‘ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் , கோட்பாடுகள் , விமர்சனங்கள் - இப்படி எத்தனைதான் படித்தாலும் , தெரிந்து கொள்ள முயற்சித்து இருந்தாலும் , இவை எதன் பொருட்டும் ஒரு கவிதையை என்னால் எழுத முடியாது. என்னால் மட்டுமல்ல - எந்த உண்மையான படைப்பாளியினாலும்தான்’ என்னும் தெளிவான சிந்தனையுடன் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் தந்திருக்கும் தொகுப்பு ‘மஞ்சணத்தி’ . ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என எவராலும் கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது அவரின் கருத்தாகவே இருக்கும். கவிதை என்பது அவரவர் ரசனைக்கு ஏற்ப மாறுபடும். எழுதிய ஒரு கவிதையை உள்வாங்குவதன் மூலம் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து அதன் கவித்துவத்தை உணர முடியும். விமர்சிக்க இயலும்.

‘மஞ்சணத்தி’ என்னும் இக்கவிதைத் தொகுப்பு கவிஞர் தமிழச்சியின் உலகத்தைக் காட்டுகிறது, உளவியலைக் கூறுகிறது. எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி என்னும் முந்தைய தொகுப்புகளிலிருந்து மாறுபட்டு இருந்தாலும் ஒரு தொடர்ச்சி இருப்பதை உணர முடிகிறது. அவருக்குள் மாறாமல் இருக்கும் உணர்வுகளை அறிய முடிகிறது. அவருக்குள் அழியாமல் வாழும் அவர் வாழ்ந்த கிராமத்தையும் நேர்கொண்ட நிகழ்வுகளையும்; தொகுப்பு முன் வைக்கிறது.

‘தனித்திருத்தல்’ தலைப்பில் மூன்று கவிதைகள் . மூன்றும் மூன்று விதமான மனப் போக்கைக் காட்டுகிறது.

ஒப்பனையின் பூச்சற்ற அதன்(தனிமையின்)

அகோரம் அதி அழகு முரண்பாடான சிந்தனை. ஒப்பனையின்மையே உண்மையான அழகு என்கிறார்.

ஒவ்வொரு காலையும்

விடிகின்றது

தனித்த இரவுகளின்

துயர் அடைந்த ஒட்;டடைகளை

இமைகளென விலக்கிய படி என ‘தனித்திருத்தல் - 2’ வில் தனித்த இரவுகளின் துயரத்தை வெளிப் படுத்தியுள்ளார். இரு பாலருக்கும் பொதுவாகவே தனித்த இரவு துயரளிக்கும் என்கிறார். ‘தனித்திரு’ என்று கூறிய வள்ளலாருக்கும் ‘தனித்திருத்தல்’ என்னும் கவிஞருக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

‘போன்சாய்’ தலைப்பில் வாழை மரம் பற்றி எழுதியுள்ளார். ‘அடுத்த வீட்டுக்குள் குலைத் தள்ளி’ னாலும் வாழையைத் துணிந்து பரந்த நோக்குடன் வளர்க்க வேண்டும் என்கிறார். அதுவே பலன் கொடுக்கும் என்கிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் பலன் தராதது ‘போன்சாய்’. கவிதையின் தலைப்பிலேயே குறிப்பால் உணர்த்தியுள்ளார்.

ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை

எடுத்து உண்ட எத்தியோப்பியக்

குழந்தைகளின் பட்டினியைத்

தொலைக்காட்சியில் பார்த்த பின்பும்

கலவி இன்பம் துய்த்த

அந்த இரவிற்குப் பின்தான்

முற்றிலும் கடைந்தெடுத்த

நகரவாசியானேன் நான் என்னும் ‘கலவி’ கவிதை மூலம் மனசாட்சியும் மனத்தில் ஈரமும் இல்லாதவரே நகரவாசியாக இருக்க முடியும் என்கிறார். தானும் விதி விலக்கல்ல என்கிறார். எத்தியோப்பியாவில் நிலவும் பட்டினிக் கொடுமையையும் காட்டியுள்ளார்.

