தலைமைக்குழுத் தோழர், “நாம்ப தொடங்குவம்” என்றார். “ஒரு பத்து நிமிஷம் பாப்பமே” என்றார் மாவட்டச் செயலாளர். “என்னாத்தப் பாக்கறது, அஞ்சி மணிக்கு கமிட்டின்னு போடறது, ஆறரை ஆயும் இன்னும் வரலன்னா; அவங்க வரும்போது வரட்டும் நம்ப இருக்கறவங்கவச்சி நடத்தினு இருப்பம்” என்றார் த.கு. 

ஏழுபேர் அடங்கிய குழுவில் இன்னும் இருவர் வரவேண்டியிருந்தது. வந்திருந்த தோழர்களை யோசனையுடன் பார்த்த மா.செ. நடவடிக்கைப் பதிவேட்டைப் புரட்டியபடியே, த.கு. பக்கம் திரும்பி, “தலைமை யாரப் போடறது தோழர்” என்றார்.  

“ஏன் நம்ப சோ.பு.வப் போடுங்களேன்” என்றார் த.கு. “என்னா தோழர்களே, இந்தக் கூட்டத்துக்கு தோழர் சோ.பு. தலைவரா இருக்கலாமா..”  

எல்லோரும் ஏகமனதாகத் தலையை ஆட்ட, “இப்படி வந்து உக்காருங்க தோழர்” என்று சோ.பு.வை அழைத்து, தனக்கும், த.கு.வுக்கும் இடையில் காலியாய் இருந்த இருக்கையில் அமரவைத்தார் மா.செ.  

பதிவேட்டின் உரிய பக்கத்தைத் திறந்து த.கு.வைப் பார்த்து, “அஜண்டாவச் சொல்லுங்க தோழர்” என்றார்.  

“வழக்கமான அரசியல் வேல அறிக்கை எல்லாம் வேணாம். இன்னைய கூட்டத்துக்கு ஒரே ஒரு சப்ஜக்ட்தான். குதிரைப் பிரச்சனைன்னு; அத மட்டும் போட்டு, அதுலியே உட்பிரிவா, அ-முகம், ஆ-வயிறு, இ-கால்கள், ஈ-வால், உ-சூத்துன்னு போட்டுக்கோங்க போதும்” என்றார் த.கு. 

ஆய்வுப் பொருளை எழுதிய மா.செ. பதிவேட்டை கூட்டத் தலைவர் பக்கமாக நகர்த்த, சோ.பு. அஜண்டாவைப் படித்துக் காட்டி, “இப்படியே இருக்கலாமா, வேற எதுனா சேர்த்தல் நீக்கல் வேணுமா” என்றார். எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, இப்படியே இருக்கலாம் என்பது போல தலையை ஆட்டினர். விவசாய அரங்கத் தோழர் மட்டும், “இது ஒண்ணே ஒண்ணுதானா, வேற எதுவும் இல்லியா” என்றார்.  

“இது சிறப்புக் கூட்டம் தோழர், இந்தக் கூட்டத்துல இது ஒண்ணு மட்டும்தான். வேற எதுனா இருந்தா, அத அடுத்த கூட்டத்துல பேசிக்கலாம். இதுல எதுனா சேர்த்தல் நீக்கல் இருந்தா மட்டும் சொல்லுங்க” என்றார் த.கு.  

வி.அ.தோ. சற்று யோசித்து, “ஒண்ணும் இல்லே, இப்படியே இருக்கலாம்” என்றார். 

சோ.பு., த.கு.வைப் பார்த்து “அப்ப ஆரம்பிச்சிடலாமா” என்றார்.  

த.கு. தலையசைக்க, “தோழர்களே, இந்தக் கூட்டத்தின் முக்கிய ஆய்வுப் பொருளான குதிரைப் பிரச்சனை பற்றிய கருத்துகளை, த.கு. தோழர் முன் மொழிவார்” என்றார். லேசாய் தொண்டையைக் கனைத்து, கால்கள் இரண்டையும் தூக்கி நாற்காலியிலேயே மடித்துப் போட்டு சப்பளமிட்டு அமர்ந்தவாறு, குதிரைப் பிரச்சனைப் பற்றிய தன் முன் மொழிவைத் தொடங்கினார் த.கு. 

“இயக்கப் பணிகளின் பொருட்டு, தலைமைக்குழுத் தோழர்கள் அவ்வப்போது வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்வதில் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டார்கள். அதாவது தோழர்கள் பயண நேரத்துக்குப் பேருந்துகள், தொடர் வண்டிகள் கிடைப்பதில்லை. அதில் அமர இருக்கைகள் கிடைப்பதில்லை. இதனால் பல மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதாகிறது. அப்படியே பயணம் செய்தாலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு நேரே சென்றடைய முடிவதில்லை. அங்கிருந்து நடந்தோ, அல்லது வேறு ஏதாவது வாகனங்களைப் பிடித்தோதான் செல்ல வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட வாகனங்களும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை என்பது முதலான பல்வேறு சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இச்சிக்கலைத் தீர்க்க கட்சிக்கு குதிரை ஒன்று வாங்குவது என்றும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் த.கு. தோழர்கள் இக்குதிரையைப் பயன்படுத்திக் கொள்வது என்றும், த.கு.வில் முடிவு செய்து மாவட்ட வட்டக் குழுக்களிலும் இதற்கான ஒப்புதலைப் பெற்றது. 

இக்குதிரை வாங்கு முகத்தான் குதிரைக்கான தேவைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு, ‘குதிரை நிதி’ என்கிற பெயரில் கட்சிக்குக் கணிசமாக ஒரு நிதியைத் திரட்டுவது எனவும், அந்நிதியில் முதல் கட்டமாக ஒரு நல்ல ‘சாதிக்குதிரை’யாகப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவது எனவும், இதற்குக் கிடைக்கும் ஆதரவு மற்றும் இதில் கிடைக்கப் பெறும் அனுபவங்கள், வரவேற்புகளைப் பொறுத்து, த.கு. தோழர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு குதிரை வாங்குவது எனவும் தொலைநோக்குத் திட்டம் தீட்டப்பட்டது. முதலில் தலைமைக்குழுத் தோழர்களுக்கு எனத் தொடங்கப்படும் இத்திட்டம், படிப்படியாக கீழ் கமிட்டிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அணிகளுக்கு நம்பிக்கையூட்டப்பட்டது. தலைமைக்குழுவின் இந்த ஏற்பாட்டிற்கு அப்போதே சில மாவட்ட, வட்டக்குழுத் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ஒரு புரட்சிகர அமைப்பில் இருந்துகொண்டு, அரசு அதிகாரிகள் போலவோ, படைத் தளபதிகள் போலவோ குதிரைகளில் போய் இறங்கினால், மக்கள் நம்மை ஒரு மாதிரி பார்க்க மாட்டார்களா? அதிகார வர்க்கம் போல் கருத மாட்டார்களா? மக்களிடமிருந்து நாம் அந்நியப்பட மாட்டோமா?” என்று கேள்வி எழுப்பினார்கள். “மக்களோடு மக்களாகப் பழகி, அவர்களோடு இரண்டறக் கலந்து, அவர்கள் மத்தியில் பணியாற்றும் போதுதானே, மக்களுக்கும் நமக்கும் ஒரு பிணைப்பு ஏற்படும். மக்களும் நம்மீது நம்பிக்கை வைப்பார்கள்” என்று கருத்து தெரிவித்தனர். 

அப்போது தலைமைக்குழுத் தோழர்கள், “நீங்கல்லாம் எந்த யுகத்துல இருக்கறீங்க தோழர். நாம்பல்லாம் தகவல் புரட்சி நடந்துக்னு இருக்கற கணினி யுகத்துல இருக்கறம்ங்கறத ஞாபகத்துல வச்சிக்கோங்க. இந்த யுகத்துலபோய் இன்னும் கற்கால மனிதன் மாதிரியே, லொங்கு லொங்குனு நடந்து போய்க்னு இருந்தா, நம்பள யார் மதிப்பாங்க, மத்த கட்சிக்காரங்களப் பாருங்க; ஆளுக்கு ஒரு குதிர வச்சிக்னு. நெனச்சா நெனச்ச நேரத்துல டக், டக்குனு கம்பீரமா வந்து எறங்கறாங்க. மக்களும் அவங்க பின்னாலதான் போறாங்க. அதையெல்லாம் கொஞ்சமாவது நாம கணக்குல எடுத்துக்க வேணாமா? அவங்களை மாதிரி ஆளுக்கு ஒரு குதிர இல்லன்னாலும், கமிட்டிக்கு ஒரு குதிரையாவது இருக்கனுமில்ல. எதுவுமே இல்லாம இன்னமும் பத்தாம் பசலியா இருந்தா எப்படி? காலத்துக்கு ஏத்த மாதிரி நாம்பளும் மாறனாதான் கொஞ்சமாவது கட்சிய வளக்க முடியும். இல்லன்னா ஹைதர் அலி காலத்துல இருந்த மாதிரியே இன்னும் இருந்துக்னு இருக்க வேண்டியதுதான். அப்புறம் கட்சியும் வளராது, நம்பளும் வளர மாட்டோம்” என்றார்கள். 

இதே தலைமைக்குழுத் தோழர்கள், சில மாதங்கள் முன்பு, “மாவட்ட ஒன்றிய மட்டத்தில் வேலை செய்யும் தோழர்கள் சிலர் பேருந்தோ, தொடர் வண்டிகளோ இல்லாத கிராமங்களில் போய் கட்சிப் பணியாற்ற போக்குவரத்து பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே, சில முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டுமாவது, இது மாதிரி இடங்களுக்குச் சென்றுவர குதிரைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாமா?” என்று கேட்டபோது, “குதிரையா” என்று பதறி, அக்கோரிக்கைக்காக மிகவும் சத்தம் போட்டார்கள். “இது என்ன மனோபாவம் தோழர். குதிரையில போனாதான் கட்சி வேல செய்யமுடியும், இல்லன்னா முடியாதுன்றதுக்கு. நாமெல்லாம் மக்கள் தொண்டர்கள், மக்களுக்காக உழைக்கப் பிறந்தவர்கள்ன்ற எண்ணம் இருந்தா, இந்த மாதிரி சிந்தனைல்லாம் வருமா” என்றார்கள். 

