நவீனத்துவச் சொல்லாடல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. “இதுதான் பிரச்சினை. மனித மனத்தை மேனிலைப்படுத்துவது. ஒன்று: நேராக மனித மனத்தை மேனிலைப்படுத்துவது (சுச்ருஷிப்பது). இரண்டு;: புற உலகை மாற்றி அதன் விளைவாக மனித மனத்தை மேனிலைப்படுத்துவது. ஜே.ஜே.யின் பிரச்சினை இதுதான”;.(ப.112) இப்படி உன்னதங்களைத் தேடும் இடங்கள் பிரதி முழுவதும் காணக்கிடக்கின்றன. அதேநேரத்தில் எதையும் நம்பமுடியாத நிச்சயமற்ற தன்மை, முடிவு மேற்கொள்ள முடியாத, விடை தெரியாத் தன்மை ஆகிய பின்நவீனத்துவக் கூறுகளும் பிரதிக்குள் செறிவாகக் கலந்து கிடக்கின்றன. எதுவும் முற்றாகப் பொய்யும் அல்ல. முற்றாக உண்மையும் அல்ல. ஆறுதலுக்காக நம்புவது என்னுடைய வேலையல்ல. அதைவிடவும் மனம் கசந்து இறந்து போகலாம் என்றான் அவன்”(ப.112) இதேபோல் மேனிலைக்கு எப்படி நகர்த்துவது என்பதற்கும் தெரியாது என்கின்ற பின்நவீனத்துவப் பார்வைதான் வெளிப்படுகிறது. எடுத்துரைப்பில் ஒற்றைச் சாலையைப் பிடித்துக் கொண்டு விறு விறுவென்று விரைந்து விடாமல், தெரிகின்ற சாலைகளில் எல்லாம் நடக்க முயல்கிற பன்முகத்தன்மை பிரதியின் ஒவ்வொரு நகர்விலும் புலப்படுகிறது.

பிரதி முழுவதும் சமூகத்தின் பொதுப் புத்தியில் புனிதங்கள் என்று நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பலவற்றையும் சிதறடிக்கிற தன்மை வாசிப்பு மனத்தை ஈர்க்கின்றது. குடும்பம், அதைவிட அம்மா குறித்த புனிதங்கள் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவோடு பின்னிப் பிணைந்தவை. இந்தப் புனிதங்களை 25.3.1948 என்று தேதியிட்ட ஜே.ஜே.யின் நாள்குறிப்பு இவ்வாறு சிதைக்கின்றது. இந்தப் புனித உடைப்பில் வெளிப்படும் நக்கலும் கிண்டலும் பிரதியின் மொழியாடலுக்குக் கூடுதலான அழகைச் சேர்க்கின்றன.

ஒவ்வொரு நிமிடமும் துன்பமாக இருக்கிறது. எச்சில் இலைகளுக்கு அடித்துக்கொள்ளும் நாய்களைத்தான் குடும்பத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஈனப்புத்திகள் பல்லைக் காட்டுகின்றன. நாகரிகம், இங்கிதம், தளுக்கு, உபசாரம், அன்பு, ஆதரவு அனைத்தும் போலி. வெறும் பொய். உள்ளே வெறும் பொக்கு. அனைத்தும் கலகலத்துக்கொண்டிருக்கின்றன. குடும்பம் என்ற நாடக கோ~;டியிடம் ஒரு பெரிய படுதா மட்டும் மிஞ்சியிருக்கிறது. அம்மாவைத் தேற்ற முடியவில்லை. ‘ஓ’வென்று அழுகிறாள். ஒரு தாய் இவ்வாறு அழும் போது மனத்தை ஆழமாகத் தொட வேண்டாமா? தொடத் தவறுகிறது. ஏதோ ஒருவிதமான தடை மனத்தை நெருக்குகிறது. எனக்காக அழவில்லை என்றும், தனக்காகத்தான் அழுகிறாள் என்றும் தோன்றுகிறது. தகப்பனின் கரங்களுக்குள் விழ மறுத்து அழுவதாகத் தோன்றுகிறது. இருந்தாலும் இவளை நான் என்னுடன் அழைத்துப் போகவே விரும்புகிறேன். ஆனால் அய்யப்பனின் குடிலில் நிலவும் பேரமைதி இவளைப் பார்த்த மாத்திரத்தில் தற்கொலை செய்து கொண்டுவிடுமே, அதற்கு என்ன செய்வது.(பக்.170-171) 

