என்னுடைய பெயர் ஆறுமுகம். வெறும் ஆறுமுகம் என்றோ, மிஸ்டர் ஆறுமுகம் என்றோ, திருவாளர் ஆறுமுகம் என்றோ எப்படிவேண்டுமானாலும் அழைக்கலாம். இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயமில்லை. மனிதர்களாகிய உங்களுக்கோ நிறைய வேலைகள். விசேஷமாக கிடைத்த அறிவைப் பயன்படுத்தி நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. வெற்றிகளைக் குவிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மத்தியில் என் பேச்சை வேறு கவனிக்கிறீர்களே இதுவே என் பாக்கியம்.man

இந்தக் கதை சமீபத்தில் இறந்து போன நாராயணன் சார் பற்றியும், ஸ்டீபன் என்கிற மோசக்காரப் பூனையையும் பற்றியது. ஸ்டீபனை இவ்வளவு கடுமையான வார்த்தைகளால் சாடியதால் அதை என்னுடைய எதிரியோ என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஒரு பூனை எனக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்? எதிரி என்றால் சமபலம் வேண்டும். ஒரு எலியால் என்றைக்கும் ஒரு பூனையை வேட்டையாடி விழுங்க முடியாது இல்லையா? அதன் குணசேஷ்டையை வைத்துத்தான் அப்படிச் சொன்னேன். பக்கத்து வீட்டில் வசிக்கும் கிறிஸ்துவர்கள்தான் அதற்கு இந்தப் பெயரைச் சூட்டியிருந்தார்கள். அது அவர்களுடைய செல்லப்பிராணி. பூனைகளுக்கு உணவிடுவதுபோல எலிகளுக்கும் நீங்கள் ஏன் உணவு வழங்கக்கூடாது? இந்தச் சங்கிலியில்தான் ஏதோ சிக்கல் விழுந்து விட்டது; அதர்மம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு கணமும் எத்தனையோ உயிர்கள் ஜெனிப்பதும், மரணமடைவதும் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும் மனிதர்களைப் பொறுத்துதான் இது பிரச்சனைக்குரியதாக மாறிவிடுகிறது. நாராயணன் சாரின் மரணம் குறித்துக்கூட பலவித அபிப்பிராயங்கள் சொல்லப்படுகிறது. தற்செயலாக நடந்த விபத்து என்றும், தற்கொலைதான் என்பது போலவும். பைத்தியம் முற்றி தற்கொலை செய்துகொண்டாராம்! அவரை அருகிலிருந்து கவனித்து வந்த எனக்கும் கூட இது பிடிபடவில்லை. சில பொழுது அது ஒரு கொலையோ என்றும் ஐயம் எழுகிறது.

நாராயணன் சார் ஒரு கவிஞர். ஓவியங்களிலும் அவருக்கு ஈடுபாடுண்டு. இயற்கையின் ஆன்மாவுக்கு மிக நெருக்கத் திலிருக்கும் வண்ணங்களையும், இசையையும் விட்டுவிட்டு இப்படி மனிதர்களை சுமந்துத்திரியும் வார்த்தைகளைக் கட்டிக்கொண்டு மாராடிக்க வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுவார். அலுவலகம் போய் வந்த பின்பு ஓய்வு நேரங்களில் அவர் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். நண்பர்களுடன் இலக்கியம் குறித்து பேசிக்கொண்டிருப்பார். சில பொழுது விஸ்கி துணையிருக்கும். தூரமாக இருந்து கவனித்துக்கொண்டிருப்பேனே ஒழிய இவர்கள் பேசுவது என்னவென்றே எனக்குப் புரிவதில்லை. ஸ்டீபனோ இதிலெல்லாம் பட்டுக்கொள்ளாமல் இதைவிட வேறு ஏதோ பெரிய காரியம் இருப்பது போல போய்விடும்.

