மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாக மக்களுக்குத் தேவையான ஒன்று. மின்சாரமின்றி மண்ணில் எதுவும் இயங்காது. மின்சாரமே மக்கள் வாழ்வில் வெளிச்சத்தைத் தருகிறது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் மக்களை அழிக்கக் கூடிய, மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய, மக்களை அச்சுறுத்தக் கூடிய மின் உற்பத்தி மக்களுக்கத் தேவை இல்லை. கூடங் குளம் அணுமின் நிலையம் கூடாது என்று மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் போராட்டத்திற்காக பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் அறிஞர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்களுக்கு ஆதரவாக வெளியான அறிக்கைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து 'கூடங்குளம் அணு உலை எதிர்ப்புச் சிறப்பிதழ் ' ஆக வெளி வந்துள்ளது 'நாளை விடியும்' என்னும் நற்றமிழ் இதழ்.

அணு உலையினால் ஆபத்து இல்லை என்று அரசு தெளிவு படுத்த வில்லை. அணு உலையினால் ஆபத்தில்லை, அச்சப் பட தேவையில்லை என்று அறிவித்த தமிழக அரசே மக்களின் அச்சம் தீர்க்கும் வரையில் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டி இருப்பது முரண். ஆபத்தில்லை என்பதை அரசால் உறுதிப் படுத்த முடியவில்லை. சுனாமி தாக்கினாலும் நில நடுக்கம் வந்தாலும் அணு உலை அசையாது என்பது அடுத்தக் கட்டப் பிரச்சனை. முதலில் அணு உலையாலே ஆபத்து என்பதே மக்களின் அச்சம். அதுவே உண்மை. எடுத்துக் காட்டாக ஃபுகுஷிமா. செர்னோஃபில் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டுள்ளது என்கிறார் தொரட்டி. ஆபத்து இல்லை என்றால் நட்ட ஈடுக்கு ஏன் வழி வகைச் செய்ய வேண்டும் என்று வினா எழுப்பி உள்ளார்.

விபத்தே நடக்காது என்கிறது அரசு, உலகில் உள்ள 437 அணு உலைகளில் இது வரை 960 விபத்துகள் நடந்துள்ளது என்கிறார் சமா. இளவரசன். ஜப்பானின் அணு உலை வெடிப்பால் 6500 கி. மீ. வரை பாதிக்கப் பட்டது என்றவர் தமிழ் நாட்டின் எல்லையே 650 கி. மீ. தான் என்று அபாயத்தை எச்சரித்துள்ளார். கூடங்குளத்தில் அமைக்கப் படும் அணு உலையால் ஆபத்தே மிகுதி. காற்றாலை, கடலலை, கடலுக்குள் காற்றாலை, சூரிய ஆற்றல் போன்ற மாற்று மின் திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார், செலவும் குறைவு என்கிறார்.

அணு குண்டு வெடிப்பிற்கும் அணு உலை மின் உற்பத்திக்கும் அதிக வேறுபாடில்லை என்று கூறிய ச. பிந்து சாரன் அணு உலையால் ஏற்படும் ஆபத்துக்களைப் பட்டியலிட்டுள்ளார். உலகிலுள்ள அணு உலைகளில் இருந்து பெறப் படும் மின்சாரம் 15 சதவீதமே என்றும் (4 சதவீதமே என்கிறார் பழ, நெடுமாறன்) இந்தியாவிலோ 3 சதவீதமே என்கிறார், 3 சதவீதமும் 20 உலைகளில் இருந்து உற்பத்தி ஆகின்றன. இதற்கான செலவோ பல்லாயிரம் கோடி என்பதுதான் வேதனை.

அணுஉலை அமைக்கப் படும் இடத்திலிருந்து 1.6 கி. மீ. தூரத்திற்கு மக்கள் குடியிருக்கக் கூடாது என்பது விதி. ஆனால் கூடங் குளத்தில் 1 கி. மீ. க்குள்ளே மக்கள் குடியிருப்பு. 3. 0 கி. மீ. சுற்றளவிற்குள் 1 லட்சம் மக்கள் வாழும் நகரம் இருக்கக் கூடாது. ஆனால் கூடங் குளம் சுற்றி 12 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். 20 கி. மீ. க்குள் சுற்றுலாத் தளம் இருக்கக் கூடாது. ஆனால் 15 கி. மீ. ரில் கன்னியா குமரி. கூடங் குளம் அணு மின் நிலையம் விதிகளை மீறியே அமைக்கப் பட்டுள்ளது என்று பல ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர். விபத்து எற்பட்ட போது உயிரிழப்புகள் இல்லை என்பது தவறு. பின்னாளில் ஏற்படும் நோய்களினால் உயிரிழப்பு ஏற்படும் என்கின்றனர், விபத்து ஏற்பட்டால் 77 கி. மீ. வரை 20 ஆண்டுகளுக்கும் 115 கி. மீ வரை 5 ஆண்டுகளுக்கும் 140 கி. மீ. வரை 1 ஆண்டிற்கும் மக்கள் குடியேறக் கூடாது என்பதும் நிபந்தனை. கூடங் குளம் பகுதியோ அணு உலை அமைப்பதற்கு ஏற்றதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பொது மக்களிடம் முறையாக கருத்துக் கேட்க வில்லை. சுற்றுச் சூழல் குறித்த அறிக்கையைக் காட்டவில்லை.

