நூல் அணிந்துரை

எமக்குத் தொழில் கவிதை என்றான் பாரதி, இன்றைக்கு யாருக்குமே கவிதை தொழிலில்லை. பலருக்குப் பொழுதுபோக்க, சிலருக்குப் பழுதுபார்க்க. கவிதை, அது நம் மனதோடு தொடர்புடையது. மனம், நெஞ்சம், உள்ளம் எல்லாமே ஒன்றுதான். அது மனித மூளையின் நுண்ணுலகம். அறிவும் மனதும் மனித மூளையின் இரட்டைப் பிள்ளைகள். உரைநடைக்கு அறிவோடு உறவதிகம், கவிதைக்கு மனதோடு தொடர்பதிகம். அறிவை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றைய இயந்திர உலகத்திற்கு மனதைக் கொண்டாடும் மார்க்கத்தைக் கற்றுத் தருவது கவிதைதான். கவிதைகளைக் கொண்டாடும் மனம்தான் உண்மையான மனிதர்களை உருவாக்கும். அந்த மனிதர்கள்தான் சக உயிர்களை நேசிப்பார்கள். அங்கேதான் மனிதநேயம் பூக்கும்.

கவிதை எழுதும் பலரை நாம் அடிக்கடி சந்திப்போம், ஆனால் கவிஞர்களை எப்பொழுதாவதுதான் சந்திக்க முடியும். அதேபோலத்தான் கவிதை நூல்கள் நமக்கு எப்பொழுதும் வாசிக்கக் கிடைக்கும், ஆனால் கவிதைகள் எப்பொழுதாவதுதான் வாசிக்கக் கிடைக்கும். நல்ல கவிதைகளுக்கு எந்தத் தரச்சான்றிதழும் தேவையில்லை. படித்து முடித்தஉடன் நம் மனம் சொல்லிவிடும் வாசித்தது கவிதையா? இல்லையா? என்பதை. மரபோ, புதுசோ கவிதைகள் உடுத்தும் உடை முக்கியமில்லை. உடைக்கு உள்ளே இருக்கும் உயிரோட்டம்தான் கவிதை.

கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் எழுச்சி பெற்ற தமிழின் புதுக்கவிதை பாணிக்கு இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் கொஞ்சம் சறுக்கல்தான். கடந்த பத்தாண்டுகளில் தமிழில் மரபுக் கவிதைகள் எழுதுவோர் அல்லது எழுத ஆசைப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தை ஒட்டியிருக்கிற புதுச்சேரியிலும் தமிழகத்துக்கு அப்பால் மூவாயிரம் கிலோ மீட்டரைக் கடந்திருக்கும் சிங்கப்பூரிலும் இதுதான் யதார்த்தம். என் இனிய நண்பர் முனைவர் இரத்தின. வேங்கடேசன் அமைத்துத் தந்த பாதையின், தொடர்ந்த பயணத்தால் சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய மேடைகளில் நான் அவதானித்தது இது. சிங்கப்பூரின் கவிமாலை, கவிச்சோலை போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக இளம் கவிஞர்கள் கவிபாடக் களம் அமைத்துத் தருவதோடு மரபுப் பாடல் எழுத இலக்கணப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகின்றன. இத்தகு அமைப்புகள் வளர்த்தெடுக்கும் புதிய தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகள் நம்பிக்கை ஊட்டுகின்றன. அவர்களின் கவிதைகள் வார்த்தைஜால வசீகரங்களைக் கடந்து வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் கவிதைக்குள் அடக்கி வசப்படுத்துகின்றன.

கனவுத் தழுவல் என்ற இக்கவிதைத் தொகுப்பு கவிஞர் இனியதாசனின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு. நான் அதிகம் நேசிக்கும் வேள்பாரி, கி.கோவிந்தராசு, திருமுருகன் முதலான சிங்கப்பூரின் இளந்தலைமுறைக் கவிஞர்களுள் கவிஞர் இனியதாசனும் ஒருவர். தம் இனிய வெண்கலக் குரலால் இசையோடு பாடல்களை இசைக்கத் தெரிந்தவர், நல்ல கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், தோழமை உணர்வோடு பழகக் கூடிய பண்பாளர்.

அறுபத்தைந்து கவிதைகளைக் கொண்ட இக் கனவுத் தழுவல் ஒரு கதம்பத் தொகுப்பு. சந்தக் கவிதைகள், இசைக் கவிதைகள், புதுக் கவிதைகள், கவியரங்கக் கவிதைகள் என்ற நான்கு பகுப்புகளாக இந்நூல் பகுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான தொகுப்புகளிலிருந்து கனவுத் தழுவல் எனும் இத்தொகுப்பை வேறுபடுத்திக் காட்டும் ஒரு முக்கிய அம்சம் இந்நூலில் இடம்பெற்றுள்ள இசைக் கவிதைகள் எனும் பகுப்பே. பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்ற மூன்றடுக்குத் தமிழிசைப் பாடல்களாக இத்தொகுப்பில் அமைந்துள்ள பத்துப் பாடல்களும் தனிச்சிறப்புடையன.

