அன்பாதவனின் ‘கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள்’

கவிஞன், தன் மனத்தில் உதித்துவிட்ட கவிதையை வெளிக்கொணர்வது ஒரு பிரசவ வேதனையைப் போன்றது. கவிதைக்கான மொழி பிடிபடும்வரை அதை உள்ளேயே வைத்திருக்க வேண்டும். அந்த மொழி மனத்திற்குள் முதலில் கருக்கொண்டு உருவான பின்பே எழுதத் தொடங்க வேண்டும். கவிதைக்கான கரு மனத்தில் உதித்துவிட்ட உடனேயே எழுதத் துவங்கிவிடுவதும், இருண்மைத் தன்மை, குறியீட்டுத் தன்மையுடன் அறிவுஜீவிதத்தைக் காட்டிக் கொள்வதற்காக எழுதுதலும் கவிதையை / கவிதையின் தன்மையைச் செயலிழக்கச் செய்துவிடும். அதுமட்டுமின்றி, சமூக அபத்தங்களை / சமூகப் பிரச்சனைகளை எழுதுவதுதான் கவிதை; அவ்வாறு எழுதுவதன் மூலம் புரட்சி ஏற்பட்டுவிடும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுவதும், சமூக அவலங்களைப் படைப்பாக்குவதன்மூலம் தான் ஒரு சமூகப் பிரக்ஞை / அக்கறை உள்ளவன் என்று காட்டிக் கொள்ள முனைவதும்கூட வீண்வேலைதான். சமூகத்தில் எத்தனையோ அபத்தங்கள் அரங்கேறலாம். ஆனால், அது நமக்குள் என்னமாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதைப் பொருத்தே அந்தப் பிரச்சனை கவிதையாக / படைப்பாக உருமாறும். எனவே, கவிதை என்பது அனுபவம் சார்ந்தது. மொழியின் மூலம் பதிவு செய்யப்படுகிற அனுபவம் வாசக அனுபவமாக மாறும்போதுதான் அக்கவிதை வெற்றி பெறுகிறது. கவிதையை வாசிக்கின்ற வாசகனுக்குத் தேவையானது அக்கவிதை பேசும் மொழியும், அது கிளர்த்தக்கூடிய அனுபவமுமே.

தலித்தியக் கவிஞர் என்று அடையாளப்படுத்தப்பட்ட அன்பாதவனின் மற்றொரு பரிமாணம்தான் கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் கவிதைத் தொகுப்பு. சுமார் நூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு நீளும் இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் 2006லிருந்து 2011 வரை எழுதியவை. இத்தொகுப்பின் பொருண்மைகள் நகர்சார் வாழ்வியலை மையமிட்டவை. சென்னையிலும், மும்பையிலும் ஏற்பட்ட மின்ரயில் பயண அனுபவங்கள், மின்ரயிலோசை, இரயில் நிலையத்தில் பிச்சையெடுக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர்கள், மனிதம் தொலைந்துபோன இயந்திரத்தனமான நகர்சார் வாழ்க்கை அனுபவங்கள், நவீனக் கவிதைகள் மற்றும் கவிஞர்கள் குறித்த விமர்சனங்கள், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அந்நியமாதல் உணர்வு, கீழ்வெண்மணிப் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை எனப் பல்வேறுபட்ட பொருண்மைகள் கவிதைகளாக உருக்கொண்டுள்ளன.

இயந்திரமயமான சூழலில் ரயிலில் பாடிப் பிச்சையெடுக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர்களின் பாடலைக் கேட்டு உணரும் மனநிலை அலுவலகம் செல்லும் நகரவாசிகளுக்கு இருப்பதில்லை. ரயிலில் கைக்குட்டை, புல்லாங்குழல், செல்ஃபோன் கவர் என இதர பொருட்களை விற்பவர்களின் குரல்களுக்குச் செவிமடுப்பதில்லை. பெருநகர இரைச்சலில் பறவைகளின் கீதங்களை இழந்து கொண்டிருக்கிறோம். கடிகாரம் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. டிவி, செல்ஃபோன் போன்றவை மனித உறவுகளைத் தனித்தனித் தீவுகளாக ஆக்கிவிட்டன. உலகமயமாக்கல், நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களில்கூட நீக்கமற நிலைத்துவிட்டது. கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் இதைப் பற்றித்தான் பேசுகின்றன.

