தொலைவிலிருந்தே அவனைக் கவனித்தாள். கனகாம்பர பாத்திக்குப் பக்கத்திலிருந்த புழுதியைக் கீரை விதைப்பதற்காகச் சரிபடுத்திக்கொண்டிருந்தான். வரப்பின் விளிம்பில் மண்வெட்டி பாயும் சப்தம் வெப்பவெளியில் கரைந்தது. பொழுது ஏறிக்கொண்டிருந்தது. அடர்ந்து நீண்டு செல்லும் பனஞ்சாலைகள், நீர் காணாமல் காய்ந்து சூடேறிய கரம்பு நிலங்கள், அகற்ற முடியாமல் மண்ணில் ஆழமாகப் பாய்ந்து நிற்கும் பாறைகள்; எங்கோ சில இடங்களில் தனித்து நிற்கும் வீட்டை ஒட்டியோ, பம்பு செட்டுக்குப் பக்கத்திலோதான் கொஞ்சம் பச்சை தெரிந்தது. கிணறுகளில் ஏதோ ஒரு மூலையில் மெல்லக் கசிந்து வந்த ஊற்று நீரைத்தான் சொட்டிச் சொட்டி இறைத்துக் கொண்டிருந்தார்கள். பம்பு செட் கட்டிடத்தின் முன் நிழலில் போய் நின்று அவனைப் பார்த்தாள்.

sunnyday “இந்த வெய்யில்ல... ஏன், அப்புறமா செய்ஞ்சுக்கலாமே, என்ன அவசரம்’’ என்றாள்.

அப்போதுதான் அவள் அங்கே வந்து நின்றிருப்பதை நிமிர்ந்து பார்த்தான்.

“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு.’’

மண்வெட்டியின் உட்பகுதியில் பிடித்திருந்த மண்ணை விரல்களால் சுரண்டிக்கொண்டே புன்னகைத்தான். சற்று மெலிந்து கருத்த சரீரம் அவனுக்கு. முட்டிவரை தொங்கும் நீண்ட ரெடிமேட் ட்ராயர் போட்டிருந்தான். அவர்கள் தோட்டத்திற்கு ஆளாக வந்து ஐந்து வருஷங்களுக்கு மேல் ஆகிறது. வரும்போது சிறுவனாக இருந்தான். இப்போது அவனுக்கு வாலிபக் களை வந்துவிட்டது. மீசை அரும்பிவிட்டது.

திரும்பவும் குனிந்து வரப்பைக் கொத்த ஆரம்பித்தான்.

“உங்க அண்ணன் ஒருத்தன் இருந்தானே, அவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’’

“போன மாசம்தான் ஆச்சி’’ கொத்திக்கொண்டே சொன்னான்.

“இப்ப எங்க இருக்கான்?’’

“கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூருக்கே போயிட்டான்.’’

சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

காய்ந்து போன கனகாம்பரச் செடிகளையும், பார்த்தீனியச் செடிகளையும் பிடுங்கி இரண்டு இடங்களில் கும்பலாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

தொலைவில் பனஞ்சாலைக்கு கீழே காதர் பாயுடைய கரும்புத் தோட்டம் தெரிந்தது. அதற்குச் சற்று தள்ளி முனுசாமி கவுண்டருடைய பருத்தித் தோட்டம். அவர்களைப் போல கடன் வாங்கி தோட்டா வைத்துக் கிணற்றைத் தோண்டும் தைரியம் அவளுடைய அப்பாவுக்கு இல்லை. நிலத்தில் வரும் வரும்படி வட்டிக்குத்தான் கட்டும்; கெடக்கட்டும் என்று விட்டுவிட்டார். மழை பெய்து என்று தண்ணீர் ஊறுகிறதோ அன்றைக்குப் பயிர் வைத்துக்கொள்ளலாம். இருந்த ஒரு ஜோடி உழவு மாடுகளும் போய் இப்போது இருப்பது ஒரு பசு மட்டும்தான். இது ஒன்றுக்கே தீனி போடமுடியவில்லை அவர்களால்; காசு கொடுத்து வைக்கோல் வாங்க வேண்டியிருக்கிறது. மேல்நிலை வகுப்பில் பெயிலாகிவிட்டிருந்த அவளுடைய தம்பி இப்போது டவுனுக்கு வேலைக்குப் போகிறான். ஒயின் ஷாப்பில் வேலை. அவனும் அவளுடைய அப்பாவைப் போல குடிக்கிறான் போல தெரிகிறது. அவனுடைய போக்குவரத்து எதுவுமே சரியில்லை என அவளுக்குப் பட்டது.

