பஸ்ஸை விட்டு இறங்கிய போது கவியரங்கம் தொடங்குவதற்கான நேரம் ஆகியிருக்கவில்லை.

இவன் கடையில் சிகரெட் வாங்கி நெருப்பேற்றிக் கொண்டான். கடையின் முன் கட்டி தொங்க விடப்பட்ட பத்திரிகைகள் உயிருக்குப் போராடுவதுபோல் படபடத்துக் கொண்டிருந்தன. எழுத்தைக் கூட இங்கே விற்கிறார்கள் என்ற வினோத எண்ணம் ஏனோ எழுந்தது. தோளில் பையும் முகத்தில் களைப்பையும் மாட்டிக்கொண்டு வேலை முடித்து நிறைய பேர் போய்க் கொண்டிருந்தார்கள்.

நின்று கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து ஒரு பெண் வெறித்து பார்த்தபோது, இவன் பக்கத்தில் நின்றிருந்தவன் அவசர அவசரமாக தலைவாரிக் கொண்டன்.

இவனுக்கு ஷீலா ஞாபகம் வந்தது.

“ஷீலா என்னை புடிச்சிருக்கா... நான் எப்படி இருக்கேன்.”

“நான்... நான்... எப்படி?”

“ஸாரிப்பா. நானே சொல்றேன்... ம்.. சப்பை மூக்கு, குண்டு கண், ஒடுங்கின கன்னம், உன்னளவுக்கு இருக்க மாட்டேம்பா... “

“நான் என்ன அவ்வளவு லட்சணமாவா இருக்கேன்.”

“ம் களையா இருக்கே தெரியுமா.”

“அதென்ன களை..”

“சிவப்பா, மூக்கும் முழியுமா....’

“மூக்கு சரி. முழி எங்க இருக்கு. எனக்குதான் அது இல்லையே”

ஓ! குத்தி காட்டி விட்டேனோ. தர்ம சங்கடமான நினைவுகள்.

இவனுக்கு நடக்க வேண்டும் போல் இருக்கிறது. பஸ் நிலையத்திலிருந்து வெளியேறி நெடுஞ்சாலையில் நடக்கிறான். ஜங்சனில் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருக்க, பாக்கெட்டை தொட்டுப் பார்த்தான். எட்டாய் மடிக்கப்பட்ட காகிதமும்,பேனாவும் இருந்தது.
சிகரெட்டை சுண்டி எறிந்தான். சாக்கடையில் விழுந்து செத்துப் போன அந்த சிகரெட்டுக்கு மௌன அஞ்சலி செலுத்துவது போல் நின்றிருந்த போது மேடை வார்த்தைகள் எதிரொலித்தன. ‘ஆளுங்கட்சி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லையெனில் பயங்கர....’

மணி ஐந்தான போது கவியரங்கம் போனான். பேப்பரோடும், பேனாவோடும், தோளில் பையோடும் ஐந்தாறு பேர் இருந்தார்கள். கைதட்டவென்று நாலைந்து பேர். கவிதை பாட வந்தவர்களில் பாதிபேர் சிந்தனையில் அழ்ந்திருந்தார்கள். எதற்கோ துக்கம் கொண்டாடுகிற மாதிரியிருந்தது. காதலித்த சோகமோ...?

இவன் போய் அறிமுகப்படுத்திக்கொண்ட போது பைத்தியத்தை பார்க்கிற மாதிரி பார்த்தார்கள். சற்று தள்ளி இருவர் சீரியசாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நான் நிறைய பத்திரிகைக்கு அனுப்புறேன். போடமாட்டேன்கிறாங்கடா.”

“பாதை பத்திரிகைக்கு அனுப்பேன்”

“அவன் பணம் தரமாட்டான் பாவி..”

“பிளாக்ல எழுதேன்.”

கவிதை எழுத இவன் முறை வந்தது. பாக்கெட்டில் மடக்கி வைத்திருந்த காகிதத்தை பிரித்து ஆவேசமில்லாமல் வாசித்தான்.

‘...... எனக்கு புரியவில்லை,
சன்னல்களை அடைத்து
பகலை எனக்கு பகையாக்கி
வைத்திருந்தார்கள்.
இந்த தென்றல் எந்த வழியாக நுழைந்தது.
.......
.......
ஓசைகளால் தெரியும் என் உருவத்திற்கு
எந்த பார்வையை பாஷையாக்கப் போகிறாய்.
பரவாயில்லை.
உன் விழி நீர் துடைக்க நீளும்
என் விரலைப் பிடித்துக் கொள்.
நாம் நடப்போம்.’

முடித்தபோது கைதட்டினார்கள். காகிதத்தை மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஓரமாய் வந்து உட்கார்ந்தான். அவசரமாய் நாலைந்து பேர் சூழ்ந்து கொண்டார்கள்.

“சார். அட்டகாசம் சார். எல்லாருக்கும் பிடிச்சிப் போச்சி.”

