முன்பொரு ஒரு காலம் இருந்தது. குறும்படங்கள் என்றாலே ஒருமாதிரியாக பார்த்த காலங்கள் அது. யாரோ நாலுபேர், தாங்கள் மட்டுமே பார்த்து, தங்களுக்குள்ளாகவே விவாதித்துக்கொள்கிற ஒன்றாக குறும்படங்களும், ஆவணப்படங்களும் இருந்தன. வெகுமக்களின் பரவலான கவனிப்பை அவைபெறவில்லை. இந்தமாதிரியான படங்கள் மக்களுக்கானவையல்ல. அறிவுஜீவிகளுக்குத்தான் என்ற கருத்து ஊடகங்களாலும் வணிக சினிமாக்காரர்களாலும் கட்டமைக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம்தாண்டி குறும்படங்கள் பரவலான மக்களை சென்றடையத் தொடங்கிவிட்டது. இன்றைக்கு எல்லா ஊடகங்களிலும் குறும்படங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. நமது தொலைக்காட்சிகளுக்கு குறும்படங்களின்மீது காதலோ காதலாகி குறும்பட இயக்குனர்களுக்கு போட்டியெல்லாம் நடத்துகின்றன.

பொதுவாக குறும்படங்களில் அழகியல் இருக்காது, வறட்டுத்தனமாக இருக்கும், ஒருத்தருக்குமே புரிஞ்சி தொலைக்காது என்றெல்லாம் குற்றம் சாட்டப்படுவதுண்டு. அதற்கேற்றாற்போல் சில படங்களும் வந்ததுமுண்டு. இருப்பதை இருக்கிறமாதிரியே காட்டவேண்டும் என்ற ஆவல்தான் அதற்குக் காரணம். அதுவுமன்றி படத்தயாரிப்புச் செலவும் ஒரு கூடுதல் காரணம். ஆனால் வளர்ந்துவிட்ட அறிவியல் தொழில்நுட்பம் இப்போது இதற்கு தீர்வுகண்டிருக்கிறது. குறைந்த செலவிலேயே தரமான படத்தை தரமுடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.  இதனால் வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள் பல குறும்படஇயக்குனர்கள்.

 அத்தகைய இயக்குனர்களில் ஒருவராக பொன்.சுதாவை நிச்சயம் குறிப்பிடலாம். பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றிவரும் பொன்.சுதாவின் முதல் குறும்படம் “மறைபொருள்”. ஒரே ஒரு காட்சிதான். ஒரு வசனம் இல்லை. ஒரே ஒரு கதாபாத்திரம்தான். சட்டென்று மூளைக்குள் போய் உட்கார்ந்துகொண்டு யோசிக்க வைக்கிறது. பார்த்து பார்த்து தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் ஒரு பெண், தன் அழகில் தானே திருப்திப்பட்டுக்கொண்டபின், ஒரு பர்தாவை அணிந்துகொள்வதுடன் படம் முடியும். அந்த கடைசி ஷாட்டின் வழியாக அதிர்வை ஏற்படுத்தியிருப்பார் இயக்குனர். பலரின் பாராட்டைப் பெற்ற படம் அது.

பொன்.சுதாவின் இரண்டாவது குறும்படம்தான் “நடந்த கதை”. எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய “குறடு” சிறுகதையின் திரைவடிவம் இது. நாடு சுதந்திரம்பெற்று அறுபது ஆண்டுகளை கடந்த பின்னும், இன்னமும் தெருக்களில் நடக்கக்கூட சுதந்திரம் தரப்படாத, ஊருக்கு வெளியே சேரிகளில் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பவர்களின் பிரதிநிதியாய் ஒரு தலித் இளைஞன் “நடந்த” கதை இது. பெருங்கோபமும் வலியும் நிறைந்த இந்த கதையை, அதே கோபத்தோடும் வலியோடும் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒரு முதியவரின் நினைவுகளிலிருந்து படம் துவங்குகிறது. கீச்கீச்சென ஒலிக்கும் பூட்சு அணிந்தபடி விளையாடும் தனது பேரனுக்கு தான் ”நடந்த” கதையை சொல்லுகிறார். கவிஞர் அறிவுமதியின் நெகிழ்வான குரலில் படத்தின் காட்சிகள் விரிகின்றன.