கனவுத் தழுவல் எனும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள இனியதாசனின் கவிதைகளைப் பின்வரும் வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம்.

1.    வாழ்வியல் கவிதைகள்
2.    காதல் கவிதைகள்
3.    தாய்மையைப் போற்றும் கவிதைகள்
4.    தமிழ் மொழியுணர்ச்சிக் கவிதைகள்

இந்த நான்கு பிரிவுகளில் முதலிரண்டு பிரிவுகளில் அடங்கும் கவிதைகளைக் காட்டிலும் மூன்று மற்றும் நான்காம் பிரிவுகளில் அடங்கும் கவிதைகள் உள்ளடக்கத்தால் சிறக்கின்றன. குறிப்பாக, தமிழ் மொழியுணர்ச்சிக் கவிதைகளில் பதிவாகும் இனஉணர்வும் தமிழ்மொழி மீதான பெருவிருப்பும் பாவேந்தர் பரம்பரைக் கவிதைகளை நினைவு படுத்துகின்றன.

தாயின் மகத்துவம் பேசத் தமிழில் ஓராயிரம் கவிதைகள் உண்டு. கனவுத் தழுவலும் ஈன்ற தாயின் ஈடிலாப் பெருமைகளைப் பல பாடல்களில் பேசுகிறது. ஆனால் தந்தையின் பெருமை பேசும் கவிதைகள் தமிழில் அத்திப்பூவாய்த்தான் மலரும். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மனிதக் கடவுள் என்ற இசைப்பாடல் இவ்வகையைச் சேர்ந்தது.

முத்தம் தந்தே அம்மாவும்        
முகஞ் சுளிக்காம வளர்த்தாலும்
கத்துக் கொடுக்க உலகத்துல   
உன்னைப்போலக் கிடையாது

வேப்பங்காயாத் தெரிஞ்சாலும்
வேப்பம்பழமா இனிப்பேன்னு
உன்னை முழுசா இதுவரைக்கும்
உணர்ந்த மகன்நான் பாடுகிறேன்

வெடியப்போல வெடிச்சாலும்
வேண்டும்போது காப்பாத்தும்
மனிதக் கடவுள் நீதான்னு
மகன்நான் அறிந்தே கூறுகிறேன்.

தந்தையை மனிதக் கடவுள் என்று மனதாரப் பாராட்டும் இந்தக் கவிதை, தந்தையின் கண்டிப்பு, தொடக்கத்தில் வேப்பங்காய் போல் கசந்தாலும் காலப்போக்கில் அவனை முழு மனிதனாக்கி வேப்பம்பழம் போல் இனிக்கிறது எனத் தந்தையின் குழந்தை வளர்ப்பு அணுகுமுறை குறித்துப் பெருமை கொள்கிறது.

இனியதாசனின் கவிதைகளில் பழைய திராவிட இயக்கக் கவிதைகளின் சாயல் தெரிகிறது. தமிழின் பெருமை, பகுத்தறிவு, உழைப்பவர் பெருமை முதலான மரபார்ந்த  உள்ளடக்கங்களைத் தமக்கானதோர் புதிய வடிவத்தில் கவிதைகளாக்கித் தந்துள்ள கவிஞரின் பாணி புதியது. தாய்மண் விட்டுக் கடல்கடந்து தமிழன் ஒவ்வொரு திசையும் புலம்பெயர்ந்து பரவி வாழும் இன்றைய சூழலில் தமிழனுக்கான கடமைகளை விவரிக்கிறது முதல் இனம் என்ற கவிதை,

மதங்களைத் தாண்டி மனம்திறப்போம்
மனிதநேயத்தைக் கடைபிடிப்போம்
உலகநாடுகளில் ஒன்றாய்ச் சேர்ந்து
ஒவ்வொரு திசையிலும் தமிழ் வளர்ப்போம்

உழைப்பில் உயர்ந்திட வேண்டுமென்று
ஒவ்வொரு மனிதரும் நினைத்திடுவோம்
பிழைப்புக்காகச் செல்லும் நாட்டில்
பிழைகள் இன்றி வாழ்ந்திடுவோம்

முதல் இனம் என்ற பெருமை மட்டும் போதாது, புலம்பெயரும் நாடுகளின் பெருமைகளைப் பேணிக் காப்பதும் வாழும் திசைகளிலெல்லாம் வண்டமிழுக்கு வளம் சேர்ப்பதும் தமிழனின் கடமை என்றுரைக்கும் இந்தக் கவிதையைச் சிங்கைத் தமிழனாக அவர் வடித்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

கவிஞர் இனியதாசனின் மொழியுணர்ச்சிப் பாடல்கள் பல இத்தொகுப்பில் இடம் பெற்றிருந்தாலும் கொலைவெறி என்னும் தலைப்பில் அமைந்த கவிதை புதிய உத்தியில், அண்மையில் உலகப் புகழ்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற திரைப்படப் பாடலுக்கான எதிர்வினையாய் அமைக்கப்பட்டுள்ளது.

