மக்கள் நடமாட்டம் அதிகமாயுள்ள நகர நெரிசல்களுக்கு மத்தியில் வாழ்வதை விட புதிதாய் கட்டுமானங்களை ஆரம்பித்திருக்கும் இந்த இடம் வசதியாயிருப்பதை இங்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் நன்றாகவே நான் உணர்ந்திருக்கிறேன். நல்ல காற்று, இயற்கை வெளிச்சம், வீட்டுகுப் பக்கத்தில் மரம் செடி கொடிகள்; மனதிற்கு இதமாய் இருக்கிறது. மாலை வேளைகளில் மாடியில் ஏறி நின்றுகொண்டு கண்ணுக் கெட்டிய தூரம் வரை சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் ஓடுவது தெரியவே தெரியாது. இதுவே இப்பொழுது எனக்கு பொழுது போக்காய் அமைந்தும் போய்விட்டது.

ஒரு நாள் நான் மாடியில் நின்றுகொண்டு தெருச் சாலையை பார்த்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் எதிர் பட்ட ஆட்களிடம் ஏதோ விசாரித்துக் கொண்டு ஒருவர் வருவதை பார்த்தேன். கிட்டத்தில் வந்த பின்னர்தான் தெரிந்தது அவர் எங்கள் தூரத்து உறவினரான ராமையா என்பது. என்னை விட இரண்டு மூன்று வயது மூத்தவர். அவர் என் பூர்வீக கிராமத்தைச் சேர்ந்தவர். என் வீட்டைத்தான் விசாரித்துக் கொண்டு வருகிறார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

நான் இந்த நகரத்துக்கு வந்து இருபது வருடம் ஆகிறது. இந்த இருபது வருடத்தில் ஒரு நாள்கூட அவர் இங்கு வந்ததில்லை. இவரையும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாய் நான் பார்க்கிற வாய்ப்பும் வாய்க்கவில்லை. ஊருக்குச் சென்றால் இவரை போதையுடன் பார்க்கலாம். இவர் போதையுடன் இருக்கயில் யாரும் இவரிடம் பேச்சுக் கொடுப்பதில்லை. அந்த சமயத்தில் இவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் மரியாதை மருந்துக்குக்கூட இருக்காது. அதனால் எங்கள் உறவினர்கள் இவரை பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளனர். உறவினர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லோருடைய அனுகுமுறையும் இவரிடம் இப்படித்தான் இருந்தது. இப்பொழுது இங்கே வரும் இவர் என்ன விவகாரத்தை விதைத்துவிடப் போகிறாரோ என்ற அச்சத்துடன் மாடியை விட்டு கீழே இறங்கி வாயில் பக்கம் வந்தேன். அவரும் என்னைப் பார்த்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

உடம்பு கொஞ்சம் வாடிப் போயிருந்தது. வாழ்க்கைக்கும், வசதிக்கும் வேண்டிய பொருளாதாரத்தை வயல்காட்டிலிருந்தே வயப்படுத்தி விடலாம் என்று ஆண்டுக் கணக்காய் நம்பிக் கொண்டிருக்கும் நம் நாட்டு விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் அவர்கள் பயிர் செய்யும் பயிரைப் போலவே வதங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் இவர் அந்தப் பிரிவில் இடம் பெறாதவர். வீட்டில் உள்ளவர்கள் விவசாயம் செய்து வைத்தால் அறுவடை காலத்தில் விளைந்தவைகளை விற்றுமுதல் செய்ய முன்னே நிற்பார். ஆதலால் இவருடைய குடும்பம் நாளடைவில் நலிந்து போனதாய் ஊரிலுள்ளவர்கள் பேசிக்கொள்வார்கள்.

வாசலில் வந்தவரை, "ராமையா... வாங்க... வாங்க!" என்று வரவேற்றுக் கொண்டே, "நல்லா இருக்கிறீங்களா, ஊருலே எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா?" என்றேன்.

"ஏதோ இருக்குறேன்." என்ற குரலில் சலிப்பு தெரிந்தது.

இருவரும் வீட்டுக்குள்ளே வந்து அங்கே கிடந்த நாற்காலியில் அமர்ந்தோம். என் மனைவியும் வந்து குசலம் வசாரித்துவிட்டு டீ ஏற்பாடு செய்ய உள்ளே சென்ற பிறகு "என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க." என்றேன்.

