முகம்: ஒன்று

பதட்டமான நாட்கள். எந்த நேரமும் என்னவும் நடக்கலாம். புகைப்படங்களை எடுத்துக் கொண்டு 'போட்டோ குறோம் கலர் லாப்'பை விட்டு வெளியேறும்போது நேரம் ஒரு மணியைத் தாண்டிவிட்டது. காலிவீதியில் ஒரே சன நெரிசலாக இருந்தது. தெருவைக் குறுக்காகக் கடந்து மறுபுறம் இருக்கும் 'பஸ் ஸ்ரொப்'பை நோக்கி நடப்பதில் அவதானமாக இருந்தேன்.

"சந்திரன்! சந்திரன்!!" எதிர்ப்புறமிருந்து யாரோ என்னைக் கூப்பிடுவது போலிருந்தது.

"அட சிவநாதன்! இவன் என்னண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தான்?"

திடீரென்று அவனைக் கண்டதில் மனம் ஆடிப்போய் விட்டது. உடம்பு வியர்வையில் நனைந்து பதறத் தொடங்கியது. நேரடியாக என்னை அடையாளம் கண்டு கூப்பிடும்போது இனித் தப்ப முடியாது. சுருக்கமாகச் சொல்வதானால் அவன் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவன். பல கொலைகளைச் செய்தவன். வங்கிக் கொள்ளை, குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டவன். கழுத்திலே ஒரு கனமான 'பாக்'குடன், தூக்க முடியாமல் களைத்து விழுந்து வந்து கொண்டிருந்தான்.

"சந்திரன், என்னைத் தெரியுதுதானே! ஒரு அவசர அலுவலாப் போய்க்கொண்டிருக்கிறன். 'பம்பலப்பிட்டி சந்திக்கு இன்னும் கனதூரம் போக வேணுமோ?" குபுக்கெண்டு அவனுடம்பிலிருந்து ஒரு வாஷனை வெளிக்கிளம்பியது. அங்குமிங்கும் பார்த்து, நான் அவனுடன் கதைப்பதை யாராவது கவனிக்கின்றார்களா எனத் தெரிந்து கொண்டேன்.

"அங்கை பாருங்கோ தெரியுது. அதுதான்."

"அதுக்குப் பக்கத்திலை ஒரு பெரிய 'பஸ் ஸ்ராண்ட்' இருக்குதாம். எந்த நேரமும் பஸ்சுகள் வந்து நிண்டு போறதாம்" எனது காதிற்குள் குசுகுசுத்தான்.

"ஓம். ஓம்" என்றேன். எனது வாயிலிருந்து ஒருவித சத்தமும் வரவில்லை. காற்றுத்தான் வந்தது. பேயடிச்சது போலானேன்.

"அப்ப வாறன்" என்றபடியே மூச்சிரைக்க விரைந்தான். நான் தப்பினேன் பிழைத்தேன் என்று விடுபடும்போது திரும்பவும் என்னைக் கூப்பிட்டான்.

"தம்பி சந்திரன்! அதுக்குப் பக்கத்திலை ஒரு 'மில்க் பார்' இருக்குதா? படு பிஷியான இடமாம். எந்த நேரமும் சரியான சனமாக இருக்குமாம்" என்று மீண்டும் என்னை விலாவாரியாகத் துருவினான்.

"ஓம். ஓம்" நான் இருக்கும் நிலையில் அவன் என்னத்தை கேட்டாலும் 'ஓம்' எண்டுதான் சொல்ல வேண்டும். அவனது பதட்டத்தைப் பார்க்கையில், ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது என்றுதான் மனம் சொல்கிறது.

எதிரே இருந்த 'பஸ் ஹோல்ற்'றிற்குப் போகும் எண்ணத்தை இப்பொழுது கைவிட்டு, 'கொல்பிட்டி' நோக்கி அதிவேகமாக நடக்கத் தொடங்கினேன். இடையில் ஏதாவது பஸ் வந்தால் ஏறிக் கொள்ளலாம். நிலமை அவ்வளவு சரியில்லை. எவ்வளவு கெதியில் இடத்தை விட்டு மாற முடியுமோ அவ்வளவிற்கு நல்லது. நிறையப் பேர் இண்டைக்குத் துலையப் போயினம்.

