புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

Muhangalவிஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தை திறந்திருக்கிறார்.

ஓராண்டுகால பதிப்பகத்துறை அனுபவம்,
மூன்றாண்டுகால எழுத்துத்துறை அனுபவம்,
இருபத்து மூன்றாண்டுகால புலம்பெயர்வாழ்வு அனுபவம்.

இந்த மூன்றும் எனக்குத் தந்த தைரியமும், என் முகம் தெரியாமலேயே என்னை ஆதரித்த என் எழுத்தாள நண்பர்கள் தந்த ஆதரவும் தான் இந்த தொகுப்பு உங்கள் கையில் தவழ காரணமாய் அமைகிறது.

இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்பட அநேக எழுத்தாளர்கள் இலங்கை மக்களிடமிருந்தும், இலங்கை இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் அந்நியப்படுவது பற்றி என்றுமே எனக்கு மனவருத்தம் உண்டு. ... இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது ராமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடலில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் தான். தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பிள்ளை எவ்வாறு பெற்றோருக்கு பிறத்தியாகுமோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய்ப் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய ஒரு மாத்திரைதான் என்கிறார் திரு. வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளை தொகுத்து கனதியான புத்தகமாக ஆக்கியிருக்கும் அவரது முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பிட்ட நாட்டில் வதியும் படைப்பாளிகளின் படைப்புக்கள் சேர்த்து அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு பல நாடுகளிலும் வதியும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒன்றுதிரட்டி இந்தப் புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார் திரு வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

முதல் சிறுகதையான முதிர்பனைகளை நியூசிலாந்தைச் சேர்ந்த அகில் எழுதியிருக்கிறார். மூன்று புதல்வர்களின் திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்துபோகிறார் அம்மா பார்வதி. அதற்கான காரணங்களை மூன்று மகன்மாரும் சொல்வதாக இக்கதை அமைந்திருக்கிறது.

முதல் மகன் சேர்ஜன் சிவரூபன். தான் காதலித்த நிர்மலா என்ற பெண்ணை பெற்றோர்கள் விரும்பாத காரணத்தால் சிவரூபனால் திருமணம் முடிக்க இயலாமல் போகிறது. தற்போது அவருக்கு நாற்பத்தைந்து வயதாகியும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். இரண்டாவது மகன் சிவநேசன். 39 வயது. கப்பலின் தலையாய எஞ்சினியர். கப்பல் எந்த நாட்டின் கரையில் நங்கூரமிடுகிறதோ அங்கே சிவநேசன் புது மாப்பிள்ளை ஆகிவிடுவார். மரணத்தின் கதவுகளைத் தட்டும் பாலியல் நோயைக் கொண்டவர். ஆதலால் மனசாட்சி விழித்ததன் நிமித்தம் திருமணத்தை இரத்து செய்து விடுகின்றார். மூன்றாவது மகன் சிவச்செல்வன். போர் விமானத்தின் விமானியோட்டி. யுத்தங்களைப் பாரத்த அதிர்ச்சியில் மனநல மருத்துவரைத் தேடிப்போக அவர் சில மருந்துகள் கொடுக்கின்றார். அவை ஒருவரின் ஆண்மையை இழக்கப்பண்ணி விடுகிறது. சிவச்செல்வனும் இந்த பாதிப்புக்கு உள்ளானதால் இவரும் மணமுடிக்காமலேயே இருந்துவிடுகிறார். ஆக மொத்தத்தில் பிள்ளைகளில் ஒருவருடைய திருமணத்தையாவது தாய் பார்க்கவில்லை. அருமையான கதையாடலைக்கொண்டது இந்த சிறுகதை.

அம்மா அம்மா தான் என்ற கதையை யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுதியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வருகிறாள் மகள் மதுரா. மதுரா உட்பட அவளின் மகளும் நாகரீகத்திற்கேற்ப ஆடை அணிபவர்கள். ஒருமுறை மதுராவின் பெரியம்மாவின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாணியில் ஆடைகளை அணிவதைக் கண்டு அம்மம்மா திட்டிவிடுகிறாள். அதே போன்று தனது மகளை தனது அம்மா திட்டி விடுவாரோ என்று பயப்படுகின்றாள் மதுரா.

ஆனால் என்ன ஆச்சரியம். அக்கம்பக்க வீட்டு பிள்ளைகளுக்கு அம்மா இப்படிச் சொல்வதைக் கண்டு ஆனந்தமடைகிறாள் மதுரா.

