மன்னார் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த பி. அமல்ராஜின் கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்ற கவிதைத் தொகுதி 76 பக்கங்களை உள்ளடக்கி அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது இவரது இரண்டாவது நூலாகும். ஏற்கனவே இவர் வேர்களும் பூக்கட்டும் என்ற உளவியல் நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
 
kirukkalkal_340தியாகம் அவள் பெயர், நீதான் அவள், நீ - நட்பு - காதல், முதிர்கன்னி, செத்தா போய்விட்டேன், கல்லறைக் கனவு, எனது ஆட்டோகிராப்ஃ, ஒரு ரயில் பயணம், முள்ளிவாய்க்கால் முடிவுரை, தமிழ் சுதந்திரம், ஊர்ப் பக்கம், பயணங்கள் முடிவதில்லை, ஒரு காதல் காவியம், அடங்காத காதல், கொன்றுவிடுங்கள், மொட்டைக் காதலும் முடிந்து போன கற்பனையும், கடற்கரைக் காதல், புதுமைப் பெண்ணும் தோற்றுப்போன ஆணும் ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தக் கவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.
 
'காதலையும் கிளர்வையும், இளம் பெண்களையும் மட்டுமே கவிப் பொருள்களாகக் கொள்ளும் எம் இளைஞர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான கவிஞனாக அமல்ராஜைக் காண்கிறேன். சமூகத்தின் நிகழ்வுகளை தன் அக்கரையுள்ள சமூகப் பார்வையினால் நோக்கி ஆதங்கப்படுகிறார், ஆத்திரப்படுகிறார். தாய்மை பற்றி உருகும் கவிஞர், யுத்தம் பற்றிக் கவலைப்படுகிறார். முள்ளி வாய்க்கால் முடிவுரையை வாழ்க்கையை முழுதும் தொலைத்த ஒரு பெண்ணை முன்னிறுத்தி எம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். சில காதல் கவிதைகளிலும் அவரின் கவித்திறமை, காதல் உள்ளம் புரிகிறது.' என்று ஏ.ஆர்.வீ. லோஷன் அவர்கள் தனதுரையில் குறிப்பிடுகின்றார்.
 
அணிந்துரை வழங்கிய கவிமாமணி அகளங்கன் அவர்கள் 'இன்று ஈழத்தில் வெளிவரும் இலக்கியப் படைப்புக்களில் கவிதை நூல்களே அதிகம் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. புதுக்கவிதைத் தொகுப்புக்களே அதிகம் வெளிவருகின்றன. அதில் காதல் கவிதைகளே அதிகம் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் இளைஞர்களே அதிகமாக இத்துறை சார்ந்த நூல்களை எழுதிவெளியிடுவதே. சில புதுக் கவிதைத் தொகுப்புக்கள் வெறும் நாட்குறிப்புப் புத்தகம் போல அல்லது காதலிக்கு அனுப்ப வேண்டிய காதலனின் கடிதம் போல இருக்கின்றன. சில தொகுப்புக்கள் காதலையும் சமூகத்தையும், சம காலத்தையும் பாடுவனவாக அமைந்துள்ளன. இந்த வகையில் பி. அமல்ராஜின் கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்னும் இக்கவிதைத் தொகுதி காதலோடு சமகாலம், சமூகப் பிரச்சினை என்பவற்றை கலந்ததாக அமைந்துள்ளதைப் பாராட்டலாம்.' என்கிறார்.
 
நூலாசிரியர் தனதுரையில் 'கவிதையை நான் அதிகம் நேசிப்பவன். அவற்றை அதிகம் வாசிப்பவனும் கூட. கவிதையை எழுதுவது சுலபம். ஆனாலும் அதை நல்ல கவிதைக்குரிய இயல்புகளுடன் காலத்திற்கு ஏற்றாற் போல் உருவாக்குவதில்தான் ஒரு கவிஞனின் வெற்றி தங்கியிருக்கிறது. அந்தவகையிலே, நானும் ஒரு நல்ல சமூகக் கவிஞனாக வெற்றிபெற வேண்டுமென்பதே எனது ஆவல். வாசித்தாலும் யதார்த்தச் சிந்தனைப் போக்கும் தரமான கவிதைகளை உருவாக்க ஊன்றுகோல்களாக அமையவல்லன.' என்கிறார்.
 
திருமணமாகாத ஒரு பெண்ணின் மனநிலையை முதிர்கன்னி (பக்கம் 12) என்ற கவிதையில் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். சீதனம் என்ற பிரச்சனைப் பற்றி காலங்காலமாக பேசி வந்தாலும் அது தருகின்ற காயங்கள் மட்டும் ஏனோ இன்னும் ஆறவில்லை. வாழையடி வாழையாக அந்த பிரச்சனை எல்லா சமூகத்திலும் ஊடுறுவி விட்டது. தாலி பாக்கியம் பெறாமல் முதுமையாகிக்கொண்டிருக்கும் ஒரு பெண் இதயத்தின் ஓசைகள் இவ்வாறு சோக கீதம் பாடுகின்றது.
 
மஞ்சத்துப் பெண்கள் கொஞ்சிக் குலாவும் முற்றத்தின் மூலையில் மூச்சுமின்றி பேச்சுமின்றி முக்காட்டோடே முப்பது வருடங்கள்... இது அலரிப் பூவும் அந்தஸ்து கேட்கும் காலம் அப்படியிருக்க இந்த அல்லிப்பூ மட்டும் ஏன் இன்னும் சாகாமலும் சமையாமலும் விலைபோகாமல் கிடக்கிறது? கையிலில்லை - எங்களிடம் ஆனால் கைகளிருக்கு. பணமில்லை உண்மைதான் மனமிருக்கு - நல்ல குணமிருக்கு...
 