நகரம் விரிந்து கிராமம் சுருங்கி வந்தாலும் நகரத்தில் வாழ்பவர்கள் பட்டணத்துக்குக் குடி பெயர்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் மாநகரில் அடுக்கு மாடிகள் பெருகி வருகின்றன. ‘பகுத்தல்’ கவிதை அடுக்கு மாடியில் குடியிருப்பவர்கள் பற்றியதாக உள்ளது.

குடியிருப்பில்

அவரவர் கதவு இலக்கம்

அவரவர் மின்கட்டணப் பெட்டி

அவரவர் வண்டி நிறுத்துமிடம்

அவரவர் பால், தபால் பைகள்

எல்லாமும் பிரித்தாயிற்று

திடீரென அடைத்துக் கொள்ள -

எப்படிப் பிரிக்க அவரவர் சாக்கடையை? என எழுப்பியுள்ள சந்தேகம் அடுக்குமாடி குடியிருப்போரிடையே ஓர் அதிர்வை ஏற்படுத்துகிறது. மக்கள் சுயநலமிகளாக சுருங்கிப் போனதை விமரிசிக்கிறது. பொதுநலமும் அவசியம் என்கிறது.

தமிழரின் கலைகள் தொன்மை வாய்ந்தவை , பெருமைக்குரியவை . கலைகள் காலப்போக்கில் அழிந்து வருகின்றன அல்லது மாறி வருகின்றன. கழைக் கூத்தாடிகள் ஜிகினா உடையில் கோவில் திருவிழாகளுக்கு வந்து விட்டதையும் சர்க்கஸ் கோமாளிகள் திருமண வரவேற்புக்கு வந்து விட்டதையும் பூசாரிகள் விளக்குப் போட வந்து விட்டதையும் கூத்துக் கட்டுபவர்கள் திரைப்பட நடிகர்களாகி விட்டதையும் கண்டு மனம் வருந்தி எழுதிய கவிதை ‘தொலைதல்’. கலை மீதான பற்றும் கலைஞர் மேலான அக்கறையும் கவிஞருக்குள்ளிருந்து வெளிப்பட்டுள்ளது. கவிஞரின் கலை உணர்வையும் காட்டியுள்ளார்.அறிமுகமற்றவர்களுடன் உரையாடலை எப்படித் தொடங்குவது இந்த நகரத்துக் கூச்சத்துடன்? என முடியும் ‘அவஸ்தை’ க் கவிதையும் சிந்திக்கத்தக்கதே. கிராம மக்களிடையே காணப்படும் ஓர் எதார்த்தம்,பாசாங்கற்ற பழகும் தன்மை, உறவு சொல்லி அழைத்துப் பேசும் பண்பு நகரத்தவரிடையே இல்லை என்பதையே உணர்த்தியுள்ளார். துக்கத்தைப் பகிர மனம் விரும்பினாலும் கூச்சம் தடுக்கிறதே என்று கவலைப் பட்டுள்ளார்.

குழந்தைகள் உலகம் வித்தியாசமானது. அலாதியானது. குழந்தைகள் இயல்பாகவே அறிவாளிகள் . இய்றகையாகவே திறமையாளர்கள். அவர்கள் உலகத்தில் பெற்றோர்கள், பெரியவர்கள் ஆக்கிரமித்து வளர்ச்சியை, முன்னேற்றத்தைத் தடைப்படுத்தி வருகின்றனர். பெற்றோர்களின் எண்ணங்களை , திட்டங்களை , இலட்சியங்களை பிள்ளைகளிடத்தில் திணிக்கின்றனர். ‘பூச்சாண்டி’ கவிதையில் திணித்தல் செய்யும் பெற்றோர்களைத் தாக்கியுள்ளார்.

குழந்தைகளுக்கான சிரிப்பில் தங்கள்

அர்த்தங்களைத் திணித்தும் என்னும் வரிகளில்; கவிஞரின் தனித்துவமும் கவித்துவமும் முன்னிற்கிறது.

கவிஞர் தமிழச்சிக்கு அவர் அப்பா தங்க பாண்டியன் மீது அளவற்ற அன்பு. அபரிதமான பிரியம். ஒவ்வொரு தொகுப்பிலும் ‘அப்பா’ பற்றிய பதிவுகள் இருக்கும். இத்தொகுப்பிலும் உண்டு ‘வளர்தல்’ கவிதை.