சேட்டு இன்னும் கொத்திக்கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே வேலை செய்து வந்ததாலோ என்னவோ அவனுடைய தசைகள் இறுகிக் கடினமாகிவிட்டிருந்தன. அவனுடைய நீண்ட கால்களில் நரம்புகள் புடைத்துக் காணப்பட்டன.

“சரி, உனக்கெப்ப கல்யாணம்?’’

வெட்கத்துடன் சிரித்தான்.

“சொந்தத்தில பொண்ணு இல்லே?’’

“ஏன், எங்க அக்கா பொண்ணு இருக்கே...’’

“தரமாட்டாங்களா?’’

“டவுன்ல இருக்கிற மாப்பிள்ளையா வேணுமாம் அவுங்களுக்கு. இந்த மாதிரி வெயில்ல நடப்போறது, கொத்தப்போறதெல்லாம் அவுங்க பொண்ணால முடியாதாம்...’’

“படிச்சிருக்கா?’’

“ஊம், பத்தாவதோ என்னமோ படிச்சிருக்கா.’’

கொத்தி முடித்தவன் மண்வெட்டியை வரப்பில் காய்ந்து கிடந்த புல்லில் தேய்த்து சுத்தப்படுத்தினான்.

“ஊர் உலகத்திலே வேற பொண்ணா இல்லே? வேலையப் பாரு’’ என்றவள், “பொண்ணுக்கு உன்மேல இஷ்டமா?’’ என்று கேட்டாள்.

“அவளுக்கு இஷ்டம்தான், எங்கக்காதான் பிடிவாதமா இருக்கு.’’

மண்வெட்டியை வரப்பின் மேல் வைத்துவிட்டு ஜோபிக்குள் கை விட்டு தீப்பெட்டி ஒன்றை எடுத்தான். கும்பலாகக் குவித்துப் போட்டிருந்த செடிகளுக்கருகில் உட்கார்ந்து தீக்குச்சியைக் கொளுத்திக் கைகளால் அண்டக்கொடுத்தவாறு பற்றவைத்தான். உள்ளே காய்ந்துபோன கனகாம்பரச் செடிகளும், புற்களும் இருந்ததால் சட்டென்று தீப்பிடித்துக்கொண்டது. புகையின் அடர்த்தி பெருகி வதங்கிக்கிடந்த பார்த்தீனியச் செடிகள் தீக்குள் அடங்கிக்கொண்டிருந்தன.

எவ்வளவுதான் பிடுங்கிப்போட்டாலும் இந்தச் செடிகள் மட்டும் ஏன் மாளவே மாட்டேன் என்கிறதோ என்று சலிப்பு தோன்றும் அவளுக்கு. ஒரு துளி ரத்தத்தில் ஓராயிரம் அரக்கர்கள் எழுந்து வருவதுபோல இந்தப் பூண்டுகளும் முளைவிட்டு எழுந்துவிடுகின்றன.

சற்று தள்ளி விழுந்து கிடந்த ஒரு பனை ஓலையைக் கொண்டு வந்து பற்ற வைத்து இன்னொரு கும்பலுக்குக் கொண்டுபோய் தீ வைத்தான். கும்பலின் மேல் நீரலைபோல தீ உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தது. எரியாமல் ஒதுங்கி நின்ற செடிகளை எடுத்துத் தீக்குள் போட்டான்.