செத்தா போய்விட்டேன் (பக்கம் 18) என்ற கவிதையில்
 
ஓர் அந்திப் பொழுதின் முந்திப் பார்க்கும் பிந்திய பகல்களுக்;குள் சிக்கிக் கேட்கும் யுத்த விமானங்களின் குண்டு மழையில் நனைந்து கரைந்த வலது கையும்... வெட்ட வெளியில் விட்டு வந்த வீட்டுப் பொருட்களை மீட்கப்போய், நட்டு வைத்த கன்னி வெடியில் காலை வைத்து மண்ணோடு போன மற்றொரு காலும்... என் உடலில் - ஓர் உறுப்பென்று இன்று மறந்தே போனது எனக்கு... என்று கவிஞர் வேதனைப்படுகிறார். மட்டுமல்லாமல் எங்களையும் கண்கலங்க வைக்கிறார்.
 
கடந்த காலங்களின் பொதுமக்கள் பட்ட துயர்களை வைத்து பயணங்கள் முடிவதில்லை (பக்கம் 52) என்ற கவிதை எழுதப்பட்டிருக்கின்றது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாம் மடிந்து போக மாட்டோம் என்றும்  வயிற்றில் உதைத்தாலும் முதுகில் பிள்ளையை சுமப்பவர்கள் தமது வீரத்தாய்கள் என்றும், இழப்பும் களைப்பும் தம்மை ஒன்றும் செய்யவியலாது என்றும் உறுதியாக கூறி நிற்கிறார். இவரது மன ஆதங்கம் நியாயமானது. இதை அவர் சொல்லியிருக்கும் பாங்கு வித்தியாசமானது.
 
இன்று தொடங்கிய
பயணமல்ல - அது
நாளை முடிவதற்கு
எமது பயணங்களுக்கு
எனது வயதாகிறது...
சொத்தை இழந்தோம்
செத்துவிடவில்லை
மண்ணை இழந்தோம்
மாண்டுவிடவில்லை
மானமிழந்தோம்
மண்டியிடவில்லை
 
ஒரு காதல் காவியம் (பக்கம் 58) என்ற கவிதை நகைச்சுவைப் பாங்கில் எழுதப்பட்டிருக்கிறது. காதலித்து ஏமாறும் ஆண்களின் வேதனையும், காதலித்தவளையே கரம்பிடித்த ஆடவனின் சோகத்தையும் நயக்கத்தக்கதாக வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு இதமாயிருக்கிறது. ஓரிரு பெண்கள் செய்யும் சில தவறுகள், சில ஆண்கள் செய்து விட்டுப்போகும் காதல் லீலைகள் காதல் என்ற வார்த்தையின் உள்ளார்ந்த சுகத்துக்கே கேடு விளைவிப்பதாக மாறிவிட்டது. தற்காலத்தில் காதல் வெறும் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. இந்தக் கவிதையின் சிறப்பாக உவமான உவமேயத்தை மாலை நேரம் கவிஞரின் மனதில் எத்தகைய கற்பனையை தோற்றுவித்திருக்கிறது என்பதை நோக்கலாம்.
 
சோம்பல் முறிக்கும் மாலைப்பொழுது
தங்கச் சூரியனும் தாண்டமுடியாக் கடலும்
கொஞ்சம் கூட வெட்கமின்றி
ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
முத்தமிட்டுக்கொள்ளும் நேரம்
 
விஷமிகளாக சமூகத்தில் நடமாடித்திரியும் இரட்டைவேடம் கொண்டவர்களுக்கு சாட்டையடியாக எழுதப்பட்டிருக்கிறது கொன்றுவிடுங்கள் (பக்கம் 65) என்ற கவிதை. நேர்மையில்லாத பார்வைகளும், மகிழ்ச்சியற்ற சிரிப்பும், உண்மையற்ற புகழ்ச்சியும், யதார்த்தமற்ற வார்த்தையும் கொண்டு போலிகளாக நடிக்குமிவர்களிடமிருந்து தப்புவதே சிறப்பானது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டும் அழகிய முன்மாதிரி இந்தக் கவிதை. இவ்வாறானவர்களுடன் வாழ்வதை விட செத்துவிடுதல் மேலானது என்ற கருத்தை இன்று பலர் சொல்வதைக் கேட்கிறோம். இந்த கருத்தை பிரதிபலிக்கும் இரு வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.
 
பொய்யான வாழ்க்கை மலிந்துகிடக்கிறது இதற்குள் உண்மைகள் மட்டும் பொசுங்கித் துடிக்கிறது.. போலி முகங்களை ஒப்பனை செய்து அழகாக பொருத்தியிருக்கிறார்கள் சில மனிதர்கள்.
 
காதல், சமூகம், போர், தாய்மை போன்ற பல அம்சங்களை வைத்தும் கவியெழுதும் ஆற்றல் மிக்க இளம் கவிஞரான பி.அமல்ராஜ், எதிர்வரும் காலங்களிலும் இன்னும் பல இலக்கிய படைப்புக்களைத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 
நூலின் பெயர்; - சிறுக்கல்கள் சித்திரமாகின்றன (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - பி. அமல்ராஜ்
முகவரி - 66, பெரியகமம், மன்னார்.
தொலைபேசி - 023 2251364, 0773 268913.
விலை - 150/=
 
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It