“ஓரினத்து மக்களுளே பிரிவும் சாதி
உண்டாக்கித் திண்டாடும் நிலையும், மக்கள்
பேரியலை மறந்துபொருள் ஏற்றத் தாழ்வால்
பெருங்கேடு விளைவிப்பதும் விதியைக் கூறி
பாரியலில் செந்தமிழர் ஏற்றங் கொள்ளும்
பாதையினை அடைப்பதுவும்”

-என்று சமுதாய நிலையைச் சாடி எழுதியவர் தான் கவிஞர் தமிழ் ஒளி.

புரட்சிக் கவிஞர் மகன் மன்னர் மன்னனும், தமிழ் ஒளியும் ‘முரசு’ என்ற கையேடு இதழை நடத்தினர். அதில் தமிழ்ஒளி எழுதிய கவிதைகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவனத்தைக் கவர்ந்தன. பாரதிதாசன் தமிழ்ஒளியை அழைத்துப் பாராட்டி அவரை உற்சாகப்படுத்தினார். ‘முரசு’இதழை அரசு தடை செய்தது. அதை நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. மன்னர் மன்னன் இளம் வயது காரணமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழ்ஒளி பிணையில் வெளிவந்தார். .
 
சுதந்திர நாளையொட்டி அகில இந்திய வானொலியில் பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ,பொ, மீனாட்சி சுந்தரனார் தலைமையில் நடைபெற்ற கவிதை நிகழ்ச்சியில் பங்குகொண்டு ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் தமிழ்ஒளி கவிதை வாசித்தார். அதில் உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த இந்தச் சுதந்திரம் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் கவிதை புனைந்திருந்தார். அக்கவிதையை ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் அருகிலிருந்து கேட்டு வெகுவாகப் பாராட்டினார்.

கவிஞர் தமிழ்ஒளியின் இயற்பெயர் விஜயரெங்கம், இவர் புதுச்சேரியில் சின்னையா-செங்கேணியம்மாள் தம்பதியருக்கு முதன் மகனாக 21-9-1924-இல் பிறந்தார். தொடக்கக் கல்வியை அரசு பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளியை புதுவை கல்வே கல்லூரியிலும், தமிழ்கல்வியை கரந்தை செந்தமிழ்க் கல்லூரியிலும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்தார்.

நெஞ்சத்தின் செங்குருதியால் எழுதப்படுவதே பாட்டு, அப்படி எழுதுகிறவனே பாவலன், அவன் பொது மக்கள் நலன்நாடி புதுக் கருத்தைச் சொல்வான். அவன் உண்மையின் உருவம், அன்பின் வானம், வாழ்வியக்கமும், கலைத் திறமையும் படைப்பின் இயல்பாய்க் கூடும்போது பண்சுமந்த பாடல்கள் மண்ணாக மக்களின் வாழ்வோடு ஒன்றி விடுகின்றன. இந்தக் கருப்பொருளை உள்ளத்தில் கொண்டு கவிதை படைத்தவர்தான் கவிஞர் தமிழ்ஒளி.

 திராவிடர் மாணவர் கழகத்தில் தொடக்கக் காலத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

 “இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்-கூர்
 ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்”
 “காரிருள் இன்றும் விடியவில்லை-எம்
 காற்றனை இன்றும் ஒடியவில்லை!
 இதர்மிசை இந்தி உயர்குவதோ-எங்கள்
 செந்தமிழ் அன்னை அயர்குவதோ?”

 -என்று ‘தமிழ்நாடு’ என்ற ஏட்டில் எழுதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுவூட்டினார். சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழ்ர்’ இயக்கத்தின் சார்பாக ஈரோடு சின்னசாமி நடத்திய ‘சமநீதி’ மற்றும் ‘தமிழன்’ ஆகிய ஏடுகளில் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து கவிதைகள் எழுதினார்.