அப்போது அப்படிச் சொன்னவர்கள், இப்போது இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்களே என்று தோழர்கள் யோசித்தனர். ‘ஒருவேளை தலைமைக் குழுவின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்திருக்கும் போலிருக்கிறது. அவர்களும் இதுபற்றி சிந்தித்து புதிய புரிதல்களுக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது. வாடகைக்கு அமர்த்துவதை விடவும் சொந்தமாகவே வாங்கிவடுவது என்ற முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. பரவாயில்லை. நல்ல முடிவுதான்’ என்று கருதிக் கொண்டார்கள். என்றாலும் இப்படிச் சொந்தமாகவே வாங்கினால் அதை வைத்து நம்மால் பராமரிக்க முடியுமா, செலவினங்களை எப்படி சமாளிப்பது, அன்றாடம் அதற்கு வேலையிருக்குமா என்கிற வேலைகளும் எழுந்தன. இதைவிட, தேவைப்படும்போது வாடகைக்கு அமர்த்திக் கொண்டால் போதாதா, பிரச்சனையில்லாமல் இருக்குமே என்றெல்லாம் கருத்தும் தெரிவித்தனர்.

எல்லாவற்றையும் கேட்ட தலைமைக்குழு தோழர்கள், வாடகைக்கு குதிரைகளை அமர்த்துவதில் உள்ள சிக்கல்களை உணர்த்தி, ‘நமக்குனு சொந்தமா ஒரு குதிர இருந்து அதுல கொடியக் கட்டிக்னு போறது எப்படி; அத வுட்டுட்டு, அப்பப்ப வாடகைக்கு அமர்த்திக்னு போறது எப்படி? சொந்தக் குதிரைனா நம்ப நேரத்துக்கு நம்ம வசதிப்படி பயன்படுத்திக்கலாம். வாடகைக் குதிரைன்னா அப்படி முடியுமா?’ என்றெல்லாம் கேட்டு, சொந்தக் குதிரையின் சிறப்பையும் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள். அப்போது, சரி தலைமைக் குழுவில் முடிவு செய்து விட்டிருக்கிறார்கள்; இனிமேல் அதன்மீது வாதம் செய்து என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிடப் போகிறோம் என்று தோழர்கள் மேற்கொண்டு எதுவும் பேசிக் கொள்ளாமல் த.கு.வின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அதை ஏற்றுக் கொண்டார்கள். 

இம்முடிவின்படி, ‘குதிரை நிதி’ வசூலிப்பதற்காக ‘புரட்சியின் வெற்றிக்கு புரவி நிதி தாரீர்!’ என்னும் தலைப்பிட்டு துண்டறிக்கைகளும், ரசீது புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. தனிப்பட்ட முறையில் தோழர்களுக்கும், பகுதிவாரியாக அந்தந்த குழுக்களுக்கு கோட்டாவும் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப துண்டறிக்கைகள், ரசீது புத்தகங்கள் பிரித்துத் தரப்பட்டன. நன்கொடையாளர்களுக்கு தாங்கள் தரும் பணம் வீண் விரயம் ஆகப் போவதில்லை, உன்னத இலட்சியத்துக்குத் தான் பயன்படப் போகிறது என, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலும், வசூலிக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையிலும், வாங்க இருக்கும் குதிரையின் மாதிரி உருவத்தை, வாட்ட சாட்டமான ஒரு அராபியக் குதிரையின் உருவப் படத்தை, துண்டறிக்கையின் தலைப்பில் போட்டதுடன், ரசீது புத்தகத்திலும் அதை அச்சிட்டு வைத்தார்கள். குதிரையின் படத்தைப் பார்த்து பெருமிதமடைந்த தோழர்கள், கட்சிக்கு ஒரு நல்ல குதிரை கிடைக்கப்போகிறது என்கிற மகிழ்ச்சியில், நிர்ணயித்த கோட்டாவை எப்படியும் நிறைவேற்றி விடுவது என்கிற முனைப்பில், தெம்போடும் முழு மூச்சோடும் களத்தில் இறங்கி பம்பரமாகச் சுழன்று செயல்பட்டனர். 

ஆனால், எப்படி சுழன்று செயல்பட்டும், சுழன்ற இடத்திலேயே மீண்டும் மீண்டும் செயல்பட வேண்டியிருந்ததில் எங்கும் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியவில்லை. எல்லா இடங்களிலுமே வசூலில் சுணக்கம் தெரிந்தது. ஒவ்வொரு ஆண்டும் திரட்டப்படும் கட்சி வளர்ச்சி நிதி, அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளையொட்டிய போராட்ட, பொதுக்கூட்ட, ஆர்ப்பாட்ட நிதி, இத்துடன் இடை இடையே நெருக்கடியில் சிக்கி எங்கே நின்று போய் விடுமோ என்கிற அச்சுறுத்தலுடன் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் கட்சி இதழைக் காப்பாற்ற அவசரகால நடவடிக்கை போல் திடீர் திடீரென்று திரட்டப்படும் ‘பத்திரிகை வளர்ச்சி நிதி’, இத்யாதிகளுக்கு மத்தியில் புரவி நிதியும் திரட்டுவது தோழர்களுக்கு சாமான்யமானதாய் இல்லை. அதுவும் புதிய தொடர்புகள் ஏதுமின்றி, அணுகியவர்களையே மீண்டும் மீண்டும் அணுக நேர்வதும் தோழர்களுக்குச் சங்கடமாய் இருந்தது. சிலர் நேரடியாகவே, “இப்ப என்னா தோழர் குதிரைக்கு அவசரம், கட்சி வளர்ந்து நல்லா பலப்படட்டும், அப்பறமா வாங்கிக்கலாமில்ல. பெரிய கட்சின்னா இந்தத் தொகை எல்லாம் ஒரு பொருட்டே இருக்காதே” என்றும் சொன்னார்கள். 

பதிலுக்கு, “நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, கட்சியப் பலப்படுத்தறதுக்கே குதிரை அவசியப்படுதே. கட்சி வளர்ந்தா குதிரை வாங்கலாம்; குதிரை வாங்கினா கட்சிய வளர்க்கலாம். ரெண்டும் பரஸ்பரம் ஒண்ணோட ஒண்ணு சம்பந்தப்பட்டதா இருக்குதுங்களே. ‘ரெசிப்ரோகல் ஆக்ஷன்னு’வாங்களே அந்த மாதிரி” என்று தத்துவார்த்த வியாக்யானம் தந்து, வகுப்பெல்லாம் எடுத்தே வசூலை நடத்த வேண்டியிருந்தது. பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், பெருவணிகர்கள், பொதுமக்கள் என கட்சிக்கு இருந்த, தெரிந்த, போன, வந்த, அனுதாபிகள், ஆதரவு சக்திகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அணுகியும், பல்வேறு உத்திகளில் விளக்கவுரைகள், பேருரைகள் நிகழ்த்தியும், நிர்ணயித்த இலக்கில் ஐம்பது விழுக்காட்டை அடைவதேகூட தோழர்களுக்குப் பெரும்பாடாய் இருந்தது. 

இந்தத் தொகையை வைத்துக் கொண்டு, திட்டமிட்டது போன்ற வாட்டசாட்டமான குதிரையை வாங்க முடியாது என்பதால், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை விவாதிப்பதற்காக தலைமைக்குழு கூடியது. கையில் உள்ள தொகைக்கு எதிர்பார்த்த குதிரை கிடைக்காது என்பது கண்கூடு. புரவி நிதி என்று படம் போட்டு வசூல் செய்துவிட்டு, புரவி வாங்காமலும் இருக்க முடியாது. இது ஆதரவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் கட்சியைப் பற்றிய தப்பெண்ணத்தையும் அவநம்பிக்கைகளையுமே ஏற்படுத்தும். ஆகவே, கையில் இருக்கும் காசுக்கு, எப்பாடு பட்டேனும், படத்தில் உள்ளது மாதிரியில்லாவிட்டாலும் பார்ப்பதற்கு குதிரை மாதிரித் தெரிகிற, குதிரை என்று பெயர் சொல்லத்தக்க அளவிற்காவது ஏதாவது ஒரு ஜீவனை வாங்கிவிட வேண்டும் என்றும், அதுதான் கட்சியினுடைய மரியாதையையும் காப்பாற்றுவதாக இருக்கும் என்றும், த.கு. முடிவு செய்தது. இந்த அடிப்படையில், இதைச் செயல்படுத்தும் நோக்கில், யாராவது புரவித் தரகர்களைப் பிடித்து, பழைய ‘செகண்ட் ஹாண்ட்’ குதிரையையாவது ஏதாவதொன்றை வாங்கிவிட, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கட்சிக்கு மிகவும் வேண்டிய, நெருக்கமாக பரோபகாரி ஒருவர், இவர் ஏற்கெனவே கட்சியின் த.கு. தோழர்கள் குதிரை நிதிக்காக அணுகியபோது, “எவ்வளவு வசூலாகிறதோ வசூலித்துக் கொண்டு வாருங்கள், எஞ்சியதை நான் போட்டு வாங்கித் தருகிறேன்’ என்று வாக்களித்திருந்தவர், தற்போது கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இதிலிருந்து மீள்வதற்கு உபயமாக ஒரு ஆலோசனை சொன்னார். அதாவது, தான் பயன்படுத்தி வந்த ஒரு குதிரை லேசாய் உடல் நலிவுற, நீண்டகாலமாய் அதை லாயத்திலேயே கட்டிப்போட்டு வைத்திருப்பதாகவும், வேண்டுமானால் அதை மருத்துவரிடமும் கொண்டு போய்க்காட்டி, கொஞ்சம் செலவு செய்து சிகிச்சை அளித்துத் தேற்றினால் கட்சி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதற்காகக் கட்சி தனக்கு எதுவும் தரவேண்டியதில்லை என்றும், மாறாக இதையே தன் பங்கிற்கான நன்கொடையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.