சென்னையிலும், மும்பையிலும் கவிஞர் வாழ்ந்திருப்பதால் மின்ரயில் பயண அனுபவத்தையும், நகர்சார் வாழ்க்கை அனுபவத்தையும் வெகு இயல்பாகப் பதிவு செய்துள்ளார். ‘சிற்றகல்’ என்னும் தலைப்பில் அமைந்த முதல் கவிதையே மின்ரயில் பயண அனுபவத்தினைப் பேசும் கவிதைதான். பெருகிவரும் நகர்மயமாக்கல் சூழலில் மனிதர்கள் இயந்திரங்களைப்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனம் இக்கவிதையில் தொனிக்கிறது. மாநகர இரைச்சலில் நாம் கேட்கத் தவறுகின்றவற்றைப் பட்டியல் போட்டுச் சொல்லும் கவிதைசொல்லி, கடைசிவரியில்,

‘பெருநகர ஒளிவிளக்குகளின் நிழல்களில் / தேடுகிறேன் என் அமைதிக்கான / சிற்றகல் சுடரை’ என்று முடிக்கிறார். இந்தக் கவிதை மட்டுமின்றி, மஹா மசானம், பரவசம், இன்றும் மற்றுமொரு நாளே… நிகழ்வொன்று, நவீனன், மனித வனம், நுங்கம்பாக்கம், பயணிகள் கவனிக்கவும் ஆகிய தலைப்புகளில் அமைந்த கவிதைகள் ஒருபொருள் குறித்து அதாவது மின்ரயில் பயணச் சூழல் மற்றும் நகர்சார் வாழ்க்கைச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட வலி குறித்து எழுதப்பட்டவை.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளுள் காக்கைகளும் நானும், காதலின் பெரும்புகை என்னும் கவிதைகள் குறிப்பிடத்தகுந்தன. இக்கவிதைகளை வாசிக்கிற வாசகன், அதைத் தனக்கான அனுபவமாக உணர்வது தவிர்க்க முடியாதது.

கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் எரித்து வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து சமீபத்தில் முகப்புத்தகத்தில் படித்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது. கீழ்வெண்மணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்கள், ஜமீன்தார்கள் என்பதால் அவர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தீர்ப்பில் எழுதப்பட்டிருந்ததாம். ‘பதில்’ என்னும் தலைப்பில் அமைந்த அன்பாதவனின் கவிதை இத்தீர்ப்பை விமர்சிப்பது போல அமைந்துள்ளது.

தழும்புகளை வருடும்போது / மறக்க முடியாதபடிக்கு / இன்னமும் வலிக்கிறது / காயத்தின் ஆழம் என்று கீழ்வெண்மணி துயரத்தை வலியோடு பேசும் அக்கவிதை, ‘எல்லா கேள்விகளுக்கும் / கட்டாயமுண்டு / பதில்’ என்று முடிகிறது. அதிகாரத்தினைப் பயன்படுத்தி, செய்த குற்றத்திலிருந்து ஆதிக்கச்சாதிகள் தப்பித்துவிடலாம். ஆனால், காலத்தின் தீர்ப்பிலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது என்று எச்சரிக்கை செய்கிறது.

இத்தொகுப்பில் ஆண்மம் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை, ஆண்மையச் சமூகத்தில் பெண் எவ்வாறு ஒடுக்கப்படுகிறாள் என்பதைப் பேசுகிறது. ஆண்மையச் சமூகத்தில் பெண்ணுக்கான இடம் சமையலறையும் படுக்கையறையுமாகச் சுருக்கப்படுகிறது. அதைத் தாண்டிப் பெண்கள் பேசவோ, எழுதவோ, ஆளுமையை நிறுவவோ முயலக்கூடாது. அப்படி மீறினால் கற்பின் பெயரால் தூற்றப்படும் அவலம் இன்னமும் புரையோடிக் கிடப்பதை இக்கவிதை பேசுகிறது. பாரதி, பெரியார், பூலே போன்றவர்கள் பேசிச் சென்ற பெண்விடுதலைதான் இங்குக் கவிதையாக உருமாறி இருக்கிறது.