இரண்டு நாள் எடுத்தல் இல்லாததால்

இலேசான முரட்டுக்களையோடு மரணித்திருந்த

அப்பாவின் மூட்தாடியோ

எனக்கு ஒரு போதும் உணர்த்தியதில்லை இக்கவிதையில் அப்பாவின் முட்தாடியை எழுதியுள்ளார். அப்பாவின் மரணம் அவருக்குள் ஏற்படுத்திய பாதிப்பை உணர்த்தியுள்ளார். ஆனால் முட்தாடி எதுவும் உணர்த்தவில்லை என்கிறார். அதற்கு முன்னர் முல்லைக் கனி நாடாரின் ‘வெண்தாடி’ உணர்த்தியது என்கிறார். இளம் பிராயத்து அனுபவங்களை சுட்டிக் காட்டியுள்ளார்.

வீடற்றவர்கள், ஊரற்றவர்கள், நாடற்றவர்கள் என பாதிக்கப்;பட்டவர்களுக்காக ‘குரல்’ கொடுப்பது வழக்கம். கொடுப்பதை சிலர் கடமையாகக் கொண்டுள்ளார்கள். சிலர் ‘சடங்கு’ ஆகக் கொண்டுள்ளார்கள். எட்ட வேண்டியவர்களுக்கு எட்டியதா என்று கவலைப்படுவதில்லை. எட்டியவர்களும் நிறைவேற்ற வேண்டுமே என்று எண்ஹணுவதுமில்லை. ‘குரல்’ கவிதையில் கவிஞர் எழுப்பியுள்ளது கவனிப்பிற்குரியது.

பேச்சுவார்த்தையில்

பேசுவது குறித்து

அனைவரும்

பேசிக் கொண்டிருக்கிறார்கள் பேசுபவர்களை , பேசி வருபவர்களை , பேசப்போகிறவர்களை ‘பேசி’யுள்ளார். ‘ஏசி’யுள்ளார். ‘கொதிசுவை’ யில் நந்தி கிராமத்து மக்களுக்காக கவிஞர் ‘குரல்’ கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 கவிஞரின் இரண்டாம் தொகுப்பான ‘வனப் பேச்சி’யில் வனப்பேச்சி ஒரு முக்கிய அங்கம். ‘வனப்பேச்சி’யை மையமாக வைத்தே கவிதைகள் உருவாக்கப்பட்டிருந்தன. கவிஞரின் மனாட்சியாக, ஒரு குறியீடாக, பூடமாக ‘வனப்பேச்சி’யைக் காண முடிகிறது. இத்தொகுப்பிலும் ‘வனப்பேச்சி’யை வலம் வரச் செய்துள்ளார். ‘பெருநகர்ப் பரணி’ வனப்பேச்சியின் நகரப் பிரவேசத்துடன் தொடங்குகிறது. வனப்பேச்சியின் நகர அனுபவத்தைக் கூறுகிறது. ‘பாலைக்கலி 2’ வும் வனப்பேச்சியின் நகர் வலத்தையே காட்டுகிறது.

பேச்சியின் கவுச்சியில்

பெருநகரமே மணந்தது என்கிறார். அப்பாவிற்கு அடுத்ததான ஆறுதல்

அவளின் அழுக்குப்படிந்த

அந்த உள்ளங்கைதான் என ‘பாலைக்கலி 1’ல் வனப்பேச்சியுடனான தொடர்பை, உறவைக்; காட்டியுள்ளார். ஒரு தாயாகவும் கண்டு சிலிர்க்கறார். அவள் தாய்மையைக் கண்டு வியக்கிறார்.மெச்சுகிறார். கிராமத்தின் பன்முகங்களின் ஒரு முகமாக ‘வனப்பேச்சி’யைச் சித்தரித்துள்ளார்.

புறநானூற்றில் மரத்தைத் தோழியாக , சகோதரியாக பெண்கள் பாவித்து உரையாடிய பாடல்கள் உண்டு . ‘மஞ்சணத்தி மரம்’ கவிதை அவ்வகையிலேயே அமைந்துள்ளது. தன்னின் ஒவ்வொரு பருவமும் மஞ்சணத்தி மரத்தோடு பினைந்துள்ளதைக் காட்டியுள்ளார்.