மொழிவழி மாநிலம் அமைத்து கன்னியாகுமரியை தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் எல்லைப் போராட்டம் நடைபெற்றபோது கவிஞர் தமிழ்ஒளி தமிழர்களுக்கு பின்வருமாறு அழைப்பு விடுக்கின்றார்.

 “தன்குமரி எல்லை தனைச் சார்ந்த தமிழகத்தில்
 எல்லாம் தமிழர்க்கே என்றெழுந்த போர் முரசம்
 எல்லோரும் கேட்டே எழுகின்ற நேரமிது”

 “தம் மொழிக் கல்வியைக் கற்பதிலார்-அவர்
 துமிழ்மொழி கற்க நமை வருத்தி
 வாய் மொழி பெற்று மகிழ்ந்திடுவார்-அவர்
 வாழ்க்கையில் ஞானம் வருவதயில்லை”

 -என்ற கவிதை வரிகள் மூலம் தாய் மொழிப் பற்றினையும், தமிழ் வழிக் கல்வியையும் அன்றே வலியுறுத்தியுள்ளார்.


 “உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன்
 உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்
 புழுவைப்போல் கிடந்ததுவும் பிச்சை வாங்கும்
பன்மைநிலை அடைந்ததுவும் இனிமேல் இல்லை!”

-என்ற பாடல் வரிகளின் மூலம் உழவனின் உரிமையைக் கோருகிறார்.

 “வேதியர் ஓதிய வேதங்களில்
 -அவர் வேள்விகளில்
 சாதிகள் பற்பல தோன்றின
 -பொய் மதந்
 தன்றலை தூக்கித் திரிந்த தம்மா!”

 -என்ற கவிதை வரிகளின் மூலம் சாதி மதக் கொடுமைகளைச் சாடினார்.

 இளைஞர்கள் எழுச்சியுடன் சமுதாய மாற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பதை கீழ்க்கண்ட வரிகளின் மூலம் அறைகூவி அழைக்கின்றார்.

 “எழுச்சி இளைஞர்க்கு வேண்டும்-தட்டி
 எழுப்பத் தாய் நாட்டினை மீண்டும்
 அடிமையும் மிடியையும்
 பகையும் பகைத்தே
 அடியற்ற மரம்போல
 விழவிக், கணத்தே!”

1947-ம் ஆண்டு பொதுவுடைமை இயக்கத்தின் தன்னிகரில்லாத தலைவர் ஜீவா அவர்கள் முன்னிலையில் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏழை, எளிய உழைக்கும் மக்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கையைக் கண்டு கொதிப்பும், கோபமும் அடைந்து, அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள். அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும், சாதி, மத மூடப் பழக்க வழக்கங்களில் சிக்குண்டு கிடப்பதையும், முதலாளித்துவக் கொடுமைகளில் சுரண்டப்படுவதையும் தனது கவிதை, கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தி முற்போக்கு கவிஞராக விளங்கினார். கம்யூனிஸ்ட் இதழான ‘ஜனசக்தி’ இதழிலும், கவிஞர் குயிலன் நடத்திய ‘முன்னணி’ என்ற இதழிலும், தொடர்ந்து மக்களுக்காக எழுதினார். ஆலைத் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், மெட்ராஸ் எலக்ட்ரிக் ட்ராம்வே தொழிலாளர்கள், புதுவைத் தொழிலாளர்கள் ஆகிய தொழிலாளர்களின் போராட்டங்களை தனது கனல் தெறிக்கும் கவிதை வரிகளால் ஆதரித்தார். இரசியப் புரட்சியை வரவேற்றவன் பாரதி. சீனப் புரட்சியை வரவேற்று கவிதைப் பாடியவர் மக்கள் கவிஞர் தமிழ்ஒளி.

 உயிரோவியங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் ‘கெட்ட கனவு’ என்ற சிறுகதையில் ஒரு நீதிபதியை நமக்கு அறிமுகப்பத்துகிறார்.