பத்து நிமிஷ நடையின் பின்பு வந்த அடுத்த 'ஹோல்ற்'றில் நிண்டு கொண்டேன். மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கியது. இந்த வீதி வழியாக பதினைந்து நிமிஷத்திற்கொரு பஸ் வரவேண்டும்.

சிவநாதன்! பாடசாலையில் படிக்குப்போது எனக்கு ஒரு வகுப்பு முதல் படித்து வந்தான். குழப்படியில்லாத, அமைதியான, ஒரு சராசரி மாணவன் அவன். எதற்கெடுத்தாலும் ஆசிரியரைப் போட்டுத் துருவித் துளாவி எடுப்பதில் விண்ணன். கதைக்கத் தொடங்கினால் நிறுத்த மாட்டான். பின்பு நாட்டில் ஆளுக்கொரு இயக்கம் வந்தவுடன் அவனும் தன் பங்குக்கு ஒரு இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். நான் மேலே படிப்பதற்காக பல்கலைக்கழகம் போய்விட்டேன். அதன்பின்பு அவனைப்பற்றி எனக்கு வரும் செய்திகள் எல்லாம் திடுக்கிடும் செய்திகள்தான். கொலையும் கொள்ளையும் குண்டுவெடிப்பும். நான் ஊரில் அவனைச் சந்தித்த நாட்களில் ஒருபோதும் தாடி மீசையுடன் அவனைக் கண்டதில்லை. இப்போது ஒரு வித்தியாசமான உருவமைப்பில் கொழும்புக்கு வந்து இறங்கியிருக்கிறான்.

வரவேண்டிய பஸ் ஒன்றும் வரவில்லை. குண்டு வெடித்த சத்தமும் கேட்கவில்லை. தொலைதூரம் வந்துவிட்டேனோ? மீண்டும் நடக்கத் தொடங்கினேன். 'கொல்பிட்டி'ச் சந்திக்குப் போய்விட்டால் வேறை பக்கத்திலை இருந்தும் பஸ்கள் வரலாம்.

வீதியின் மறுபுறத்தே ஒரு பொலிஸ் ஸ்ரேசன் வந்தது. குண்டு வெடித்தால் எத்தனை மனித உயிர்கள் போகும்! இப்பொழுதே ஒவ்வொருநாளும் இரவிரவாக பொலிசும் இராணுவமும் கூட்டாகச் சேர்ந்து சோதனை எண்ட பேரிலை எவ்வளவு அநியாயம் செய்யினம். போனகிழமைகூட பெண்டுகள் பிள்ளையள் எண்டும் பாராமல் நித்திரைப் பொழுதில் உடுத்த உடுப்போடை அள்ளிக் கொண்டுபோய் பொலிஸ் ஸ்ரேசனிலை வைச்சிருந்தவர்கள். 'கொட்டஹேன பொலிஸ் ஸ்ரேசனிலை' கண்டனான். சிவநாதனைப்பற்றி பொலிஸ் ஸ்ரேசனிலை போய் நான் முறைப்பாடு சொன்னால் முதலிலை என்னைத்தான் உள்ளுக்கை தள்ளுவினம். உது தேவைதானா?

குண்டு வெடிச்சாலும் சத்தம் கேட்காதளவு தூரத்திற்கு ஓடி வந்தாயிற்று. சற்றே மூச்சுக்காற்றை இழுத்து வெளியே விடுகின்றேன். கொஞ்ச நேரத்தில் சர்வ நாடியும் ஒடிங்கிப் போய்விட்டது.