இதேபோல் சமூகத்தின் பொதுத் தளத்தில் சமூகத்திற்கான சேவகர்கள் என்றும் சமூகத்தின் மேம்பாட்டிற்காகத் தங்களையும் தங்கள் மூளையையும் கசக்கிப் பிழிந்து தங்களையே அழித்துக் கொள்கிறவர்கள் என்றும் எழுத்தாளர்களைப் பற்றிப் புனையப்பட்டுள்ள புனைவுகளையும் பிரதி பல இடங்களில் சிதைத்துக் கொண்டே போகிறது.

பிறமொழி எழுத்தாளர்கள் மாதிரிதான் நம்மொழி எழுத்தாளர்களும் என்பதை நாம் மறந்துவிடலாமா? தரத்தில் வேண்டும் என்றால் கூடுதல் குறைவு இருக்கலாம். குணத்தில், நடத்தைகளில், பழக்க வழக்கங்களில், போட்டி பொறாமைகளில், குழு மனப்பான்மைகளில், குழிபறிப்பதில், காக்காய் பிடிப்பதில் ஏகதேசமாக ஒன்றுதான்.(ப.14)

இதேபோல் மற்றொரு இடத்திலும் எழுத்தாளர்கள் உடற்பயிற்சியாளர்கள் போல ஒருபக்கம் வீங்கி மறுபக்கம் சிறுத்துப் போனவர்கள். ஒரு துறையில் அதிக ஆட்சியை ஏற்படுத்தும் போது வேறு துறை சார்ந்த அஞ்ஞானம் நிறைந்தவர்கள்(ப.172) என்றும் “நம்பத்தகாத இடத்தில் வைத்த நம்பிக்கைகள்கூட வெற்றி பெற்றுவிட்டதைத் தங்கள் எழுத்துக்களில் கூறும் இவர்கள், நம்பத்தகுந்த இடங்களிலும் சந்தேகத்துடனும், அவநம்பிக்கையுடனும், ஜாக்கிரதையுடனும் நிஜ வாழ்வில் பழகுவதைக் கவனித்திருக்கிறேன்” (ப.199) என்றும் எழுத்தாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். இவ்வாறு எழுத்தாளர்களைச் சிதைக்கிற பிரதி மற்றொரு பக்கத்தில் ஜே.ஜே என்கிற எழுத்தாளனை உன்னதமானவனாகக் கட்டவும் முயற்சிக்கிறது. சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?”(ப.38) என்ற ஜே.ஜே.யின் ஒரே ஒரு கேள்வி மூலம் தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் இருப்பைச் சிதறடிக்கும் பிரதி, கூடவே சேர்ந்து சிரிக்காமல் புதுமைப்பித்தனைக் கொண்டு வந்து வேகமாகத் தமிழைக் காப்பாற்ற முயல்கிறது. இதேபோலத்தான் அம்மாவைக் கேலிப் பண்ணுகிற பிரதி மற்றொரு இடத்தில் அப்பாவை மாதிரியாகத் தேர்ந்தெடுப்பதா? அம்மாவை மாதிரியாகத் தேர்ந்தெடுப்பதா? என்ற சிக்கல் வருமானால் அம்மாவையே மாதிரியாகத் தேர்ந்தெடுப்பேன் என்று அம்மாவைக் கொண்டாடவும் செய்கிறது. இதேபோல் அமைப்புக்குள் இருந்து வினைபுரியும் முல்லைக்கல், ஆல்பெர்ட் ஆகியோரின் போலித் தனங்களை இவர்களும் ஒருவகையில் முதலாளி மனப்பான்மை உடையவர்கள் என்றும் அவர்களுக்கும் தத்துவத்திற்குமான உறவு தந்திரப+ர்வமானது, சுயவளர்ச்சி சார்ந்தது என்றும் விமர்சிப்பதன் மூலம் அமைப்புக்களின் மேல் கட்டப்பட்டுள்ள புனிதங்களைச் சிதைக்கிற பிரதி கீழ்க்கண்டவாறு பேசுகிறது:-