"பாக்க வேண்டிய வேலை இருந்ததல்தான் வந்திருக்கிறேன்.' என்றார் ராமையா.

"நல்லது. விபரமா சொல்லுங்க." என்றேன்.

"அறுபது வயசுக்கு மேல் ஆனவங்க எல்லாருக்கும் அரசாங்கத்துலே ஏதோ உபகாரச் சம்பளம் தருறாங்களாம். அது சம்பந்தமா ஒன்னயே பாத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்." என்றார்.

"அதுலே நமக்கு பயன் கிடைக்கனுமுன்னா நெல பொலம் எதுவும் இல்லாமல் இருக்கனுமாமே." என்றேன்

"இப்போ என்னுகிட்டேயும் எந்த நெலமும் இல்லை." எனறார்.

"அப்படியா? உங்க நெலமெல்லாம் என்ன ஆச்சு?" என்றேன்.

"அதேல்லாம் ஏன் கேக்குறே. நான் என்னோட ஊதாரித் தனத்துனாலே கணிசமாத் தோத்தேன். 'தம்பி தலை எடுத்தான் காருவாக்கி கறி எடுத்தான்' ன்னு சொல்லுவாங்கல்லெ அது மதிரி என் மகன் தலை தூக்கினதும் மிச்சமிருந்ததையெல்லாம் என்னைப்போலவேத் தீத்து கட்டிபுட்டான். தெரியாமலா எல்லாரும் சொன்னாங்க 'அப்பனுக்குப் பிள்ளை தப்பாமே பொறந்திருக்கு' ன்னு." என்றார்.

"உண்மையாவா சொல்லுறீங்க! உங்க குடும்பத்துக்கு நெலம் நீச்சு தாராளமா இருந்துச்சே?" என்றேன்.

"இருந்ததெல்லாம் உண்மைதான். அந்த காலத்துலே பசி பட்டினியில்லாமே வளந்ததால் அதோட அருமை எனக்கு தெரியாமல் போச்சு. என்னோட மகனும் என்னைப் போலவே வளந்துட்டான். அவனுக்கும் சொத்தோட மகிமை தெரியாமல் போயிடுச்சு. கஷ்டப் பட்டு சம்பாதிச்ச என் தகப்பனாரு அந்த காலத்துலே எவ்வளவோ என்னுகிட்டே சொல்லிப் பார்த்தாரு. எனக்குத்தான் அது ஏறமாட்டேன்னுடுச்சு. 'கண் கெட்டபின்னே சூரியநமஸ்காரம்' ன்னு சொல்லுற மாதிரி இப்போ அதை நெனச்சுப் பாத்து என்ன ஆகப் போவுது?" என்றார்.

'செல்வாக்காக வாழ்ந்த குடும்பம் இப்படி சீரழிந்து போய்விட்டதே. பட்டறிவுதான் சிலருக்கு சரியான பாடத்தைப் புகட்டுகிறது.' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். பின்னர் என் மனைவி கொண்டு வந்த டீயைக் குடித்தோம்.

"நீங்க சொல்லுற சலுகை கெடைக்க என்னென்ன செய்யனும்?" என்று கேட்டேன்,

"கிராம அதிகாரிகிட்டே சர்டிபிக்கெட் வாங்கனுமாம். அப்பறம் டாக்டர் கிட்டே சர்டிபிக்கெட் வாங்கனுமாம். இது மாதிரி செல வேலைகளெல்லாம் செஞ்சாகனும்." என்றார்.

"வாங்கி குடுத்திட வேண்டியதுதானே?" என்றேன்.

"அதெல்லம் சும்மா வாங்க முடியாது. அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும். அதுனாலேத்தான் ஒன்னேப் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கிறேன்." என்றார்.

இப்போழுதுதான் அவர் வந்த நோக்கம் எனக்கு தெளிவாய்த் தெரிந்தது. வாழ்ந்து கெட்டவர்கள். தவிர்த்து விட தயக்கமாக இருந்தது. முடிந்த உதவியைச் செய்யலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

"அதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும்?" என்றேன்.

"ஐநூறு ரூபாய் ஆகுமாம்." என்றார்.

"இதுக்குப் போயி இவ்வளவு ஆகுமா?" என்றேன்.