மேலும் ஒரு இருபது நிமிடம் தாமதித்ததில் 'கொட்டியாவத்தை'....? பாழாய்ப்போன இந்தச் சொல்லுதான் அடிக்கடி வருகுது - கெட்டியாவத்தை செல்லும் 155ஆம் இலக்க பஸ் வந்தது. அதுவும் இடையே ஒரு பஸ் வராததனால் சற்று ஊதிப்பருத்து சனங்கள் பிதுங்க வந்தது. ஏறும்போது பஸ்சினுள் இருந்த ஒருவன் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான். நிச்சயமாக அவன் 'சத்தம்' தேவன்தான். அயல் ஊர் நண்பன். என்னுடன் கூடப்படித்தவன். ஆளைக் காணவில்லை, சத்தம்தான் வந்தது. கேட்காதவன் போல முன்னே நகர்ந்தேன். பஸ் ஒடோடொண்டு ஓடி கடைசியில் ஒரு சோதனைச் சாவடியின் அருகில் நின்றது. இவ்வளவு காலமும் அது பேருக்குத்தான் சோதனைச்சாவடியாக இருந்தது. ஏதாவது பிரச்சினைகள் நடந்தால் மாத்திரம் அதிலே நிற்பாட்டிச் சோதிப்பார்கள். உந்தச் சிவநாதனாலை இண்டைக்கொரு தடங்கல் வந்திருக்கு. கை தானாகவே சேர்ட் பொக்கற்றுக்குத் தாவியது. சேர்ட் பொக்கற்றினுள் பத்திரமாக 'ஐ.டி' இருந்தது.

'செக் பொயின்ற்'றில் கடன்களை முடித்துவிட்டு கடகடவென்று பஸ்சினுள் ஏறிக் கொண்டேன். அப்பாடா தப்பித்துக் கொண்டாயிற்று. அப்போதும் நான் 'சத்தம்'தேவன் பக்கம் திரும்பவில்லை. சந்திக்கின்ற இடமெல்லாம் சத்தம் போட்டுக் கதைப்பான் அவன். பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் வந்தபோது பஸ்சினுள் முக்கால்வாசி காலியாகவிருந்தது. கோயிலின் திசை நோக்கி கை எடுத்துக் கும்பிட்டேன். கை நடுங்குகின்றது. கோவிலைக்கட்டிய சேர்.பொன்.இராமநாதனின் தந்தையார் திருவாளர் பொன்னம்பலத்திற்கும் ஒரு கும்பிடு. திரும்பிப் பார்த்தேன். தேவன் வைத்த கண் வாங்காமல் என்னையே முறைத்துப் பார்த்தபடி இருந்தான். கை காட்டி வரும்படி கூப்பிட்டான். இனியும் போகாமல் விடுவது சரியில்லை.

"எட மச்சான்! உனக்கு சிவநாதனைத் தெரியுந்தானே!" நான் அவனை வாழ்நாளிலே கண்டு அறியாதாவன் போலப் பாவனை காட்டினேன்.

"என்னடாப்பா நீ! குருவி சுடுறதுபோல ஆக்களைச் சுட்டுக் கொண்டு திரிஞ்சானே, அவனைப் பற்றித்தான் சொல்லுறன்." "மெதுவாக் கதை" அங்குமிங்கும் பார்த்தபடியே அவனின் காதிற்குள் சொன்னேன்.

"அவனடாப்பா வெளிநாடு போகவெண்டு 'லொட்ஜி'லை வந்து நிக்கிறானாம். பம்பலப்பிட்டி 'மில்க் பாரி'லை இருந்து பால் குடிச்சுக் கொண்டிருக்கிறான்."

பஸ் 'பிறேக்' போட்டு ஒரு குலுக்கலில் நின்றது.
(1988)

முகம்: இரண்டு

சமீபத்தில் எனது உறவினரின் கலியாண வீட்டிற்காக கனடா போயிருந்தேன். லீவு நாட்கள் அதிகமில்லாதால் இரண்டு கிழமைகள் மாத்திரமே அங்கு தங்குவதென முடிவு செய்திருந்தேன். என்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த நண்பர்கள் சிலர் அங்கிருந்தார்கள். நல்ல நண்பர்கள் என்று நான் கருதியவர்களில் ஒருவர் ரெலிபோனிலேயே தனது தொடர்பை முடித்துக் கொண்டார். ஒவ்வொருவரையும் தனித்தனி சந்திக்க நேர அவகாசம் போதவில்லை. குணாளன், தான் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு என்னுடைய இருப்பிடத்திற்குக் கூட்டி வருவதாகச் சொன்னார்.