நாராயணன் சாருடையது பழைய வீடு. அவருடைய அப்பா ஓய்வு பெற்ற வரலாற்றாசிரியர் என்பதற்கும் இந்த பழமைக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. மாடியிலிருந்த இரண்டு அறைகளில் ஒன்றை சார் படிப்பறையாக பயன்படுத்தி வந்தார். அவருடைய பள்ளியறையும் அதுதான். முதன் முதலாக நாராயணன் சாரை இந்த அறையில் பார்த்தபோது பேராபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டிருந்தேன். ஸ்டீபன் என்னைத் துரத்திக்கொண்டுவர அவருடைய அறைக்குள் ஓடி புத்தகங்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டேன். அப்போது அறைக்குள் நாராயணன் சார் நாற்காலியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். என்னை துரத்திக்கொண்டுவந்த ஸ்டீபனோ அவரைப் பொருட்படுத்தாமல் அலமாரியின்மேல் ஏறி என்னைத் தேடியதில் புத்தகங்கள் சரிந்து விழுந்தன. திடுக்கிட்டு திரும்பியவர் அங்கே ஸ்டீபனைக் கண்டார். புத்தகம் விழுந்த சப்தத்தில் அதுவும் மிரண்டுதான் போயிருந்தது.

அவர் கேட்டார், “ஏன் புத்தகங்களை தள்ளுகிறாய், என்ன வேண்டும்?’’, அலமாரியிலிருந்து ஸ்டீபன் கீழே குதித்து, சற்று தயங்கியபடி மேஜைக்கு அருகில் போய் நின்று அவரைப் பார்த்தது. திரும்பவும் அவர் கேட்டார், “உனக்கு என்ன வேண்டும்?’’, “ரொம்ப பசிக்கிறது, ஒரு எலி வேண்டும்’’ என்றது. “இங்கே இருக்கிறதா?’’, “ஆமாம் இந்த புத்தகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது’’, “அதை விட்டுவிடு உனக்கு வேறு உணவு தருகிறேன்’’ என்ற நாராயணன் சார் மேஜைமேல் அவருக்காக கொண்டுவந்து வைத்திருந்த ஆர்லிக்ஸ் கலந்த பாலை எடுத்து கீழே ஊற்றினார். ஸ்டீபன் அதை நக்கிக் குடித்துக்கொண்டிருந்தது.

நான் அச்சம் தெளிந்தவனாக கீழே இறங்கி வந்து, மேஜையின் மேல் ஏறி நின்று சாரைப் பார்த்தேன். முன் கால்கள் இரண்டையும் தூக்கி “நன்றி’’ என்றேன். பாலைக் குடித்து முடித்த ஸ்டீபன் மேஜைக்கு ஏறிவந்து ‘என்ன தைரியம்!’ என்பதுபோல் என்னை முறைத்துப் பார்த்தது. பயந்துபோன நான் நடுங்கியபடி அவருடைய கைக்கருகில் போய் ஒடுங்கிக் கொண்டேன். “நீ பயப்படாதே, அது உன்னை ஒன்றும் செய்யாது’’ என்றார். “எப்போதுமா?’’, “ஆமாம் இனி எப்போதுமே உன்னைத் தொந்தரவு செய்யாது, நாம் மூவரும் நண்பர்களாகிவிட்டோமில்லையா?’’

ஸ்டீபனுக்கோ ஏமாற்றம். “அது எப்படி முடியும்?’’ என்றது வருத்தம் தொணிக்க.

“ஏன்?’’ என்றார் அவர்.

“உணவுக்கு நான் எங்கே போவேன்? எலிகளை வேட்டையாடுவதை விட்டால் வேறு என்ன தொழில் தெரியும் எனக்கு?’’

“இந்த எலியை மட்டும் விட்டுவிட்டு, வேறு எலிகளை வேட்டையாடிக்கொள். உன் பெயரென்ன?’’ என்று கேட்டார் அதனிடம்.

“ஸ்டீபன்’’ என்றது.

“நல்லது’’ என்னைப் பார்த்து, “உன்னுடைய பெயர்?’’ என்றார்.