ஆனால், தொடக்கத்திலிருந்தே பெண்ணுக்காகவும் சேர்த்து ஆண்களே பேசியும், எழுதியும் வந்ததைப் பெண்ணியவாதிகள் மறுக்கின்றனர். பெண்களின் வலிகளை, வேதனைகளை, ஒடுக்குமுறைகளை, வேட்கைகளை, உணர்வுகளை நாங்களே எழுதுவோம் என்று பெண்கள் எழுத வந்துவிட்ட காலம் இது. பெண்களின் பிரச்சனைகளைப் பெண்கள்தான் பேச வேண்டும் என்னும் முழக்கம் ஒருபுறம் இருக்கிறது. எனவே, ஆண்மம் கவிதை, ஒரு தொடக்கநிலைக் கவிதையின் வெளிப்பாடே. இதைத்தாண்டி பெண்கள் எத்தனையோ பொருண்மைகளை, பெண்விடுதலை, உரிமை, சமத்துவம் சார்ந்து எழுதத் தலைப்பட்டுவிட்டனர். ஆணை நிராகரித்தல், பாலியல் சமத்துவம், பெண்ணுடலைக் கொண்டாடுதல் என்கிற அளவில் பெண்ணியக் கவிதைகள் சென்றுவிட்ட நிலையில் இக்கவிதை பேசுவது தொடக்கநிலைக் கவிதையின் சாயலாகத் தோன்றலாம். ஆனால், இத்தகைய நிலையில்தான் இன்னமும் பெண்ணினம் இருந்து கொண்டிருக்கிறது என்பதையும், இத்தகையப் பிரச்சனைகளை இன்னமும் ஆண்கள் / ஆண்கவிஞர்கள்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான உண்மையையும் யாரும் மறுக்கமுடியாது.

இக்கவிதையில், வன்மத்தோடு ஆணென்னும் மமதையில் / இருக்கிறாய் இந்த முகங்களோடு / அப்பா, சகோதரன், புருஷன், மகன் / மாமன், மச்சினன், மாமனார், அதிகாரி / ஆசிரியர், பேராசிரியர், முதல்வர், மேலாளர் / துணைவேந்தர், இயக்குநர், ஆய்வு வழிகாட்டி / இயக்குநர், கங்காணி…யென / எப்போது பிறப்பாய் / புரிதலுள்ள மனிதனாய்… என ஆண்களின் முகங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறார் கவிஞர். குடும்ப நிறுவனத்திற்குள்ளும், சமூக நிறுவனத்திற்குள்ளும் ஆண்மையச் சமூகத்தின் கோரமுகங்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை ஓர் ஆணே ஒப்புக் கொள்வது வியப்புக்குரியதாக இருக்கிறது. இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆணை முற்றிலுமாக நிராகரிப்பதும், குறை சொல்வதும் மட்டும் பெண்ணியம் ஆகிவிடாது. மனித மனத்தின் அடியாழத்தில் புதைந்து போயிருக்கும் ஆண்மையச் சிந்தனைகளைத் தகர்த்தெறிவதன் மூலம் மட்டுமே இத்தகைய பெண்ணொடுக்குமுறைகள் களையப்படலாம்.

இத்தொகுப்பில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு கவிதை வேதாளத்துடன் ஓர் உரையாடல். இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசு, இந்திய அரசு, தமிழர்கள் இவர்களின் நிலைப்பாட்டையும், செயல்பாட்டையும் விமர்சனம் செய்துள்ள கவிதை இது. இந்தக் கவிதையை எழுதியதற்காகக் கவிஞரைப் பாராட்டலாம். ஆனால், அப்படிப் பாராட்டுவதில் சில சிக்கல்கள் உண்டு. இந்தக் கவிதையில் புதுமை என்று சொல்வதற்கு ஏதுமில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் மு.மேத்தாவின் செருப்புடன் ஒரு பேட்டி கவிதையை வாசித்தவர்களுக்கு இக்கவிதையைப் பாராட்டுவதில் உள்ள சிக்கல் புரியும். ஆனால், இத்தொகுப்பு 2009 அல்லது அதற்கு முன்பு வெளிவந்திருந்தால் இக்கவிதை பேசும் பொருண்மை, முன்வைக்கும் விமர்சனம் ஆகியவற்றிற்காகப் போற்றப்பட்டிருக்கும். ‘தோழர் கிருஷ்ணவேணியும் இடஒதுக்கீடும்’ கவிதையும்கூட குறிப்பிடத்தகுந்த கவிதைதான்.