சார், ஆல்பெர்ட்டை உங்களுக்கும் தெரியும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி இணைப்பதில் அவன் ஆற்றியுள்ள பங்கு, தியாகம், அனுபவித்துள்ள உடல்வலி, மனவலி தொழிற்சங்கச் சரித்திரத்தின் பொன்னெழுத்துக்கள். அந்த நாட்களில் நான் அவனோடு சுற்றியிருக்கிறேன். இலை கிள்ளும் பெண்கள், பேறு காலங்களில் ஒரு ஆயா கிடைப்பதற்கு மூன்று வாரங்கள் கடுமையாகப் போராடினார்கள். இதற்குத் தடியடிப் பிரயோகமும் துப்பாக்கிச் சூடும் நடந்தன. அந்த நாட்களில் எந்த நிமி~மும் ஆல்பெர்ட் வெட்டிப் புதைக்கப்பட்டிருக்கலாம். மலங்காட்டுச் சரிவுகளில் திறந்த வெளிகளில் இந்தப் பெண்கள் பிரசவிப்பார்கள் என்றால், நான் துப்பாக்கிக்கு இரையாகிவிடுவதே தர்மம் என்று ஆல்பெர்ட் பேசினான். இன்று அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் குடியிருக்கிறார்கள். பேறு காலத்திற்குப் பின் அரசாங்க டாக்டர் மருத்துவ அத்தாட்சி கொடுத்தால்தான் அவர்களை வேலைக்குக் கூப்பிட முடியும். இன்று அவர்கள் குழந்தைகள் படிக்க தனிப் பள்ளிக்கூடங்கள் உண்டு. கைக்குழந்தைகளைப் பார்க்க ஆயாக்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்த மாற்றத்தை உருவாக்;கியவன் யார்?(ப.116)

என்று அமைப்பின் சார்பாகவும் கருத்துக்களை முன்வைக்கிறது. மேலும் இருப்பிற்கும் இருக்க நினைப்பதற்குமான முரண் பிரதி முழுவதும் தொடர்ந்து பேசப்படுகிறது. இந்த விமர்சனம் நவீனத்துவவாதிகளின் மேலேயே முன்மொழியப்படுகிறது. நவீனத்துவத்தைப் போற்றும் நவீனத்துவவாதிகள் அதன் தத்துவத்தை உண்மையிலேயே பின்;பற்றுகிறார்களா? தத்துவம் ஒன்றாக இருக்கிறது. செயல்முறை அப்படியே நேர் எதிராக இருக்கிறது. இது மார்க்சியத்தில் வெளிப்படுகிறது. காந்தியத்தில் வெளிப்படுகிறது. நவீனத்துவவாதிகளிடமும் வெளிப்படுகிறது என்கிற விமர்சனத்தையும் இந்தப் பிரதி முன்வைத்து விடுகிறது. நவீனத்துவமாம். இங்கிலீஷூம், ஆட்டுத்தாடியும், சுங்கானும்தான் நவீனத்துவத்தின் சின்னங்களோ!” (ப.67) என்கிறது பிரதி. இவ்வாறு தொடர்ந்து நவீனத்துவத்திற்கும் பின்நவீனத்துவத்திற்குமான மோதல்களிலேயே பிரதி நகர்கிறது.

எந்த ஒன்றிலும் எப்பொழுதும் அதிகாரம் என்பது பன்முகத்தனம் வெளிப்படாமல் பார்த்துக் கொள்கிறது. ஒன்றை முதன்மைப்படுத்தி முன்னிறுத்துவதன் மூலம் அதிகாரத்தைக் கட்டமைப்பதும் அதன் மூலம் சூழலை முழுமையாகச் சுரண்டிக் கொழுப்பதும் இருக்கிறது. அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும் அரசியலில் எவ்வாறு ஒற்றைத்தனம் முன்னிறுத்தப்படுகிறது என்பதைப் பிரதி மிகச்சரியாக முன்வைக்கிறது. “அரசியல் என்பதே, கோபத்தை, ஏமாற்றங்களை, வெறுப்புகளை ஒருமுகப்படுத்தி, ஒரே எதிரியை உருவகப்படுத்துவது என்றாகிவிடுகிறது. ‘ஒரே எதிரி’ என்ற படிமம்தான் இங்கே முக்கியமானது. சிக்கலற்ற எளிமை. புராண மரபுக் கற்பனையைச் சார்ந்தது. சைத்தான் அல்லது ராவணன் அல்லது கம்சன் அல்லது துரியோதனன். வெள்ளைக்காரன். யூதர்கள் அல்லது சோவியத் ய+னியன். ஒழித்துக்கட்டிவிட்டால் சொர்க்கம். அலையடித்துப் புதிய வாழ்வு கரையேறி வரும். நோய்கள் பல கூறாகப் பிரிந்து கிடப்பது பற்றியோ, சிடுக்கும் சிக்கலுமாகக் கிடப்பது பற்றியோ பேச ஆரம்பித்துவிட்டால் ஜனங்களுக்கு எட்டச் செய்ய முடியாது. ‘ஒன்றைச் சொல்லு’ என்று கத்துவார்கள் அவர்கள்”.(பக்.159-160)