“எங்களுக்குத்தான் யாருமே பெயர் வைப்பதில்லையே?’’ என்றேன் வருத்தத்துடன்.

“சரி உனக்கு நான் பெயர் வைக்கிறேன்’’ என்று யோசித்தவர், “ஆறுமுகம்’’ என்றார்.

“எளிமையாக இருக்கிறது, இது போதும் எனக்கு’’ என்றேன் நான்.

“நீ ஏன் இன்னும் வருத்தத்துடன் இருக்கிறாய்’’ என்று கேட்டார் ஸ்டீபனைப்பார்த்து.

“நீங்கள் கேட்டுக்கொண்டதுபோல நான் இந்த எலியை சாப்பிடப் போவதில்லை; ஆனால் துரத்தவேண்டும்; அது அகப்படும் கணம்வரை விரட்டவேண்டும்’’

“சரி, உன் இஷ்டம். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் அதன் மரணத்திற்கு நீ காரணமாகக்கூடாது சரியா?’’

“சம்மதிக்கிறேன்’’ என்றது ஸ்டீபன்.

இப்படியாக நாங்கள் நண்பர்களானோம்.

நாராயணன் சார் ஒருநாள் பூனையைப் பற்றி முன்பு அவர் எழுதியிருந்த கவிதை ஒன்றை எங்களுக்கு வாசித்துக் காண்பித்தார்.

‘ஒரு பறவையைப்போல

லேசாக இருக்கிறது பூனை

பந்து தக்கையாகவும்

காற்றைபோல நழுவிச்செல்லுவதாகவும்

இருக்குமெனில்

லாவகமாக உருட்டி விளையாடுகிறது

கைகளில் வைத்து சுழற்றுகிறது

 

சுவர்மேல்

வேகமாக நடந்துவந்து

தாவி குதித்து

எளிதாக கலந்து விடுகிறது

என் சுவாசத்தில்

 

அனாதரவாக விடப்பட்ட

பந்தைநோக்கி

மீண்டும் நழுவிச்செல்கிறது’

ஸ்டீபன் உற்சாகமாகி “அற்புதம்’’ என்றது.

நான் சாரிடம் கேட்டேன்.

“பூனைகள் எந்த கடவுளுக்காவது வாகனமாக இருந்திருக்கிறதா? புராண இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கிறதா?’’

சற்று யோசித்துவிட்டு,

“எனக்குத் தெரிந்தவரை இல்லை’’ என்றார்.

ஸ்டீபனின் முகத்தில் சோகரேகை தோன்றியது.

“உங்களுக்கு கடவுளோடு சம்மந்தமில்லை பிசாசுகளோடுதான்’’ என்றேன் நான்.

ஒரு எலி கிண்டல் செய்யும் அளவுக்கு நாம் ஏன் தாழ்ந்து போனோம் என்று நினைத்ததோ என்னவோ, ஸ்டீபன் வருத்தத்துடன் படுத்துக்கொண்டது.

அதை குஷிபடுத்தும் நோக்கில் நாராயணன் சார் சொன்னார்,

“உனக்கு பந்து ஒன்று வாங்கித் தருகிறேன். கவிதையில் உள்ளது போல நீ விளையாடலாம், காற்றாகி விடலாம்’’

ஸ்டீபன் தெம்புடன் எழுந்து கொண்டது. அதன் கண்களில் பிரகாசம்.

இப்படித்தான் அந்த விபரீதம் தொடங்கியது. அவர் பந்து வாங்கித் தருவதாக சொன்னார் என்பது நிஜம் என்றாலும் அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போதெல்லாம் வெறுங்கை யோடுதான் திரும்பி வந்தார். ஸ்டீபன் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்த அவர் மறந்தபடியே இருந்தார். அவருடைய யோசனைகளெல்லாம் வேறொன்றில் குவிந்திருந்தது. தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணின்மேல் அவர் காதல் வயப்பட்டிருந்தார். பிறகென்ன பக்கம் பக்கமாக காதல் கவிதைகள் குவிந்தன. இந்த இரண்டு தனித்தனி அற்புதங்களும் ஒரே நேரத்தில் அவர் பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கையில் பந்து பற்றி அவருக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது.