கொஞ்சிக் கொஞ்சிப் பேசக் கோடி
வார்த்தைகளும் நமக்கிருக்கு
அஞ்சி அஞ்சி அயல்மொழிய
பேசறான் -அதன் அடிமையாகி
தமிழத் தூக்கி வீசறான்

சாதனைகள் எப்பொழுதும்
தாய்மொழியின் அறிவினாலே
சாதிச்சவன் அனைவருமே
சொல்லுறான்
சோதனைதான் தமிழ்படிச்சா
சோத்துக்கேதும் தேறாதுன்னு
சோம்பேறிகள் பிறமொழியில்
கொல்லுறான்
கொல்லுறான் கொல்லுறான்
கொலவெறின்னு கொல்லுறான்

பேச்சுமொழியில் மிக இயல்பாகத் தாய்மொழிக் கல்வியின் பெருமையினையும், சோம்பேறிகளின் அன்னிய மோகத்தையும் சாடும் இப்பாடல் படிப்பவர்கள் மனதில் சட்டென இடம் பிடித்துவிடும் என்பதில் ஐயமில்லை.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள விந்தையான உலகம் என்ற தலைப்பிலான கவிதை ஒத்த வீடு என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது என்ற குறிப்பு அக்கவிதையின் கீழே உள்ளது. கவிஞர் இனியதாசன் தமிழின் முன்னணித் திரைப்படப் பாடலாசிரியராகி ஒளிர வேண்டும் என்று நாம் வாழ்த்துவோம். இசைக் கவிதைகள் என்ற பகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மட்டுமின்றி இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் திரைப்படப் பாடலுக்கான அடையாளங்களைக் கொண்டுள்ளன. இந்த அடையாளங்களே இத்தொகுப்பின் பலமும் பலவீனமும் ஆகும். மண்ணின் அதிசயம் பெண்ணே நீ என்ற தலைப்பிலான ஓர் இசைக் கவிதையின் பல்லவி இப்படி தொடங்குகிறது,

ஒருமுறை பூத்தாய் உனக்குள்ளே
பலமுறை பூத்தாய் எனக்குள்ளே
ஒவ்வொரு முறையும் பூத்திட வேண்டும்
காதல் நமக்குள்ளே

காதலை, காதலியை நலன் புனைந்துரைக்கும் இந்தப் பல்லவியில் மட்டுமே கவிதை அழகாய்ப் பூத்திருக்கிறது. பழுதுள்ள பாடலுக்குப் பண் நன்று என்பதுபோல் இத்தொகுப்பின் பல கவிதைகளைத் தாங்கிப் பிடிப்பனவாக சந்தமும் இசையும் அமைந்திருக்கின்றன.

கவிஞர் இனியதாசனின் கவிதை உலகம் விரிந்தது. பல புதிய உள்ளடக்கங்களைக் கொண்டது. குறிப்பாக, ஞான ஒளி, கற்பு, உயிரழிச்ச காதல், எண்ணம் ஒரு தீக்குச்சி முதலான கவிதைகளை இவ்வரிசையில் சேர்க்கலாம். புதிய புதிய உள்ளடக்கங்கள் கவிதைக்கும் கவிஞனுக்கும் பெருமை சேர்ப்பன. சோதனை முயற்சிகளிலும் சாதிக்கும் கவிஞராக இனியதாசன் மேலே குறிப்பிட்ட கவிதைகளில் தம் அடையாளத்தைப் பதிக்கிறார்.

ஒளியும் இருளும் உன்னில்தான் -இந்த
உலகம் தெரியும் கண்ணில்தான்
வலியும் வலிமையும் நெருப்பாகும் -அதில்
வாழ்வது உந்தன் பொறுப்பாகும்

கவிஞர் இனியதாசனின் மேற்காட்டிய கவிதை வரிகளோடு இந்த அணிந்துரையை நிறைவு செய்கிறேன். வாழ்க்கை குறித்த விசாரணைகளைச் சரியான புரிதல்களோடு கவிதையாக்கித் தந்துள்ள கவிஞர் இனியதாசன் நம் பாராட்டுக்குரியவர்.

கவிஞரின் இரண்டாம் படைப்பு இந்தக் கனவுத் தழுவல். இனி தொடர்ந்து வெளிவரும் படைப்புகளில் இன்னும் பரந்துபட்ட நிலையில் அவரின் படைப்பாற்றல் வெளிப்படும் என்பது உறுதி. ஏனெனில் இந்தத் தொகுதியே அதற்கான அடையாள வித்துகள் பலவற்றைப் பெற்றுள்ளது. இந்நூலைத் தமிழுலகம் ஏற்றுப் போற்றும், போற்ற வேண்டும் அதுவே நம் அவா. வாழ்த்துக்களுடன்.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர்

Pin It