ஏனென்று விளங்காத ஒரு ஈர்ப்பில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கசிந்து வடிந்த வியர்வையில் அவன் உடல் பிரகாசத்துடன் தெரிந்தது. கானல் அலையும் வெளியில், விரைத்து நிற்கும் பனைமரங்களின் பின்னணியில் தீயை ஆலிங்கனம் செய்தபடி அவன் நின்றிருக்கக் கண்டாள். தீயுடன் சேர்ந்து அவனது சரீரம் எரிந்துகொண்டிருந்தது. உடல், மனம் எல்லாம் அந்தக் கனலில் இளகி வடிந்து கொண்டிருப்பதான அச்சம் தோன்ற எழுந்து நின்றுகொண்டாள். தலை சுற்றுவதுபோல இருந்தது. அங்கிருந்து நடந்தாள்.

புழுக்கம் தாளாமல் அவள் விழித்துக்கொண்டாள். உடல் வியர்த்துவிட்டிருந்தது. மின்விசிறி சுற்றவில்லை. அவளது வயிற்றின் மேல் மகனின் கசகசத்த கை விழுந்திருந்தது. திண்ணையிலேயே படுத்திருக்கலாம். இந்த மின்விசிறியை நம்பி அறைக்குள் படுத்ததுதான் பிசகு. ஒரு அட்டையைக் கொண்டுவந்து மகனுக்கு விசிறிவிட்டாள்.

ஜன்னல் திறந்திருந்தும்கூட காற்று உள்ளே வரவில்லை. வெளியே சுழன்று சுழன்று காற்று வீசினாலும் இந்த அறைக்கு மட்டும் ஏன் காற்று வரமாட்டேன் என்கிறதோ என்ற சலிப்புடன், ஜன்னலில் தெரிந்த வானத்தைப் பார்த்தாள். இன்று வெய்யில் உடைந்து காய்கிறது. சாய்ந்திரமோ, இரவோ மழை வரலாம்; நிச்சயமில்லை. இரண்டு மூன்று நாட்களாகவே வானம் இப்படித்தான் பூச்சாண்டி காட்டுகிறது.

முந்தானையை தளர்த்தி மடிமேல் நழுவவிட்டாள். மகனுக்கு விசிறிவிட்டுக்கொண்டே தன் மார்பிலும் விசிறிக்கொண்டாள். காற்று போதவில்லை. ஜாக்கட்டின் மேல் கொக்கியை மட்டும் கழட்டி விட்டுக்கொண்டாள். உள்ளே இறுகிக்கிடந்த உடம்பு வியர்வையில் கசகசத்து வெளிர்ந்த நிறத்தில் பிதுங்கித் தெரிந்தது. அவளுக்குச் சற்று பெரிய முலைகள்தான். முன்பெல்லாம் இது பற்றிப் வெட்கமும், பெருமிதமும் அவளுக்கு இருந்ததுண்டு. இப்போது அதுவே சுமையெனத் தோன்றியது. அவளுடைய மகன் பால் குடிப்பதை மறந்து இரண்டு வருஷத்திற்கு மேல் ஆகிறது. இதன் மேல் பெரும் மோகம் கொண்டிருந்த அவளுடைய கணவனோ இனிமேலும் வரப்போவதில்லை.

அம்பை உச்ச பட்ச வேகத்தில் செலுத்தக்கூடிய வில்லாக அவளுடைய உடலை வளைத்து நாணேற்றியிருந்தான் அவன். கூச்சமற்ற வெளியில் அவளுடைய உடலை மலரச் செய்திருந்தான். அவனுக்குத் திகட்டுவதே இல்லை. அந்தக் கடைசி இரவிலும்கூட விடியற்காலை இரண்டு மணிக்கு விழித்துக்கொண்டு அவளை எழுப்பினான். “செல்வி, செல்வி...’’

அவள் விழித்துக்கொண்டாள். அவளைத் தன்பக்கம் இழுத்து மேலே போட்டுக்கொண்டான்.

“நேரங்காலமே கிடையாதா?’’

“ஊருக்கு போயிவர இரண்டு மூணு நாளு ஆகும்.’’

