இந்த வாலிபன் என் நெஞ்சத்தை முழுமையாக வசீகரித்தவன். திராவிட இயக்கக் குடும்பத்துப் பிள்ளை. அறிவாசான் தந்தை பெரியார் வழியில் கலப்புத் திருமணம்  செய்துகொண்ட பெற்றோர் ஈன்றெடுத்த செல்வம்.

arunagiriஅறிஞர் அண்ணா அவர்கள் இயக்கத்தை 1949 இல் தொடங்கிய உடன், சங்கரன்கோவில் நகரில் அதற்குக் கால்கோள் விழா நடத்திய அண்ணன் அ.பழநிசாமி பி.காம். அவர்களின் அருமைப்புதல்வர்தான் அருணகிரி.

மாசிடோனியாவின் வீரச்சிறுவன் அலெக்சாண்டருக்கு, பாலபருவத்திலேயே உலகத்தை வெல்ல வேண்டும் என்ற வேட்கை எழுந்ததுபோல, மிகச்சின்ன வயதிலேயே அருணகிரிக்குத் தொலைதூர இடங்களுக்குப் பயணிக்கவும், தூரதூர தேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் அதன் மீதான கனவுகளும் வளர்ந்தன.

“விளையும் பயிர் முளையிலேயே” என்பார்கள். பள்ளி மாணவனாக, படிக்கும்போதே பன்முக ஆற்றலை வளர்த்துக்கொண்டு கல்லூரிப் பருவத்தில் ஒரு ‘தசாவதானி’ ஆகிவிட்டார். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைதான் பூடானுக்கும், நேபாளத்துக்கும் அவரை பயணிக்க வைத்தது. தமிழிலும், ஆங்கிலத்திலும் தட்டச்சு வல்லமை பெற்று, இந்தியிலும், வங்கமொழியிலும் பேசும் திறனும் அமைந்தது. இவருக்குள் புதைந்து கிடக்கும் அபரிமிதமான ஆற்றல் கண்டு பலகட்டங்களில் திகைத்து, மலைத்து வியந்து இருக்கின்றேன்.

ஒழுக்கம் இவரது உடன்பிறந்த கவசம். இரத்தத்தில் விரவி உள்ள சிவப்பினைப் போல் நாணயமும், நேர்மையும் இந்த இலட்சிய வாலிபனின் இருவிழிகள். நன்றி உணர்வே அவரது உதிரம். இயற்கை எனக்கு வழங்கிய கொடைகளுள் ஒன்றுதான், இந்தத் தம்பியின் பெருந்துணை!

இவர் ஒரு தொலைநோக்குப் படைப்பாளி. இவரது எழுத்து ஆற்றல் நந்தமிழ்நாட்டுக்கு வெகுபயன் வழங்கும். அவரது “உலகம் சுற்றும் வாலிபன்” நூல், வாசகர்களைக் காந்தமென ஈர்க்கும் என்பதை இந்நூலை படிக்கும்போதே உணரலாம்.

திகட்டாத தேனாக பயணச் செய்திகள் தரப்பட்டு உள்ளது. பூடான், நேபாளம், அமெரிக்கா, இங்கிலாந்து, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பார்த்தவற்றை, கேட்டு அறிந்தவற்றைப் பட்டியல் இட்டு உள்ளார். பூடானின் இயற்கை எழில், மக்கள் வாழும் முறை, மன்னர் திருமண முறை, அங்கு நிலவும் பண்டமாற்று வணிகமுறை, அமெரிக்காவின் அல்-கேட்ர° தீவுச் சிறை, ஐரோப்பாவில் யானைகள் இல்லை என்ற செய்தி, நியூ யார்க் நகரில்  பிச்சைக்காரர்கள் கூட சுற்றுலாப் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதை முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்து அந்த நாட்டு தேசியகீதத்தை இசைத்து பிச்சை கேட்கும் மதி நுட்பம், அமெரிக்க நாட்டில் வாகனங்கள் வலதுபுறமாகவே இயக்கப்படுகின்றது போன்ற பல செய்திகள் நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது.