முதற்கிழமை கலியாணவீட்டுடன் கழிந்தது.

நான் இருந்த 'கொண்டமேனிய'த்திற்குக் கீழே ஒரு 'கொப்பர் கட்' இருந்தது. அதற்கு 'பிறின்ஸ்' என்று பெயர். அங்கே சந்திப்பதென முடிவு செய்தோம்.

காலை பத்துமணி. குணாளன், ஜெகதீசன், சிவகுமார், குகன், ராஜ்குமார் என வந்திருந்தார்கள். 'கொப்பர் கட்'டிற்கும் அதை அண்டிய கடைகளுக்கும் முன்பாக ஒரு பெரிய 'கார் பார்க்' இருந்தது. அதன் ஒரு மூலையிலே வயதுபோனவர்களும் இளசுகளும் என்று கலந்துகட்டி 'கார்ட்ஸ்', 'சோகி' விளையாடிக் கொண்டிருந்தார்கள். கோடை காலமாதலால் எங்குமே களை கட்டியிருந்தது. 'கொப்பர் கட்'டின் உள்ளேயிருந்த கடைசி ரேபிளிற்கு நாங்கள் சென்றோம். ஒரு பெண் வந்து என்ன வேண்டுமெனக் கேட்டுவிட்டுச் சென்றாள். முதலில் 'போண்டா' வந்தது. பலதும் பத்துமாக எங்கள் பேச்சு விரிந்தது.

ஒரு நிகழ்விலிருந்து இன்னொரு நிகழ்விற்குத் தாவித் தாவிக் கதை விரிந்தது. முன்பெல்லாம் படிக்கும் காலங்களில் ஜெகதீசன் எல்லோருடனும் முகம் கொடுத்துக் கதைப்பதில்லை. ஆரம்பத்தில் அவன் எனக்கு அறிமுகமானபோது அப்படியில்லை. எல்லாரைப் போலவும் கலகலப்புப் பேர்வழிதான். இடையிலே அவன் தங்கை இறந்த பிற்பாடுதான் அவன் அப்படிப் பேசா மடந்தையாகிப் போனான். இப்போது பழையபடி கலகலப்பாகிவிட்டான்.

"நாங்கள்கூட கனகாலத்துக்குப் பிறகு இண்டைக்குத்தான் ஒண்டாகச் சந்திக்கிறம்." - குணாளன்.

"என்னடாப்பா சந்திரன். ஆளே மாறிப் போய்விட்டாய். முந்தி குண்டாக இருந்தனி. இப்ப மெலிஞ்சு போனாய்." - குகன்.

"காலமும் வயதும் போகுதுதானே! அதுதான்." - நான்.

"நாங்கள் கிழமை நாட்களைவிட சனி ஞாயிறுதான் சரியான பிசி. பிள்ளையளுக்கு படிப்பு, சமய வகுப்பு, டான்ஸ் கிளாஸ், மிருதங்கம் அது இது எண்டு போய்விடும்." சிவகுமார்.

பஜீரோ வாகனமொன்று வாகனத்தரிப்பிடத்தில் வந்து நிற்க, றைவர் இறங்கி பவ்வியமாக கதவுகளைத் திறந்து விடும் காட்சி, கண்ணாடிச் சுவர்களினூடாகத் தெரிகிறது. மேற்கத்தைய நாடுகளில் இப்படியான காட்சிகளைக் காணக் கிடைப்பதில்லை. எங்கள் நாட்டில் இது சர்வசாதாரணம். குறுந்தாடி மீசை சகிதம் ஒரு கனவான் முன் சீற்றிலிருந்து இறங்கினார். அவரைத் தொடர்ந்து வேறும் இரண்டு மனிதர்கள் இறங்கி நாங்கள் இருக்கும் சாப்பாட்டுக் கடை நோக்கி வந்தார்கள். 'கெளண்டரில்' ஏதோ சாப்பாட்டை 'ஓடர்' கொடுத்துவிட்டு முன்னுக்கிருந்த ரேபிளில் அமர்ந்தார்கள். ரேபிளில் 'இங்கிலிஸ்' சரமாரியாகத் தவழ்ந்தது.

