"மென் பொருளின் வன் பொருளில் இடைபொருளாகி இயந்திர வாழ்வில் சுழன்று கொண்டு இருக்கும் வேளையில் வேப்ப மரத்தையும் தழுவும் வேனில் காற்றாக தமிழ் தென்றலால் தழுவப் பட்டு இந்த நூலை எழுதத் தொடங்கினேன்" என்று காரணத்தைக்   குறிப்பட்டு 'கைத்தலம் பற்றி' என்னும் நூலைத் தந்துள்ளார் கவிஞர் வே.பத்மாவதி.

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தப்படுகிறது. திருமணத்தை நடத்துபவர்கள் முடிச்சு போடுவதிலேயே குறியாக இருக்கின்றார்களே தவிர இருவர் மனத்தையும் அறிவதில்லை; அறிய விரும்புவதில்லை. திருமணம் செய்து வைக்கப்பட்ட காரணத்தாலேயே இருவரும் வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. 'ஓர் அனாதை இரவிலே' கவிதை விருப்பமில்லாமல் மணமுடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கூறுகிறது.

திருமண ஒப்பந்தத்தில்
இருமணமும் கையொப்பமிட்டதா?

என்னும் வரிகள் சமு்கத்தின் முன் வைக்கப்பட்ட வினா. பெற்றோர்கள் மீது இறக்கப்பட்ட இடி. ஓர் ஆணின் கூற்றாக ஒரு பெண்ணின் நிலையைக் கூறியிருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக ஆண் படைப்பு உள்ளது. மனம் ஒப்பாமல் மனிதர் ஒப்புக்கு வாழ்வதை 'சொப்பு வாழ்க்கை' என்கிறார். மனைவி வாடகைக்கு இடம் கேட்கும் இடம் மனத்தைத் தொட்டது. பெண்ணியம் பேசினாலும் ஆணைப் போற்றியுள்ளது.

ஊசி அவள் பக்கம் வந்த போது
ஊரே கேட்குமாறு ஒரு அலறல்     

பெண்களுக்காக ஆண்கள் குரல் கொடுப்பது அரிது. கவிதை நாயகன் பெண்ணுக்காக 'குரல்' கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது,

பெண் என்பவளை எளிதில் குறைப்பிட்டு மதிப்பிட முடியாது. பெண்ணிடம் நெருங்கவும் முடியாது; நெருங்கினாலும்  நெஞ்சில் இடம் பிடிப்பது அரிது. கணவனுக்கும் காதலனுக்கும் ஒரே அளவுகோலே.

மனை நுழைந்தேன்
மனையாள் திறந்தாள்
மனைக் கதவுகளை மட்டும்
மனக் கதவுகளை
இன்னும் அடைத்தே வைத்திருந்தாள்

'கனவில் பெய்த மழை'யில் கவிஞர் பெய்த மழை இது. பெண் மனக் கதவைத் திறக்க மாட்டாள்; திறந்து விட்டால் மூட மாட்டாள். கவிஞர் மனம் திறந்து பேசியுள்ளார்.

கணவனாக
வரும் முன்னே
கனவுகள் கண்டவள்
கண்ணெதிரே வந்தவுடன்
வெறுத்தது ஏன்?
விலகியது ஏன்?
விட்டு நகர்ந்தது ஏன்?
விருட்டென ஒழிந்தது ஏன்?

'அன்றலர்ந்த அத்திப் பூ' விலோ பெண்ணை ஒரு புதிராக சித்தரித்துள்ளார்.

மென் பொருள் துறை மண் பொருள் துறையை இல்லாது செய்து வருகிறது. அளவிற்கதிமான சம்பளத்தை அள்ளி வழங்கி இளைஞர்களை ஈர்த்து வருகிறது. இளைஞர்களை உறிஞ்சி வருகிறது.

மென் பொருள் வாழ்க்கையில்
வரும் பொருள் வசதி
தரும் சுகம் அசதி

கவிஞர் மூன்றே வரிகளில் மென் பொருள் வாழக்கையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். வசதியாக இருப்பினும் அசதியே எஞ்சும் என்கிறார். மென் பொருள் வல்லுநராக இருந்து நன் பொருள் சொல்லுநராக விளங்குகிறார். மென் சொற்களையே கவிதைகளிலும் கையாண்டுள்ளார்.