கணினியை இயக்குவதில் தேர்ச்சி பெற்றுத் திகழும் அருணகிரி, அங்கு உள்ள வீடுகளில் குளிர்பதன சாதனத்தின் இயக்கம், ஒரு வீட்டுக்கு முகவரி கண்டுபிடித்துச் செல்வது உட்பட அனைத்துமே கணினிமயமாக்கப்பட்டு விட்டதை மேற்கோள்களுடன் விளக்குகின்றார். அடுத்த வீட்டு வெள்ளைக்காரர்களின் குழந்தைகள் வீதியில் விளையாடிக் கொண்டு இருந்தால், ஆசையோடு அந்தக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சிவிட முடியாது. காரணம் குழந்தைகள் விளையாடுவதை, பெற்றோர்கள் வீட்டுக்குள் இருந்தே கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள். கருப்பர் ஒருவர் குழந்தையைத் தூக்குகிறார் என்று கருதி போலீஸை அழைத்து விடுவார்கள் என்று குறிப்பிடுவதில் இருந்து அங்கு தலைவிரித்து ஆடுகின்ற நிறக்கொடுமையையும், நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் 10 வயதுக் குழந்தை, ஓராண்டில் 17 ஆயிரம் துப்பாக்கிச் சூட்டினைப் பார்க்கின்றது என்ற கருத்துக் கணிப்புத் தகவலின் மூலம் அந்த நாட்டில் பெருகிவரும் தீவிரவாதச் செயல்களையும் இந்நூல் நமக்கு உணர்த்துகின்றது.

இலண்டன் மாநகரில் ஓடும் இரயில்களில் ஓட்டுனர்களே இல்லை என்பதும், டிக்கெட் எடுப்பது உட்பட அனைத்துமே கணினிகளின் உதவியுடன் ‘தானியங்கி’ செய்யப்பட்டு உள்ள செய்தியும், நூலில் இடம் பெற்று உள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுதில்லி, மும்பாய், கேரளா பகுதிகளை உள்ளது உள்ளவாறு நம்முன்னே படம் பிடித்துக் காட்டி உள்ளார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகை போலவோ, இங்கிலாந்து பிரதமரின் 10, டௌனிங்தெரு இல்லம் போலவோ, இந்தியப் பிரதமருக்கு அதிகாரபூர்வ இல்லம் இல்லை என்பதையும், ஐநூறு ரூபாய் தாளில் தென்படும் தேசத் தலைவர்களின் படம் டெல்லியில் சிலையாக உள்ளது என்ற செய்தியையும், மும்பையில் தமிழர்கள் வசிப்பிடச் சான்றிதழ் பெறுவதற்காகப் படுகின்ற துயரங்களையும் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.

இரயில் பயணத்தின்போது ஒரு பீகார் மாநிலத்துக்காரரிடம் அரசியல் பேசிக் கொண்டு வந்தபோது, அந்தப் பயணி “சமோசாவில் உருளைக்கிழங்கு இருப்பதுபோல பீகாரில் லாலு இருக்கின்றார்’ என்று இந்தியில் சொன்னதை இங்கு சுவைபடத் தந்து உள்ளார்.

“கண்டிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்து இங்குச் சேர்ப்பீர்”

என்ற பாரதியின்  கனவு மெய்ப்படும் வகையில், மேலை நாடுகளின் கலை, இலக்கியம், அரசியல் பண்பாட்டுப் பதிவு குறித்து அரிய செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் இவரது பணி பாராட்டுக்கு உரியது.

அருணகிரி அவர்களின் எழுத்துப்பணி
மேலும் பல பயன்தரும் நூல்களை வழங்கட்டும்!
அவரது பணி வளர்க!
நலம் வளர்க - புகழ் பெறுக!

 - வைகோ,     பொதுச் செயலாளர்,  மறுமலர்ச்சி தி. மு.க.

****

அருணகிரியின் எழுதுகோல், தமிழ் இனத்தை அசைத்து இருக்கின்றது!

- காசி ஆனந்தன்

அருணகிரி சிறுவனாய் இருந்தபோதே அவர் நெஞ்சில் பயணவேட்கை அரும்பிற்று.

‘°டேன்ட் போட்டு நிறுத்தப்பட்ட சைக்கிளில் பெடலை வேகமாகச்சுற்றி - ‘திருநெல்வேலி வந்துவிட்டது - மதுரை வந்து விட்டது’ என்று விளையாடுவேன்’ என்கிறார் அருணகிரி.