ஏமாற்றத்துடன் வலம் வந்த ஸ்டீபனோ இதை ஈடு செய்ய வேறொரு மார்க்கத்தை கண்டுபிடித்தது. நாராயணன் சார் அலுவலகம் போன பின்பு அவருடைய அறைக்குச் சென்று மேஜையின்மேல் வைக்கப்பட்டிருந்த உலக உருண்டையை உருட்டிப்பார்த்தது. இரண்டு பக்கமும் மாறிமாறி சுழற்றி மகிழ்ந்தது. இந்த விளையாட்டு தினமும் நடந்திருக்கவேண்டும். ஒரு நாள் எதேச்சையாக இதை நான் பார்க்க நேர்ந்தபோது அதனிடம் எச்சரித்தேன். நாராயணன் சாரின் அனுமதியில்லாமல் இதை நீ தொடக்கூடாது என்று. அதற்கு கோபம் வந்துவிட்டது.

“பந்து வாங்கித்தருவதாகச் சொல்லிவிட்டு எத்தனை நாட்களாக என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்’’

“அவருக்கு மறந்து விடுகிறது’’

“மறக்கவில்லை, இவர்கள் பேசும் இலக்கியம் போல வெத்து வேட்டு...’’

“நான் அதிர்ந்து போனேன். “ஸ்டீபன் நீ எல்லை மீறிப் பேசுகிறாய். இன்றைக்கு சார் வரட்டும் சொல்கிறேன்...’’

ஸ்டீபன் என்னைப் முறைத்துப் பார்த்து.

“சொல்லிவிடுவாயா?’’ என்றது.

“சொல்வேன் எனக்கென்ன பயம்?’’

“அந்த ஒப்பந்தத்தால் குளிர்விட்டுப் போய்விட்டது உனக்கு. நீ இருக்கும் வரைதானே இந்த ஒப்பந்தமெல்லாம்’’ என்று சொல்லி முடிக்கும் முன்பே அதன் நோக்கம் என்னவென்று புரிந்ததால் அவ்விடத்தைவிட்டு அகன்று வெளியே ஓடினேன். ஸ்டீபன் எனக்குப் பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்தது. மாடியிலிருந்து படிவழியாக கீழே இறங்கி, வரவேற்பறையின் ஓரத்தில் சுவரை ஒட்டி ஓடி, பின்பக்கமிருந்த குளியலறைக்குள் புகுந்தேன். அதுவும் பின்னாலேயே வந்துவிட்டதால் தண்ணீர் வெளியேறும் துளை வழியாக தப்பிவிட நினைத்து உள்ளே புகுந்தேன். துரிதமாக ஓடிவந்த ஸ்டீபன் தன் கால்களால் வாலை மிதித்துக்கொண்டது. வாலின் பாதிக்கு மேல் அதன் காலடியில். சிரமத்துடன் இழுத்துப்பார்த்தும் ஒன்றும் பலிக்கவில்லை. ஸ்டீபனின் கால் நகம் ஒன்று வாலின் மேல் அழுத்திக்கொண்டிருந்தது.

தப்பிக்கவும் முடியாமல் அகப்படவும் முடியாமல் என்ன நிலைமை இது? எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் அப்படியே வலைக்குள்ளேயே படுத்துக் கிடந்தேன். ஸ்டீபனும் அசைந்தபாடில்லை. அசமந்தமான வேளையில் சட்டென்று உருவிக்கொண்டு ஓடிவிடலாமென்று முயன்ற கணத்தில்தான் இன்னும் அது அழுத்தமாக நின்றது. நகம் பட்டதில் வலிவேறு.

“ஸ்டீபன் என்னை விட்டுவிடு’’ என்றேன் அதனிடம்.