காதல் என்பது வித்தியாசமானது. கல்யாணத்திற்கு முன் காதலிப்பது கல்யாணத்திற்குப் பின் காதலிப்பது. இரண்டும் இரண்டு விதம். கல்யாணத்திற்குப் பின்னான காதலே சுத்தமானது; உண்மையானது. 'நதியில் பூத்த நந்தவனம்' கவிதையில் கல்யாணத்திற்குப் பின்னான காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

திருமணமான பெண்ணை
திருமதியான உன்னை
கவிதைகளை
இதய
காகிதங்களில்
இதோ
உனக்காய்
இழைக்கிறேன்

கவிதைகளில் மனைவியைக் காதலியாக்கியுள்ளார். காதலிக்காக கவிதையை இயற்றியுள்ளார்.

கவிதை எழுதுவது ஒரு கலை. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை எனினும் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரே போல் எழுதுவதில்லை என்பதும் உண்மை. கவிதை சிலரிடம் பிடிபடும். சிலரிடம் வெடிபடும். கவிஞருக்கு அழகாக பிடிபட்டுள்ளது.

பிடிக்கத் தெரியாமல்
விழுந்தாயா?
பிடிக்க வேண்டுமென்று
விழுந்தாயா?

கால் தவறி விழுந்த ஒரு நிகழ்வை கற்பனையால் இரண்டு விதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். நன்றாக பிடித்துள்ளார். கவிஞரிடம் சொல்லாடலும் மிகுந்துள்ளது. சொல்லாடலுக்கு ஏராளமான எடுத்துக் காட்டுகள் உள்ளன.

பாட்டாய் புது ஏட்டாய்
சிறை மீட்டாய் பதில் கேட்டாய்
அழைத்தாய் மழை பொழிந்தாய்
இழைந்தாய் சொல்ல விழைந்தாய்
வளைந்தாய் உயிர் களைந்தாய்
இழந்தாய் கொஞ்சம் மெலிந்தாய் ஏன்
உண்மை சொல்ல மறந்தாய்??

தமிழ்ச் சொற்களின் மீது கவிஞர் கொண்டிருந்த காதல் விளங்குகிறது. சொற்களை அழகாகத் தேர்ந்தெடுத்துள்ளார். கவியரசு கண்ணதாசனின் காய் காய் போல கவிஞரின் தாய் தாய்.

தாசிகளைப் பற்றி தமிழ்க் கவிதைகள் ஏராளம் உண்டு. கவிஞர்கள் தாசிகளின் மீதான தங்கள் கரிசனத்தைக் கவிதையாக்கி உள்ளனர். தாசிகளை கவிஞர் 'நாண் அறுந்த வீணைகள்' என்கிறார்.

கட்டிய தாலிகளை
தனியுடைமையாக்க
கட்டில்களை
பொதுவுடைமை
ஆக்கினார்கள்

தாசிகளை பொதுவுடைமை என்பது குறிப்பிடத்தக்கது. பரத்தைகள், விபச்சாரிகள், விலை மகள்கள் என்னும் சொற்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

'கைத் தலம் பற்றி' கவிதை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் கவிஞர் வே.பத்மாவதி. கவிதைகளை நெடுங் கவிதைகளாகவே இயற்றியுள்ளது கவிஞரின் தனித்தன்மையைக் காட்டுகிறது. ஒரு காவியம் எழுதும் ஆற்றல் பெற்றவராக உள்ளார். காவியம் எழுதினால் கவிதை உலகில் கண்டிப்பாக பேசப்படுவார். ஆண் பெண் உறவை கணவன் மனைவி உறவை அவர்களுக்குள்ளான சிக்கல்களை, போராட்டங்களை, தொடர்புகளை இயல்பாக கவிதையாக்கித் தந்துள்ளார். கவிதையும் தாண்டி பாடல்கள் இயற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான ஆற்றல் உள்ளவர் என கவிதைகளை வாசிக்கும் போது அறிய முடிகிறது.

மென் பொருள் துறையில் உள்ளவர்கள் கவிதைத் துறையில் ஈடுபடுவது அரிதாக உள்ளது. கவிஞர் நிலா ரசிகன் உள்ளார். தற்போது கவிஞர் வே.பத்மாவதி பிரவேசித்துள்ளார். மென் பொருள் துறையில் இருப்பதால் மென் பொருள்களிலே கவிதை இயற்றி உள்ளார். வன் பொருளில் இனி பாட வேண்டும், வெற்றிப் பெற வேண்டும். "கவிஞரைப் பற்றிய 'சுரம்' பாசுரமாகியிருக்கிறது. கவிப் பணி தொடரட்டும்" என்று வாழ்த்தியுள்ளார் கவியருவி தி.மு.அப்துல் காதர். 'கைத் தலம்' பற்றியவர் 'கவிதைத் தலம்' பற்றி தொடர வாழ்த்துக்கள்.

Pin It