தலைமைக்குழுத் தோழர்கள் இந்த உபயத்தைக் கேட்க மிகுந்த உற்சாகமடைந்தார்கள். மிக மிக அருமையான யோசனை; குதிரைக்குக் குதிரையுமாச்சி, வசூல் செய்த நிதிக்குப் பாதுகாப்புமாச்சி. நிதியை முழுக்கவும் குதிரைக்காகவே செலவு செய்யவேண்டும் என்கிற அவசியமுமில்லை. ஏதோ ஒரு சொற்பத் தொகையைச் செலவு செய்து குதிரையைத் தேற்றிக் கொண்டால் போதும். எஞ்சிய தொகையைக் கட்சி வளர்ச்சிக்கும் இதழ் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சியடைந்தார்கள். இதன்படி, குதிரையைக் கொண்டுபோய் மருத்துவரிடம் காட்டி, அதைச் சரி செய்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்வாறாக, கட்சிக்கான குதிரை ஒருவாறு உறுதி செய்யப்பட்டது. 

குதிரை அலுவலகத்துக்கு வரும் நன்னாளை, துண்டறிக்கையெல்லாம் போட்டு நிகழ்ச்சியாகக் கொண்டாடும் எண்ணம் த.கு. தோழர்களுக்கு இல்லையென்றாலும், குதிரை வர இருக்கும் தகவல் செவி வழிச் செய்தியாகவே நகரெங்கும் பரவ, குதிரையை வரவேற்கும்முகமாக தோழர்கள் பலரும் அலுவலகத்தில் திரண்டிருந்தார்கள். இது பொது மக்களுக்கான நிகழ்ச்சியாக இல்லாவிடினும், நமது கட்சித் தோழர்களுக்கான நிகழ்ச்சியாகவாவது இருக்கட்டும் என்று, ஒரு தோழர் தான் கொண்டு வந்திருந்த வண்ணக் காகிதங்களை வெட்டி ஒட்டி, அலுவலக வாயிலையும் முகப்புப் பகுதியையும் தோரணங்களால் அலங்கரித்தார். தோழர் ஒருவரை கடைக்கு அனுப்பி சாக்லேட் வாங்கி வரச் சொன்னார் ஒருவர். அறிவிப்புப் பலகையை எடுத்து வெளியில் வைத்து, ‘இயக்க வளர்ச்சிக்கு எழுச்சிப் பாதை சமைக்கும் புரட்சிப் புரவியே வருக வருக’ என வாசகங்களை சாக்குக் கட்டியால் வரைந்தார். இவ்வாறான செயற்பாடுகளில், பளீரென மஞ்சள் வெயில் இறங்கும் ஒரு நாளின் மாலைப் பொழுதில், குதிரை அலுவலகம் கொண்டு வரப்பட்டது. த.கு. சார்பில் குதிரைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதன் ஓட்டுநர் மற்றும் காப்பாளர் குதிரை மீது ஆரோகணித்து அமர்ந்திருக்க, எந்த சொரத்துமில்லாமல் தலையைக் குனிந்து அசமந்த நடைபோட்டு வந்தது குதிரை. 

தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக, மந்த கதியில் நடைபோட்டு வந்த அந்த ஜீவனைப் பார்க்கும் போதே, பல தோழர்களுக்கு மனசு விட்டுப் போயிற்று. பார்ப்பதற்கு அது குதிரை மாதிரித்தான் தெரிகிறது என்றாலும் குதிரைக்குரிய கம்பீரமோ மிடுக்கோ இன்றி ஒரு கழுதைக்குரிய அசமந்தத்தோடு நடந்து வந்த அதைக் காண, தோழர்கள் மிகவும் மனவியாகூலமுற்றார்கள். என்றாலும் எல்லோராலும் அது ‘குதிரை’ என அழைக்கப்படுவது ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாய் இருந்தது. தங்கள் கட்சிக்கும் ஒரு குதிரை, தங்கள் அலுவலக முகப்பிலும் ஒரு குதிரை என அதுவும் ஒரு ஜீவனாக தங்களோடு கலக்க இருப்பதை, தங்கள் கட்சிக்குப் பெருமை சேர்க்க இருப்பதை எண்ணி சமாதானமடைந்து, பூரிப்பும், தெம்பும் கொள்ள, அதை வரவேற்கத் தயாரானார்கள். 

குதிரை, அலுவலக வெளி வாயிலை நெருங்க, பக்க வாட்டிலிருந்து எழுந்த அதிர்வேட்டுச் சரவெடிச் சத்தங்களில் மிரண்டு தாறுமாறாகத் திரும்பி ஓட முயற்சித்து, அப்படியே மண்டியிட்டு விழுந்தது. மேலேயிருந்த ஓட்டுநர் சுதாரித்து எழுந்து, மேலே ஒட்டியிருந்த மண்ணைத் தட்டியபடியே, கடுகடுத்த முகத்துடன் வெடிச் சத்தம் வந்த திக்கை நோக்கி முறைத்தார். த.கு. தோழர்கள் பதறி வெளியே ஓடி வந்து, அடுத்த சரம் கொளுத்த இருந்த தோழரைப் பிடித்துத் தடுத்து, ஆளாளுக்குக் காய்ந்தார்கள். “யாரக் கேட்டு இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சிங்க. கட்சில ஒரு கட்டுப்பாடு, கலந்தாலோசிப்பு வேணா? எதுவுமே கிடையாது. எல்லாம் தன்னிச்சைப் போக்கு” என்றார். ஒரு தோழர், “வந்த குதிரையை நேரா உள்ள உடாம, வரும்போதே அபசகுனம் மாதிரி திரும்பி ஓட வச்சுட்டீங்களே” என்றார். இன்னொரு தோழர். அசடு வழிய நின்ற வெடி வைத்த தோழர், தெம்புற்று, “நம்ப கட்சில கூடி என்னா தோழர் சகுனம், அபசகுனம் மூட நம்பிக்கையெல்லாம்” என்றார்.

“ஆமா, வெடி வெடிக்கறது மட்டும் ரொம்ப பகுத்தறிவு. பேசாம இருங்க தோழர்” என்றார் த.கு.  

சிறிது நேர அமளிக்குப் பிறகு, ஓரளவு அமைதி திரும்பியது. குதிரை ஓட்டுநர், மெல்ல குதிரையைத் தட்டிக் கொடுத்து, எழுப்பி பதமாக அதை நடத்தி அழைத்துக் கொண்டு வந்தார். வாயிலை நெருங்க, யாரோ ஒரு தோழர், ஆர்வ மிகுதியில் அதை வரவேற்குமுகமாக “புரட்சிப் புரவி” என்று முழக்கமெழுப்ப உடனே, “வாயை மூடுங்க தோழர், இதை வேற கேட்டு அது திரும்பி மெரண்டுடப் போவுது” என்று த.கு. அவரை அதட்ட, பின்னால் எழுச்சியோடு “வாழ்க” சொல்ல இருந்தவர்கள் வாய் மூடி மௌனம் காத்தார்கள். 

அதன் பிறகு வேறு எந்த அமர்க்களமும் இல்லாமல், நகரக் கிளைத் தோழர்கள் வாங்கி வைத்திருந்த சாக்லேட்டுகளை மட்டும் த.கு. தோழர் அனுமதியுடன் அனைவருக்கும் வழங்க, எல்லோரும் வாயிலடக்கிய சாக்லேட்டுடன், குதிரையையே பார்த்து அது பற்றிய தங்கள் மதிப்பீடுகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இதில் பலரும் குதிரை பற்றி அவரவருக்குள்ள ஞானம் அல்லது ஞானமின்மைகளையும் வெளிப்படுத்தினர். குதிரை சவாரி தெரிந்த ஒரு சிலர், ஓட்டுநர் அனுமதியோடு குதிரையை நெருங்கி வந்து, அதைத் தடவி தட்டிக் கொடுத்து, “ஒரு சுற்று போய் வந்து பார்க்கட்டுமா” என்றனர். “இப்ப வேணாம் தோழர். வேற ஒரு சந்தர்ப்பத்துல பார்ப்பம். புது எடம் புது நபர்கள்னு ஏற்கெனவே அது மெரண்டு போய் இருக்குது” என்று பதமாக அனைவரையும் தட்டிக் கழித்தார் புரவி ஓட்டுநர். குதிரை சவாரி தெரியாது அதை ஏக்கத்தோடு நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள், சவாரி தெரிந்த தோழர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சற்று மனதிருப்தி அடைந்தார்கள். என்றாலும் தங்களுக்கும் குதிரை சவாரி கற்றுக் கொள்ள நீண்ட நாட்களாய் ஆசைதான் எனவும், அதற்கான சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கவில்லை எனவும், தற்போது அலுவலகத்திற்கே குதிரை வந்துவிட்டதால், சீக்கிரம் கற்றுக் கொள்ளலாம் என்று கருதுவதாகவும், இப்படிக் கற்றுக் கொள்வது கட்சிக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்றும், தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

இப்படிப் பலரும் குதிரைக்குக் குறி வைப்பதை உணர்ந்த அதன் ஓட்டுநர் மற்றும் காப்பாளர், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அனைவருக்கும் சொன்னார்: “தோழர்களே, யாரும் குதிரை சவாரி கத்துக்கறதுல ஒண்ணும் தப்பு இல்ல. அதத் தெரிஞ்சி வச்சிக்கிறது கட்சிக்கும் நல்லதுதான். ஆனா கத்துக்கும்போது ஆவற கொள்ளு செலவு, புல்லு செலவு, குதிரைக்கு வேற ஏதாவது ஒண்ணுன்னா அதுக்கு ஆவற வயித்திய செலவு எல்லாத்துக்கும் அந்தந்த தோழர்கள்தான் பொறுப்பேத்துக்கணும். அதுக்கு சம்மதம்னா குதிரைகிட்டே வாங்க. இல்லாம கட்சி செலவுலியே எல்லாத்தியும் கத்துக்கலாம்னு நெனக்கிற மாதிரி இருந்தா, யாரும் குதிரை கிட்ட வராதிங்க” என்றார். “பரவாயில்லியே, குதிரைக்கு நல்ல காப்பாளராகத்தான் போட்டிருக்காங்க த.கு.வுல” என்று த.கு.வுக்கு சான்றிதழ் தந்தார்கள் வேறு சில தோழர்கள். அதன் பிறகு த.கு. தோழர்கள் குதிரை பற்றியும், அதன் பராமரிக்க வேண்டிய, பயன்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும், வாயிற் கூட்டம் போல அங்கேயே நின்று சிறு விளக்கமளித்து, இந்த விளக்கம் எல்லாக் கிளைகளுக்கும் சுற்றறிக்கையாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்க, எல்லாருக்குமான நன்றி அறிவிப்புடனும் எல்லாருடைய ஏகோபித்த கைதட்டல்களுடன் குதிரை வரவேற்பு நிகழ்ச்சி ஒருவாறு நடந்து முடிந்தது. 