எழுதப்படாத விதியைப்போல எல்லா கிராமங்களிலும் இருப்பதைபோன்றே அந்த ஊரிலும் கீழத்தெரு, மேலத்தெரு என இரண்டு தெருக்கள். மேலத்தெருவில் தலித்துகள் செருப்பு போட்டுக்கொண்டு நடக்க அனுமதியில்லை. ஆனால் அந்த சிறுவனுக்கு அது ஏனென புரியவில்லை. ஏன் எனக் கேட்கிறான். அது அப்படித்தான் என எட்டி உதைக்கிறது மேல்சாதித் திமிர். அவனுக்கு செருப்பு போட்டு மேலத்தெருவில் நடக்கவேண்டுமென்பதே பெருங்கனவாகிறது. கனவிலும் செருப்புதான். பறந்து பறந்து வந்து போக்குகாட்டும் செருப்பை பிடிக்கும் முயற்சியில் தோல்விதான். சிறுவனாக செருப்புக்கனவுடன் படுத்தவன், விழித்து எழும்போது பெரியவனாக எழுகிறான். ஆனாலும் செருப்புக்கனவு முடிந்தபாடில்லை. உயர்சாதித் தெருக்களில் செருப்பு போட்டு நடப்பதென்பது ஒரு கனவாகவே தலைமுறைத் தலைமுறையாய் தொடருகிற சோகத்தை அழுத்தமாய் பதிவுசெய்கிறது இக்காட்சி.

 பெருங்கோபம் கொண்டவனாய் ஒரு கோயிலின் வெளியே கிடக்கும் மேல்சாதிக்காரர்களின் செருப்புக்களை அப்படியே அள்ளிக்கொண்டுபோய் ஊருக்கு வெளியே வீசிக் களிக்கிறான். அதே கோபத்துடன் ராணுவத்தில் சேர்கிறான். இப்போது பூட்சு அணிந்த காலுடன் ஊருக்குள் நுழைகிறான். காலமெல்லாம் தனக்கு அனுமதி மறுத்த மேலத்தெருவுக்குள் பூட்சுக்காலுடன் நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறான். தலைமுறைக்கோபம் தணியத்தணிய நடக்கிறான். ஆனாலும் மேல்சாதித்திமிர் இப்போதும் தடுக்கிறது. ”ஊருக்கு போனாலும் பயிற்சி எடுக்கணும்னு ராணுவத்துல சொல்லியிருக்காங்க. யாராவது தடுத்தா சுட்டுத்தள்ள சொல்லியிருக்காங்க” என்று சொல்லியபடியே மேல்சாதிக்காரர்களின் நிழலை பூட்சுக்காலால் மிதித்தபடியே ”நடக்கிறான்”. ஒடுக்கப்பட்டவர்களின் கைகளுக்கு அதிகாரம் வந்தால்தான் கால்களுக்குக்கூட செருப்பு கிடைக்கும் என்ற உண்மையை கோபத்துடன் பதிவுசெய்கிறது இக்காட்சி.

அடுத்த காட்சிதான் கவிதை. மேலத்தெருவில் உரிமையை நிலைநாட்டியவன், தனது தெருவுக்குள் நுழைகிறான். கம்பீரத்துடன் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். ஒவ்வொரு அடிக்கும் ஒரு செருப்பு முளைக்கிறது. பொங்கலுக்கு வைக்கும் பூசணிப்பூவாய் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் செருப்புகள். கண்கொள்ளாக்காட்சியாக தெருவெங்கும் செருப்புகள் பூக்கபூக்க பார்வையாளர்களின் கைத்தட்டல்களால் அரங்கம் நிறைகிறது.

 அறிவுமதியின் பிண்ணணிக்குரல்,இராசாமதியின் ஒளிப்பதிவு, மரியம் மனோகரின் இசை என எல்லாமும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. பொன்.சுதாவின் நீண்டகால திரைஅனுபவம் இப்படத்தை கலாநேர்த்தியுடன் உருவாக்கியுள்ளது. சிறுகதைகளை திரைப்படமாக்கும் முயற்சிகளுக்கும், குறும்படங்களும் கலையழகுடன் சொல்லப்படவேண்டும் என்ற விழைவுக்கும் பொன்.சுதாவின் “நடந்த கதை” பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது.

-     எஸ்.கருணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It