“உன்னை விடப்போவதில்லை’’ என்றது ஆத்திரத்துடன்.

“என் வால் மட்டும்தானே உன்னிடம் இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?’’

“இப்போது கடித்துத் துப்பப்போகிறேன்’’ என்றது இரக்கமற்று.

கிலிபிடித்துக் கொண்டது எனக்கு. இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை.

“சரி நான் இப்போது என்ன செய்யவேண்டுமென்கிறாய்?’’

“அந்த உருண்டை விஷயத்தையோ, வெத்துவேட்டு என்று சொன்னதையோ நீ நாராயணன் சாரிடம் சொல்லக்கூடாது’’

“சரி நான் சொல்லவில்லை’’

“அப்படி சொன்னாயானால் அடுத்த நிமிஷமே எனக்கு இரையாகிவிடுவாய், சம்மதம்தானே’’

“சம்மதம்தான்’’

இப்படித்தான் அன்று நான் அந்த பேராபத்திலிருந்து தப்பித்தது. இல்லையென்றால் இப்போது வாலில்லாமல் திரிந்திருப்பேன்.

ஸ்டீபன் அத்துடன் நின்று விடவில்லை. உருண்டையை வெறுமனே சுழற்றிவிடும் விளையாட்டு சலித்துப் போனதால் அதை சுவாரஸ்யப்படுத்த வேறு ஒரு உத்தியைக் கையாண்டது. உலக உருண்டையில் ஒரு இடத்தைக் குறிவைத்துக் கொண்டு சுழற்றிவிடும். சுற்றும் போதே கூர்ந்து கவனித்து கையால் தடுத்து நிறுத்த, அது குறிவைத்த இடம் வந்திருந்தால் வெற்றி பெருமிதத்தில் நகத்தால் அந்த இடத்தில் ஒரு அடையாளமிடும்.

அறைக்குள் எங்கேயாவது ஒளிந்திருந்து இந்த விபரீத விளையாட்டை நான் கவனித்துக் கொண்டிருப்பேன்.

இந்த சமயத்தில்தான் அவருடைய காதல் விவகாரம் மோசமான ஒரு நிலைமைக்கு வந்திருந்தது. ஒவ்வொரு நாளும் எங்கேயாவது அழைத்துப் போகச் சொல்லி நச்சரிக்கிறாளாம். பெரிய ஓட்டல்களுக்கோ, சினிமாக்களுக்கோ தன்னுடன் வரவேண்டு மென்கிறாளாம். தாடியை எடுத்துவிட்டு தினமும் முகச் சவரம் செய்துகொள்ள வேண்டுமாம். நன்றாக ஆடை உடுத்திக்கொள்ளவேண்டுமாம். இதெல்லாம் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியதே தவிர சந்தோஷமான விஷயங்களாக இல்லை. இருந்தும் சொன்னார், “இதெல்லாம் சரியில்லைதான். ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடம் இருக்கிறது’’ என்று.

“அவள் ஒரு பெண் அதுதான்’’ என்றான் அவருடைய நண்பன் ஒருநாள்.

தவிர்க்கவே முடியாத ஒரு சம்பவம் போல அதுவும் நிகழ்ந்தேவிட்டது. நாராயணன் சார் ஒரு நாள் அந்த குளோப்பை கவனித்துவிட்டார். பெரும் அதிர்ச்சி அவருக்கு.

“இவ்வளவு கீறல்கள் எப்படி வந்தது இதில்?’’ என்றார்.

“எனக்குத் தெரியவில்லை’’ என்றேன்.

“ஸ்டீபனைக் கேட்டால் தெரியுமா?’’

“கேட்டுப்பாருங்கள்’’ என்று சொல்லி நழுவிவிட்டேன்.

அடுத்த நாள் ஸ்டீபனிடம் அவர் விசாரித்தார். அதுவும் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட மேலும் அவர் குழப்பத்தில் ஆழ்ந்து போனார். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கீறல்களினால் அவர் கலவரமடைந்தார் என்பதை கவனித்தேன்.