“அதுக்கு...’’

“செல்வி.. ’’ அவன் கெஞ்சினான்.

“வேனும்ன்னா நானும் கூட வரட்டுமா?’’

“முடிஞ்சா கூட்டிகிட்டு போகமாட்டேனா?’’

அவளுடைய இதழ்களைக் கவ்வி கீழே புரட்டினான். “பக்கத்தில கொழந்தங்க’’ என்றாள் அவனுடைய ஆவேசத்தை நிதானப்படுத்தும் விதமாக.

அதுதான் கடைசி. விடியற்காலை நான்கு மணிக்குப் புறப்பட்டுப் போனான். ஏழு மணிக்கெல்லாம் விபத்தில் இறந்த செய்தி அவளுக்கு எட்டியது.

கொஞ்சம் காலம்தான் அவனோடு வாழ்ந்தது; அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. தூங்கி விழித்ததுபோல, ஒரு இன்ப சொப்பனம் கண்டதுபோல. படுக்கையறையிலிருந்து வெளியே வருகிறாள். அவளது உறவினர்களெல்லாம் நின்றுகொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்காக வந்தவர்களல்லவா இவர்கள்? வெட்கமில்லாமல் இன்னும் ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்? முன்பு மகிழ்ச்சியாகத் தெரிந்தவர்கள் இப்போது துக்கத்துடனல்லவா இருக்கிறார்கள்! இது என்ன நாடகம்! நேற்றுத்தான், நேற்று போலத்தான் அவனை மணந்தது. முன்னிரவில் அவனுடன் படுக்கையில் புரண்டேன்; பின்னிரவில் அவனை அணைத்துக்கொள்ள நீட்டிய கை வெறுமையை உணர்கிறது. எழுந்து போய்விட்டிருக்கிறான்; திரும்ப இயலாத இடத்திற்கு. முன்வாசலில் புகுந்து பின்வாசலைத் திறந்து கொண்டு அவன் வெளியே போய்விட்டான். எல்லாம் அத்துடன் முடிந்து விட்டது. முடிந்துதான் விட்டதா? இன்னும் எத்தனை வருஷங்கள் வாழ வேண்டியிருக்கும்? ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு யுகமெனக் கழிந்தால் எப்போது முதுமை வருவது, அடிவயிற்றின் தகிப்பு எப்போது அடங்குவது?

பாழான வீடு ஒன்றில் கைவிடப்பட்டு, ஆணியடித்துத் தொங்க விட்டதுபோல, சுட்டெரிக்கும் வெய்யிலில் அவள் தொங்கிக்கொண்டிருக்கிறாள். தலையில் அறையப்பட்டிருக்கும் ஆணியை உருவிவிட்டுக் கீழிறங்கும் வலுவற்று அவள் மனம் சோர்வுற்றிருக்கிறது. வலி, வெப்பம், புழுக்கம், உடலின் கனம், தகிப்பு - இப்படியே எரிந்து சாம்பலாகி உதிர்ந்துவிடுவோமானால் எவ்வளவு பெரிய விடுதலை! எங்கிருந்தோ தொடங்கி தேகம் முழுமைக்கும் பரவி தனது இரக்கமற்ற நாவினால் ருசிபார்த்தது அந்தத் ‘தீ’. எனது கேவலின் ஒலிகூடப் பிறருக்குக் கேட்காமல், கைகால்களைக்கூட அசைக்க முடியாமல்... நான் என்ன கல்லறைக்குள் படுத்திருக்கிறேனா? மண் என்னை விழுங்கிக்கொண்டுவிட்டதா?

முன்பு அறுபட்ட உறக்கத்தின் இழையும், புழுக்கத்தின் மயக்கமும் அவளை மீண்டும் உறக்கத்திற்குக் கொண்டு போனது.