இப்படித்தான் ஒரு சிறுகதை எழுத்தாளனின் பார்வையோடும் - வீச்சோடும் அருணகிரியின் பயண இலக்கியம் தொடங்குகின்றது. அவர் பயணம்போன நாடுகளுக்கு எல்லாம் கைவிரல் பற்றி நம்மையும் அழைத்துச் செல்கின்றார்.

பலநாடுகளில் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நடத்தி வெளிவந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அருணகிரியின் பயணத் துடிப்புக்கு வித்து ஊன்றி இருக்கிறது. நூலில் பல இடங்களில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’  திரைப்படம் பற்றி அவர் குறிப்பிடுகின்றார். தன் பயண இலக்கியத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்றே தலைப்பும் சூட்டி இருக்கிறார் அருணகிரி.

வெறும் காட்சிகளாய் அல்ல வியப்பு ஊட்டும் செய்திகளாய் - தமிழ் இனத்துக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிப் பதிவுகளாய் - வெளிச்சம் பாய்ச்சுகின்றது அருணகிரியின் தமிழ்.

எழில் கொஞ்சும் பூட்டான் பற்றி இப்படி எழுதுகின்றார்:

‘பூட்டானில் மழைக்காலத்தில் ஒரு நிமிட இடைவெளிகூட இல்லாமல் மழை பொழியும். என்னுடைய மாமாவின் அலுவலகத்தில் மழைமானி உண்டு. ஒரு மாதத்தில் 1200 மி.மீ. மழை பதிவாகி இருக்கின்றது என்று இயல்பாகச் சொல்லுவார். அது நம் ஊரில் ஐந்து ஆண்டுகள் பெய்யக்கூடிய மழைக்குச் சமம்.’ மழை என்றைக்குப் பெய்யத் தொடங்கியது?’ என்று ஒருவர் கேட்டால், ‘போன திங்கள் கிழமை பெய்யத் தொடங்கியது’ என்று மற்றெருவர் பதில் சொல்லுவார். இடையில் ஒருசில மணித்துளிகள்கூட நிற்காமல் மழை பெய்யும்’ என்கிறார் அருணகிரி.

‘பங்களாதேஷ்’ பற்றிய செய்திகளை எழுதும்போது அருணகிரி அந்த மண்ணைப்பற்றிப் பதிவு செய்து இருக்கும் செய்தி இது.

 ‘பங்களாதேஷ்’ என்ற நாட்டிலும், இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலும் சேர்த்து உலகில் மொத்தம் 30 கோடிப்பேர் வங்க மொழி பேசுகின்றார்கள். தமிழர்களாகிய நமக்கும் வங்காளிகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்தியாவில் நோபல் பரிசு பெற்றவர்கள் தமிழரும், வங்காளியரும் மட்டுமே! தமிழ்நாட்டில் சர்.சி.வி. இராமன், சந்திரசேகர் ஆகியோரும் வங்கத்தில் ரவீந்திரநாத் தாகூர், அமர்த்தியா சென் ஆகியோரும் நோபல் பரிசு பெற்று இருக்கின்றார்கள் என்கிறார்.

தில்லியில் அருணகிரி சுற்றித் திரிந்த காலம் நீளமானது. சுவையான ஒரு நிகழ்ச்சியைத் ‘தில்லி’ப் பயணம் பற்றி எழுதும்போது அவர் குறிப்பிடுகின்றார்:

‘தில்லியில் வைகோ அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது  மீனாபாக் பகுதியில் இரண்டாம் எண்  வீட்டில் தங்கி இருந்தார்கள். நான் அங்கேதான் இருந்தேன். அங்கே இருந்த வாழை மரத்தில் இலைகள் ஒவ்வொன்றும் சுமார் பத்து அடி நீளம் வளரும். எனவே நண்பர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால், அந்த இலையைத் தரையில் விரித்து, ஒரே இலையில் நான்கு பேர் சாப்பிடுவோம்’ என்கிறார்.

தில்லியில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். தில்லித் தமிழ்ச் சங்கம் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. தில்லித் தமிழ்க் கழகம் ஏழு பள்ளிகளை நடத்துகின்றது.

