எதார்த்த கவிதைக்கு எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு. கிராமிய கவிதைக்கு என்றும் ஒரு மணம் உண்டு. ‘பெய்து தீர்ந்த பெருமழை’ அவ்வகையில் அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் நாவல் குமாரகேசன். சிற்றிதழ்களின் மூலம் அறியப்படடவரின் முதல் தொகுப்பு இது.

அக்காவிற்கு சீர் செய்வதை ஆமோதிக்கும் தம்பி. காரணம் முன்னுதாரணம் காட்டி தனக்கும் பெற்றுக் கொள்ளலாம் என்னும் ‘சுயநலம்’. ஓர் ஆணின், ஓர் இளைஞனின் சுயநலத்தை இம்முதல் கவிதையில் காட்டியுள்ளார். ஒரு கவிஞராக தன்னையே முன்னிலைப்படுத்தி எழுதியுள்ளார். ‘அறுபதாவது முறையாக’ கவிதையும் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது. இதில் ஒரு விதவையாக சமூகத்தில் சில சிக்கல்களை எதிர்கொண்டாலும் தன் தாயும் மூடநம்பிக்கையில் சிக்கியுள்ளதை விவரித்துள்ளார். ‘தோக்ஷம்’ கவிதையிலும் மூடநம்பிக்கையைத் தகர்த்துக் காட்டியுள்ளார். ‘சொந்தம்’ கவிதை அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் சிக்கி உழலும் ஒருவரைப் பற்றியது. இதையும் நேர்ப் பேச்சிலேயே அமைத்துள்ளார். ‘மாறும் மர்மங்கள்’ கவிதையில் மனைவிக்காக செலவிடத் துணிபவன்; அம்மாவிற்குச் செய்யத் தயங்குவதைக் கூறியுள்ளார்.

‘நிலை’யில்

அப்பாவின் வேட்டியை

அஞ்சாறு துண்டாக

கிழித்துப் போட்டாள் துணைவி என அப்பாவின் நிலையையும் எடுத்துரைத்துள்ளார். மனைவியின் பிரவேசத்துக்குப் பின் அம்மா, அப்பாவின் நிலை சிக்கலாகவே உள்ளதை உரைக்கிறார். ‘கட்டுப்பாடு’ கவிதை தாத்தா, பாட்டி பற்றி பேசுகிறது.

தாத்தாவை அப்பாவும்

பாட்டியை சித்தப்பாவும்

காலம் முழுக்க

கரை சேர்க்க வேண்டுமென்று

பஞ்சாயத்தில் தீர்ப்பளித்தனர். ஆனால் தாத்தா, பாட்டியின் உணர்வுகளை எவரும் புரிந்து கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். எவருக்கும் தெரியாமல் பேசிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ‘சொத்து’க் கவிதை பாசத்தை விட பிள்ளைகளுக்கு சொத்தே பெரிது என குட்டுகிறது.

சிறுவர் உலகம் கவிஞர் கூற்றாக எழுதப்பட்டு இருந்தாலும் அப்பாவைப் பற்றிய ஓர் உண்மையைக் கூறுகிறது. அம்மாவிற்கு தாத்தா தந்த சீதனத்தையும் சேலையையும் கொடுத்து அப்பாவிற்கு ஒரு தொடுப்பு இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளார். அம்மாவின் பாசத்தை, அம்மா கொண்டுள்ள பற்றைக் காட்டியது ‘வயிறு’. கவிஞர் உறவுகளுக்குள் உருவாகும் சிக்கலை, உறவுகளால் உண்டாகும் விளைவை, உறவுகளின் உள்ள நிலையைக் கவிதைகளாக்கித் தந்துள்ளார். கவிதைகளில் தன்னையே முன் வைத்து அனுபவ வெளிப்பாடாக கவிதையாக்கித் தந்துள்ளார்.

கவிஞரிடம் கிராம நினைவுகள் மிகுந்திருந்தாலும் இரண்டுக்குமுள்ள வேறுபாட்டையும் உணர்ந்து எழுதியுள்ளார். கிராமங்களில் டப்பாக்களில் பணம் சேமிப்பையும் நகரத்தில் தண்ணீர் சேமிப்பதையும் ஒப்பிட்டுக் காண்பித்துள்ளார். ‘சேமிப்பு’ எனினும் இரண்டும் வேறு வேறு. முதலாவது கிராமத்திலுள்ள வழக்கம். இரண்டாவது நகரத்திலுள்ள கஷ்டம்.

‘குடி பெயர்தல்’ என்பது மனிதருக்குப் பொருந்தும். பறவை, விலங்குகளும் ‘பெயர்தல்’ உண்டு. கவிஞரின் பார்வை வித்தியாசமானது. பிசாசு, சுடலைக் கறுப்பு, சடா முனி, கருப்பாண்டிப் பேய், ரத்தக் காட்டேறி ஆகியவை குடி பெயர்ந்தன என்கிறார். காரணம்

காற்றிலும் மழையிலும்

அத்தனை மரங்களும்

வேரோடு விழுந்த பின் என்கிறார். பிசாசு ஆகியவை இல்லை என்றாலும் கிராமத்தில் மக்கள் பேசுவதையே குறிப்பிட்டுள்ளார். கற்பனை எனினும் நன்று.

