சமகாலத்தில் கவிதைத் தொகுதிகளின் வரவு இலக்கியத்துறையில் அதிகமாய் அணிசேர்த்து தமிழ்ச் சுவை செழுமையுடன் இலக்கிய தாகத்துக்கு அமிர்தமாகின்றது. அந்த வகையில் இடி விழுந்த வம்மி| என்ற கவிதைத் தொகுதியின் வருகை சிறப்பாக அமைகின்றது. இந்த நூலின் ஆசிரியர் கல்முனை அபார் அவர்கள். இவர் பிரபலக் கவிஞர் சோலைக்கிளி அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கவிதைத் தொகுதி அபாரின் கன்னித் தொகுதியாக, ஒரு உயிரின் வெளியீடாக 48 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.
 
afar_380தொலைந்து போன கிராமம், திருடப்பட்ட இரவு, தலையெழுத்து மாறிய ஊர், சந்தையை சுமந்து வந்த பைத்தியம், என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, என்னுள் நானில்லை, பூமியை விட்டுப் பயணம், கட்டில் காதலி, மனதைச் சப்பிய மாடு, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட  சூரியன், கவிதை பேசிய இரவு, சுவைக்காத சுதந்திரம், நன்றியுடன் நான், துளிர் - காய் - பழு, ஒரு மூடைப் பயம், காறித் துப்பிய ஜுலை, மலட்டு வானம், காகக் கூடு, குட்டு வாங்கும் நகரம், எனது மயானம், சப்பாத்துக் கால் இரவு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கவிதைத் தொகுதியில் பெரும்பாலான கவிதைகள் உருவக, உருவகித்தல்களை வெளிப்படுத்துவனவாக நிரம்பிக் காணப்படுகின்றன.
 
''இடக்கரடக்கல் அற்ற பச்சையான பிரதேச வழக்குகளினதும், கிராமத்தவர்களின் உருவக உருவகிப்பு பேச்சுமுறையினதும் வெளிப்போந்தலாக 1989களின் பிற்பகுதியில் கல்முனைப் பிரதேசத்தில் உருவான கவிதைச் சூழலைச் சுவீகரித்து 1990களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்தான் அபார். ... அவரின் கவிதைகள் தனக்குரிய முறையில் தாளிதமாகி, சுதாகரித்து புதிய பரிமாணங்களைத் தொட்டது. அதன் விம்பங்களை அபாரின் இந்த இடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதியில் பார்க்கக் காணலாம். முதல் வாசிப்பில் இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகள் எல்லாமே ஒன்று போலத் தோன்றக்கூடும். மரத்தில் தாவும் குரங்குகள் எல்லாம் ஒரே மாதிரி தெரிவதுபோல -  இந்தக் கவிதைப் போக்கின் பாணியில் சொன்னால் இதற்குக் காரணம் இந்தக் கவிதைகளின் இடைவிடாத உருவக, உருவகிப்புத் தன்மையே.'' என்று அபாரின் கவிதைகள் பற்றி திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் குறிப்பிடுகின்றார்.
 
இனம். மதம், மொழி, என்ற வகையில் பிரிந்து போகும் மனிதன் இயற்கையில் ஒன்றிணைந்துகொள்கிறான்.  இயற்கையை பாடுபொருளாகக்கொண்டவற்றில் எவருமே கட்டுண்டுப்போகின்றார்கள். இந்த வகையில் அபாரின் இயற்கை ரசிப்புக்கு உட்பட்ட கவிதைகளாக என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட சூரியன், மலட்டு வானம், காகக் கூடு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய கவிதைகளைக் குறிப்பிடலாம்.
 
என்னுள் நானில்லை (பக்கம் 12) என்ற கவிதையில்
 
என் கண்ணைக் கொத்திக் குடிக்க
அரவங்கள் அரளுகின்றன
என் எலும்பை வேட்டையாட
நாய்கள் வட்டமிடுகின்றன
 
என் இதயத்தைக் கொத்திப் புரட்டி
மரவள்ளி நடலாம்!
அல்லது
கீரை விதை தூவலாம்!
 