இது இப்படி இருக்க, மறுநாள் கிராமப்புறக் கிளைகளிலிருந்து வந்திருந்த விவசாய அரங்கத் தோழர்கள் சிலர், முகப்பில் கட்டியிருந்த குதிரையின் தோற்றத்தைப் பார்த்து, “என்னா தோழர் இது, இந்த மாதிரி இருக்குது. எங்கியோ கெடந்த நோஞ்சான பாத்து புடிச்சாந்துட்டிருக்கறீங்க. இது என்னாத்துக்கு உதவும்” என்றனர். வேறு சிலர், “என்னா தோழர், சப்பாணியாட்டம் இருக்குது. தானா நடக்கவே தள்ளாடும் போல இருக்குது இது. அப்புறம் எப்படி இது த.கு. தோழர்களை ஏத்தும்” என்றனர்.  

இதைக் கேட்ட தலைமைக்குழுத் தோழர் ஒருவர், லேசான கடுப்புடன், “ஆமா, நீங்க வசூல் பண்ணியாந்து குடுத்த லட்சணத்துக்கு கஜகஸ்தான் போய் சௌசாக் குதிரையாதான் புடிச்சாந்து கட்டணும்” என்றார்.  

“ஏன், நாங்க வசூல் பண்ணியாந்ததுல என்ன கொறை. எங்க கோட்டாவ நாங்க ஒழுங்காதான் முடிச்சிக்னு வந்தம்”  

“நீங்க முடிச்சா போதுமா, மத்தவங்க எல்லாரும் அதப் போல முடிச்சிருக்கனும் இல்ல”  

“அதுக்கு அவங்களப் போய்க் கேளுங்க. எங்க மேல ஏன் எரிஞ்சி உழறீங்க?”  

பேச்சு சூடேறுவதைக் கண்ட மற்றொரு த.கு. தோழர், உடனே குறுக்கிட்டு, “இப்ப அதுவா பிரச்னை. அது கெடக்கட்டும் உடுங்க தோழர். குதிரை எப்படிக் கெடந்தா என்னா? ஏதோ ஒண்ணு. நம்ப கட்சிக்கின்னும் இப்பிடி ஒரு ஜீவன் இருக்கறது நம்ப எல்லாருக்கும் பெருமைதான” என்றார்.  

“பெருமைதான். ஆனா இது கட்சி வேலைக்குப் பயன்படணுமில்ல.” என்றார் வி.அ.தோ.  

“அதுவா எப்பிடிப் பயன்படும். நாமளா பயன்படுத்திக்க வேண்டியதுதான்” என்றார் த.கு. 

ஒரு நம்பிக்கையில் இப்படிச் சொன்னார்களே தவிர குதிரை எதிர்பார்த்த மாதிரி பயன் தருவதாயில்லை. கட்சி அலுவலகம் முன் குதிரை நிற்பதும், கட்சித் தோழர்கள் நிகழ்ச்சிகளுக்குக் குதிரையில் போய் இறங்குவதும், கட்சிக்கு ஒரு தோற்றத்தையும் பந்தாவையும் தருவதாக இருந்தாலும் நடைமுறையில் அது எதிர்பாராத பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கியது. பொதுவாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கிளைகள், உரை நிகழ்த்த வரும் தோழர்களுக்கு வழக்கமாக பேருந்து அல்லது தொடர்வண்டிக் கட்டணத்துடன் வழிச் செலவுக்கென்றும் ஏதாவது கொஞ்சம் சேர்த்து பயணப்படியாய் தருவது நடைமுறை. தற்போது தோழர்கள் குதிரையில் வந்து இறங்குவதால், கிளைகள் குதிரைக்கான கொள்ளு, புல் மற்றும் இதர பராமரிப்புச் செலவுகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டியிருந்ததுடன், உணவுச் செலவையும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட தோழருடன் சேர்ந்து புரவி ஓட்டுநருக்கும் செய்ய வேண்டியிருந்தது. இது எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால், அது ஏற்கெனவே தந்து கொண்டிருந்த பயணப்படியை விடவும் அதிகமாக வந்ததால், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கிளைகள் வழக்கத்தைவிடவும் கூடுதலாக செலவழிக்க வேண்டி நேர்ந்தது. 

இப்படி செலவு ஒரு பக்கம் அதிகரித்தாலும், குதிரை குறித்த நேரத்திலாவது வந்து சேருமா என்றால், அதற்கான உத்திரவாதமும் எதுவும் இல்லை. குதிரைக்கு பயண வழியிலேயே அடிக்கடி பல உடற்கோளாறுகள் ஏற்பட்டதில் உருப்படியாய்ப் போய்ச் சேருமோ, சேராதோ என்கிற அச்சத்துடனோ அல்லது எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்கிற கிலியுடனோ பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பயணத்தினூடே ஏதோ சிந்தனை வயப்பட்டு, தன்னிச்சையாய் சொந்த முடிவெடுத்ததுபோல, அடிக்கடி குதிரை அப்படியே நின்றது. இல்லாவிட்டால் உற்சாகமின்றி தளர் நடை போட்டது. பல சமயம் ஏதோ மறியலில் ஈடுபடுவது போல் அப்படியே படுத்துக் கொண்டது. இப்படிப்பட்ட சமயங்களில் நிகழ்ச்சிக்குச் செல்லும் தோழர்களின் பயணம் தடைபடுவது ஒரு புறமிருக்க, புரவி ஓட்டுநர் மெல்ல குதிரையைத் தட்டித் தேற்றி எழுப்பி அதை நிற்க வைக்கவும், சிலநேரம் வாலை வாயால் கடித்தாவது அதைக் கிளப்பி குதிரை மருத்துவர் இருக்குமிடம் நோக்கி அதை நடத்திச் செல்லவும், படும் சிரமம் பெரும்பாடாயிருந்தது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பயணத்தைத் தொடர்ந்தாலும் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் போய்ச் சேரமுடியாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தோழர்களையும் உரையாற்றச் செல்லும் தோழர்களையும் அது மிகவும் பதற்றத்திற்குள்ளாக்கியது. 

சில சமயம் மருத்துவர் உடனே குதிரையை சரி செய்து தர முடியாத நிலை ஏற்பட்டு, அதை உள் சிகிச்சை விலங்காக வைத்துப் பார்க்க வேண்டி நேர, மருத்துவர் ‘அதை விட்டு விட்டுப்போய், பிறகு வந்து அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொல்ல நேரும் சந்தர்ப்பங்களும் உண்டு. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் குதிரையை மருத்துவரிடம் விட்டு, அதைப் பார்த்துக் கொள்ள புரவியோட்டுநரையும் உடன்விட்டு, நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டிய தோழர்கள் எப்போதும் போல பேருந்தோ, தொடர் வண்டியோ பிடித்தேதான் செல்ல வேண்டியிருக்கும். இப்படிச் செல்லும்போது, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் கிளைகள் பேருந்து அல்லது தொடர்வண்டிக் கட்டணம், தோழர் செலவு, குதிரைக் கட்டணம், மருத்துவர் கட்டணம், புரவியோட்டுநர் செலவு ஆகிய அனைத்தையும் சேர்த்து பயணப் படியாகத் தரவேண்டிய இக்கட்டும் நேரும். இப்படிப் பயணப்படியாகத் தர நேரும் தொகையில் ஒரு கூட்டத்தையே நடத்தி முடித்துவிடலாமே எனத் தோழர்கள் அங்கலாய்க்கும் நிலையும் ஏற்படும். இப்படிப்பட்ட தருணங்களில், இச்செலவினங்களைச் சமாளிக்கமுடியாத வறிய அல்லது தொடக்க நிலைக் கிளைகளுக்கு ஆகும் செலவினங்களின் ஒரு பகுதியை தலைமைக்குழுவே, ஏற்கெனவே இருப்பு வைத்திருந்த குதிரை நிதியிலிருந்து மானியமாகத் தரவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது. 

இதுபோன்ற இடர்ப்பாடுகள் ஒரு புறம் இருக்க, குதிரை, உலக வங்கிக் கடன் பெற்று அமைக்கப்பெற்ற முக்கிய சாலைகளில் மட்டும் தங்கு தடையின்றி உற்சாகமாக ஓடுவதாகவும், உள்ளூர் கிளைச் சாலைகளில் திரும்பிய உடன் உற்சாகம் குன்றி, மிகவும் சுணக்கமாகவும், அசமந்தமாகவும் நடை போடுவதாகவும், அதுபற்றிய ஒரு புகாரும் இருந்தது. இதனால் குதிரைக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ஏதாவது நெருக்கமான உறவிருக்கவோ, அல்லது குதிரையின் பின்னணியில் ஏகாதிபத்திய சதியிருக்கவோ வாய்ப்புண்டு என்கிற சந்தேகமும், கட்சி வல்லுநர்கள் மத்தியில் நிலவியது. எனவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குதிரை விஷயத்தில் எச்சரிக்கையாய் இருக்கும்படியும், கூடுமானவரை முக்கிய சாலைகளை விட்டுப் பிரியும் ஒதுக்குப்புறமான உட்பகுதிகளில் எங்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண்டாம் எனவும், அப்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாயின், முக்கிய சாலைகளிலிருந்து உட்புறம் செல்ல, வேறு வாகனங்கள் ஏற்பாடு செய்துவைக்கும்படியும் தலைமையகத்திலிருந்து எல்லா கிளைகளுக்கும் சுற்றறிக்கை வேறு விடவேண்டியிருந்தது. 

ஆக, குதிரை வந்தும் பிரச்னை தீரவில்லை என்கிற குறை ஒருபுறம் நீடிக்க, குதிரை வந்ததிலிருந்துதான் பிரச்னையே என்பதாகவும் தோழர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவியது. அதாவது குதிரையின் உடல் பலவீனம், ஆற்றல், அதன் செயல்பாடு சார்ந்து அது பயணத்தில் தரும் இடர்ப்பாடுகள் ஒரு புறம் இருக்க, அமைப்பு வழியாலும், இதன் வருகையால் பல சிக்கல்கள் ஏற்பட்டு தோழர்களுக்கிடையே மனத்தாங்கல்களும் கசப்புகளும் பாகுபாட்டு உணர்வுகளும் வேறு தலைதூக்கத் தொடங்கின. குதிரையின் வருகையையொட்டி தோழர்கள் மத்தியில் மேல்தட்டு மனோபாவம் தலைதூக்கியுள்ளதாகவும், விளிம்பு நிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கடும் விமர்சனம் எழுந்து, கட்சியின் கட்டுக் கோப்பையே கேள்விக்குள்ளாக்கியது.  