"எனக்கு முன்னாலே இதுக்காக முயற்சி செஞ்சவுங்க அப்படித்தான் சொல்லுறாங்க." என்றார்.

'உண்மையைச் சொல்லுராரா? அல்லது நடகமா? குடிபழக்கம் உல்லவர்கள் நிறைய நாடகங்கள் நடத்துவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். இதுவும் அதில் அடங்குமா? கிராமத்துலே இதுமாதிரி உதவிகள் யாரும் செய்யாமலா இருப்பாங்க? அல்லது ஊரிலுள்ளவர்களிடமெல்லாம் இதைப் போல் வாங்கி முடிந்து விட்டதால் இங்கு வந்துள்ளாரா? அவர் கேட்கும் அளவுக்கு முழு உதவியும் செய்யலாமா அல்லது ஒரு பகுதி தரலாமா?' எண்ண வெளியெங்கும் ஏராளமான கேள்விகள் முளைவிட்டன எனக்கு.

"கையில் மடியில் காசில்லாதவர்கள்தான் உதவி கெட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பிகிறார்கள். அவங்க இவ்வளவு தொகைக்கு எங்கே போவாங்க?" என்றேன்.

"கடன் கப்பியை வாங்கித்தான் முயற்சி பண்ணிகிட்டு இருக்குறாங்க." என்றார் அவர்.

"இருங்க." என்று சொல்லிவிட்டு எழுந்து படுக்கையறக்குள் போனேன். என் மனைவி உள்ளே படுத்திருந்தாள். அவளிடம் விபரங்களைச் சொன்னேன். அவளும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்ததாய்ச் சொன்னாள். "என்ன செய்யலாம்?" என்று யோசனை கேட்டேன்.

"உங்கள் விருப்பம்." என்று சுருக்கமாய் முடித்துக் கொண்டாள்.

அலமாரியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டேன். வெளியில் வந்து அவரிடம் நீட்டினேன். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்.

"நீ மகாரஜனா இருக்கனும்." என்று வாழ்த்தியதோடு, "எப்படியாவது ரெண்டு மாசத்திலே திரும்பக் கொடுத்துடுறேன்." உறுதி கூறிவிட்டு எழுந்து சென்றார்.

இந்த நிகழ்ச்சி நடந்து கிட்டத் தட்ட ஆறு மாதத்திற்குப் பின் நானும் என் மனைவியும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கிராமத்திற்கு சென்றிருந்தோம். சொந்தம் சோளிகளை இது போன்ற நிகழ்ச்சிகளில்தானே ஒட்டு மொத்தமாக பார்த்து மகிழ்ந்து பேச முடிகிறது. உண்மையில் விழாக்கள் சற்று அதிகமான செலவுகளை ஏற்படுத்தினாலும் அதே சமயத்தில் நிறைய மகிழ்ச்சிகளையும் விளைவிக்கத் தவறுவதில்லை.

திருமண விழா முடிந்த பின்னர், நானும் என் மனைவியும் கிராமத்திலுள்ள சகோதரர் வீட்டுக்குச் சென்றோம். அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் திரும்புவதாய்த் திட்டமிட்டிருந்தோம். சகோதரருடன் பேசிக்கொண்டிருந்தபோது ராமையாவின் ஞாபகம் வந்தது.

"ராமையாவைப் பார்க்க முடியவில்லையே எப்படி இருக்கிறார்?" என்றேன்.

"ராமையாவா? அந்த கதைஉனக்குத் தெரியாதா?" என்றார்.

"என்னாப்பா, நீ கதை கிதைன்னு சொல்லுறே. விபரமா சொல்லு."

"ராமையா செத்துப் போயி மூனு நாலு மசமிருக்கும். இந்த சேதி தெரியாதா?"

"அடடா! சுத்தமாத் தெரியாமல் போச்சே. எப்படி அது நடந்துச்சு?"

