பௌத்தத்தை தழுவிய மாமன்னன் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் சாலை ஓரங்களில் மரம் நட்டார் என்று வரலாற்றுப் பாடவேளையில் கற்றுகொடுக்கும் போது, அது ஒரு தமிழ்த் திரைப்படத்தில் காட்டப்பட்டது போல, நகைச்சுவை சார்ந்த நிகழ்வாகவே தற்போது வரையிலும் பார்க்கப்படுகிறது.

விஜய நகர பேரரசின் ஆட்சியின் போது ஒருநாள், மன்னர் கிருஷ்ண தேவராயருக்கும், விகடகவி தெனாலி ராமனுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, என்ன செய்தாலும் இனி என்னிடமிருந்து பரிசு பெறமாட்டாய் என மன்னர், ராமனிடம் கூறினார். சில நாட்கள் கழித்து மன்னர் வீதியில் உலா வரும்போது, ஒரு வயதான பெரியவர் சாலையின் ஓரத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தார். காரணம் கேட்டபோது மரம் நடுவதற்காக குழி தோண்டுவதாக பெரியவர் பதிலுரைத்தார். அதைக் கேட்ட மன்னர் அந்த பெரியவருக்கு பொற்கிழி வழங்கினார். மேலும், இவ்வளவு வயதான காலத்தில் மரம் நட்டால் அதன் பயனை தங்களால் அனுபவிக்க முடியுமா என வினவியதற்கு, பெரியவர் உருவிலிருந்த தெனாலி ராமன், இப்போது உள்ள மரங்களை நமது முன்னோர்கள்தான் வைத்தார்கள். அதன் பயனை நாம் அனுபவித்து வருகிறோம். அது போல நான் வைத்த இந்த மரம் அடுத்த தலைமுறைக்கு பயன்தரும் என்று கூறினார். இதைக் கேட்ட மன்னர் மேலும் ஒரு பொற்கிழி வழங்கினார். இப்படியாக சுற்றுச்சூழல் குறித்த கருத்தாக்கமே இல்லாத காலத்தில் மரம் நடுவதற்கு மன்னர்கள் ஊக்கமளித்தார்கள் என்பது வரலாறு.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இங்குள்ள இளையோர்களுக்கு கணிப்பொறி, செல்பேசி, மகிழுந்துகள், இரு சக்கர வாகனங்கள் போன்றவைகளின் பெயர்கள் அனைத்தும் விலாவாரியாகத் தெரிகிறது. ஆனால் பெரும்பாலானோர் இங்குள்ள மரங்கள், பூக்கள், பறவைகள், பூச்சியினங்களின் பெயர்களையும் அதன் பின்னணியையும் தெரிந்து வைத்திருக்கவில்லை.

தனிநபர்களின் பொருளாதார வசதிக்கான அனைத்தையும் தேடித்தேடி தெரிந்து கொள்கிறது இளைய தலைமுறை. ஆனால் பொதுநலன் சார்ந்த சுற்றுச்சூழல் போன்ற நிகழ்வுகளில் அவர்களின் ஈடுபாடு மிகவும் சொற்பமாகவே உள்ளது. சுற்றுச்சூழல் என்பது ஏதோ அறிவியல் பிரிவில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்தாக்கத்தை நமது கல்வி முறை தொடர்ந்து நமக்கு போதித்து வருகிறது.

இதற்கு விதிவிலக்காக, சுற்றுச்சூழல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட, அறிவியல் துறையைச் சாராத, தி.இலஜபதி ராய் மற்றும் கா.பிரபு ராஜதுரை ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள், ‘மதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும்’ என்ற புத்தகத்தை படைத்திருக்கிறார்கள். மதுரை உயர்நீதிமன்ற வளாகமானது 107 ஏக்கர் பரப்பளவிலான கண்மாயில் கட்டப்பட்டு, கடந்த 2004ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. அந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 75 வகையான மரங்கள், 61 வகையான பூக்கள், 30 வகையான பறவைகள், 25 வகையான பூச்சியினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. 19 நூல்களின் துணையுடன், ஒவ்வொரு மரம் குறித்தும் அதன் பெயர் மற்றும் பின்னணி குறித்த குறிப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 50 முழு பக்க நிழற்படங்களுடன், 418 வண்ண நிழற்படங்கள் இடம்பெற்றுள்ளன.

பதிவு செய்யப்பட்டுள்ள மரங்களில் பெரும்பாலானவைகள் வெளிநாடுகளை தாயகமாகக் கொண்ட மரங்களாகும். இவைகள் வேகமாக வளர்ந்து அதி வேகத்தில் அழிந்து போகக் கூடியவைகள். இவைகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவு என்பது கவனிக்கத்தக்கது. நம் மண்ணின் பூர்வீக மரங்களான வேம்பு, ஆலமரம் போன்ற மரங்கள் பொதுவாக நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியவைகள். இவைகளை கண்ணுறும்போது, கடமைக்காகவும் கண்துடைப்பிற்காகவுமே இது போன்ற அயல் நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளன என்பது நன்கு புலனாகிறது.

மழை காலத்தில் வெயில், வெயில் காலத்தில் குளிர், குளிர் களத்தில் மழை என உலகம் முழுவதும் பருவ நிலை கடுமையாக மாற்றம் அடைந்து வருகிறது. ஓசோன் வளிப்படத்தில் ஓட்டை, புவி வெப்பமடைதல், காற்று, நீர், நிலம் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு மாற்றாக உலக நாடுகளால் முன் வைக்கப்படும் மாற்று யோசனைகளில் முதன்மையானது மரம் வளர்த்தல் ஆகும்.

நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்படும்போது, 1 மரம் அகற்றினால், அதற்கு ஈடாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்பது நடுவண் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவுகளில் ஒன்று. ஆனால் நம் நாட்டில் ஆட்சியாளர்களால் மரம் வளர்த்தலில் உள்ள அவசியம் குறித்து போதிய அளவுக்கு உணரப்படாத சூழலே நிலவுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஏற்கனவே அளிக்கப்பட ஒரு கண்மாயில் உருவாக்கப்பட்டுள்ள பசுமைக் குடில் குறித்த பொது நலன் சார்ந்த இந்தப் பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதித்துறை பதிவு செய்திருக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு செயல் இது.

இப்படியாக பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியுள்ள 312 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் என்னென்ன மரம், செடி, பூ, பறவை, உள்ளடங்கியுள்ளன, அவைகள் இடம் பெற்றுள்ள பக்கங்கள் போன்றவைகளை உள்ளடக்கிய பொருளடக்கம் சேர்க்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களும் அவரவரது பணியிடங்களில், இது போன்று சுற்றுச்சூழலை ஏதோவொரு வடிவத்தில் பதிவு செய்து வெளியிட்டால், நமது வாழ்வு மட்டுமின்றி, நமது அடுத்த தலைமுறையினரின் வாழ்வும் சிறக்க வழிகோலும்.

நூல் விலை ரூபாய். 300/- தொடர்புக்கு: 98654 96521

Pin It