சாதாரணமாக புரவி ஓட்டுநர் தவிர ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அதன் பின்புறம் அமரலாம். இதில் குதிரையின் தாங்கு சக்தி, இயங்காற்றல் இவைகளைப் பொறுத்து யாரை ஏற்றிக் கொள்ளலாம், யாரை ஏற்ற முடியாது என்று தீர்மானிக்கும் உரிமை ஓட்டுநருக்கே தரப்பட்டிருந்தது. இதில், தனிப்பட்ட ஒரு தலைமைக்குழுத் தோழரே ஏதாவது பரிந்துரை செய்தாலும்கூட குதிரையின் நலன் கருதி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஓட்டுநருக்கே வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எப்போதாவது ஓட்டுநர் மட்டும் தனியே பயணம் செய்ய நேரும் சந்தர்ப்பங்களில், வாய்ப்பைப் பொறுத்து, வழியில் தென்படும் தோழர்களை ஏற்றிக் கொண்டோ அல்லது விட்டுவிட்டோ செல்வது பற்றியும் அவரே முடிவெடுப்பவராய் இருந்தார். இதனால், “ஓட்டுநர் அவரை ஏற்றினார், என்னை ஏற்றவில்லை, என்னை ஏற்றினார், உடன் வந்தவரை ஏற்றவில்லை” அல்லது “வழியில் நிறுத்தச் சொல்லிக் கையைக் காட்டியும் காணாத மாதிரி போய்விட்டார்” அல்லது “கட்சித் தோழர்களை ஏற்ற இடமில்லை என்று சொல்லிவிட்டு பிறகு கட்சி உறுப்பினரல்லாத அவர் நண்பர்கள், உறவினர்களை ஏற்றிக் கொண்டு போகிறார்” அல்லது “வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பவர்களாகப் பார்த்து ஏற்றுகிறார்களே தவிர, ஏழை எளிய கந்தர் பேர்வழிகளையோ தலை காய்ந்தவர்களையோ ஏற்றுவதில்லை” என்பது மாதிரியான புகார்களும் வரத்தொடங்கின.

கிளைக் கூட்டங்கள், குழுக் கூட்டங்கள் நடந்தால், அரசியல் அமைப்பு வேலைகளை விடவும் குதிரை சார்ந்து எழும் குற்றச்சாட்டுகளே ஒரு முக்கியப் பொருளாகி, அதுபற்றி விவாதிப்பதே தலையாய பிரச்சனையாகியது. கட்சித் தோழர்கள் செல்வாக்கை வைத்தும், பாரபட்சம் காட்டியும் குதிரையைப் பயன்படுத்துவது என்றால், குதிரை என்ன கட்சிக்கான பொதுச் சொத்தா அல்லது ஒரு சிலரின் விருப்பத்திற்கும் சுகபோகத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளும் தனிச்சொத்தா என்றும் கேள்விகள் எழ, அது தொடர்பான சர்ச்சைகளே நேரத்தை விழுங்கின. 

இதுபோன்ற நடைமுறைப் பிரச்சனைகள் ஒருபுறம் என்றால், குதிரை வந்த சில நாட்களிலேயே அதைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க ஒரு லாயம் கட்ட முடிவு செய்து, அதை முன்னிட்டு ‘லாய நிதியும்’ அதற்கு அடிக்கடி நேரும் நலக் கோளாறுகளைச் சரி செய்து அதை நன்முறையில் பேணிக் காக்க ‘புரவி நல நிதி’யும் திரட்டும் பொருட்டு, அதாவது ஏற்கெனவே திரட்டிய புரவி நிதியில் பாதி மருத்துவச் செலவுக்கும், பாதி பயணப்படி மானியத்துக்குமே கரைந்துபோன நிலையில், மேற்கண்ட செலவினங்களுக்கு மாற்று நிதி ஏற்பாடுகள் செய்யும் முயற்சியில் கட்சித் தோழர்கள் எப்போதும் நன்கொடைப் புத்தகமும் கையுமாகவே அலைய வேண்டியிருந்தது. இதனால் கட்சிப் பணி, கட்சி வளர்ச்சி என்பதை விடவும், குதிரைப் பணி, குதிரைப் பராமரிப்பு என்பதிலேயே தோழர்கள் முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருந்தது. அல்லது கட்சிப் பணி என்பதே குதிரைப் பணியாக மாறியது. 

இப்படி நாலாவழியிலும் இம்சைகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழலில்தான், இவ்வளவு பிரச்னைகளோடு இந்தக் குதிரையை வைத்து அதனோடு மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதை விடவும் பேசாமல், அதை விற்றுத் தொலைத்துவிடுவது, பிறகு வசதி வாய்ப்பு வரும்போது புதிதாக வேறு ஒன்று வாங்கிக் கொள்வது என்று தலைமைக்குழுத் தோழர்கள் முடிவு செய்தார்கள். தவிர, குதிரையின் பேரால் ஏற்கெனவே பல்வேறு நிதி திரட்டியாகிவிட்டது. இறுதியாக, அதற்கு ஈமச் சடங்கு நிதி திரட்டுமுன் எப்படியாவது அதைக் கையைவிட்டு அனுப்பினால் போதும் என்பதும், தலைமைக்குழுத் தோழர்களின் ஏகோபித்த முடிவுக்குக் காரணமாய் அமைந்தது. என்றாலும் த.கு.வில் முடிவெடுத்ததைப் போல அதை விற்றுவிடுவது என்பது அவ்வளவு இலகுவானதாய் இல்லை. இதில் இரண்டுவிதச் சிக்கல்களை இருந்தன. ஒன்று, குதிரையை நன்கொடையாகத் தந்த பரோபகாரி இதுபற்றி எதுவும் தவறாய், - “என்னடா கட்சிக்கு என்று குதிரையை வாங்கி, விற்று காசாக்கி விட்டார்களோ” - என்று நினைத்துவிடக்கூடாது என்பதால், அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, அவரின் அனுமதியோடு விற்கலாம் அல்லது அவரிடமே திருப்பித் தந்துவிட வேண்டும். குதிரையைத் தந்தவரின் தாராள மனது அதைத் திருப்பித் தந்தால், அதை அவர் ஏற்பாரோ, என்னவோ; விற்று கட்சிக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார். வாங்குவதற்கு ஆள் கிடைத்துவிட்டால் போதும். எப்படியாவது அதை விற்றுத் தொலைத்து விடலாம். ஆகவே, இதில் ஒன்றும் த.கு. தோழர்களுக்கு பிரச்னை இருப்பதாகத் தோன்றவில்லை.

ஆனால், குதிரையின் தேவைகளை வலியுறுத்தி, அப்படி ஒன்று இருப்பதனால் ஏற்படும் அருமை பெருமைகளையெல்லாம் விளக்கி, அதனால் கட்சி வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து, அளப்பரிய நம்பிக்கைகளையூட்டி, கட்சியின் ஒளிமயமான எதிர்காலம் குறித்து கனவு காண வைத்து, ‘புரவி நிதி’ திரட்டித் தரச் சொல்லித் தோழர்களை முடுக்கிவிட்டு, அதற்காக வெகுவாகப் பாடுபட்டத் தோழர்களை, இதற்கு இணங்கச் செய்வதும், அது அதற்கு உரிய கமிட்டிகளில் இதற்கான ஒப்புதலைப் பெறுவதும்தான் தலைமைக் குழுத் தோழர்களுக்குப் பெரும் சிக்கலாக இருக்கும் போல் தோன்றியது. இதன் பொருட்டே தலைமைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட, வட்டக் குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு, இவ்வொப்புதலைப் பெறும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

புரவிச் சிக்கல்களையும் அதனால் ஏற்படுகிற இன்னல்களையும் விரிவாக எடுத்துச் சொன்ன த.கு. தோழர், எப்படிப்பட்ட சூழலில் கட்சி, குதிரையை விற்கவேண்டிய முடிவுக்கு வந்தது என்பதைத் தெளிவுபடுத்தி, எல்லாவற்றுக்கும் அடிப்படையாக குதிரையின் உடல்நிலை எப்படி கட்சிப் பணிகளுக்கு உகந்ததாக இல்லை என்பதையும் அஜண்டாவாரியாக விளக்கு முகமாக, ஆய்வுப் பொருளின் உட்பிரிவு ‘அ’வுக்குள் நுழைந்தார்.

“தோழர்களே, முகம் என்பது கண்கள், காதுகள், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகள் ஒட்டு மொத்தமாக இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதியாகும். குதிரையின் காதுகள் புரவியோட்டுநர் இடும் கட்டளைகளையோ, சாலையில் எதிர்ப்படும் வாகனங்களின் ஒலிகளையோ கேட்டு உள் வாங்கும் நிலையில், அல்லது புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. கண்பார்வையிலும் போதுமான தெளிவு இல்லை. அது நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள ஊர்களை நோக்கிப் போகாமால், நமக்கு அமைப்பே இல்லாத ஊர்களை நோக்கியே செல்கிறது. வாயும் பற்களும் கொள்ளையோ, புல்லையோ நன்றாக மென்று அரைத்துக் கூழாக்கி உள்ளே தள்ளும் அளவுக்கு வலிமை மிக்கதாக இல்லை. மூக்கு சிறிது தூரம் நடந்தாலே ‘புஸ் புஸ்’ என்று மூச்சு வாங்கும் அளவுக்கு மோசமாக உள்ளது. இந்த அளவுக்கு குதிரையின் முக உறுப்புகள் பழுதடைந்துள்ளன. இப்படிப் பழுதடைந்த முகத்தை வைத்துக் கொண்டுள்ள ஒரு குதிரையை வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால்தான், குதிரையை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு கட்சி வந்துள்ளது” என்று முகம் பற்றிய முன்மொழிவை வைத்து, “தோழர்கள் கருத்து கேளுங்க” என்று சோ.பு.வைப் பார்த்துச் சொன்னார் த.கு. 

