சிவகுமார் "என் கண்ணின் மணிகளுக்கு" என்கிற தலைப்பில் பேசிய உரை புத்தகமாக வந்துள்ளது. இதனை தற்போது வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.

2009-ஆகஸ்ட் 17 அன்று கோவை தியாகராயர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய இந்த உரை சில மாதங்களில் தீபாவளி அன்று விஜய் டிவியில் ஒளி பரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

புத்தக வடிவில் வாசிப்பதில் சில சௌகரியங்களும் சங்கடங்களும் உள்ளன. சில இடங்களை பொறுமையாய் மறுபடி மறுபடி வாசிக்க முடியும். இது நல்ல விஷயம். அதே நேரம் சிவகுமார் பேச்சின் ஸ்பெஷாலிட்டி அவர் சிறு துண்டு சீட்டு கூட இல்லாமல் முழு உரையையும் மனனம் செய்து, அருவி போல் பேசும் அழகை நாம் வியப்பது தான். அந்த அனுபவம் புத்தகத்தில் கிடைப்பதில்லை. மேலும் அவர் வரைந்த ஓவியங்கள், அவர் செய்து காட்டும் யோசாசன போஸ்கள் இவையும் புத்தகத்தில் மிஸ்ஸிங்.

துவக்கத்தில் தன் இளமை பருவம் பற்றி ஒளிவு மறைவின்றி கூறுகிறார். மின்சாரம் கழிப்பிட வசதி இரண்டும் இல்லாத ஊரில் பிறந்து வளர்ந்தது, படித்த விதம், குடும்ப சூழல் இப்படி நிறைய சொல்கிறார். மிக சாதாரண நிலையிலிருந்து முன்னேற நினைக்கும் எவருக்கும் இந்த பகுதி மிக பயனுள்ளதாய் இருக்கும். யோகாசனம் மிக இளம் வயதில் கற்றதையும் இன்று வரை அதை தொடர்வதையும் அது எப்படி தனக்கு உதவியது என்பதையும் விரிவாக சொல்வது நம் எத்தனை பேருக்கு உறைக்குமோ, நாமும் யோகசானம் கற்போமோ தெரியவில்லை.

ஆங்காங்கு கம்பராமாயணம், பாரதி பாடல்கள், கண்ணதாசன் வரிகள் இவற்றை மேற்கோள் காட்டுகிறார்.

1980 முதல் இன்று வரை பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு பரிசு தருவதை பற்றி கூறும் போது இப்படி சொல்கிறார்

"மாநிலத்தில் முதல் இடம் பெற்ற அஞ்சு பேருக்கு பரிசு என்பதில் 1983-வரை ஆண்டுக்கு ஒரு மாணவி இருந்தார்.
 
1989 ,1990 ல் 2 மாணவி 3 பையன் என ஆச்சு.

1997 ,1998 ல் 3 மாணவி 2 மாணவன்.

2000-க்குப்புறம் அஞ்சு பரிசும் பெரும்பாலும் மாணவிகள் தான் வாங்குறாங்க...

மாணவர்களே ! பாத்துக்குங்க. அவங்க பின்னாடி சுத்திட்டு நீங்க கோட்டை விட்டுடுவீங்க. ஆனா அவங்க படிச்சுடுவாங்க" என மாணவர்களுக்கு புரிகிற விதத்தில் சொல்வது சுவாரஸ்யம் !

இந்த புத்தகத்தில் சிவகுமார் சொன்ன இன்னும் சில சுவாரஸ்ய வரிகள் அவர் எழுத்திலேயே இதோ:

"நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு காதலிங்க. நானே சப்போர்ட் பண்றேன். ஆனா தோலை காதலிக்காதீர்கள். உள்ளத்தை காதலியுங்கள். தோல் எப்படியும் ஒரு நாளைக்கு சுருங்கும். சலிப்பு தட்டிடும்"

"உங்க அம்மா -அப்பாவுக்கு தெரியாம, அவங்களை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்காதீங்க. திரும்பி படுக்க முடியாம, பத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு உங்களை வயித்தில் சுமந்தவ அம்மா. உங்களை பிரசவிக்கும் போது மரணத்தின் வாயிலை தொட்டு பார்த்தவ. அந்த தாய்க்கு சொல்லாமல் செய்யாதீர்கள்"
 
"ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தணும். அவனை நம்பி ஒரு பெண் வந்த பிறகும் திருந்தலைன்னா உருப்படவே மாட்டான்"

"அந்நியர்கள் நம் நாட்டை 26 முறை படை எடுத்துள்ளனர். ஆனால் நாம் எந்த நாட்டையும் ஒரு முறை கூட படை எடுத்ததில்லை. இதிலேயே தெரியும் நம் நாடு எவ்வளவு சிறப்பான நாடு என".
 
"இந்தியாவில் 107 கோடி பேர் இருக்கோம். ஒருத்தர் முகம் மாதிரி இன்னொருவர் இருப்பதில்லை. டிவின்சுக்கு கூட சிறு வித்யாசம் இருக்கும் இயற்கையின் அதிசயம் இது தான்".

"ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெண் ஆதிக்கம் தான் இருந்தது. இயற்கையை எதிர்த்து போராடும் போது, புலியோடு சண்டை போடும் போது பெண்களை பின்னே தள்ளிட்டு வச்சிட்டான் ஆண்".

"காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க தான். கண்ணதாசன் சொல்வார்

அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது

அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம் தலை தூக்கி நிற்கிறது

பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு அவமானம் காத்து கொண்டிருக்கிறது !

*********

இந்த புத்தகம் மட்டுமல்லாது சிவகுமாரின் அனைத்து பேச்சுகளையும் மோசர்பேர் நிறுவனம் டீவிடீ-யாக கொண்டு வந்துள்ளது. சிவகுமார் குரலிலேயே கேட்க விரும்புவோர் இந்த டீவிடீ வாங்கலாம்!

புத்தக சந்தையில் இந்த புத்தகம் வாங்கியபோது நிறைய கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இதனை வாங்குவதை பார்த்து மகிழ்வாக இருந்தது.

இளைஞர்களுக்கு தேவையான விஷயத்தை, அவர்களுக்கு பிடித்த விதத்தில் சுவாரஸ்யமாக சொன்ன சிவகுமார் நிச்சயம் நம் பாராட்டுக்குரியவர்!
 
************

புத்தக பெயர்: " என் கண்ணின் மணிகளுக்கு"
ஆசிரியர் : சிவகுமார்
பதிப்பகம் : அல்லையன்ஸ்
பக்கங்கள் : 72
விலை Rs. 55

Pin It