"நான் ஒருக்கா 'ரொயிலற்' போய்விட்டு வாறன்" என்றபடியே ஜெகதீசன் எழுந்துs போனான்.

சூசியம், வடை, ரீ எல்லாம் அவர்களின் மேசையை நோக்கி விரைந்து போனது.

"மச்சான் சிவகுமார், நீ எங்களுக்கு ரீ ஒடர் குடுத்தனிதானே?" என்று ராஜ்குமார் சிவகுமாரைப் பார்த்துக் கேட்டான்.

"அதடாப்பா அதிலை வந்திருக்கிற ஆள் பெரியபுள்ளி. அதுதான் முதலிலை அவருக்கெச்ல்லாம் போகுது" செலவைப் பொறுப்பெடுத்த சிவகுமார் சிரித்துவிட்டுச் சொன்னான்.

"அதென்ன பெரியபுள்ளி? சின்னப்புள்ளி?" என்று சிவகுமாரைக் கேட்டேன்.

"அந்தாளுக்கு இஞ்சை மூண்டு நாலு கொம்பியூட்டர்க் கடை இருக்கு. எத்தினையோ பேருக்கு வேலை போட்டுக் குடுத்திருக்கிறார். எங்கடை தமிழ் ஆக்கள் நிறையப் பேர் வேலை செய்யினம். அதோடை கலியாணவீடுகள் நடத்துறதுக்கெண்டு பெரிய ஒரு ஹோல் வைச்சிருக்கிறார். நல்ல காருண்யமான மனிசன். ஏழையளுக்கு தாராளமாகக் கொடுக்கிற குணமும் இருக்கு."

எங்கடை ஆக்கள் நிறையப் பேர் வெளிநாடு எண்டு வந்து நல்லாக இருக்கிறதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கும் வடை, தேநீர் வந்தது.

'ரொயிலற்' என்று போன ஜெகதீசன் இன்னும் திரும்பி வரவில்லை.

"ஜெகதீசன்ர ரீ ஆறிப் போகுது. இன்னும் ஆளைக் காணேல்ல" என்று குணாளனைப் பார்த்துக் கேட்டேன்.

"அவன் இனி வரமாட்டான் எண்டுதான் நான் நினைக்கிறன். பின்பக்கத்தாலை போய் இப்ப விட்டை சேர்ந்திருப்பான்" என்று மனதிற்குள் ஏதோ ஒன்றை ஒளித்தான் குணாளன்.

"மச்சான் குணாளன், நான் முந்தியும் ஒருக்காக் கவனிச்சனான். உந்தத் தாடி வச்ச ஆளைக் கண்டவுடனை ஜெகதீசன்ர முகம் மாறிப் போகுது."

"நான் ஒண்டு கேள்விப்பட்டனான். ஆனா உண்மை பொய் எனக்குத் தெரியாது. உந்தத் தாடி வைச்ச ஆள், முந்தி ஒரு இயக்கத்திலை இருந்தவனாம். ஜெகதீசன்ர தங்கைச்சியின்ர சாவில உவனுக்கும் சம்பந்தம் இருக்காம்."

ச்ச்ச்"குணாளன், சும்மா கதை விடாதை. ஆரேன் நல்லா இருந்தா உப்பிடித்தான் சனத்துக்குப் பொறாமை. சும்மா கதை கட்டி விடுவினம். வெள்ளிக்கிழமைகளிலை எங்கட கந்தசுவாமி கோயிலுக்கு வந்து பார். உந்தாள் செய்யிற கோயில் தொண்டுகளை" என்று சிவகுமார் கோபத்தில் சொன்னான்.

"என்னதான் இருந்தாலும் ஈவிரக்கமில்லாமல் மனிதர்களைக் கொன்றொழித்தவர்கள், இப்படி சுதந்திரமாக நடமாடுவதைப் பாக்க மனதுக்கு வருத்தமாத்தான் கிடக்கு" என்று தொடர்ந்தும் விடாமல் குணாளன் சொன்னான்.

