‘புதிய கையெழுத்து’ என்ற புத்தகம், தற்காலத் தெலுங்குக் கவிதைகளை உள்ளடக்குகிறது. ஆங்கிலவழித் தமிழ் மொழிபெயர்ப்பை வெ.கோவிந்தசாமி செய்துள்ளார். இதில் 22 கவிதைகளும் ஒரு கட்டுரையும் உள்ளன. நஙமுனி (நிர்வாணத் துறவி) எழுதிய ‘மரக்குதிரை’ 12 பகுதிகளைக் கொண்டது.

  நஙமுனி (இயற்பெயர் : ஹிரிஷி கேசவராவ்) திகம்பரக் கவிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர்கள் கலகக் குழுவாகத் தோற்றம் பெற்றார்கள்.

  ‘மரக்குதிரை’ நீள்கவிதையின் கருப்பு; பொருள், சரியான நிர்வாகம் இல்லாத அரசாங்கம் ஒரு மரக்குதிரை, அதை எரிப்பது தான் ஒரே தீர்வு என்கிறது.

 மனிதாபிமானம், கோபம், சமுதாயச் சாடல், தீவிரம், சோகம், விரக்தி போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது, மரக்குதிரை!

   1977-ஆம் ஆண்டு ஆந்திரப் புயலுக்குப் பின் இக்கவிதை எழுதப்பட்டது. கவிதையின் தொடக்கம் எதையும் மறுப்பது என்ற போக்கைக் கொண்டிருக்கிறது.

 வாழ்க்கை என்பது ஏர் முனை
 அது உடலை ஆழ உழுகிறது
 அனுபவப் பயிரில்
 பொன் விளைகிறது
 உழவனுக்கு மிஞ்சுவதோ
 கற்றாழைச் சோறும்
 கண்ணீரும் தான்.

என்ற வரிகள் பொதுவுடமைத் தாக்கம் கொண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுபடுத்துகிறது.

 என் வயிற்றிலிருந்து
 குடலை உருவி ஓரிழை யாழாக மாற்றி
 தெருத் தெருவாக அதை மீட்டி வருவேன்.

என்று மனத்தில் நெருப்பை ஏந்திக்கொண்டு எழுதுகிறார் நஙமுனி !.

 எல்லா மொழிகளிலும்
 பல குரல்களில்
 சாத்தான் வேதம் ஓதுகிறது

என்று தன் சமுதாயச் சாடலை முன் வைக்கிறார் கவிஞர்! மரணத்தை வெல்ல இருக்கவே இருக்கிறது விஞ்ஞானம் என்பவர் மேலும்

 பிளாஸ்டிக் மாடுகள்
 பிளாஸ்டிக் மடிகள்
 பிளாஸ்டிக் பாலை
 கறந்து குடிப்போம்
-என்கிறார்.

 மரக் குதிரைச் சாம்பலாக்க
 எரிதழலைத் தேடப் போகிறேன்

என்று முடிகிறது கவிதை. இது எழுதப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் ஆன பின்பும் இக்கவிதை சாகா வரம் பெற்று நிற்கிறது. இது பிறமொழிக் கவிதை என்றால் யாரும் நம்ப முடியாதபடி மிக மிக இயல்பாகத் தமிழாக்கம் பெற்றுள்ளது.

இப்புத்தகத்தில் தலைப்புக் கவிதையே முதல் கவிதையாக அமைந்துள்ளது. ‘புதிய கையெழுத்து’ கவிஞர் பீடி தெரேஷ் பாபுவின் குரல் கம்பீரமாக ‘இதற்கு இது’ என நிமிர்ந்து நின்று பேசுகிறது.

எதைக் கொண்டு
 புதிய சமூகத்தைக் கட்டுவாய் என்று
 என்னைக் கேட்டால்
 பண்பாட்டைக் குழைத்து
 என் குயச் சக்கரத்தில் ஏற்றிக் காட்டுவேன்

என்பது சமுதாயக் காதலை பெருமையுடன் கூறுகிறது. கவிதைக் கரு சார்ந்த குரலாக

 …….உறைந்து கொண்டிருக்கும்
 கோடானு கோடி கையெழுத்துக்களை
 நான் உயிர்த்தெழ வைப்பேன்

என்கிறார் பாபு. இக்கவிதை ‘தகவல் அடுக்குதல்! என்ற உத்தியில் அமைந்துள்ளது.

 செல்லப்பள்ளி சொரூபராணி எழுதிய ‘தடை செய்யப்பட்ட வரலாறு’ பாலியல் தொழிலாளியுன் மனக் குமுறலை ஆழமாக முன் வைக்கிறது.

 உங்கள் நாட்டின்
 புகழ்பெற்ற வரலாற்றில்
 எந்தக் காண்டத்தில்
 என் கதையை எழுதி வைப்பீர்கள்?

என்ற கேள்வி நீக்குக எல்லா காலங்களிலும் பதில் அளிக்கப்படாமல் தான் இருக்கிறது.

 பல கவிஞர்கள் எழுதிய இத்தொகுப்பு தெலுங்கு கவிதைப் போக்கை ஒரு சிறிய சாளரத்தின் வழியாக நமக்குக் காட்டுகிறது. படித்து ரசிக்கலாம்.

Pin It