Lovers “என்னங்க… என்ன பண்றீங்க? எப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்து எத்தனையோ காலம் ஆன மாதிரி இருக்கு. ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகம் மாதிரி தோணுது. எப்படா வருவீங்கன்னு இருக்கு. உங்களுக்கென்ன, வேலையில மூழ்கி இருப்பீங்க. நான் ஒருத்தி இங்க பாவம் போல தனியா இருக்கது உங்களுக்கு நினைவிருக்கா? எதைப் பார்த்தாலும் அதுல உங்க முகம் தான் தெரியுது. வீடு பூரா உங்க வாசனைதான். ஒண்ணுமே செய்யப் பிடிக்கலை. “பாலும் கசந்ததடி சகியே, படுக்கை நொந்ததடி” அப்படின்னு ஒரு பாட்டு வருமே, அந்த பாட்டுக்கு இப்பதான் எனக்கு நிஜமாவே பொருள் புரியுது. நீங்க இல்லாம எனக்கும் ஒரு வாழ்க்கை இருந்ததுன்னே என்னால நம்ப முடியல.

ஒரு நிமிஷம்… தோ வர்றேன்… போன் அடிக்கிறாப்ல இருக்கு….வந்தாச்சு! ஹ்ம்… உங்க சட்டை எனக்கு கொஞ்சம் பெரிசுதான்… பரவாயில்ல. ஆனா எவ்ளோ சொகமா இருக்கு… அதனால பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். போன்ல அம்மாதான். எப்படி இருக்கேன்னு விசாரிக்க கூப்பிட்டாங்களாம். என் தங்கை இருக்காளே… காலேஜ் முடிச்சிட்டு வேலை தேடறேன் பேர்வழின்னு ஊர் சுத்திக்கிட்டிருக்காளே, அவளும் பேசினா. ஆனா எனக்குதான் ஒண்ணுமே புரியல. அவ சொன்னதுக்கெல்லாம் “ம்… ம்…”னு சொல்லிக்கிட்டே இருந்தேனா, அவளுக்கு கோவம் வந்து போனை வச்சிட்டா. எல்லாம் உங்களாலதான். என்ன பண்ணினீங்க என்னை?

பாவம்… உங்கள கொஞ்சமாச்சும் வேலை பார்க்க விடறேன். மீதி அப்புறம்”

எழுத ஆரம்பித்த கவிதையும், மஞ்சுவும் ஒருவரை பார்த்து வெறித்துக் கொண்டு இருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. “யாரா இருக்கும் இந்த நேரத்துல…?” யோசனையோடு கதவைத் திறந்த மஞ்சுவுக்கு ஒரே ஆச்சர்யம்.

“நீங்களா? ரொம்ப நாள் லீவுக்கப்புறம் வேலைக்குப் போறதால நெறய வேலை இருக்கும்; ராத்திரி வர நேரமாகும்னு சொன்னீங்களே? இப்ப இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க?”

பதில் ஏதும் சொல்லாமல், கையோடு கொண்டு வந்த ஒரு காகித்தை எடுத்து வாய் விட்டு வாசிக்க ஆரம்பித்தான், ரகு. “…..உங்களைப் பார்த்து எத்தனையோ காலம் ஆன மாதிரி இருக்கு. ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகம் மாதிரி தோணுது. எப்படா வருவீங்கன்னு இருக்கு…..”

“இப்பிடி உருகி உருகி மெயில் அனுப்புனா எவனுக்கு வேலை ஓடும் ஆபீஸ்ல?”, சிரித்துக் கொண்டே கேட்கவும், வெட்கம் தாளாமல் சிவந்து விட்ட முகத்தை, புதுமணக் கணவனின் மார்பில் புதைத்துக் கொண்டாள், மஞ்சு.

- கவிநயா
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It