இது தில்லித் தமிழன் குறித்த அருணகிரியின் இறுமாப்பு.

அறிவின் உச்சத்தில் அமெரிக்கா இருப்பதாகச் சொல்கின்றார்கள். ஆனால் அருணகிரி, தன் அமெரிக்கப் பயணம் குறித்துச்சொல்லும் கருத்து வேறாக இருக்கின்றது.

‘நியூ யார்க் நகரில்- ஹோட்டல் சான் கார்லோசில் 14 ஆவது மாடிக்குப் போகும்போது 12 ஆவது மாடியைத் தாண்டியதும் 14 ஆவது மாடி வந்து விட்டது. 13 ஆவது மாடி வரவில்லை. உடன் வந்த நண்பர்களிடம் இதைப்பற்றி விசாரித்தேன். அதற்கு அவர்கள், ‘விண்வெளிக்குச் சென்று வந்தாலும் அமெரிக்கர்களிடமும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. பொதுவாகவே அமெரிக்கர்கள் 13 என்ற எண்ணை வெறுக்கின்றார்கள்’ என்றனராம்.

அருணகிரியின் பயண இலக்கியத்தில் அமெரிக்கா பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன.

சிலநாட்கள் இங்கிலாந்தில் தங்கி இருந்த அருணகிரியின் ஒரு பயணக்குறிப்பு நம்மைச் சிலிர்க்க வைக்கின்றது.

லண்டன் நகர ரயில்களில் ஓட்டுநர்கள் இல்லை. கணினிகளில் திட்டமிடப்பட்டு, தானியங்கிப் பொறிகளின் துணையுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்கிறார் அவர்.

அழகிய தங்கச் சிலையாய் நின்று ‘தகதக’ க்கும் புத்தர் சிலையில் மயங்கும் அருணகிரியைத் தாய்லாந்தில் பார்க்கின்றோம்.

மலேசியாவில் ஒரு மிகப் பழைய சாலை - ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பயண இலக்கியரின் மனத்தைத் தொடுகின்றது.

சென்னையில் நாம் ‘அண்ணா சாலை’ என்று அழைப்பதை மலேசியாவில் ‘சாலைஅண்ணா’ என்று அழைக்கின்றார்கள். மலாய் மொழியில் ‘ஜலான்’ என்றால் ‘சாலை’ என்று பொருள். கோலாலம்பூரின் மையமான பகுதியில் அமைந்து உள்ள சாலைக்கு ‘ஜலான் ராஜ சுலான்’ என்று பெயர். ராஜராஜ சோழன் பெயரைத்தான் வைத்து இருக்கின்றார்கள் என்கிறார் அருணகிரி.

உலகைச் சுற்றி வலம்வரும் ஒரு பச்சைத் தமிழரின் பயணமாகவே அருணகிரியின் உலா நிகழ்கின்றது.

பூட்டான் பற்றி எழுதும்போது, அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் - இலங்கை அரசுக்கும் தமிழ் ஈழப் போராளிகளுக்கும் இடையே, பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற சந்திப்பும் பேச்சும் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

அமெரிக்காவில் - நியூயோர்க் நகரில் உலகநாடுகள் மன்றத்தின் (ரு.சூ.) முன்னால் நின்று அவர் விம்முகிறார்:

‘உ.நா.மன்றத்தில் இதுவரை யாரும் தமிழில் பேசியது இல்லை. எம்.எ°.சுப்புலட்சுமி தமிழில் ஒரு பாட்டு பாடி இருக்கின்றார். உ.நா.மன்றத்தில்  தமிழில் பேசவேண்டும்  என்று வைகோ விரும்பினார். இந்தியத் தூதரைச் சந்தித்துத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று இரண்டு நாட்கள் கழித்துப் பதில் வந்தது. தமிழில் பேச முடியாவிட்டாலும், உ.நா.மன்றத்துக்கு முன்னால் உள்ள கொடிமரங்களில் தமிழருக்கு என்று ஒரு கொடி பறக்கவேண்டும் என்பதே வைகோ அவர்களின் விருப்பம். அவரது விருப்பம் மட்டும் அல்ல; தமிழர்கள் அனைவரின் விருப்பமும் அதுவே.