"என்ர பேரப்பிள்ளையளைப் பாத்தியளே! என்ன ஸ்ரையிலாய் ஸ்மாட்டாய் இருக்கினம். நீங்களும் அந்த மாதிரி இருக்க பழகுங்கோ. அவையளைப் போல உடுத்து, அவையளைப் போல பேசி..''

பிரான்சிலிருந்து ஜோதிலிங்கம் எழுதிய  "லா சப்பல்" என்ற கதை அளவுக்கு மீறி நாகரீகத்தில் திளைத்து இறுதியில் உயிரை இழந்த யுவதியைப் பற்றியது. பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மாணவ மாணவிகள், விரிவுரையாhளர்கள் இணைந்து ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கழுத்தடி பட்டினை பூட்டாமல் வெளிக்கிட்ட மகளை தடுத்து நிறுத்தும் பரிமளம் அதை பூட்டச்சொல்லி அதட்டுகிறாள். அதற்கு சிவரஞ்சனியோ "அது ரை கட்டினால்தான் பூட்டிறது அம்மா. ஆக்கள் பாத்தால் சிரிப்பினம்" எனகிறாள்.

"அது சிரித்தால் சிரிக்கட்டும். நீ வடிவாய் பூட்டு. குமருகளுக்கு ஏதும் நடந்து முடிஞ்சாப் பிறகு ஊர் உலகம் சிரிக்கிறதுக்கு முதல் இது பரவாயில்லை" என்கிறாள் அம்மா பரிமளம்.

அம்மாவின் வழமையான சுப்பிரபாதத்தை காதில் வாங்காமல் புறப்படும் சிவரஞ்சனி புகையிரத நிலையத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்து அநாகரீகமான ஆடை, உதட்டில் கறுப்பு மை பூசி வித்தியாசமான போக்கில் தனது நண்பிகளுடன் இணைந்து பயணிக்கிறாள்.

மாலையில் ஆபிஸ் முடிந்தவுடன் லா சப்பலுக்குப் போய் மரக்கறி வேண்டி அப்படியே கோயிலுக்கும் போய் மகளையும் காரில் அழைத்து வரலாம் என்று கணவர் பாக்கியநாதன் மனைவியை ஆறுதல் படுத்துகிறார். ஏனெனில் பரிமளம் சதாவும் சிவரஞ்சனியின் போக்கு பற்றி அங்கலாய்ப்பதே இதற்கான காரணம். மாலையில் சிவரஞ்சனியின் மொபைலுக்கு கோல் பண்ண ரிங் போய்க்கொண்டு இருக்கிறதே ஒழிய சிவரஞ்சனியின் பேச்சு வரவில்லை. பாக்கியநாதனுக்கும் அடிவயிற்றில் பற்றுகிறது.

லா சப்பல் வீதிக்கு இருவரும் வருகிறார்கள். வீதி பரபரப்பாக இருக்கிறது. "யாரோ ஒரு பெண்பிள்ளை ரொயிலட்டில் கொலை செய்யப்பட்டிருக்கிறாளாம். ரேப் கேஸாம்" என்று சனம் கதைக்கிறது  என்ற செய்தியோடு பாக்கியநாதனுக்கு பொலிஸாரிமிருந்து கோல் வருகிறது. பாக்கியநாதனின் முகம் மாறுவதைக்கண்டு பரிமளமும் கலவரமடைகிறாள். சிவரஞ்சனி பிணமாக குப்புறக்கிடக்கிறாள். அவளது மார்பிலும் தோளிலும் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. தொப்புளில் வளையம் தொங்குகிறது. கலாச்சாரம் து(ம)றந்து அநாச்சாரங்களில் மூழ்கிப் போனால் யாவருக்கும் இதே நிலைமை தான் என இக்கதை அருமையாக சுட்டி நிற்கிறது.

இந்தத் தொகுப்பில் நியூசிலாந்து, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவீடன், பெர்லின், சுவிற்ஸ்லாந்து, பிரான்சு, ஹொலன்ட், இந்தியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றமை கூடுதல் சிறப்பு எனலாம்.

இவ்வாறானதொரு மகத்தான பணியைச் செய்திருக்கும் தொகுப்பாசிரியர் வீ. ஜீவகுமாரனின் இலக்கிய பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முகங்கள் (சிறுகதைகள்)
தொகுப்பாசிரியர் - வீ. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கிய பாலம்
தொடர்புகளுக்கு - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It