தாயிடமும் பகிராத

என் மொட்டவிழ்ப்பை

தாழ் சடையின் கர்வத்தை

உன் தண் நிழலில் தலை சாய்த்த

தனிமையுடன் நகர்ந்தது

என் இளம் பரும் என்பது ஓர் எடுத்துக்காட்டு.தாயினும் மேலாக மரத்தைக் கருதியுள்ளார்.’என் ஆதித்தாயே’ என்றும் அழைத்துள்ளார்.

என் துரோகத்தின் வலி சுமக்கும்

உன் முனை உடைந்த முட்கள்.

என் ரகசியங்களின் போதை தரும்

கள் ததும்பும் உன் பூக்கள்.

என் ஆசைகளின் ருசி அறியும்

தேன் உதிர்க்கும் உன் பழங்கள் என்னும் வரிகளில் மரத்துக்கும் கவிஞருக்கும் உள்ள நெருக்கத்தைக் கூறியுள்ளார். மரத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திப் பேசியுள்ளார். மனிதனாக மரத்தை மதித்துள்ளது பாராட்டுக்குரியது .ஒரு பெண்ணாக ‘மஞ்சணத்தி’யை பார்த்துள்ளார். ‘ஒரு நுhற்றாண்டு நுகத்தடி’யில் வனப்பேச்சிக்கும் மஞ்சணத்தியே பிடிக்கும் என்கிறார்.

‘வஞ்சிக்காதை’ வஞ்சிக்கப்பட்ட ஓரினத்தின் காதை.

தனித்த ஏவாளாய்த்

தன் இருப்பை நிலை நிறுத்த

நிழல் தரும் வன்னி மரம்

இலையும், கனியும்

இனி எமக்கு வேண்டாம்

சுதந்திரத்தின் நிர்வாணம் போதும் குறியீடு , தொன்மம் இரண்டையும் ஒரு சேர கையாண்டு சுதந்திரமே தேவை என்கிறார். ‘நிசாந்தினியின் நீண்ட காதணி’யும் பதுங்கு குழியின் பயங்கரத்தைக் காட்டுகிறது. ஈழத்தமிழர்களின் நினைவிற்காகவே எழுதப்பட்டது ‘வெந்து தணிந்தது காடு’ .

வரலாற்றின் எந்தப்புதை மணலாலும்

விழுங்க முடியாத

இந்த அவலத்திற்குப் பின்பும்

அடுத்த வேளை சாப்பிடத்தான் வேண்டியிருந்தது என்னும் வரிகளின் மூலம் இதயத்தில் வலியை ஏற்படுத்தியுள்ளார். சாப்பிட முடியாமலே ஒவ்வொரு அடுத்த வேளையும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

‘மழையும் மழைசார் வாழ்வும்’ பகுதியில் மழைத் தொடர்பாக உள்ளன 25 கவிதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக பொழிந்துள்ளது.

ரொட்டியும் ,அடுப்பும்

உலர்தரையும் இருந்தால்

எழுதலாம்

நனையாத காகிதத்தில்

‘மழைச் சனியினை’ என்னும் கவிதைத் தனித்து காணப்படுகிறது. உணவில்லாத போது மழையை ரசிக்க முடியாது என்கிறார். அதிகாரம் படைத்ததாகவும் கோபக்காரன் என்றும் மழையை உருவகப் படுத்தியுள்ளார்.

மழை குறித்த அறிவிப்பு

மழை பற்றிய பேச்சு

மழைக்கான ஏக்கம்

மழை தரும் துக்கம்

மழையைப் பதியும் எழுத்து -

எதிலும் இல்லை ‘மழை’ என்றெhரு கவிதை. கவிஞரின் மழை பற்றிய கவிதைகளில் ‘மழை’ உண்டு. மழையாய் மனத்தைச் சில்லிடுகிறது.

