பிட்டர் வோர்ம்வுட் :
எழுதியவர்: ஈஸ்டரின் கேர்
வெளியீடு : ஜுபான் பதிப்பகம் – 2011
பக்கங்கள் : 269

bitterwormwoodஈஸ்டரின் கேர், நாகலாந்தை சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர், இவர் எழுதிய 'எ நாகா விலேஜ் ரிமபர்ட்' (2003 ), 'எ டெரிபிள் மேற்றியார்கி' (2007 ) மற்றும் 'மாரி' (2010 ) இவை அனைத்து நூல்களுமே அதிக அளவில் பிறமொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டரின், தற்போது நோர்வேயில் வசித்து வருகிறார். 'பிட்டர் வோர்ம்வுட்' நூலை வெளியிட்ட ஜுபான் பதிப்பகம், பல பெண்ணிய சிந்தனையாளர்களை உருவாக்கிய பெருமையுடையது.

உவமைகளுடன் கற்றுத் தரப்படும் பாடங்கள் கற்போர் மனதைவிட்டு நீங்குவதில்லை. அதுபோல் நாகா விடுதலை போராட்டங்களின் நடுவில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை உவமையாக கொண்டு எழுதப்பட்ட இந்து புதினமும் படிப்போர் மனதில் ஆழமாக பதிகின்றது. வரும் தலைமுறையினருக்கு வரலாற்று நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் எடுத்து சொல்வதற்கான தேர்ந்த முறையாக இந்த புதினத்தை பார்க்கிறேன்.

1920 சைமன் கமிசன் காலத்திலிருந்து தீவிரமடைந்த நாகா விடுதலை போரின் பின்னணியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறையினரின் எண்ணங்களையும் அவர்தம் வாழ்க்கை இத்தகைய போராட்டங்களினால் எத்தகைய பாதிப்புக்குள்ளாகிறது என்பதனை எளிய வடிவில் கதையாக்கியுள்ளார் ஈஸ்டரின் கேர்.

முதலாம் தலைமுறையைச் சேர்ந்த 'க்ரின்யோ' தன் பேரன் 'மோஸ்' தன் பள்ளிக்கூடத்தில் கூறியதைப் போல், ஏசு தான் மெய்யான கடவுள் என்று சொன்னவுடன், எந்த ஒரு கேள்வியும் இல்லாமல், தன் பேரனின் மனம் நோகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, அதே ஏசுவை தனது கடவுளாக ஏற்றுக்கொள்வதும், மோசின் தாய் 'விள்ளவு' தன் மகன், நாகா இனத்திற்கெதிரான இந்திய அரசின் அடக்குமுறையை சகித்துக் கொள்ளமுடியாமல் போராட்டக்குழுவோடு சேர்ந்துவிட்டான் என்பதை நினைத்து மனதிற்குள் அஞ்சினாலும், விடுதலைப் போரின் கட்டாயம் கருதி அதை வெளிக்காட்டாமல் இருப்பதும், 'மோஸ்' போராட்டக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்களால் மனமுடைந்து, ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும், 'சுபனோ' மோசின் மகள் தனது படிப்பிலும் சிறந்தவளாக, தான் தொடங்கிய சிறு தொழில் மூலமாக சேமிப்பின் மீது அதிக அக்கறை உள்ளவளாக, அரசியலிலிருந்து தன்னை முற்றிலும் விடுபட்டவளாக தன் பள்ளித்தோழனை மனம்கொள்ளும் இல்லத்தரசியாக வாழ்வதும், 'நெபு' மோசின் பேரன், உயர் கல்விக்காக நியூ டெல்லி சென்று, அங்கு தற்கால இனபேத இந்தியா / இந்தியர்களாலும் பல கொடுமைகளுக்கு ஆளானபோதும், தன் இளம் வயதிற்குரிய வேகத்தினையும், கோபத்தினையும் கட்டுப்படுத்தி பொறுமையாக தன் தாத்தாவை (மோஸ்) சுட்டுக் கொன்றவர்களை - மறப்போம் மன்னிபோம் என்றும், பழிவாங்குவதால் காயம் குணமடயாது என்றும், நாம் நமது காயங்களை குணப்படுத்துவதுதான் நம் முதல் கடமை என்று சொல்லும்போதும், ஐந்து தலைமுறையினர் தங்கள் காலத்திற்கேற்ப எத்தகைய மனநிலை மாற்றங்களோடு வாழ்ந்துவந்தனர் என்பதை எழுத்தாளர் அருமையாக விவரிக்கிறார்.

1950களில் விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அன்றைய இளையோர்களின் அர்பணிப்புகளையும், தியாகங்களையும், அரசியல் தெளிவையும், இன்றைய விடுதலைப் போரட்ட குழுக்களின் உட்பகையில் சிக்குண்டு தன் இனத்திற்குள்ளே மோதிக்கொள்ளும் இளையோர்களின் போக்கினையும் ஒப்பிடும்போது, வாசிக்கும் நமக்கே விடுதலைப் போராட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைகிறது.

ஆங்கிலயர்களாலும், ஜப்பானியர்களாலும் இன்று இந்தியாவாலும் பெரிதும் பாதிப்புக்குள்ளான நாகா இனத்தில் பிறந்ததற்கான தன் கடமையை இனத்தின் மேன்மைக்கு உதவும் இந்த வரலாற்றுப் புதினத்தால் நிறைவு செய்திருக்கிறார் ஈஸ்டரின் கேர். வாழ்த்துக்கள்!!

இருப்பினும், இந்திரா காந்தி ஒரு முறை குறிப்பிட்டது போல் 'உலகில் கடைசி அடிமை விடுதலை அடையும் வரை விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.' காயங்களை குணப்படுத்துவது அவசியம் தான். அதே வேலையில் காயங்களை ஏற்படுத்தும் காரணிகளை விடுதலைப் போராட்டங்களினால் தான் களைய முடியும்.

Pin It