யுரேனிய உருளைகளில் இருந்து வெளியேறும் கதிரியக்கக் கழிவுகளை மண்ணில் புதைத்தாலும் கடலில் கொட்டினாலும் அதன் பாதிப்பு பல்லாண்டுகள் தொடரும் என்கிறனர். இதற்கான மாற்று எதையும் அரசு குறிப்பிடவில்லை. அணுக் கழிவுகளைப் பாதுகாக்கவும் 24000 ஆண்டுகள் ஆகும் என்பதும் கவலையை அளிக்கிறது. அணுக் கழிவிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படும் என்றாலும் 3 தேக்கரண்டி அளவு 900 பேருக்கு புற்று நோயை உண்டாக்கும் என்பது மிகவும் அபாயகரமானது.

உலகில் உள்ள அணு உலைகள் எந்தெந்த நாள்களில், எந்தெந்த உலைகளில், என்னென்ன விபத்துகள் ஏற்பட்டன என்று பட்டியலிட்டு தொகுத்து 'கதிர் வீச்சு நாள் காட்டி' என்று ஒரு தொகுப்பையே தந்துள்ளது பயணி புத்தக வெளியீட்டகம். அணு உலையை ஆதரிப்பவர்கள் நாள் காட்டியை மறுக்க வில்லை, . இதிலிருந்து செய்திகளை, விவரங்களை எடுத்து குறுஞ் செய்தி மூலம் பரப்பி வந்துள்ளார் தோழர் தம்பி.

தமிழ் நாட்டின் மின் தேவை 11, 500 மெகாவாட். உற்பத்தித் திறன் 10, 237. உற்பத்தியோ 8, 000
பற்றாக் குறை 3, 5. 00 கூடங் குளத்தில் உற்பத்தியாவதை வைத்து பற்றாக் குறையைப் போக்க முடியாது. அதிலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றுக்கும் பிரித்துத் தர வேண்டும்.

நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 11 கோடி யுனிட் கர்நாடகத்திற்கும் 9 கோடி கேரளாவிற்கும் 6 கோடி ஆந்திராவிற்கும் செல்கிறது. இதில் குறிப்பிடத் தக்கது இம் மாநிலங்கள் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீர் தராமல் தகராறு செய்வதாகும். தமிழகமும் விலை கொடுத்தே வாங்கி வருகிறது. மூன்று மாநிலங்களுக்கு அனுப்பும் 26 கோடி யுனிட் மின்சாரம் இருந்தாலே தமிழகத்தில் பற்றாக் குறை ஏற்படாது என்று தெளிவு படுத்தியிள்ளார் கி. வெங்கட் ராமன்.

மேற்குலக நாடுகள் அணு உலைகளினால் ஆபத்து என்று முடிவு செய்துள்ளது. சில நாடுகளில் மூடப் பட்டும் உள்ளன. ஃபுகுஷிமாவிற்குப் பிறகு ஜப்பானே மாறி விட்டது. திட்டங்களைக் கைவிட்டு விட்டது. மேற்கு வங்கத்தில் முதல்வர் அணு உலை அமையாது என்று அறிவித்துள்ளார். ஆந்திரம், கேரளம், கர் நாடகம் அனுமதிப்பதில்லை. தமிழ் நாட்டில் மட்டும் ஏன் ? கேரளாவில் எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் தமிழகத்தில் அனுமதிப்பது ஏன் என்கிறார் முனைவர் த . செயராமன். ரஷ்யாவின் திட்டம் என்பதால் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்னும் நோக்கதிற்காக இந்தியாவின் கையாட்களாகவும் செயல் படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டப் படுகிறது.

