இணையத்தில் தமிழில் எழுதுவோரின் எண்ணிக்கை, நாளுக்குநாள் வெகுவாகப் பெருகி வருகிறது. அதேபோல, தொலைக்காட்சிகளில் தமிழைச் சரியாகப் பேச முடியாமல் தடுமாறுவோரைக் காணும்போது வேதனையாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி:

gnanaselvan_350‘பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்’ என்ற தலைப்பில், கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், ‘தினமணி’ நாளிதழின் இலவச இணைப்பான ‘தினமணி கதிர்’ வார இதழில், கடந்த ஆண்டு ஒரு கட்டுரைத் தொடரை, எளிய நடையில் எழுதி வந்தார். அண்மை நிகழ்வுகளை, நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டி ஒப்பிட்டு, தமிழில் பிழைகளை நீக்கி எழுத, பேச, பயிற்சி அளித்து வந்தார். அந்தக் கட்டுரைகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு, மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. விலை ரூ 75 மட்டுமே.

இன்று (29.10.2012) காலையில், மணிவாசகர் பதிப்பகத்துக்குச் சென்று, அந்த நூலை வாங்கினேன். சென்னை பாரிமுனையில், பிராட்வே பேருந்து நிலையத்துக்கு நேர் எதிரே உள்ள சிங்கர் தெருவில் கதவு இலக்கம் 31 இல், இப்பதிப்பகம் அமைந்து உள்ளது.

புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டினேன். திருவிளையாடல் திரைப்படத்தில், முக்கண் முதல்வனுக்கும், நக்கீரனாருக்கும் இடையேயான உரையாடலில், ‘சொல்லில் குற்றம் இல்லை; இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்; பொருளில்தான் குற்றம் இருக்கின்றது’ என்பார் நக்கீரனார். இந்த நூலின் பொருளில் குற்றம் காண்பது அரிது. ஆனால், தேவையான இடங்களில் மேற்கோள்குறிகள் இல்லாதது ஒரு சிறு குறையாகப் பட்டது. அச்சுப்பிழைகளும் உள்ளன. இன்னும் சற்று உயர்தரமான காகிதத்தில் அச்சிட்டு இருக்கலாம்.

21 ஆம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர், தமிழை எளிதாகப் படிக்க வேண்டுமானால், தமிழில் புணர்ச்சி விதி தேவை இல்லை என்பது என் கருத்து. (எ-டு) பிழையின்றி - பிழை இன்றி

‘இதுபோன்ற வேறு நூல்கள் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டேன்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய நூல் ஒன்று, ‘பிழையின்றித் தமிழ் பேசுவோம்’ என்ற தலைப்பில், இதே பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. வெளியீட்டு எண். 427 (2001) விலை.25 மட்டுமே.

அத்துடன், ‘பிழையின்றித் தமிழ் எழுத..’ என்ற தலைப்பில், வெள்ளியக்குடி மு. நக்கீரன் அவர்கள் எழுதிய நூல் ஒன்றும் உள்ளது. விலை ரூ.50 மட்டுமே.

வாங்கிப் பயன் பெறுங்கள்!

நல்ல தமிழ் எழுதுவது குறித்து, திருநெல்வேலி தமிழ் அறிஞர், பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அளித்த தகவல்கள்:

மதுரை தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் அவர்கள், உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதி உள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தினமணியில் தொடராக வெளிவந்தது. பின்னர், மதுரை மீனாட்சி பதிப்பகம் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டனர். 

சென்னை ஜெயின் கல்லூரிப் பேராசிரியர் வெ. ஸ்ரீ சந்திரன், நல்ல தமிழ் எழுதுவோம் என்ற தலைப்பில் ஓர் நூல் எழுதினார். தியாகராய நகர், சரோஜினி தெருவில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

பேராசிரியர் நன்னன், மக்கள் தொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து, ஐந்து நூல்களை வெளியிட்டு உள்ளார்.

செந்தமிழ்ச் செல்வமா? வந்தவர் மொழியா? என்ற தலைப்பில், பாவேந்தர் பாரதிதாசன், குயில் இதழில் பல கட்டுரைகள் எழுதினார். அதைத் தொகுத்து வெளியிட்டு உள்ளனர்.

கால்டுவெல் பாதிரியார் பல நூல்களை எழுதி உள்ளார்.

செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம் என இரு நூல்களை எழுதி உள்ளார்.

தமிழில் பாட்டு எழுதுவது எப்படி? என்ற இலக்கண வரையறைகளை, Clavish என்ற தலைப்பில், இலத்தீன் மொழியில்,  1730 ஆம் ஆண்டு, வீரமா முனிவர் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

15,000 சொற்கள் கொண்ட, சதுர் அகராதி என்ற நூலையும், 1732 ஆம் ஆண்டு வெளியிட்டு இருக்கின்றார். இந்த நூல், தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டது.

வீரமா முனிவர், மொத்தம் 35 நூல்கள் எழுதி உள்ளார். அவற்றுள் நான்கு நூல்கள், இலத்தீன் மொழியில் உள்ளன. சென்னை கன்னிமரா நூலகத்தில் படிக்கலாம். திருச்சிராப்பள்ளித் தமிழ் இலக்கியக் கழகத்திலும் இந்நூல்கள் உள்ளன. திருச்சி தலைமை அஞ்சலகத்துக்கு எதிரே, குழந்தை இயேசு மருத்துவமனைக்கு அருகில், மையமான பகுதியில் இந்தக் கழகம் அமைந்து உள்ளது.

வீரமா முனிவர் தம் கைப்பட எழுதிய தேம்பாவணி, இலண்டன் மாநகரில் பிரித்தானிய நூலகத்திலும், அவர் கைப்பட எழுதிய திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பு, பாரீசு தேசிய நூலகத்திலும் இடம் பெற்று உள்ளன. தேம்பாவணி கையெழுத்துப் பிரதியின் நகல், பேராசிரியர் வளன் அரசு வைத்து உள்ளார். வீரமா முனிவரின் தேம்பாவணி பற்றிய முழு ஆய்வு நூலை எழுதி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் பேராசிரியர் வளன் அரசு.

- அருணகிரி

Pin It