இந்தக் கவிதையூடாக காதலில் தோற்றுப்போன ஒரு வெறுமைத் தன்மையை வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். மானம் காத்த ஆடைகளை காற்று கழற்றிக்கொண்டு போவதாக குறிப்பிடுவதிலிருந்து எல்லா வஸ்துக்களும் தன்னை பந்தாடிப்பார்க்கின்றன என்ற நிலையை இயற்கையோடு ஒப்பிட்டு மிக அருமையாக உவமித்திருக்கின்றார்.
மனதைச் சப்பிய மாடு (பக்கம் 17) என்ற கவிதையில் அழுக்கடைந்திருந்த மனம், தூய்மையாகிவிட்டது போன்றதொரு விடயத்தை இயம்பி நிற்கிறார். மாடு சாணத்தை ஈரலில் கழித்தது எனவும், அதை மொய்க்க வந்த இலையான கூட்டங்கள் இடம்மாறி சிறுகுடலில் மொய்த்து விளையாடியது எனவும் சொல்லும் கவிஞர், இறுதியாக மனமிருந்த இடம் வாசமாவது வீசட்டும் என்று கீழுள்ள வரிகளினூடாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
 
போகட்டும்
ஊத்தை மனம்
மனமிருந்த இடத்தில்
மல்லிகைக்கொடி நட்டால்
வாசமாவது வீசும்!
 
தூக்கம் வராத தருணங்களில் பலவித கற்பனைகள் எல்லோருக்கும் எழுவதுண்டு. அந்தமாதிரியான சில அனுபவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கவிதை பேசிய இரவு (பக்கம் 21) என்ற கவிதை சுவாரஷ்யமாகவும், சிந்திக்கத்தக்கதாகவும் பயங்கரத்தை நாசூக்காக சொல்லப்பட்டதுமாக இருக்கிறது. அந்தக்கனவு கீழுள்ளவாறு வரிகள் மூலமாக எடுத்துக்காட்டப்படுகின்றது.
 
தாலியறுத்த பெண்கள்
வேலி பாய்கிறார்கள்
அஹிம்சை பேசிய மனிதன்
ஆள் தின்னுகிறான்
 
என் பேனைக்குள்ளேயிருந்து
இரண்டு புடையான்கள்
படமெடுத்து வந்து
என் கவிதைக்கு
கொத்திவிட்டுப்போயின
 
சுவைக்காத சுதந்திரம் (பக்கம் 23) என்ற கவிதை காதலின் சோகத்தை சொல்லுகின்றது. சின்ன வயசில் செதுக்கியெடுத்த சிற்பிபோன்றிருந்த  தன் காதலி, ஒரு குரோட்டன் இலையாய் அலறிப்பூவாய் தனக்குள் வாழ்ந்த காதலி.. இல்லாமல்போன வேதனையை வெளிப்படையாக காட்டும் கவிதையாக இதை நோக்கலாம். உலகக் காதலர்கள் அறியும் வரைக்கும் காகங்களுக்கு கத்தச்சொல்லியும், நாய்களுக்கு குரைக்கச்சொல்லியும் தனது காதலின் வேதனையை முகாரி இசைக்கிறார் இப்படி
 
என் சிறகு
முறிந்து விட்டது
இனி
எங்கே போவேன்?
யாரைத் தேடுவேன்?
 
என் இதயம்தான்
இருந்தென்ன
இறந்தென்ன
என் இதயம் போனபிறகு?
 
பறவைகளைப் பார்த்திருக்கிறோம். அதன் கீச்சுக்குரலைக் கேட்டிருக்கிறோம். பறவைகள் பற்றிய பல கவிதைகளை படித்துமிருக்கிறோம். எனினும் அபார் தனது காகக் கூடு (பக்கம் 34) என்ற கவிதையில் காகத்தைப்பற்றி பாடியிருக்கிறார். தினமும் பெருக்கிய முற்றத்தில் சுள்ளியும் முள்ளும் பரவிக்கிடக்கிறது. பெண் காகம் அடைகாத்துக்கொண்டிருக்கின்றது. அண்டை வீட்டுக்காரியின் கோழிகளின் இறகுகளையும், தென்னந்தும்புகளையும் கூடுகட்டுவதற்காகக் கொண்டு சென்ற காகம் அவற்றை தனது வீட்டு முற்றத்தில் போட்டிருப்பதாக கூறும் கவிஞர் தனது கற்பனையின் உச்சகட்டமாக காகத்தின் எச்சத்தை எப்படி எழுதியிருக்கிறார் என்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
 
வாசல் முழுக்க எச்சங்கள்
மண்ணுக்கு மருதாணி போட்டாற்போல
இருக்கிறது
 
இவ்வாறு இயற்கையோடிணைந்த வாழ்வியலை கவிதைகளில் தத்ரூபமா தந்திருக்கும் அபார் இன்னும் பல படைப்புக்களைத் தந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு துணைபுரிய வேண்டும் என்று வாழ்த்தி நிற்கிறேன்.
 
நூலின் பெயர்: - இடி விழுந்த வம்மி (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் -  அபார்;
முகவரி - 143, சாஹிப் வீதி, கல்முனை - 05.
தொலைபேசி - 0776 912029
விலை - 200/=

- வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It