கூட்டத் தலைவர் சோ.பு. குழு உறுப்பினர்களைப் பார்த்து, “தலைமைக் குழுத் தோழரது முன் மொழிவுகளின் மேல் தோழர்கள் ஒவ்வொருவராகத் தன் கருத்துகளைச் சொல்லலாம்” என்றார். குழுத் தோழர்கள் பலரும், முகத்தின் உறுப்புகள் இப்படிப் பலவீனமாக இருப்பதற்கு வெறும் முகம் மட்டுமே காரணமல்ல என்றும், “போதுமான ஊட்டச் சத்துக் குறைவு, உடலின் பிற பகுதிகளில் குறிப்பாக குடல் பகுதிகளில் நோய்க் கிருமிகள் தொற்றி இருத்தல், உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமலோ, அல்லது செரிமானம் ஆன உணவுச் சத்துக்களை குடல் உறிஞ்சும் முறையாக உறிஞ்சாமை ஆகியவைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே, அவற்றையும் சேகரித்துப் பார்த்தே இதற்கு ஒரு முடிவு சொல்ல முடியும்” என்றனர்.

“அது அதுக்கும் தனித்தனியா அஜண்டா போட்டுருக்குது தோழர். மொதல்ல இப்ப நாம்ப மொகத்தைப் பத்தி பேசுவோம், அப்புறம் அந்தந்த அஜண்டா வரும்போது அதப்பத்தி பேசுவோம். இப்ப மொகத்தப் பத்தி எதுனா இருந்தா மட்டும் சொல்லுங்க” என்றார் த.கு. தோழர்.

தோழர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மௌனமாயிருக்க, த.கு. தோழர், சோ.பு.வைப் பார்த்து, “அப்ப அடுத்த அஜண்டாவுக்குப் போலாமா” என்றார். தயக்கத்துடன், தோழர்களை ஒருமுறை பார்த்து த.கு. தோழர் பக்கம் திரும்பி தலையசைத்த சோ.பு. மீண்டும் தோழர்களைப் பார்த்து, “தோழர்களை, அடுத்த அஜண்டாவான வயிறு பற்றித் தோழர் முன்மொழிவார்” என்றார்.

வயிறு பற்றி விளக்கமளித்த த.கு. தோழர், குதிரையின் வயிற்றில் உண்ட உணவு எதுவும் சரியாக செரிமானம் ஆவதில்லை எனவும், அடிக்கடி வயிறு உப்புசம் தட்டுகிறது எனவும், சமயங்களில் வயிற்றில் இடி இடிப்பது போலவும், புயல் வீசுவது போலவும் கடமுடா என்றும் கடும் சீற்றத்துடன் ஒலிகள் எழும்புவதாகவும், இப்படிப்பட்ட கோளாறான வயிற்றைக் கொண்ட குதிரையை வைத்துக் காட்சியால் காப்பாற்ற முடியாது என்பதால்தான் குதிரையை விற்றுவிடுவது என்கிற முடிவுக்குக் கட்சி வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

“இதுதான் தோழர், நான் அப்பவே சொன்னேன். வயிறு சரியில்லாததுதான், முக உறுப்புகள்ல கோளாறு இருக்குதுன்னு” என்றார் வி.அ. தோழர்.

“நான் மட்டும் என்ன, இல்லன்னா சொல்றேன், அத அதப் பேச வேண்டிய அஜண்டாவுல பேசுங்கன்னதுதான் சொல்றேன். இப்ப வயித்தப் பத்தி நீங்க என்னா சொல்லணுமோ சொல்லுங்க” என்றார் த.கு.

“குதிர சாணி எப்படிப் போடுது தோழர், இயல்பா கட்டியா போடுதா, இல்ல கழியுதா...?” என்று கேட்டார் நகரசுத்தித் தொழிலாளர் சங்கத் தலைவர். 

“அதுக்குத் தனியா ஒரு அஜண்டா போட்டுருக்குது தோழர். அது வரும்போது அதப்பத்திப் பேசுவம்” என்றார் த.கு. 

“அது என்னா தோழர்? வயித்துக்கும் சூத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசறீங்க. அது தெரிஞ்சாதான தோழர், வயித்தப் பத்தி ஒரு முடிவுக்கு வர முடியும்.” 

“நான் என்னா சூத்தப் பத்திப் பேச வேணான்னா சொல்றேன். அதுக்குத் தனியா ஒரு அஜண்டா இருக்குது. அது வரும்போது அதப்பத்திப் பேசுவம்னுதான் சொல்றேன்.” 

“அது இல்ல தோழர். ரெண்டுக்கும் சம்பந்தம் இருக்கறதுனால அதையும் கணக்குல எடுத்துக்கலாம் இல்ல.” 

“நாம்ப என்னா கணக்குல எடுத்துக்க வேணாம்னா சொல்றோம். இதல்லாம் கணக்குல எடுத்துக்கறதுனால தான் அது அதுக்கும் தனித் தனித்தனியா அஜண்டா போட்டுருக்கறம். சூத்துக்குனு ஒரு அஜண்டா இருக்குது. அந்த அஜண்டா வரும்போது அதப்பத்திப் பேசுவம்னு தான் சொல்றேன்.” 

“வரும்போது பேசப் போறம் தோழர். ஆனா, அது என்னான்னு தெரிஞ்சாதான் வயித்தப் பத்தி ஒரு முடிவுக்கு வர முடியும். அது என்னான்னு தெரியாமலே வயித்தப் பத்தி ஒரு முடிவுக்கு வந்தா அது எப்படி சரியாயிருக்கும்?” 

“நாம ஒண்ணும் இப்ப ஒரு முடிவுக்கு வந்துடலியே. வயித்தப் பத்தி பேசறம். அவ்வளோதான். பிறகு ஒவ்வொண்ணப் பத்தியும் தனித்தனியாப் பேசி அப்புறம்தான் ஒரு முடிவுக்கு வரப்போறம். அதனால அத அத அந்தந்த அஜண்டாவுல பேசுவம். இப்ப இந்த அஜண்டாவுல வயித்தப் பத்தி வேற எதுனா இருந்தா மட்டும் பேசுங்க” என்றார் த.கு. 

“ரெண்டுக்கும் சம்பந்தம் இருக்கறதுனாலதான தோழர் சூத்தப் பத்தியும் பேச வேண்டியிருக்குது. சூத்தப் பத்தித் தெரிஞ்சாதானே வயித்த பத்திப் பேச முடியும்” 

“திரும்பத் திரும்ப சம்பந்தத்தப் பத்தியே பேசிக்னு இருக்கறிங்க. சம்பந்தம் உலகத்துல உள்ள எல்லாப் பொருளுக்கும்தான் இருக்குது. எதுதான் ஒண்ணோட ஒண்ணு சம்பந்தமில்லாத இருக்குது. விண்ணுக்கும் மண்ணுக்கும் கூடத்தான் சம்பந்தம் இருக்குது. அதுக்காக விண்வெளி ஆராய்ச்சியையும் மண் பரிசோதனையையும் ஒண்ணாக்கிப் பேச முடியுமா. ரெண்டையும் தனித்தனியாதான் பேசனும். அந்த மாதிரிதான் இதுவும். இப்ப வயித்தப் பத்தி மட்டும் பேசுங்க. சூத்தப்பத்தி அது வரும் போது பேசுவம்.” 

“வயித்துக் கோளாறு காரணமாகவே வாய், கண், காது எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கலாமில்லியா. வாய்க் கோளாறு காரணமாதான் வயித்துக் கோளாறுன்னு எப்படிக் கருதமுடியும்?” 

“வாய் பத்தியெல்லாம் மொத அஜண்டாவிலேயே பேசியாச்சி தோழர். அத திருப்பி இங்க பேச வேணாம். வயிறு பத்தி எதுனா இருந்தா மட்டும் பேசுங்க. இல்லண்ணா அடுத்த அஜண்டா போலாம்” என்று சோ.பு. பக்கம் திரும்பி, “அடுத்த அஜண்டா என்னா” என்றார் த.கு. 

“கால்கள்” என்றார் சோ.பு. ந.சு.தொ.ச. தலைவர் மற்றத் தோழர்களை நோக்க, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து மௌனமாயிருக்க, த.கு. தோழர் குழப்பமாகவும் செய்வதறியாமலும் அவர் பாட்டுக்கு கால்கள் பற்றிய முன் மொழிவைத் தொடர்ந்தார். குதிரையின் கால்கள் கட்சித் தோழர்களின் சுமையைத் தாங்குமளவுக்கு வலுவோடு இல்லை எனவும், அவை சாதாரண நோஞ்சான்களாக உள்ள தோழர்களைக்கூட இருவரை ஏற்க மறுக்கிறது எனவும், கால்களுக்குப் புதிதாய் இலாடம் கட்டினால் சரியாகிவிடும் என்று குதிரை மருத்துவர் சொன்னதை வைத்து, குறிப்பிட்ட சில பேரிடம் மட்டும் லாட நிதி திரட்டி, லாடம் கட்டிய பிறகும், குதிரையின் கால்களிலோ அதன் தாங்கு சக்தியிலோ எந்த மாற்றமும் இல்லை எனவும், பல சந்தர்ப்பங்களில் குதிரை யாரையுமே ஏற்றாமல் தானாய்த் தனித்து நடப்பதற்கேவும் தள்ளாட்டமாய் இருக்கிறது எனவும், இப்படிப்பட்ட நிலையில், இந்த சோதாக் கால்களைக் கொண்டுள்ள குதிரையை வைத்து கட்சி வேலை எதுவும் செய்ய முடியாது எனவும் த.கு. தோழர் சொன்னார். 