"சிங்கள அரசின்ர சதித்திட்டம்தான் இப்படி தமிழ்ச் சமுதாயத்தை அழிவின்ர பாதையிலை கொண்டு போகுது. அதுதான் எங்கட சமுதாயத்திலை பல எண்ணற்ற இயக்கங்களைத் தோற்றுவித்தது. இளைஞர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. அரசின்ர சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டோம்" இப்படிச் சொன்னான் குகன்.

"உவருக்கு என்ன பெயர் என்று தெரியுமோ?" என்று பெயரை அறியும் ஆவலில் நான் கேட்டேன். எல்லாரும் முழித்தார்கள். அவனது பெயர் தனக்குத் தெரியும் என்றும், ஆனால் இப்ப ஞாபகத்திற்கு வரவில்லை என்றும் சிவகுமார் சொன்னார். இந்த இடத்தை விட்டுப் போவதற்குள் கட்டாயம் கண்டுபிடித்துச் சொல்லிவிடுவேன் என்றான்.

அவர்கள் சாப்பாட்டை முடித்துக் கொண்டுs புறப்பட ஆயத்தமானார்கள். அப்போதுதான் அது நிகழ்ந்தது. அவசர அவசரமாக ஒருவன் 'கொப்பர் கட்'டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். செய்வதறியாது எங்களுக்குப் பின்னாலே நிலத்திலே விழுந்து ஒளித்தான். அவன் வந்ததன் பிற்பாடு இரண்டு 'கைனீஸ்' மனிதர்கள் ஆவேசமாகச் சத்தமிட்டுக் கொண்டு கடைக்குள் வந்து அவனைத் தேடினார்கள். அவன் கடைக்குள்ளே சுற்றிச் சுற்றி ஓடினான். கடையின் ஒரு மூலைக்குள் கோழியை அமுக்கிப் பிடிப்பது போலப் பிடித்து அடிக்கத் தொடங்கினார்கள். பார்க்கப் பரிதாபமாக இருந்தது. செய்வதறியாது நாங்கள் முழித்துக் கொண்டிருக்கையில், குறுந்தாடி வைத்தவன் தனது இருக்கையினில் இருந்து எழுந்து வந்தான்.அவர்களுக்கு நடுவே குறுக்காக நின்று கொண்டு அவனுக்கு அடிகள் விழாதவாறு தடுத்தான்.

"என்ன நடந்தது? என்ன நடந்தது?"

"கொஞ்ச நேரமெண்டால் நாங்கள் இரண்டு பேரும் செத்திருப்போம். பெடஸ்ரியன் குறொஸ்சிங்கிலை நிக்காமல் கார் ஓட்டி வந்திருக்கிறான்" அவர்களில் ஒருவன் ஆங்கிலத்தில் சொன்னான்.

"சரி சரி இந்தமுறை மன்னிச்சு விடுங்கோ!"

"உங்கட முகத்துக்காக விடுகிறம்."

அவனை அவர்களிடமிருந்து விடுவித்து தனது மேசைக்குக் கூட்டிச் சென்றான். "அக்கா! நாலு 'கப்' பால் தாங்கோ" குறுந்தாடி வைத்தவன் 'கெளண்டரை' நோக்கிக் சொன்னான்.

'கப்' பால்!

"உவன்ர பெயர் சிவநாதனா?" என்றேன் வியப்புடன் நான்.

"சிவநாதன்! சிவா!! அதேதான்!!!" சிவகுமார் தன்னை மறந்து, தன் நிலை மறந்து ரேபிளின் மீது தனது கையினால் குத்தி தனது ஞாபகசக்தி மீது பெருமிதம் கொண்டான்.

'கொப்பர்கட்'டிற்குள் இருந்த அனைவரும் எங்களை வியப்புடன் பார்த்தார்கள். அந்தக் குறுந்தாடி வைத்த கனவானும் கூட.

(2006)

- சுதாகர்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It