மனிதர்களின் வாழ்நிலை மாறியபடியே வருகிறது. தன் அடையாளங்களை இழந்து கொண்டே வருகிறான். பயன்படுத்தும் பொருளையும் மாற்றியே வருகிறான். அதில் ஒன்று ‘செக்கு’. இன்று செக்கைப் பயன்படுத்துவார் இல்லை. காட்சிப் பொருளாகவும் இல்லாமல் ஆனது. ‘செல்லாக் காசு’ மூலம் செக்கின் சோகத்தைச் சொல்கிறார். இக்கவிதை கவிஞர் வைகைச்செல்வியின் ‘அம்மி’யை நினைவுப்படுத்துகிறது. உரலும் இன்று கண்ணில்படுவதில்லை.

‘உணர்வுகள்’ வித்தியாசமானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படும். ‘உணர்வுகள்’ கதையில் இரண்டு உணர்வுகள் எடுத்துக்காட்டத் தக்கவை

வயல் விதைத்த உழவனுக்கு

கடனடைத்த நினைவு வரும் -ஒன்று

கடன்பட்ட கவிஞனுக்கு

கண்ணீராய் கதைகள் வரும் - இரண்டு கடனை வைத்து இரண்டு உணர்வுகளைக் கூறியுள்ளார். முன்னது கடனடைத்ததாலும் பின்னது கடன்பட்டதாலும் என்கிறார். உணர்வுகள் வெளிப்பட ஏதோவொரு சம்பவம் போதும் என்கிறார். இதில் கடனடைத்த விவசாயியைக் காட்டியவர் மிகுதியான விளைச்சலால் ‘உழவன் கணக்கு’ தவறானதை விவரித்துள்ளார்.

வெச்சதுல குத்தமில்ல

வெளஞ்சதுல மோசமில்ல

வெந்த புண்ணில் வேல் பாச்சி

வெலவாசி கொறஞ்சு போச்சு உழவன் பேசுவதாக உள்ள சோகத்தை எடுத்துரைத்துள்ளார். ’உழவன்’ கவிதையில்

விளைவிப்பது மட்டும்

உழவன்

விலையை நிர்ணயிப்பதோ

வணிகன் என வணிகனை சாடியுள்ளார். ஒருபுறம் விலைவாசி குறைந்தது என்றவர் மறுபுறம் விலையை நிர்ணயிப்பது வணிகன் என்கிறார். மாறுபட்டிருப்பினும் உழவனுக்காக வருந்தியுள்ளதை அறிய முடிகிறது.

மனிதரை பாடுவது கவிஞர் இயல்பு. கவிஞர் நாவல் குமாரகேசன் விலங்குகளையும் பாடியுள்ளார். செம்மறியாடுகள் குட்டியை பிரசவிப்பதையும் குட்டிகள் பாலுக்கு அலைவதையும் ‘அடையாளம்’ மூலம் சித்தரித்துள்ளார். வண்டி, கலப்பை இழுத்த எருதுகள், பால் கொடுத்த எருமை,காவல் காத்த நாய், முட்டிய கருப்பண்ணசாமி கிடாய் ஆகியவற்றுக்காகவும் வருந்தியுள்ளார். தன் ‘விலங்கு நேயம்’த்தைக் காட்டியுள்ளார்.

பெற்று வாளர்த்த பிள்ளைகளை விட

வாங்கி வளர்க்கும் விலங்குகளைத்தான்

எத்தனையோ குடும்பங்கள்

நம்பி வாழ்கின்றன என ‘பெற்றெடுத்ததும் தத்தெடுத்ததும்’ கவிதையில் விலங்குகளைப் போற்றியுள்ளார். மனிதர்களைத் தூற்றியுள்ளார். உடம்பு வலிக்கு வெள்ளாட்டுக் கறி சாப்பிட கசாப்புக் கடை செல்லும் மனிதர்களைக் குறை கூறுகிறது ‘வலி’. ஆட்டின் வலியை அறிபவர் எவருமில்லை என்கிறது. ’வேண்டுதல்’களுக்காக வெட்டப்படும் ஆடுகளுக்காவும் கவலைப்பட்டுள்ளார். ஆயினும் ‘பெருமிதம்’ கவிதையில் தெருநாயை விமர்சித்துள்ளார். மனிதர்களை மட்டும் கவனியாமல் விலங்குகளையும் கவனித்து எழுதியுள்ளது கவிஞரின் விலங்கு நேயத்துக்குச் சான்று.

கண்ணயர்ந்த

பிச்சைக் காரனின் செருப்பு

களவு போய் விட்டது? என்று முடியும் ‘களவு’ மனித சமுதாயத்தின் மீது விழுந்த இடி. பிச்சைக்காரரிடமும் திருடுபவர்களைக் கண்டிக்கிறது. தொடர்ந்து பைத்தியகாரியை கர்ப்பமாக்கியவர்களை ‘கால் குறைந்த மிருகங்கள்’ என சாடியுள்ளார். தவறு செய்யும் மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிடுவதும் தவறு. மிருகங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று வேலையின்மை. இளைஞர்களின் மனத்தைப் பாதிக்கிறது. வாழ்க்கையும் திசைமாறி விடுகிறது.