பின்நவீனத்துவத்தின் இன்றியமையாத ஒரு கூறு எதிலும் நம்பிக்கை கொள்ள முடியாத புதிர் நிலை. இப்படி நம்பிக்கையற்ற புதிர் நிலையில் பின்நவீனத்துவ மனநிலைக்குள் ஓயாமல் எழுந்து கூத்தாடுவது வினாக்கள், ஐயங்கள். ஜே.ஜே அப்படி வினாக்களாலும் ஐயங்களாலும் சூழப்பட்ட ஒரு பின்நவீனத்துவவாதியாகப் பல இடங்களில் வெளிப்படுகிறான். பெரு வெளியில் குறைந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு பெரிய அழகை ஏற்படுத்தும் புறாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிற ஜே.ஜேக்குள் இவ்வாறு வினாக்கள் படையெடுக்கின்றன:-

என் காட்சிக்கு இலக்காகும் இவையெல்லாம் என்ன? எத்தனை ஏற்பாடுகள்? இதன் பின் நின்று தொழில்படும் நியதி என்ன? புறாக்கள், மரங்கள், நம்ப+திரி. இவர்கள் வௌ;வேறு வடிவமும், வௌ;வேறு இயக்கமும், ஏன் கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு கொள்ள அவசியமான நியதிகளை உருவாக்கிய கரங்கள் யாருடையவை? இவை எல்லாவற்றிற்கும் எனக்குமுள்ள உறவு என்ன? எனக்கு இவ்வாறு இவை படுவதுபோல் இவற்றுக்கு நான் எவ்வாறு படுகிறேன்? ஒரு புறாவின் வாழ்வு என்ன பொருள் கொண்டது? பிறப்பு, உணவு வேட்டை, இனவிருத்தி, முடிவு. (மிருகங்களும் பட்சிகளும் எங்கு இறந்து போகின்றன என்பதே தெரியவில்லை.) மனிதன் மட்டும் துக்கமுள்ளவனாக இருக்கிறான். (பக்.174-175)

இப்படி வினாக்களுக்குள் சிக்கியவன், மனித வாழ்க்கை குறித்துப் பெரிதும் அவநம்பிக்கை கொள்கிறான். “மனிதனைப் பற்றி யோசிக்கும் போது அவனுக்கு ஒருநாளும் விமோசனம் இல்லை என்றே தோன்றுகிறது. சந்தோ~ம் அவனைப் ஸ்பரிசிக்கவில்லை”. இப்படித்தான் பிரதி பல இடங்களில் நம்பிக்கையின்மையையும் புரியாத் தன்மையையும் விதைத்துக் கொண்டே போகிறது. மனித மனம் குறித்தும் இப்படி ஒரு கருத்தையே முன்வைக்கிறது. மனித மனத்தின் கூறுகள் மிக பயங்கரமான அடர்த்திக் கொண்டவை. பெரிய பள்ளதாக்கு அது. ஆழம். இருட்டு. அடர்த்தி. கண்களுக்குப் புலப்படாத தொலை தூரங்கள். இவற்றை வகைப்படுத்த முடியாத ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு நிமிஷமும் இந்த உலகை முட்டி மோதிக் கொண்டிருக்கிறது”.(ப.111)

 இவ்வாறு அவநம்பிக்கை கொள்ளும் பிரதி பல இடங்களில் நவீனத்துவப் பார்வையில் நம்பிக்கை கொண்டு தலைநிமிர்ந்து எழுந்து நிற்கப் பார்க்கின்ற மனநிலையினையும் பதிவு செய்து கொண்டு போகிறது. “என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப்பகல், ஓய்வு, ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன் செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன” (ப.40)

‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ என்ற இந்தப் பிரதி தொண்ணூறுகளில் தமிழில் தோன்றிய பின்நவீனத்துவ எழுத்து முறையை 1981-லேயே தொடங்கி வைத்துவிட்டது என்பதற்குப் பிரதிக்குள் இருந்து மேற்கண்டவாறு பல்வேறு சான்றுகளைக் காட்டிக் கொண்டே போகலாம். 2.12.1947-இல் எழுதப்பட்ட ஜே.ஜேயின் நாட் குறிப்பு நம்பிக்கையற்ற மனித மனத்தின் தவிப்பு நிலையை மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது.