கூடங் குளம் அணு உலை எதிர்ப்பு என்பது தற்போது தொடங்கப் பட்டது அல்ல என்கிறது அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம். 1985 ஆம் ஆண்டு திட்டமிடப் பட்டது. 1988 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதே ஆண்டு மக்கள் எதிர்த்த காரணத்தால் அடிக் கல் நாட்ட இருந்த அப்போதைய பிரதமர் இராஜிவ் காந்தி தன் பயணத்தை ரத்து செய்து உள்ளார். 1989 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தி மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி அரசு ஒடுக்கியுள்ளது. அப்போதைய தி. மு. க. அரசு அபாயங்களை அறிய குழு நியமிக்க வேண்டும் என்றது. இதே ஆண்டு ' அமைதி வேண்டும், அணு உலை வேண்டாம் ' என்னும் தொகுப்பு வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் இங்கே
மனிதர்கள் வாழந்தார்கள்
என்று
வரலாறு மட்டும் பேசும்

என்று அதில் கவிதை எழுதி உள்ளார் வழக்குரைஞர் தமிழகன். உலையால் ஏற்படும் விளைவைக் கூறியுள்ளார். மேலும் சாலய். இளந் திரையன் 'கூடங் குளம்' கொதிக்கிறது என்னும் நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூல் மீண்டும் தோழர் பி. ரெ. அரசெழிலனால் 2011 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்யப் பட்டது. 1991 ஆம் ஆண்டு கூடங் குளம் அணு உலைக்கு எதிராக தோழர் சீனி. மோகன் 'இரவுகள் உதிரும்' தொகுப்பில் 'இறுதி மனிதன்' என்னும் கதையை எழுதியுள்ளார். 1986 ஆம் ஆண்டு ரஷ்யாவில் செர்னோபில் உலையில் விபத்து ஏற்பட்ட பிறகு 1988 ஆம் ஒப்பந்தம் ஏற்படுத்தியது வியப்பளிக்கிறது. 2007 ஆம் ஆண்டு 1800 பேர் பட்டினிப் போர் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

கூடங் குளம் அணு உலை வேண்டும் என்கிறது அரசு. அதற்கு ஒரே காரணம் மின் தேவை. தொடங்கி விட்டது என்பதற்காக முடிக்க வேண்டும் அடம் பிடிக்கிறது. ஆனால் வேண்டாம் என்பதற்காக மக்கள் சரியான காரணங்களை ஆதாரத்துடன் எடுத்து வைக்கின்றனர். ஏன் வேண்டாம் என்பதற்கான புள்ளி விவரங்களை தந்துள்ளனர். கடந்த காலத்தில் நடந்த விபத்துக்களை நாள் வாரியாக, இட வாரியாக எடுத்துக் காட்டியுள்ளனர். விபத்து நடந்ததால் ஏற்பட்ட விளைவுகளையும் விபத்து நடந்தால் ஏற்படும் விளைவுகளையும் இயக்கங்களும் அமைப்புகளும் அறிஞர்களும் ஆர்வலர்களும் விவரித்துள்ளனர். அரசுக்கு கௌரவ பிரச்சனையாக உள்ளது. மக்களுக்கு வாழ்வாதார பிரச்சனை. அரசு பலவீனமான வாதங்களை முன் வைக்கிறது. மக்கள் வலுவான காரணங்களை எடுத்து வைத்துள்ளனர்.

வெளிச்சம் தரும் முயற்சியில் அரசு மக்கள் வாழ்க்கையையே இருட்டாக்குகிறது. அணு உலைக்கு மாற்றான ஆலோசனைகளையும் மக்கள் கூறியுள்ளனர். அரசு பரிசீலிக்கலாம். அரசு யாருக்காக என்பதை அரசு மறந்து விட்டது. மக்களுக்காகவே அரசு என்று அரசு எண்ண வேண்டும். அணு உலை வேண்டாம் என்று மக்கள் போராடும் போது, வேண்டும் போது மக்கள் நலனில் அக்கறை உள்ளதாக கூறி வரும் அரசு கை விடுவதுதான் அரசுக்கு மரியாதை. மாநில அரசோ மத்திய அரசின் எண்ணத்தையே செயல் படுத்த விளைகிறது. மக்களைப் பற்றி கவலையே கொள்வதில்லை. கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப் பட்டிருந்தாலும் மக்களின் நிலையை எண்ணி கை விடலாம். அனைத்து அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் செய்திகளையும் திரட்டி சிறப்பிதழாக வெளியிட்டிருப்பதற்கு ' நாளை விடியும்' இதழின் ஆசிரியர் பி. ரெ. அரசெழிலனுக்கு நன்றிக் கூற வேண்டும். அரசுக்குக் கோரிக்கையாக உள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சித்துள்ளது. சனவரிடூபிப்ரவரி 2012 இல் வெளி வர வேண்டிய இதழ் தாமதமாக வந்துள்ளது என வருத்தப் பட்டுள்ளார். இது தாமதம் அல்ல. இன்னும் வாய்ப்பிருக்கிறது. போராட்டம் தொடரட்டும்.

Pin It