இவ்வாறே வால் பற்றியும், குதிரையின் வால் அதற்குரிய பயன்பாட்டில் இல்லை எனவும், அதாவது குதிரையின் மீது அமரும் ஈ, கொசு, வண்டு போன்ற ஜீவராசிகளையும், நோய்க் கிருமிகளையும் ஓட்டும் நிலையில் அது இல்லை எனவும், குதிரையை சற்று வேகமாக விரட்டி அதை முன்னே பாயவிட முயற்சிக்கும்போதுகூட அதன் வாலில் எந்த விதமான அசைவும் இல்லை. வாலைத் துள்ளி எகிறி ஓடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், ஆனால் ஓடும்போதே கழியும் குதிரை, கழிந்தபிறகு மட்டும் சாணம் வழியும் தன் வாலைச் சுழற்றிச் சுழற்றி வீசுவதாகவும், அது நிகழ்ச்சிக்குச் சிறப்புரை ஆற்றச் செல்லும் தோழர்களின் ஆடைகள் மீதெல்லாம் வீசி அதை அசிங்கப்படுத்துவதுடன், கடும் கெடு மணத்தை வீச வைப்பதாகவும், இதனால் தோழர்கள் மிகவும் இடர்ப்படுவதாகவும், நிகழ்ச்சிக்குச் செல்வது என்றாலே கட்டாயம் கையில் மாற்று உடைகளுடனே செல்ல வேண்டியிருப்பதாகவும் சொன்னார். 

“கால்கள் மற்றும் வால் பலவீனத்திற்கு உடலின் மற்ற உறுப்புகளும் காரணமாக இருக்கலாம். எனவே, அதுபற்றியும் பரிசீலிக்க வேண்டும்” என்று தோழர்கள் சொன்னார்கள். ஆனால் த.கு. தோழர் எதையும் ஏற்பதாயில்லை. அது அதை, அந்தந்த அஜண்டாவில் பேசலாம் என்றோ அல்லது ஏற்கெனவே, பேசியாகி விட்டது என்றோ கூறி, அது சார்ந்த கருத்துகளைத் தெரிவிக்கவிடாமல் தடுத்தார்; அல்லது அது பற்றிப் பேச விடாமலேயே பார்த்துக் கொண்டார். பயணம் செய்யும் தோழர்கள், குதிரையால் கெடு மணத்திற்காளாவதற்கு மாற்றாக தோழர்கள் நறுமணத் தைலங்கள் பூசிக்கொண்டு நிகழ்ச்சிக்குச் செல்லலாம் என்கிற ந.சு.ச. தலைவரின் ஆலோசனையை மட்டும் த.கு.வில் பேசுவதாகச் சொன்னார். 

இறுதியாக சூத்து பற்றிய அஜண்டா வந்தது. “சூத்து சரியாக இயங்கவில்லை. அடிக்கடி கழிகிறது. கெடு நாற்றமும் தாங்க முடியாததாக இருக்கிறது. லாயம் பக்கம் போகவே முடிவதில்லை என்பதுடன், இங்கு எப்படியாவது கிடந்து தொலைக்கிறது என்று நினைத்தால் நிகழ்ச்சிக்குப் போகிற இடங்களிலும் பலமுறை இப்படிக் கழிந்து கூட்டத்தைக் கலைக்கிறது. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் இலட்சியவாதிகள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நிற்கிறார்களே தவிர, மற்றபடி புதிதாய்க் கூட்டம் கேட்க வருகிறவர்கள், மூக்கைப் பிடித்துக்கொண்டு அப்பால் போய் விடுகிறார்கள். சிறப்புச் சொற்பொழிவை மட்டுமே கேட்டுவிட்டுச் செல்ல வருபவர்களும் யாரும் வருவதில்லை. நமது தோழர்கள் துண்டறிக்கை போட்டு, ஒலிபெருக்கி வைத்து அறிவித்து, தொண்டை வறளக் கத்தி, அரும்பாடு பட்டு திரட்டி வைக்கிற கூட்டத்தை இது அரை நொடியில் கலைத்துவிடுகிறது. ஆக, குதிரை கட்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று பார்த்தால், அதனால் உபத்திரவமே அதிகமாக இருக்கிறது. சுருக்கமாக குதிரையின் செயல்பாடுகள் அனைத்தும் எந்த ஒழுங்குமுறைக்கும் உட்படாத தன்னிச்சைப் போக்காகவும், கட்சி விரோத நடவடிக்கைகளாகவும், கட்சி வளர்ச்சிக்கு இடையூறாகவும் தடையாகவுமே உள்ளதே தவிர, குதிரையால் கட்சிக்கு கிஞ்சித்தும் பயனில்லை” என்றார் த.கு. 

“குதிரை கழிவதற்கு வயிற்றுப் பிரச்சனையே காரணமாக இருக்க வேண்டும்” என்று மீண்டும் தன் கருத்தை வலியுறுத்திய வி.அ. தோழர், “இதத்தான் தோழர், நான் ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்னு இருக்கறேன்” என்றார். 

“நீங்க சொன்னதை யாரும் இல்லண்ல தோழர். ஆனா வயிறு பத்திய பேச்சு, அந்த அஜண்டாவோட போச்சி. அதையே திரும்பத் திரும்ப பேசிக்னு இருக்க வேணா, இப்ப சூத்தப் பத்தி எதுனா இருந்தா அத மட்டும் பேசுங்க” என்றார் த.கு. 

“வயித்துல இருந்துதான் தோழர் சூத்துக்கு வருது” என்றார் வி.அ. 

“அப்பிடிப் பாத்தா வாய் வழியாத்தான் வயித்துக்கே வருது. அதுக்காக வாய், வயிறு, சூத்துன்னு எல்லாத்தையும் ஒண்ணா சேத்து பேச முடியுமா?” என்றார் த.கு. 

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, இடையில் வந்து கலந்துகொண்ட அரசு ஊழியர் அமைப்பு சார்ந்த ஓய்வு பெற்ற தோழரும், ஊழியர் மற்றும் ஆதரவாளர்களிடம் கணிசமாக குதிரை நிதி திரட்டித் தந்தவரும், குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான தோழர் ச.பி. எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, த.கு. தோழரைப் பார்த்துச் சொன்னார்: “இப்படி வாதம் பண்ணா எப்பிடித் தோழர்? குதிரைன்னா அது ஒரு முழுப் பொருள். அதன் உறுப்புகள் ஒண்ணோட ஒண்ணு தொடர்புடையதா இருக்கறதுனாலதான், நாமும் அதத் தொடர்புபடுத்திப் பேச வேண்டியதா இருக்குது. ஆனா எதப் பேசனாலும் எல்லாத்துக்கும் நீங்க இப்பிடித் தடை போட்டா, எப்பிடித் தோழர் பிரச்சனையை விவாதிக்க முடியும்...?” 

“குதிரை முழுப் பொருள். அதன் உறுப்புகள் ஒண்ணோட ஒண்ணு தொடர்புடையது என்பதெல்லாம் ஒண்ணும் புதுக் கருத்து இல்ல தோழர். இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அதுக்காக எல்லாத்தையும் ஒண்ணா போட்டு விவாதிச்சிக்னு இருக்க முடியுமா? இதெல்லாம் நம்ப ஆசான்களுக்கு தெரிஞ்சிதான், கட்சில அஜண்டா போட்டு பேசறதுன்னு ஒரு நடைமுறை வச்சிருக்கறாங்க. அதுவுட்டுட்டு தோழர்கள் மானாவாரியா எல்லாத்தியும் ஒண்ணா பேசணம்னா எப்பிடி முடியும்? குதிரையின் உறுப்புகள் எதுனாவிட்டுப் போச்சின்னா சொல்லுங்க. பேசுவம். எல்லாத்தையும் பத்திதான் ஒண்ணொன்னா பேசிக்னு வர்றம். இது மாதிரி கொற எதுவும் வரக்கூடாதுன்னுதான் அஜண்டாவ மொதல்லியே வச்சி எல்லார்கிட்டயும் ஒப்புதல் வாங்கிக்னு பேசறது. இப்பிடி அஜண்டாவ போட்டுட்டு மாத்தி மாத்தி பேசிக்னு இருந்தா எப்பிடி ? இப்படியெல்லாம் ஒரு ஒழுங்குமுறை இல்லண்ணா, கமிட்டியே நடத்த முடியாது தோழர்” என்றார் த.கு. 

“ஆனா எதப் பேசனாலும் குதிரையைப் பத்திதான் தோழர் பேசப்போறம். அதவுட்டுட்டு நீங்க வாயப் பத்திப் பேசும்போது, வயித்தப்பத்தி பேசாத, வயித்தப்பத்தி பேசும்போது சூத்தப் பத்திப் பேசாதன்றீங்க. இல்லன்னா எதப்பத்தி பேச வந்தாலும் எல்லாம் ஏற்கெனவே பேசியாச்சின்றிங்க. இப்படியே சொன்னா அப்புறம் எப்பிடிதான் நாங்க எங்க கருத்த சொல்றது...” என்றார் ச.பி. 

“நீங்க கருத்து சொல்றத யாரும் தட சொல்லல தோழர். அந்தந்த கருத்து அந்தந்த அஜண்டாவுல சொல்லுங்கன்னுதான் சொல்றேன். அதவுட்டுட்டு இப்பிடி எல்லாத்தியும் மொத்தமா பேசனா எதையும் மொறையா விவாதிக்க முடியாது தோழர். இந்தச் சிக்கல் வரக்கூடாதுன்னுதான் அஜண்டா போடறதே. அஜண்டாவும் போட்டு, அதுக்கு ஒப்புதலும் குடுத்துட்டு, அப்புறம் நான் இஷ்டம் போலத்தான் பேசுவேன்னா இது சனநாயகம் இல்ல தோழர். சனநாயகத்த மிஸ்யூஸ் பண்றது.” என்றார் த.கு. 

பதிலுக்கு எதுவோ கேட்க வந்த வி.அ. தோழரை, “எதுக்கு தோழர் வீணா விவாதம் பண்ணிக்னு இருக்கிறீங்க” என்று தடுத்தார் ச.பி. “அவங்க விக்கிணம்னு முடிவு பண்ணிட்டாங்க. அதனால அதுக்கேத்தமாதிரி தான் பேசுவாங்க. இப்ப நம்ப கருத்துக் கேட்டு அவங்க மாத்திக்கப் போறாங்களா என்ன? அவங்க முடிவுக்கு நாம்ப ஒப்புதல் குடுக்கணம். அதுக்குதான் இந்தக் கமிட்டி. அதவுட்டுட்டு நாம்ப பேசறதெல்லாம் வெட்டியா கேட்டுக்னு இருக்கறதுக்கா இந்தக் கமிட்டி?” 

“என்னா தோழர். நீங்களே இப்படிப் பேசறீங்க” என்றார் த.கு. 