மலேசியாவில் ஈழத்தமிழன் ஆனந்தகிருஷ்ணன் கட்டி எழுப்பி உள்ள 1400 அடி உயரம் கொண்ட 88 மாடிக்கட்டிடம் கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும் அருணகிரியைப் பார்க்கின்றோம்.

தமிழன் கடலோடி வாழ்வை மறந்துவிட்டானே என்னும் கவலை, லங்காவித் தீவில் இருந்து குவால கெடா துறைமுக நகருக்குப் பயணம்போகும் வழியில் - நடுக்கடலில் - அருணகிரியை வாட்டிப் பிழிகின்றது.

1000 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கடல் இருந்தும் - கடல் பயணங்கள் தமிழர்களுக்கு வாய்க்காத கொடுமையை என்னவென்று சொல்வது? கடலில் மரக்கலம் செலுத்திய தமிழன் இன்று கரையிலேயே நின்றுகொண்டு இருக்கின்றான். சென்னையில் இருந்து தமிழகத்தின் கடலோர நகரங்களுக்குப் பயணிகள் கப்பலில் போவது எப்போது? என்று குமுறுகின்றார் அருணகிரி.

சிங்கப்பூர் தமிழர்கள் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை மாலையில் ‘கடற்கரைச் சாலைக் கவிமாலை’ என்ற நிகழ்ச்சியை நடத்தித் தமிழ்வளர்ப்பது அருணகிரியைச் சிலிர்க்கச் செய்கிறது. அருணகிரி தமிழனாகவே அனைத்து நாடுகளையும் வலம் வருகின்றார்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ பயண இலக்கியத்தின் முடிவில் - அருணகிரி ‘ தமிழ் வளர - தமிழர் உயர்நிலை பெற’ என்னும் தலைப்பில் வைத்து உள்ள கருத்துக்கள் தமிழ் இனத்துக்கு உயிரூட்டுவன, உணர்வூட்டுவன, உரமூட்டுவன.

எல்லோரும் எழுத்தாளர்களே. தமிழர்கள் தங்கள் வாழ்க்கையில் கிடைத்த படிப்பினைகளை நூலாக எழுதிவெளியிட வேண்டும்’ என்கிறார் அருணகிரி.

ஒவ்வொரு தமிழரும் பத்துப் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பது அவர் வைக்கும் ஒரு கோரிக்கை.

தமிழில் வடமொழிச் சொற்கள் - ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்.

அறிவியல் - மருத்துவம் - விண்வெளி இயல் நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும் - இது அவர் விருப்பு.

தமிழ் இளைஞர்கள் அயல்நாடுகளில் பொருள் சேர்த்தபின்பு சொந்தமாகத் தொழில் நிறுவனங்களைத் தொடங்கி முதலாளிகள் ஆகவேண்டும். கடைசி வரையிலும் பிறரிடம் வேலை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. அயல் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் இடையே வணிகத் தொடர்புகள் உருவாக வேண்டும்’ இவையெல்லாம் அருணகிரியின் இனஉணர்வு அவா.

‘உலகம் சுற்றும் வாலிபனை’ எழுதியதின் மூலம் அருணகிரி ஓர் உருப்படியான எழுத்துப்பயணத்தை நிகழ்த்தி இருக்கின்றார்.

அருணகிரியின் எழுதுகோல் தமிழ் இனத்தை அசைத்து இருக்கின்றது.

நிமிர்ந்த தமிழர் வாழ்வினைத் தேடியே அவர் உலக உலா நிகழ்ந்து இருக்கின்றது.

அருணகிரியின் மகிழ்ச்சியாக அல்ல - தமிழ்மண்ணின் வளர்ச்சியாக அவர் பயணம் விளைந்து இருக்கின்றது.
வாழ்த்துகிறேன்!

பயணம் போன அவர் காலையும், அதை இலக்கியமாய்ப் படைத்த எழுதுகோலையும்!

- காசி ஆனந்தன்

****

உலகம் சுற்றும் வாலிபன்

விலை ரூ.150
புத்தகத்தைப் பெற தொடர்பு கொள்க: அருணகிரி (+91-9444393903, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It