இக்கவிதைத் தொகுப்பில் சலிப்பூட்டுகிற விஷயமாக இருப்பது சில கவிதைகளுக்கு அடியில், அடைப்புக்குறிக்குள் புதியமாதவிக்கு, கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு, செல்லமகள் சக்திஜோதிக்கு, கவிஞர் அரங்க.மல்லிகாவுக்கு, தம்பி பாலபாரதிக்கு… … என்று எழுதியிருப்பது. அதேபோல ‘நானிப்போது மும்பையில் இல்லை’ என்னும் கவிதையும் இதே பாணியில்தான் இருக்கிறது. 1993இல் மும்பையில் நடந்த மதக்கலவரம் முதல் சமீபத்தில் தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் வரையிலான மும்பையின் கலவரங்களை, இயற்கைப் பேரழிவுகளைப் பட்டியலிட்டுப் பேசும் கவிதையில், ‘மதியும் மாதவியும் எச்சரிக்க…’, ‘அருமைத் தோழி அரங்க மல்லிகாவுக்கு / நானும் மதியும் விடை கொடுத்தது…’, ‘கடற்கரைச் சாலையில் நடந்து மகிழ்ந்ததை / கவிதைத் தோழி சக்திஜோதி சிலாகித்த’ என்பன போன்ற வரிகள், இவர்களெல்லாம் மும்பை நகர வாழ்க்கையை, மும்பை நகரச் சூழலைப் பகிர்ந்து கொள்கிற அளவிற்கு நெருக்கமான தோழிகள் அன்பாதவனுக்கு என்பதைத் தவிர வேறெதையும் வாசகர் மனதில் பதித்துவிடாது என்றே தோன்றுகிறது.

மேலும், ’வீசும் புயலோ வெடிகுண்டுகளோ / தொடர்மழையோ துப்பாக்கி ரவைகளோ / குலைத்து விடாது எதுவுமே / மும்பையின் மன உறுதியை’ என்னும் வரிகளே இக்கவிதையில் போதுமானவை. ’மும்பை துயரங்களின் தாய்மடி – ஆனால் / நம்பிக்கையின் முலைப்பால்’ என்னும் கடைசி வரியும், அடைப்புக் குறிக்குள் தம்பி பாலபாரதிக்கு என்ற சமர்ப்பணம் செய்யப்பட்ட பெயரும் கவிதையோடு ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. இப்படி, கவிதைக்கு அடியிலும், கவிதையிலுமாக கவிஞர்களின் பெயர்களை எழுதியிருப்பதன் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது மிகப்பெரிய கேள்வி. இவர்களெல்லாம் என் எழுத்துலக நண்பர்கள் என்று வாசகனிடத்தில் மறைமுகமாகப் பதிய வைக்க விரும்புகிறாரா தெரியவில்லை. ‘கீதாவுக்குப் பதிலாக எந்தத் தோழியின் பெயரையும் உபயோகித்துக் கொள்ளலாம்’ என்ற பெயர் சுட்டப்பட்ட கவிதையில் இருக்கும் பொதுமைத்தன்மையும், கவித்துவமும் மேல்குறிப்பிடப்பட்ட கவிதை வரிகளில் இல்லை என்றே சொல்லலாம்.

அசூயை மிகுந்த மற்ற சில விஷயங்களையும் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும். ‘நவீனத்தின் அளவு’, ‘பின்தொடரும் நிழலோடோர் உரையாடல்’, ’நவீனம் : சில கவிதைகள்’, ‘சோதனைச் சாலை வெள்ளெலிகளுக்காக னவீந அறிவுஜீவிகளின் கையொப்பமிட்ட கூட்டறிக்கை மூன்றிலொரு பங்கு சுருக்கம்’, ‘வரவேற்பு வாசகம்’ போன்ற மொன்னைத்தனமான கவிதைகளை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கலாம். இக்கவிதைகள் அனைத்தும் சிறுபத்திரிகைச் சூழலில் நிலவும் குழு அரசியலை விமர்சனம் செய்கின்றன.