 “சுவரில் ஆணி அடித்துக் கயிறு முடிந்து, இரவில் உமது உச்சிக் குடிமியை அதில் கட்டி விட்டுத் தூங்கி விழும்போது வெடுக்கென்று குடுமி இழுக்க துடித்தெழுந்து கண்விழித்துப் படித்து சட்டப் புத்தகத்தைக் கரைத்துக் குடித்து, ‘சட்டப்புலி’- என்று பெயர் எடுத்தவர் நீர்! ஒரு நாளாவது மனிதனைப் பற்றியும், அவன் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பது பற்றியும், அவன் சூழ்நிலையைப் பற்றியும் நீர் யோசித்தது உண்டா?”

 -இந்த வரிகள் இன்று எழுதப்பட்டதல்ல.

 கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், நீதிபதிகள் கேள்விக்குறி, விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள் என்ற மாயை மூடியிருந்த காலம், அந்தக் காலத்தில் ‘உள்ளத்தில் உண்மை ஒளி உடையவன் ஒருவன் மட்டுமே இப்படி எழுதியிருக்க முடியும். கவிஞர் தமிழ்ஒளி இதை எழுதினார் என்று கவிஞர் இன்குலாப் தனது ஆய்வுரையில் குறிப்பிட்டுள்ளார்.

 “எழுத்தாளர் நண்பர்களே! தமிழ்நாடு இன்றைக்கு எதிர்பார்ப்பது வாழ்க்கையை வளப்படுத்தும் கலையைத்தான். ‘கலை கலைக்காகவே’ என்று சொல்லும் கற்பனைச் சிந்தாந்தத்தையல்ல... மக்களுக்காக... மக்கள் உயர... மக்கள் காலத்து கதைகளை எழுதுங்கள். உலகம் முழுவதும் உருவாகிக் கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும்!” என்று கலை இலக்கியம் மக்களுக்காக, மக்கள் மேம்பாட்டிற்காக எழுதப்பட வேண்டும் என்பதை வேண்டுகோளாக முன் வைக்கிறார்.

 “ஊரை எழுப்பிடவே-துயர்
ஓன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன்-தமிழ்ச்
சாதி விழித்திடவே!
கத்தி முனைதனிலே-பயங்
காட்டும் உலகினிலே
சத்திய பேரிகையை-நான்
தட்டி முழக்கிடுவேன்!”

-என்ற கவிதை வரிகளின் மூலம் தான் தமிழ் மக்கள் எழுச்சியுறுவதற்கு எழுதுவதாகப் பறைசாற்றியுள்ளார்.

 கவிஞனின் காதல், வீராயி, விதியோ? வீணையோ? முதலிய ஒன்பது காவியங்கள். நீ எந்தக் கட்சியில்?, மே தினமே நீ வருக! என நான்கு தனிக் கவிதைகள். அந்திநிலா பார்க்கவா! என்ற குழந்தைப் பாடல்கள், சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?, திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம், தமிழும் சமஸ்கிருதமும் ஆகிய நான்கு நூல்கள், சாக்கடைச் சமுதாயம் உட்பட நான்கு கதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல்கள், ஸ்டாலின் பற்றிய வரலாற்று நூல் மற்றும் ஓரங்க நாடகங்கள் எழுதி தமிழ் மக்களுக்கு அளித்துள்ளார்.

 சமுதாயச் சீர்க்கேட்டை சாடியும், சமதர்மம் நிலவும், சாதி வெறி ஒழியவும், மதவெறி மாயவும், தமிழ் இனத்தின் பண்பாடு மேம்படவும் தளராது தனது கவிதை வரிகளால் நாட்டு மக்களை தட்டி எழுப்பிய கவிஞர் தமிழ்ஒளி 1965-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29-ஆம் நாள் புதுவையில் இயற்கை எய்தினார்.

குறிப்பு : 21.09.2012 அன்று கவிஞர் தமிழ் ஒளியின் 88 -வது பிறந்த தினமாகும்.

Pin It