லேசாய் போதை தலைக்கேறியது.

“தூள் சார். அந்த சோகம் நெஞ்சை தொட்டது சார். பிரமாதமான கற்பனை”

கற்பனை இல்லை நண்பனே. வாழ்க்கை. என் வாழ்க்கை என்று சொல்லத் தோன்றியது. சொல்லவில்லை. மெல்ல புன்னகைத்து வைத்தான்.

“சார் இப்படிதான் கவித இருக்கணும். சமுதாயத்தை குத்தி கிழிக்கிற மாதிரி.. பை தபை என் பேர் பாரதிபிரியன்..”

“நீங்க ஏன் சார் பத்திரிகையில எழுதக் கூடாது?”

“இந்த கவிதையில என்ன சார் சொல்ல வரீங்க. ஒண்ணுமே புரியலை”

ஆளாளுக்கு விமர்சனம் என்று நினைத்து என்னென்னவோ சொன்னார்கள்.

“சாருக்கு மேரேஜ் ஆகிவிட்டதோ..” பாரதிபிரியன் கேட்டார்

“ம்” என்றான்

“நினைச்சேன்.... வீடு எங்க இருக்கு.”

சொன்னான்.

“சும்மா அப்படி வரும்போது பார்க்கலாம்ல...” என்றார்.

வீட்டுக்கு வந்து ஷீலாவிடம் வரி விடாமல் எல்லாவற்றையும் சொன்னான். சந்தோசத்தில் இவன் முகத்தை மார்பு பிதுங்க அணைத்து முத்தமிட்டாள். இவன் முகத்தை தடவி “அவ்வளவு பெரிய ஆளா நீங்க..” என்றாள். புருசனின் திறமைக்கு இருக்கும் மதிப்பை நேரடியாக உணரவேண்டும் போல் இருந்தது.

“என்னங்க....”

“என்ன..?”

“அடுத்த தடவை போகும்போது என்னையும் கூட்டி போறீங்களா?”

“ஏம்பா.. திடீர்னு”

“அந்த சூழ்நிலையை நான் ரசிக்கணும் போல இருக்கு. நீங்க கவிதை படிக்கிறது, கைதட்டி உங்களை வாழ்த்துறது, எல்லாரும் பேசறது. இதுவரைக்கும் நான் பார்த்ததில்லையா.. ஸாரி.. கேட்டதில்லையா.. அதான் ஆசையாயிருக்கு.” சந்தோச மிகுதியால் திணறி திணறி..பெண்ணே உன் ஆசைகளை நான் நிறைவேற்றுகிறேன்.

மறுமுறை போனபோது கூட்டி போனான். இன்று கொஞ்சம் அதிகமாகவே கூட்டம் இருந்தது. இவனோடு இவள் ஒட்டியே நடப்பதைப் பார்த்து நிறைய பேர் முகம் சுளித்தார்கள். “பொது இடத்தில இப்படிதான் உரசிகிட்டே நடக்கணுமா. இது என்ன பார்க்கா.. பீச்சா..” காதுபட முணுமுணுத்தார்கள்.

இவனுக்கு இறங்கி விட்டது.

முன் வரிசையில் வந்து உட்கார்ந்தபோது போனமுறை அக்கறையாய் விசாரித்த பாரதிபிரியன் வந்தார்.

“யார் சார் இது.” கேள்வியில் கேலி இருந்தது.

“மனைவி”

“ஒ..”என்றவர் ரகசியமாய் தொடர்ந்தார். “என்னதான் இருந்தாலும் பப்ளிக்கா நீங்க இப்படி நடந்துகிட்டா.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க..”

இவன் பதில் சொல்லுமுன் இன்னொருவன் அவசரமாய் குறுக்கிட்டான். “அவங்க குருடா..”-கொச்சைதனமான வார்த்தைகள்.
கோபத்தை அடக்கிக் கொண்டு “ம்” என்றான்.

பாரதிபிரியன் “ப்ச்” என்றார். “ஐம் ஸாரி”

பின்னாலிருந்து ஒருவன் இவனை பாராட்டுகிறோம் என்ற எண்ணத்தில் சொன்னான். “கிரேட் சார். உங்க திறமைக்கு வரிசையா எவ்வளவு பொண்ணுங்க வந்திருக்கும். நீங்க எப்படி இவங்களை... ஆமா உங்களுக்கும் ஏதாவது குறைபாடு இருக்கா”

சட்டென்று இவன் ஷீலாவைப் பார்த்தான். விழியில் விழத்தயாராய் கண்ணீர். எழுந்தான். எல்லா கண்களும் இவர்களையே பார்த்துக் கொண்டிருக்க இவன் அவளை அணைத்தபடி வெளியேறி நடக்க ஆரம்பித்தான்.

‘உன் விழி நீர் துடைக்க
 நீளும்- என் விரலைப்
பிடித்துக் கொள்.
நாம் நடப்போம்’

- த.ஜார்ஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It