“நான் என்னா பேசறேன். இருக்கறததான் பேசறேன். குதிர வேணும்னா அதுக்கு ஒண்ணு பேசுவீங்க. வேணாம்னா அதுக்கு ஒண்ணு பேசுவீங்க. இப்பிடி ஒரு முடிவெடுத்துக்னு வந்து, அதுக்கேத்த மாதிரி பேசறது, உங்களுக்கு கை வந்த கலையாப் போச்சி. கட்சி வளருதோ இல்லியோ, தலைமைக் குழுத் தோழர்களுக்கு நாக்கு சாதுர்யம் மட்டும் வளர்ந்திருக்குது. இந்த சாமர்த்தியத்தத்தான் நீங்க வளத்து வச்சிருக்கறீங்களே தவிர, கட்சிய வளக்கல. அந்தந்த நேரத்துக்கு காரியத்த சாதிச்சிக்க வேணா இது பயன்படுமே தவிர, கட்சி அணிகளுக்கு இது நம்பிக்கையூட்டாது. கட்சிய வளக்கவும் பயன்படாது” என்றார் ச.பி. 

“நீங்க ஆரம்பத்துல இருந்து இருந்திங்கன்னா இப்பிடிப் பேசமாட்டீங்க தோழர். நடுவுல வந்ததுனால என்னா சிக்கல்னே புரியாம பேசறீங்க.” என்றார் த.கு. 

“நான் தாமதமா வந்தேன்னு இப்பிடிக் குத்திக் காட்டிறிங்களா?” என்றார் ச.பி. “உங்களுக்கு வேணும்னா இருக்கறவங்கள வச்சி தொடங்கிடுவீங்க. அப்பிடிதான. மின்ன குதிர நிதி வசூல் கூட்டத்துக்கு எல்லாரும் வரட்டும்னு காத்துக்னு இருந்தீங்க இல்ல. இப்ப குதிரைய விக்கிற கூட்டத்துக்கு மட்டும் என்னா அவசரம். எப்பிடியாவது கதய முடிக்கணம். அதான” 

“அஞ்சி மணி கமிட்டின்னு போட்டு எவ்வளோ நேரம் காத்துக்னு இருக்கறது?” 

“இப்பதான் புதுசா காத்துக்னு இருக்கறிங்களா? எல்லா கமிட்டியும்தான் மாலை 5-00 மணின்னு போட்டு 7-00 மணிக்கு ஆரம்பிக்கறிங்க. காலை 9-00 மணின்னு போட்டு 11-00 மணிக்கு ஆரம்பிக்கறிங்க. மொதல்ல எந்தக் கமிட்டியும் போட்ட நேரத்துக்கு ஆரம்பிக்கறதுன்னு ஒரு பழக்கத்துக்குக் கொண்டாங்க. அப்பறம் கால தாமதத்தப் பத்திப் பேசுவம்...” 

“தோழர்கள்ல்லாம் போட்ட நேரத்துக்கு வந்தா கமிட்டி ஏன் காலதாமதமாவுது. அவங்கவங்க ஒண்ணரை மணி நேரம் ரெண்டு மணி நேரம் கால தாமதமா வந்தா?” 

“தோழர்களாலதான நேரமாவுதா. எத்தினி தடவ தோழர்கள் சரியான நேரத்துக்கு வந்து காத்துக்னு கெடந்து நீங்க காலதாமதமா வந்திருக்கீங்க. நீங்க காலதாமதமா வர்றதுனாலதான் தோழர்களும் காலதாமதமா வர்றாங்க.” 

பேச்சு எங்கோ தடம் மாறி வேறு திசையில் சூடு பிடிப்பதைக் கண்ட தொ.ச. தோழர், “சரி தோழர், அத அப்பறம் பேசுவம். இன்னைக்கி இந்தக் கூட்டத்த முடிப்பம்” என்றார். சோ.பு. த.கு.வைப் பார்த்தார். த.கு. சோ.பு.வைப் பார்த்து, “அப்புறம் வேற ஏதாவது கருத்து இருக்குதான்னு கேளுங்க” என்றார். 

“அவர் என்னா கேக்கறது. நீங்களேதான் கேட்டுட்டுப் போங்களேன். சும்மா சட்டமன்ற சபாநாயகர் மாதிரி நீங்க அவர உக்கார வச்சிட்டு, அவர் முதல்வரப் பாக்கறா மாதிரி அடிக்கடி உங்களப் பாத்துக்னு, எதுக்கு இந்த நாடகம்” என்றார் ச.பி. 

“என்னா தோழர் இப்பிடிப் பேசறீங்க. கமிட்டி நடைமுறையே தெரியாத மாதிரி புதுசா? கட்சின்னா கமிட்டி கட்டுப்பாடுன்னு எதுவுமே கெடையாதா?” 

“எல்லாம் தெரியும் தோழர். தெரிஞ்சிதான் சொல்றேன். நீங்க குதிரைய வச்சிக்கோங்க. இல்ல வித்துக்கோங்க. ஆனா இந்த மாதிரி கமிட்டி நடத்தாதீங்க. இது ஜனநாயகமில்ல” என்றார் ச.பி. 

த.கு. லேசாய் முகம் மாற, சோ.பு.வைப் பார்த்து, “சரி, வேற யாருக்காவது எதாவது கருத்து உண்டான்னு கேளுங்க தோழர்” என்றார். அவ்வாறே கேட்க எல்லாரும் மீண்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மௌனம் காத்தனர். ச.பி. மட்டும், “குதிர நிதின்னு வசூல் பண்ணி, குதிரய வாங்கி காட்டிட்டு, அப்புறம் குதிரய வித்துட்டம்னா தோழர்ங்க மத்தியில தலைமையப் பத்திக் கெட்ட பேர்தான் தோழர் வரும். அப்புறம் தோழருங்களுக்கும் கட்சிமேல நம்பிக்கையில்லாம போயிடும். நாளைக்கு எந்த வசூலுக்கும் அவங்கள எறக்கிவிட முடியாது. குதிரைய விக்கிறதுன்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்கன்னா, வித்து வர்ற காசோடகூட கொஞ்சம் காச போட்டு வேற ஒரு நல்ல குதிரையா வாங்கறா மாதிரி இருக்கணம். இல்லாம, குதிரைய வித்து காச கட்சி நிதியில சேத்துக்கலாம்னா தோழர்ங்ககிட்டியும் சரி, வெளியிலயும் சரி, மரியாத இருக்காது. அதனால எத செஞ்சாலும் யோசிச்சு செய்யுங்க. இதான் என் கருத்து” என்றார் ச.பி. 

“சரி தோழர். இந்தக் கருத்தப் பதிவு பண்ணிக்குவம். தலைமைக் குழுவுலியும் இத நான் சொல்றேன்” என்ற த.கு. சோ.பு. பக்கம் திரும்பி, “வேற எதுனா கருத்து இருக்குதா இல்ல முடிச்சிக்கலாமான்னு கேளுங்க தோழர்” என்றார்.  

சோ.பு. “என்னா தோழர், வேற எதுனா கருத்து உண்டா” என்று தோழர்களைப் பார்த்துக் கேட்டார். எல்லோரும் அமைதி காக்க, சோ.பு. த.கு. பக்கம் திரும்பி, “ஒண்ணும் இல்ல தோழர்” என்றார். “சரி அப்ப குதிரையின் உறுப்புகள் ஒவ்வொன்றும் பழுதடைந்துள்ள நிலையிலும், கட்சிக்கு அதனால் எந்தப் பயனும் அற்ற நிலையிலும், அதை விற்றுவிடுவது என்கிற தலைமைக்குழுவின் முடிவுக்கு கமிட்டி ஒப்புதல் அளிக்கிறதுன்னு தீர்மானம் நெறைவேத்திக்கலாமா?” என்றார் த.கு.  

எல்லோரும் தலையாட்ட “நெறைவேத்திக்கலாம். ஆனா நான் சொன்னதையும் சேத்துக்கோங்க. வேற குதிர வாங்கறதப் பத்தியும்” என்றார் ச.பி. 

“அது ஒண்ணும் பிரச்சன இல்ல தோழர். அத சேத்துக்கலாம்” என்றார் த.கு. பின் சோ.பு. பக்கம் திரும்பி, “அவ்வளோதான, வேற ஒண்ணும் இல்லியே. தொகுப்புரை வழங்கிடலாமா” என்று கேட்டு தன் முடிவுரைக்குச் சென்றார். 

“தோழர்களே, கட்சிப் பணிகள் ஆற்ற குதிரை இருப்பது நல்லதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குதிரை வந்த நாளாய், குதிரை இருந்தால்தான் கட்சிப் பணியாற்ற முடியும், எங்கு போவதானாலும் குதிரையில்தான் போவேன் என்கிற நிலப்பிரபுத்துவ மனோபாவம் நமது தோழர்கள் மத்தியில் தலை தூக்கியுள்ளது. நாமெல்லாம் மக்கள் தொண்டர்கள் என்கிற எண்ணம் இருந்தா, இது மாதிரி சிந்தனைலாம் நமக்கு வராது. எங்க போனாலும் குதிரையில்தான் போவேன் அல்லது குதிரை இருந்தாதான் எங்கேயும் போகமுடியும்னு கருதறது பூர்ஷ்வா மனோபாவம். ஒரு புரட்சிகர கட்சியில இந்த மாதிரி எதிரி வர்க்க கருத்துக்களுக்கெல்லாம் எடமே கிடையாது...”  

இந்த சந்தர்ப்பத்தில் ச.பி. குறுக்கிட்டு, “யார் தோழர் அப்பிடியெல்லாம் சொன்னது” என்று ஏதோ சொல்ல முயன்றார். உடனே “நீங்க சொல்ல வேண்டிய கருத்த மொதல்லியே சொல்லீட்டீங்க தோழர், அப்புறம் எதுனா கருத்து இருந்ததுன்னா அடுத்த கமிட்டில பேசுங்க. இல்ல, த.கு.வுக்கு எழுதி அனுப்புங்க. அத வுட்டுட்டு தொகுப்புரை வழங்கும்போது இப்பிடி குறுக்கிட்டு பேசறதுன்னா இது மொறை கிடையாது தோழர். கமிட்டி மரபும் கிடையாது...” என்று அவருக்குப் பதிலளித்துவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார் த.கு.

Pin It