அம்மாவை வெளியே காணவில்லை. பையனை எடுத்துக்கொண்டு பொறை வாங்கிக்கொடுக்கக் கடைக்குப் போயிருப்பாள். கரும்புத் தோட்டத்தைப் பார்த்து நடந்தாள் அவள். ஒதுங்கப்போவதென்றால் இங்கே பிரச்சினைதான். இரவிலென்றால் பரவாயில்லை; பக்கத்திலேயே எங்காவது போய்க்கொள்ளலாம். இந்தக் கருப்பந்தோட்டம் இல்லையென்றால் வெகுதூரம் நடந்து ஆற்றுப் பள்ளத்திற்குத்தான் போக வேண்டும். ஆற்றிலும் நீர் வற்றி ஒரு வருஷத்திற்கு மேலாகிறது; தண்ணீருக்கு வீட்டுக்கு வர வேண்டும்.

இன்னும் வெப்பம் தணியவில்லை. தொலைவில் தெரிந்த மலைச் சரிவு மஞ்சம் புற்கள் எரிந்துபோய்க் கறுத்துத் தெரிந்தது.

பனஞ்சாலையிலிருந்து தோட்டத்து வரப்பில் இறங்கினாள். கரும்பு முற்றி வெகு நாட்களாகிவிட்டது. இன்னமும் கட்டிங் ஆர்டர் கிடைக்கவில்லை. இப்படியே விட்டால் ஒரு மாசத்தில் கரும்புகள் காய்ந்து விறகாகிவிடும்போலத் தெரிந்தது. மேலே பூக்களுடன் காணப்பட்ட நான்கைந்து சோகைகள் தவிர கீழே எல்லாம் காய்ந்து போயிருந்தன. ஒரு தீப்பொறியில் சட்டென்று எரிந்து எல்லாம் சாம்பலாகிவிடும்போல ஒரு அனல் அதற்குள்ளிருந்து வீசியது.

தோட்டத்தின் மையப்பகுதியில் குறுக்கிட்ட ஒரு வரப்பில் திரும்பி அக்கம்பக்கம் பார்த்தபடி சாய்ந்திருந்த கரும்புகளைத் தாண்டித் தாண்டிப் போனாள். சோகைகள் கால்களை அறுத்து விடாதமாதிரி பார்த்து நடந்தாள். ஒரு இடத்தில் குகைபோன்ற ஒரு வழி தெரிந்தது. அதன் வழியே உள்ளே போனால் ஒதுங்குவதற்குச் சௌகர்யமான இடம் கிடைக்கும்.

உள்ளே நுழைந்து கரும்புகளின் அடர்த்தி குறைந்த ஒரு இடத்தைத் தேடினாள். அந்த இடத்தில் கரும்புகளை எலிகள் நாசம் செய்துவிட்டிருந்தன.

மேலும் போக முடியாமல் திகைத்து நின்றுவிட்டாள். நடுக்கால்வாயில் அவளுக்கு முதுகு காண்பித்தவாக்கில் கறுத்த தேகத்துடன் அவன் உட்கார்ந்திருந்தான்.

சட்டென்று திரும்பி வந்த வழியே வேகமாக நடந்தாள். இவளுக்குப் பின்னால் சோகைகள் மிதிபடும் சத்தம் அவசரமாக விலகிப்போய் கொண்டிருந்தது. அவனும் பார்த்துவிட்டிருக்க வேண்டும்.

தோட்டத்தை விட்டு வெளியே வந்தாள். அந்த வெப்ப வெளி மீண்டும் அவளுக்கு முன் பீதியுடன் விரிந்தது. அதில் சலனமில்லாமல் விறைத்து நின்றுகொண்டிருந்தன பனை மரங்கள். அதற்குமேல் நகர முடியாதவளாக வரப்பிலேயே உட்கார்ந்தாள். வெளியே எதையும் காண அஞ்சியவளாக மடியில் முகம் புதைத்துக்கொண்டாள். தனியே... ரகசியமாக... தனது கைகளால் தன்னையே ருசித்தபடி... அவனேதான்... நம்ப முடியவில்லை அவளுக்கு. கோபமா, ஆத்திரமா, துக்கமா எதனால் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பதுகூட விளங்காமல் அழத் தொடங்கினாள்.

- ஜீ.முருகன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It