ஒரு நாள் மிகவும் சோர்ந்து போய் வீடு திரும்பினார். அவரை கழட்டிவிட்டுவிட்டு சோக்கு காண்பிக்கும் ஒரு தடியனுடன் அவள் ஒட்டிக்கொண்டுவிட்டாளாம். முன்பே அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும் மனம் உடைந்து காணப்பட்டார். நாடக பாணியில் சொல்வதென்றால் அவருடைய மனம் மட்டுமல்ல மேஜைமேலிருந்த குளோபும் கீழே விழுந்து உடைந்து போயிருந்தது.

‘ஸ்டீபனே! ஏ நம்பிக்கை துரோகியே! அந்த குளோபை உடைத்தே போட்டுவிட்டாயா’ என்று மனதிற்குள் திட்டினேன்.

நாராயணன் சாருக்கு கடுமையான ஜுரம் கண்டது. வீட்டிலேயே படுத்துக்கிடந்தார். தூங்கினால் மோசமான கனவுகள் வந்து தொந்தரவு செய்கின்றன என்றார் நண்பர்களிடம்.

“உடல் மட்டுமல்ல கனவு கூட தகிக்கிறது... எல்லாமே உருகுவது மாதிரி இருக்கிறது.... புத்தகங்கள், அலமாரி, மேஜை, உடைந்து போன குளோப்... இதில் அவளுடைய தொந்தரவு வேறு... என் படுக்கை அருகில் வந்து கைகளை பற்றிக்கொண்டு என் வயிற்றில் முத்தமிடுகிறாள்... அவளுடைய பெருத்த முலைகளை என் மார்பில் படரவிட்டு அழுத்தி அணைக்கிறாள். மூச்சு முட்டுகிறது... காதில் கிசுகிசுக்கிறாள் ‘சாகமாட்டாய்’ என்று...’’

“தூங்கவே அச்சமாக இருக்கிறது’’ என்றார். மருத்துவமனைக்கு சென்று வந்ததில் ஜுரம் நின்றுவிட்டது. ஆனால் அவருடைய மனம்தான் பிதற்றிக்கொண்டிருந்தது.

அவர் கேட்டார்.

“சிறு நீர்த்துளி இருக்கிறதே அது ஏன் உருண்டு நிற்கிறது? பரப்பு இழுவிசை... நம் கண்கள்? நிலா? சூரியன்? பூமி?... பூமி ஏன் உருண்டையாக இருக்கவேண்டும்? பந்தைப் போல தரையிலா அது உருண்டு செல்லப்போகிறது?’’

கண்கள் மூடி ஜுரத்தில் பிதற்றுவது போல சொன்னார்,

“நான் நினைக்கிறேன் பிரபஞ்சமே முழுமையற்ற ஒரு உருண்டை... இயற்கையிலுள்ள மற்ற எல்லாமே அதன் சாயலில்... இல்லை... ஒன்றைத் தவிர அது ஒன்றுதான் வேறு விதமாக இருக்கிறது... மனிதனின் அறிவு... அவனுடைய விஞ்ஞானம்... கணிதம்... ‘’

அவருடைய முகம் கடுமையாகிவிட்டது.

“முக்கோணங்கள், சதுரங்கள், உருளைகள் இயற்கையிலுள்ள பொருட்களின் சாரமாக இருக்கிறதென்கிறான் செசான்... முட்டாள்... கேண்டன்ஸ்கியின் சில ஓவியங்களைகூட கொளுத்தி விடலாம்... எப்படியோ பாஸ்க்கல் தப்பிவட்டான்... ஜோசியர்களோ ஸ்ரீ சக்கரங்களை வரைகிறார்கள்... பூமியின் தேகமெங்கும் சூன்யக்காரர்களின் நகக்கீறல்கள்... ‘’

ஆவேசத்துடன் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நான் பயத்துடன் விலகிப் போய் நின்று அவரைப் பார்த்தேன். இதற்குள் அவருடைய அம்மா வந்து அவரை திரும்பவும் படுக்கையில் கிடத்தி ஆறுதல் படுத்தினாள்.