"முதியோருக்கு உபகாரச் சம்பளம் தர்ரதைக் கேள்விப் பட்டு எங்கேயோப் போயி செலவுக்கு பணம் பொரட்டி கிட்டு ராமையா வந்திருக்கிறாரு. வீ.ஏ.ஓ கிட்டே அதுக்கான சர்டிபிக்கெட் கெட்டிருக்கிறாரு. வீ.ஏ.ஓ குடும்ப அட்டையை எடுத்துக்கிட்டு வரச் சொல்லி இருக்கிறாரு. இவரும் எடுத்துக்கிட்டு போயி காண்பிச்சு இருக்கிறாரு. அவரோட துரதிர்ஷ்ட்டம் குடும்ப அட்டையிலே அவருக்கு வயசு ஐப்பத்தஞ்சுன்னு போட்டு இருந்திருக்கு. அந்தவயசுக்கெல்லாம் சர்டிபிக்கெட் தர முடியாதுன்னு வீ.ஏ.ஓ சொல்லிபுட்டாராம். ராமையாவும் கஜகரணம் போட்டுப் பாத்திருக்கிறாரு. ஒன்னும் ஆகலே. ஊருக்குள்ளே வந்து சொல்லின பிற்பாடு செலபேரு போயி வீ.ஏ.ஓ கிட்டே சிபாரிசு செஞ்சு பாத்திருக்கிறாங்க. அப்படியெல்லம் செஞ்சா தன்னுடைய வேலக்கி வேட்டு வச்சதா ஆயிடுமுன்னுட்டாராம். எனக்கும் ராமையாவுக்கும் ஒரு வயசுதான். எனக்கு இப்போ அறுபத்தி ரெண்டு வயசு ஆகுதுன்னா பாத்துக்கவே. உண்மை இப்படி இருந்தாலும் சர்டிபிகெட் வாங்க முடியாலே." சகோதரர் தொடர்ந்தார்.

"இத மனசிலெ வச்சு கிட்டு பிராந்திகடைக்குப் போயி கண்ணு மண்ணு தெரியாமெ குடிச்சு புட்டு வாய்க்கு வந்ததை பேசிக்கிட்டு வீ.ஏ.ஓ கிட்டே போயி இருக்கிறாரு. இதை தெரிஞ்சுகிட்ட வீ.ஏ.ஓ எங்கேயோ ராமையா கண்ணுலெ படாமே பதுங்கி கிட்டாராம். அதுக்கு அப்புறம் ஊரே நாரிப் போற அளவுக்கு ரகளை பண்ணிகிட்டு வீட்டுப் பக்கம் போயிருக்கிறாரு. வீட்டுல இருந்த பொண்டுவ புள்ளைங்க எல்லாரும் இருந்த இடம் தெரியாமே ஒடுங்கி கிட்டாங்களாம். வீட்டுக்குள்ளே புகுந்து குடும்ப கார்டே எடுத்தாந்து வாசல்லே போட்டு கொளுத்திபுட்டு வேகமா போனப்போ மாடு கட்ட அடிச்சு வச்சிருந்த அச்சுல கால் தடுக்கி மாட்டுக்காக கட்டி வச்சிருந்த தொட்டியிலெ விழுந்திருக்கிறாரு. தொட்டி செங்கல் வச்சு சிமின்டால் கட்டியிருந்துச்சு. அதிலே தலை அடிபட்டு அந்த எடத்திலேயே அவரு ஆயுசு முடிஞ்சு போச்சு."

"அடடா ரொம்ப பரிதாபமா போச்சுதே!" என்றேன்.

"அதுக்கப்பறம் ஊரு ஆளுகளெல்லாம் ஒன்னு கூடி அபகேட்டுச் சாவுங்கிறத்துனாலே ராவோட ராவா கொண்டுபோயி கொளுத்திப் புட்டு வந்துட்டாங்க. அபகேடா செத்ததுனாலே வெளியூருக்கு துக்கஞ் சொல்லி அனுப்பாமலே காரியங்களை முடிச்சாச்சு." என்றார்.

அறுபது வயதுக்கு மேல் ஆகியும் இயற்கை மரணம் அவருக்கு இல்லாமல் போனது, எனக்கு மிகவும் சஞ்சலத்தைத் தந்தது. 'உதவி செய்வதாய் நான் நினைத்தது இப்படி ஆகிவிட்டதே' என்ற ஆதங்கம் எனக்கு இல்லாமலில்லை.

கட்டுப்பாடில்லாத வாழ்க்கை இலக்கின்றி பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போன்றது. எதிர்படும் எதையும் தராதரமின்றி அழித்து விட்டுச் செல்லும் தன்மை கொண்டது. ராமையாவின் வாழ்க்கை இதற்கோர் எடுத்துக்காட்டாய் அமைந்து போனது வேதனையாய் இருந்தது.

- பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It