‘சோதனைச் சாலை வெள்ளெலிகளுக்காக னவீந அறிவுஜீவிகளின் கையொப்பமிட்ட கூட்டறிக்கை மூன்றிலொரு பங்கு சுருக்கம்’ என்னும் கவிதையில், நவீன கவிதைகள் இஸங்களை உட்செரித்தபடி, வாசகனுக்குப் புரியாதபடி, இருண்மைத் தன்மையுடனும், படிமம், குறியீடுகளுடனும் எழுதப்பட்டுச் சிறுபத்திரிகைகளில் வெளிவருகின்றன என்பதை விமர்சனம் செய்துள்ளதோடு, கவிதையின் இறுதியில் அடைப்புக்குறிக்குள் செல்லமகள் சக்திஜோதிக்கு என்றும் எழுதியிருப்பதன்மூலம் கவிதை சொல்லவருகிற விஷயத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளார் அன்பாதவன். நவீனக் கவிதைகள், வாசகனுக்குப் புரியாதபடி, இருண்மைத் தன்மையுடனும், படிமம், குறியீடுகளுடனும் எழுதப்படுகின்றன என்பதை எலிகள், குடுவை, நீலச்சுடர், பிப்பெட் என்று புரிந்தும் புரியாத மொழியில் எழுதுவதற்குப் பதிலாக, நவீனக் கவிதைகளின் போக்குகள் இன்றைக்கு எவ்வாறு இருக்கிறது என்று விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கலாம். (நவீனக் கவிஞர்களின் போக்குகள் குறித்தும்.) இத்தொகுப்பின் பின்னுரையாக அமைந்துள்ள படைப்புவெளி : வலியும் வாஞ்சையும் என்பதை வாசிக்கின்ற வாசகனுக்கு, அந்தப் பின்னுரையின் மாறிய அல்லது விரிந்த வடிவம்தான் மேற்சுட்டப்பட்ட கவிதைகள் என்பதும் தெளிவாகத் தெரியும்.

’வரவேற்பு வாசகம்’ கவிதை, ஒரு கவியரங்கக் கவிதையா? வானம்பாடி இயக்கத்தினர் சொல்வதுபோல் பூமிப்பந்தைப் புரட்டிப் போடக்கூடிய நெம்புகோல் கவிதையா? பிரச்சாரக் கவிதையா? நவீனக் கவிதையா? இக்கவிதையை வாசித்து முடிக்கும்போது இத்தகைய கேள்விகள் மட்டுமே மிஞ்சுகின்றன. அதுமட்டுமின்றி, கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு என்று அக்கவிதையைச் சமர்ப்பணம் செய்திருப்பதும் சிந்திக்க வைக்கிறது. மேலும், ஒருபக்கச் சிறுகதையாகவும் இல்லாமல், வடிவத்தில் கவிதையாகவும் இல்லாமல், கவிதைநூல் குறித்த முன்னுரையாகவும் இல்லாமல், சிறுபத்திரிகைச் சூழல் குறித்த விமர்சனமாகவும் இல்லாமல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுவிட்ட ‘முள்பந்து’, ‘சந்தேகம்’ ஆகியவையும், ‘நெடுஞ்சாலை ஞெகிழித்தாள்’ தலைப்பிலான சிறுவடிவ கவிதைகளும் வாசகனிடத்தில் இது என்ன என்ற கேள்வியை மட்டுமே விட்டுச் செல்கிறது.

இக்கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது அன்பாதவனின் இரண்டுவிதமான முகங்களை வாசகன் உணரமுடியும். ஒன்று தனக்குக் களம் கொடுக்காத சிறுபத்திரிகைக்காரர்களை நிராகரிப்பது அல்லது விமர்சனம் செய்வது. மற்றொன்று மனுஷ்யபுத்திரன், சக்திஜோதி, அரங்க. மல்லிகா, பாலபாரதி போன்றவர்களைக் கவிதைக்குள்ளும், கவிதைக்கு அடியிலும் பெயர் சுட்டி, தனக்கு மிக நெருக்கமானவர்களாக அடையாளம் காட்டிக் கொள்வது. அதற்கான உரிமை அன்பாதவனுக்கு உண்டு என்றபோதும் கவிதையில் அது எத்தகைய தாக்கத்தினை உருவாக்குகிறது என்பதை அன்பாதவன் யோசித்ததாகத் தெரியவில்லை.

’எனக்கான கவிதைகளை எழுத முற்படுகையில் / வரி வடிவங்களை மறைத்து / சொற்களைப் பதுக்குகிறது மொழி’ என்று எதிராக வீசும் காற்று என்னும் கவிதையில் எழுதியுள்ளார். ஆனால், இனிவரும் காலங்களில் திறந்த மனத்துடன், வாழ்க்கையையும் கவிதையையும் அணுகும்போது மொழி இவரைக் கைவிடாது என்று நம்ப இடமுண்டு.

Pin It