அவருடைய உடல் தேறி வந்தது. வழக்கம்போல அலுவலகம் சென்று வந்தார்; புத்தகங்கள் வாசித்தார்; மொட்டை மாடியில் வானத்தைப் பார்த்தபடி மல்லாந்தவாக்கில் படுத்திருப்பார். மற்றவர்களுடன் குறைவாகவே பேசினார் என்றாலும் அவருடைய எண்ணங்கள் முழுவதும் வேறு எங்கோ நிலை பெயர்ந்திருந்ததை புரிந்து கொள்ளமுடிந்தது.

வழக்கம்போல நண்பர்கள் வந்தார்கள். மதுக்குப்பிகளுடன் உரையாடல் தொடங்கியது. அவருடைய பேச்சில் பிரபஞ்ச இசை, பேரன்பு, பேரறிவு என்றெல்லாம் புதியவார்த்தைகள் வந்து விழுந்ததில் அவருடைய நண்பர்களோ வியப்புடன் பார்த்தார்கள். விஞ்ஞான மனோபாவத்திற்கெதிரான அவருடைய பேச்சு அவர்களை நிலைகுலையச் செய்தது என்றே சொல்லவேண்டும்.

“மனிதனுக்குள்ள அறிவையும், விஞ்ஞானத்தையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் கடவுளைத் தவிர வேறு எதை நீ முன் வைக்கமுடியும்?’’ என்று அவர்கள் சினந்தார்கள்.

இந்த பகை பல நாட்கள் அவர்களுடைய உரையாடலில் தொடர்ந்து வந்தது.

ஒரு நாள் அவர்களுடைய போதை அதிகமாகி அந்த பகையும் விஸ்வரூபமெடுத்து நின்றது.

“ஆமாம்’’ என்று அவர் கத்தினார். “இந்த நாகரீக சீமான்களும், சீமாட்டிகளும், இந்தக் கடவுள்களும் இல்லாத ஒரு உலகத்தில் வாழ ஆசைப்படுகிறேன் அதுதான் என் கனவு, கவிதை எல்லாம்’’

ஒருவன் சிரித்தான். சிகரெட் புகையை ஊதியபடியே அவன் சொன்னான், “அப்படியானால் இந்த உலகத்தை காலி செய்துவிட்டு இன்றே வெளியேறிவிடு... உன்னுடன் உன் கட்சிக்காரர்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கூட்டிச் சென்றுவிடு, ஜனநெரிசல் வேறு அதிகமாகிவிட்டது...’’

இந்த காரமான உரையாடல் கண்டு இன்னொருவன் சங்கடத்தில் சிரித்தான்.

நாராயணன் சாரும் இதை ஆமோதிப்பதுபோல,

‘ஆமாம், வெளியேறிவிடவேண்டும்’ என்று முணு முணுத்தார்.

எல்லாமே நிஜத்தில் நடந்துகொண்டிருக்க நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் நம்பினேன், இதெல்லாம் வெறும் பேச்சுதான், போதை அதிகமாகிவிட்டால் வீராப்பும் கூடித்தெரிகிறதென்று.

அவர்கள் சென்ற பிறகு நானும் விடைபெற்றுக்கொண்டேன்.

மறுநாள் பொழுது புலர்வதற்கு முன்பே ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு வேகமாக அவருடைய அறைக்கு சென்ற நான், அந்த விபரீதத்தைக் கண்டேன். மின் விசிறியில் தலை சிதறடிக்கப்பட்டு அவர் இறந்து கிடந்தார். அவருக்குப் பக்கத்தில் விழுந்திருந்த ஸ்டூலின் மேலும், சுவர்களிலும், தரையிலும், புத்தகங்கள் மேலும் ரத்தம் தெறித்து உறைந்திருந்தது.

Pin It