2.12.1947: வாழ்க்கையில் பிடிப்பு என்பதே இல்லை. எதை நம்பி உயிர் வாழ? கடவுள் சரிந்துவிட்டார். சமயங்கள் சரிந்துவிட்டன. ஆலயங்கள் அழுகி முடைநாற்றம் எடுத்துக் கொண்டிருக்கின்றன. பணவெறி பிடித்து அலைகிறான் மனிதன். உறவுகளில் மனிதத் தன்மை முற்றாக உலர்ந்துவிட்டது. எல்லா மனங்களும் உள்ளூர‌த் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அமைதியின் குடிநீர் கிடைக்காமல் நா உலர்ந்துவிட்டது. கடற்காற்று, சில சமயம் சூறை, சில சமயம் தென்றல். சில சமயம் அலைகளின் கொந்தளிப்பு. சில சமயம் குளம்போல் கிடக்கும் அமைதி. பாய்மரம் இல்லை. துடுப்பு இல்லை. திசைகளைத் தீர்மானிப்பது காற்று. அதன்மீது நமக்கு எவ்விதப் பிடிப்பும் இல்லை. காற்றோ உருவமற்றது. நெறி அற்றது. குறி அற்றது. அடிவானம் எங்கே? கரை எங்கே? பெரும் தவிப்பு? (ப.169)

இவ்வாறு நாவல் முழுவதும் சிதறும் தன்னிலைகளும், சிதறும் கதையாடல்களும், சிதறும் உலகமும் சிதறிக் கிடப்பதனால் பழக்கத்தால் படைப்பாளிக்குள் தூக்கலாக இருக்கும் நவீனத்துவப் பார்வை பின்தங்கி படைப்பின் ஆழ்மனச் செயல்பாட்டால் பிரதிக்குள் பின்நவீனத்துவப் பார்வையே தூக்கலாக வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. பொதுவாகத் தமிழ்ச் சூழலில் இலக்கியக் கோட்பாடுகளைக் காலகட்டம் சார்ந்து விளக்குவதும் புரிந்து கொள்வதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் உம்பர்ட்டோ ஈகோ போன்ற கோட்பாட்டாளர்கள் நவீனத்துவச் சூழல், பின்நவீனத்துவச் சூழல் என்பவைகளை எல்லாம்; காலகட்டம் சார்ந்ததாகக் கருதத் தேவையில்லை என்கின்றனர். கலை நுட்பத்தை அன்றாடப் பழக்கம் போல உள்வாங்கிக் கொண்ட படைப்பாளிகளுக்குள் எந்த ஒரு காலகட்டத்திலும் ஒரே சமயத்தில் மேற்கண்ட இரண்டுமே தீவிரமாக வினைபுரியக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். எனவே இந்தப் பிரதிக்குள் ஒரே சமயத்தில் நவீனத்துவச் சூழலும் பின்நவீனத்துவச் சூழலும் இயக்கம் கொண்டிருப்பதை அடையாளம் காணமுடிகிறது. படைப்பு தீவிர நிலை எடுக்கும் போது எல்லைகள் உடைபடுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய படைப்பு மனத்தின் ஒரு தீவிர நிலையின் வெளிப்பாடாக ‘ஜே.ஜே.சில குறிப்புகள்' என்ற பிரதி அமைந்துள்ளது. எனவே எடுத்துரைப்பின் உச்சம் என்று சொல்லத்தக்க அளவிற்கு வாசகர்களுக்குள் பாய்ந்து பரவுகிறது.

பயன்பட்ட நூல்:

1. சுந்தர ராமசாமி, ஜே.ஜே: சில குறிப்புகள், க்ரியா, சென்னை, இ.ப.1986.

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி- 605 008. செல்: 9003037904.

Pin It