விண்ணப்பம் போடுவதற்கே

அப்பாவின் பென்வக்ஷன் பணம் எனத் தொடங்கும் ‘தோசம்’ கவிதை மூட நம்பிக்கைக்கு எதிரானதாயினும் வேலையின்மையின் சோகத்தையும் சொல்லியுள்ளது.

வேலைக்கு விண்ணப்பித்து

தபால்காரரை எதிர்பார்த்து

எதிர்பார்த்து எதிர்பார்த்தே

ஆயுளே பாதியானது என்னும் ‘எதிர்பார்ப்பு’ம் வேலையின்மையால் ஏற்படும் விரக்தியை வெளிப்படுத்துகிறது. வெகு காலத்திற்குப் பின் கவிதை மூலம் கவிஞர் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரவில் மது அருந்தி விடிந்ததும் இறைவனை வணங்கும் ‘அதிகாலை அனுபவங்கள்’ கவிதைக் கேலிச் செய்கிறது. மனிதர்களின் வேடங்களைக் கலைத்துக் காட்டுகிறது.

உலகமயமாக்கல் உள்ளுர் வரை பாதிக்கிறது. உலகமயமாக்கல் முயற்சியில் ஓவ்வோர் உயிருக்கும் இழப்பு ஏற்படுகிறது. பறவைகளும் அகதிகளாகின்றன. ஆவிகளும் மரமில்லாமல் அலைகின்றன என்பது கவனிப்பிற்குரியது. சாலையோர வியாபாரிகளின் வாழ்வும் பறிபோகிறது. ’உலகமயம்’ என்னும் இக்கவிதை மரம் வெட்;டுதலையும் விமரிசிக்கிறது.

வாழ்வின் தொடக்கம் ஏதுமற்றதாக இருப்பினும் முடிவு ஏராள பிரச்சனைகளுடனும் சிக்கல்களுடனும் தடுமாறுகிறது. நிறைவேற்ற முடியாத கடமைகள், செயல்படுத்த இயலாத திட்டங்கள், எதிர்பார்த்தும் கிடைக்காத சந்தர்பங்கள், முயற்சித்தும் எட்டாத வெற்றிகள், அனுபவிக்க நேராத கனவுகள், இலக்கைப் பிடிக்காத அ{சைகள், முடிக்க முடியாத சுமைகள்;, உழைத்தும் உயராத வளரச்;சிசகள், காப்பாற்றத் தவறிய வார்த்தைகள் என ‘முதுமையில்’ மனத்துள் இருக்கும் என்கிறார்.

‘சொர்க்கம்’ என்பது இருக்கிறதா இல்லையா என விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரவர் நிலையில் ‘சொர்க்கம்’ என்றால் என்னவென்று அஹணுபவித்ததைக் கூறுகின்றனர். சாணமும் மூத்திரமும் கலந்த தண்ணீரில் நீச்சலடித்து மகிழ்வதை ‘சொர்க்கம்’ என்கிறார். ’ஆடுகளம்’ கவிதையிலும் சிறுவர்களின் விளையாட்டையே கூறியுள்ளார். ‘அர்ச்சனை’யும் சிறுவர் தொடர்பானதே.

ஆண்பிள்ளை இல்லா வீட்டில் ஒரு பெண்படும் அவஸ்தையை ‘விதி’ மூலம் விவரித்துள்ளார்.

ராத்திரி உலையில் போடும்

அரைப்படி அரிசி வேக

பகல் பொழுதில்

அவள் விற்கும்

பழமும் வேகும்

அவளும் வேவாள் வாழ வேண்டியதந்காக வெந்தாக வேண்டியுள்ளதை ‘விதி’ என்கிறார்.

‘பெய்து தீர்ந்த பெருமழை’யில் கவிஞர் கண்ட மனிதர்கள், சம்பவங்கள், காட்சிகள் ஆகியவைக் கவிதைகளாக்கப்பட்டுள்ளன. கவிஞரின் கவிதையாக்கும் ஆர்வம் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்பட்டுள்ளது. கவிதைகளை எளிமையாகவும் இனிமையாகவும் படைத்துள்ளார். ஆனால் கவிதைகள் மெல்லிய தாகத்தையே ஏற்படுத்துகின்றன. அவரால் சலசலப்பை, தாக்குதலை ஏற்படுத்தும் கவிதைளை படைத்திட முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது தொகுப்பு. அவரால் ‘பெய்து தீர்க்க வேண்டிய பெருமழை’ ஏராளம் உள்ளது. பெய்வதற்கு வாழ்த்துக்கள். 

 வெளியீடு

 நறுமுகை

 29-35 தேசூர்பாட்டை

 செஞ்சி 604202

 விலை-ரூ35. 00

 - பொன். குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

9865809969, 9003344742

Pin It