மனக் கிளையின் கூடொன்றை

மழை அடித்துச் சென்றது

வீடெங்கும்

விட்டுச் சென்ற குஞ்சுகள் - இதில் மழையும் இருக்கிறது. கவிஞரின் மனதும் இருக்கிறது.

கக்கத்தில் இடுக்கினாலும்

மழையைப் பார்த்தவுடன்

மலர்ந்து தாவுகின்றது

குடைக் குழந்தை என்பது ரசிப்பிற்குரியது. படிமம் சிறப்பு.. ஒரே தொகுபில் மழை குறித்த 25 கவிதைகள் கடந்து முடித்த போது ‘அடை மழை’யில் அகப்பட்ட உணர்வை உண்டாக்கியது.

மழையில் நனையச் செய்தவர் வெளியிலும் உலர வைத்துள்ளார்.

வாக்கப்பட்டுப் போகும் இடத்தில்

கியாஸ் அடுப்பு

பற்றிய கனவுகளுடன்

வந்து போகின்றது

வறட்டி தட்டுவதற்கு வாகான

ஒவ்வொரு வெயிற் காலமும் என வெயில் குறித்து 12 கவிதைகள்.

கடுமையான வசவுடன்

கால் பொசுக்க

வாசல் கூட்டும் பொம்மக்காவைப் போய்

கால் சுற்றும் பூiனாயய்க்

கொஞ்சுகிறது இந்த வெயில் கடுமையான வெயிலையும் இனிமையாக எளிமையாகக் கூறி வெப்பத்தைத் தணித்துள்ளார்.

திண்பதற்கு என்ன வாங்கி வந்தாய்

என்று ஓடி வரும் குழந்தைகளிடம்

எப்படிக் கொடுப்பது

சில்லுக் கருப்பட்டியில் உருகி ஓடும் வெயிலை? என்பதிலும் ரசனை உள்ளது. வெயிலை மையப்படுத்தி எழுதியவையாயினும் கவிஞருக்குள் மையமிட்டுள்ள கிராம நினைவுகளே சூரிய ஒளியாய் வெளிப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும்

வெயில் கொளுத்தும்

என் கிராமத்துக்குப் போகிறேன் நான்

வியர்வை, வெட்கை, புழுக்கம் என

வெயிலுக்கான அர்த்தத்தினை

இனையதள அகராதியில்

அறிந்துகொள்கிறாள ;என ;மகள்

என்னும் இறுதிக் கவிதைத் தலைமுறை மாற்றத்தத்தையும் வெயிலை விரும்பும் கவிஞரையும் அறியச் செய்கிறது.

தமிழ்க்கவிதை மரபுடன் ஆங்கிலக் கவிதை மரபையும் நன்கு அறிந்தவர் கவிஞர். ஆனால் அவர் கவிதையின் தளம் மாறாமலே உள்ளது. அவரின் கிராம வாழ்வு அவருக்குள் ஆழமாக , அழுத்தமாக வேரு்ன்றியுள்ளதைக் கவிதைகள் காட்டிச் செல்கின்றன. நகரத்துக்குள் வாழ்ந்தாலும் கவிஞர் அன்னியமாகவே தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார். கிராமத்தை மறக்க முடியாத மனம், நகரத்தை ஏற்றுக் கொள்ள இயலாத உள்ளம் .இவை இரண்டுக்குமான போராட்டமே கவிஞரின் நிலை.பெண்ணியத்தை புறந்தள்ளி மண்ணியத்தையே முன்னிறுத்தியுள்ளார். படிமம், குறியீடு பயன்பட்டிருந்தாலும் கவிதைகள் புரிதல் தன்மையைக் கொண்டுள்ளன. பூடகமாகவும் பேசியுள்ளார். தமிழ்க் கவிதை உலகில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு தனித்த பாதையில் சென்று கொண்டுள்ளதை ‘மஞ்சணத்தி’ உறுதிச் செய்கிறது. தமிழச்சி தங்கபாண்டியனுக்குள் ஒரு கவிஞர் ஓயாமல் இயங்கிக் கொண்டடிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது. அவர் கவிதைப் பயணம் வரவேற்பிற்குரியது.

 வெளியீடு:  உயிர்மை பதிப்பகம், 11-29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600018

 விலை ரூ190

-  பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It