''சார்....பூமயில் வீட்டுக்குப் போகணுமாம்...''

Village Girl குரல்கேட்டு நிமிர்ந்தார் அவர். அவர்தான் அந்தப் பள்ளிக்கூடத்தின் பெரிய சார்....தலைமை ஆசிரியர். எட்டாம் வகுப்பு மாணவி பூமயில் எதிரில். இரண்டு மாணவிகள்..... இரண்டு பக்கங்களிலும். பூமயிலுக்கு பதிலாக அவர்கள்தான் பேசினார்கள். பூமயிலின் முகம் அழுது சிவந்திருந்தது.

முற்பகல் இடைவேளை நேரத்தில் ஏன் வீட்டிற்கு போகவேண்டும்? கேள்வி பிறந்த அதே நேரத்தில் பதிலும் உதித்துவிட்டது. அவருடைய தலைமை ஆசிரியர் அனுபவத்தில் இதைப்போன்ற எத்தனையோ நிகழ்வுகள்....

''சரி.....ஆறாம் வகுப்பு டீச்சரிடம் சொல்லிவிட்டுப் போகட்டும். இவளுடைய ஊர்ப்பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா?''

''நாங்கள் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகிறோம் சார்...''

'சரி....பத்திரமாக கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விடுங்கள்..'' பூமயிலுடைய மாமனுக்கு செலவு.

பூமயில் இனிமேல் பள்ளிக்கூடம் வருவதற்கு பதினைந்தோ இருபதோ நாட்கள் ஆகலாம். அவள் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு வராமலேகூட போகலாம். அப்படியே வந்தாலும் அவளுடைய படிப்பை நிறுத்துவதற்கு பள்ளிக்கூடத்தில் நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதலும் முடிவுமான காரணம் பள்ளிக்கூடத்தில் கக்கூஸ் இல்லாதது.

ஏற்கனவே பள்ளிக்கூடத்துப் பையன்கள் தன்னுடைய வீட்டுவேலியில் ஒண்ணுக்குப் போவதாக பக்கத்துவீட்டுக்காரன் நீளமான துண்டைப் போட்டுக்கொண்டு வந்து புலம்பி விட்டுப்போனான்.

இரண்டு கக்கூஸ்கள் கட்டிக்கொள்வதற்காக பணம் ஒதுக்கித்தர அதிகாரிகள் தயாராக இருந்தார்கள். கோவில் நிலத்தில் பள்ளிக்கூடம் இருந்ததால் அது நடக்கிற காரியமாக இல்லை. அரசாங்கத்தின் பெயருக்கு கிரயம் வாங்கி பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். இதைக்காட்டிலும் ஊர்க்காரர்களுக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள்.

பரிதாபமாக தோற்றம் தரும் அந்த பையன்களும் பெண்பிள்ளைகளும் அவர் கண் முன்னால் நிழலாடினார்கள். வேலைக்குப் போகும் குடும்பத்துப் பிள்ளைகள். காலனியில் இருந்து வருபவர்கள்தான் அதிகம்.

இப்போதெல்லாம் ஒன்பது மணிக்கே பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவு. காலை உணவுக்கு வேட்டு. காலைக் கூட்டத்தில் மயங்கிவிழும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. அதிலும் பெண் பிள்ளைகள்தான் முன்னணியில். எதிர்கால இந்தியக்குடிமகனைப் பெற்றெடுக்கப்போகும் பெண்களுள் இவர்களும் அடக்கம். அவருக்கு மனதை என்னவோ செய்தது.

பள்ளிக்கூடம் விட்டபிறகு காலியான வகுப்பறைகளை சுற்றிவருவது அவருடைய பழக்கம். இப்போதெல்லாம் பாக்குப் பொட்டல உறைகள் வகுப்பறைக்குள் இறைந்து கிடக்கின்றன. அதுவும் பெண்பிள்ளைகள் உட்காரும் பகுதிகளில். அடுத்தநாள் இவையெல்லாம் குப்பைகளாகி பின்னர் வயலுக்குப்போகலாம். அவருடைய கவலை அது இல்லை. பாக்குதின்னும் பெண்பிள்ளைகள் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பிரசவ அவலங்களைப் பற்றியது அவருடைய கவலை.

பள்ளிக்கூடத்தின் எதிரே இருந்த குளத்தின் வடகரையில் மாரிமுத்து டாக்டரின் கிளினிக். டவுனிலிருந்து டூவீலரில் வந்து போகிறவர். கூரைவேய்ந்த உயரமான மண்வீடு. பூச்சிமருந்து குடித்தவன், மண்வெட்டியால் வெட்டுப்பட்டவன், பாம்புகடி பட்டவன், வயிற்றுப் போக்கில் இளைத்துப் போனவன் எல்லோருக்கும் அங்கே வைத்தியம் உண்டு. குறைந்த செலவு. இதபதமான பேச்சு. மாரிமுத்து டாக்டர் தையல்போடுவார், எனிமா கொடுப்பார், தொங்குஊசியும் போடுவார். அங்கே கிடக்கும் பெஞ்சுகளில் எப்போதும் மூன்று நான்கு பேர் அடுகிடையாக கிடப்பார்கள்.

பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் விளையாடும்போது பல் குத்தி உதடு கிழியும். தலை முட்டி தாடை கிழியும். கல்லெறிந்து காயம் படும். இன்னும் சுரம், சிரங்கு, வயிற்றுப்போக்கு என்று அவசரங்கள். பள்ளிக்கூடத்திற்கு அவர் இலவச டாக்டர். கிராமத்து மக்களுக்கு அவர் கைராசி டாக்டர். பத்திரிக்கைகளுக்கு அவர் போலிடாக்டர்.

போனவாரம் பள்ளிக்கூடத்தில் கொடியேற்றும் விழா. மாரிமுத்து டாக்டரும் வந்திருந்தார். சத்துணவு அமைப்பாளர் புதியதாக டூவீலர் வாங்கியிருந்தார். அமைப்பாளரைப் பார்த்து டாக்டர் கண்ணடித்தார். ''பங்காளி........ பிள்ளைகளுக்கு சாப்பாட்டில் கொஞ்சம் எண்ணெயெக் காட்டுங்க................ பருப்பு கீரையெல்லாம் சேத்துப்போட்டா ஒண்ணும் தப்பில்லே...'' சத்துணவு அமைப்பாளர் சிரித்துக் கொண்டார். அதற்கு அர்த்தம் ''பெப்....பப்.....பே...''

அன்று மாலை திடீரென்று மழை பெய்தது. பஞ்சாயத்துத் தலைவியின் கணவர் மழைக்கு தப்பித்து பள்ளியில் ஒதுங்கினார். பெரிய சாருக்கு முன்னால் அமர்ந்து மழையைத் திட்டினார். அப்புறம் பேச்சு அவருடைய மகளின் டாக்டர் படிப்பிற்கு தாவியது. தலைவரின் மகள் சென்னைப்பட்டணத்தில் டாக்டர் படிப்பை முடித்து விட்டதாகவும் பக்கத்து ஊரில் ஒரு ஆஸ்பத்திரி துவங்க வேண்டுமென்றும் வழக்கமான இளிப்போடு சொல்லிக்கொண்டிருந்தார். லயன்ஸ் கிளப் சார்பாக கைகாட்டி பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஒரு நாள் செலவழித்து மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டுமென்ற அவருடைய மகளின் ஆசையையும் சொன்னார்.

மனித உருவத்தில் இருக்கிற சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து சங்கம் வைத்திருப்பது தலைமை ஆசிரியருக்கு தெரியும். என்றாலும் அவை பார்க்கும் வைத்தியத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு கிடைக்கப்போகிற ஒரு வசதியை ஏன் தடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லி வைத்தார். ஒரு நாள் அது நடந்தே விட்டது.

ஒரு திங்கட்கிழமை அந்தப் பள்ளிக்கூடத்தின் முன்பாக ஆறேழு கார்கள் நின்று கொண்டிருந்தன. டாக்டர்கள் கூட்டம் ஒன்று மாணவர்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்குத் தனியாகவும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் எல்லோரும் பிள்ளைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். பஞ்சாயத்துத் தலைவரின் மகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த இரண்டு பெரிய டாக்டர்களும் அந்தக்கூட்டத்தில் இருந்ததாக பெரிய சார் தெரிந்துகொண்டார். பஞ்சாயத்து தலைவியும் அவருடைய கணவரும் புகைப்படக்காரரை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தனர். உள்ளூர் நிருபர் அவர்களிடம் குழைந்து கொண்டிருந்தார்.

மதியம் சாப்பாட்டு வேளைக்கு முன்பாக அந்த நூற்று எண்பது பிள்ளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்து தலைமை ஆசிரியர் அறையில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கு சத்து மாத்திரைகளும், பற்பசைகளும், களிம்பு மருந்தும், சோப்புக் கட்டிகளும் வழங்கப்பட்டிருப்பதாக பெரிய டாக்டர் சொன்னார். ஆறாம் வகுப்பில் ஒரு மாணவிக்கு இதய வால்வில் பிரச்சினை இருப்பதாகவும் உடனடியாக பக்கத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு அவளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யுமாறும் கூறிய பெரிய டாக்டர் ஒரு துண்டுக் காகிதத்தில் விவரங்கள் எழுதிக்கொடுத்தார். காப்பியும் பிஸ்கட்டும் கொடுத்து உபசரணை செய்து அவர்களை அனுப்பி வைத்தார் பெரிய சார்.

காலனிக்கும் கிழக்காக ஆற்றுப்படுகையில் பத்திருபது கூரைவீடுகள். மூங்கில் வெட்டவும், கூடைபின்னவும், ஏணி செய்யவும் வாகான நிழல். கிருத்திகா அங்கேயிருந்து தான் வருகிறாள். ஒரு பத்து வயது ஏழைப் பெண்ணின் கையளவு இதயத்திற்குள் லட்சக்ககணக்கான ரூபாய் மதிப்புள்ள நோய். மேசைமேல் மேலதிகாரிகள் கேட்டிருந்த உப்புச்சப்பில்லாத புள்ளிவிவரங்கள். அவருடைய கையெழுத்திற்காக அவை காத்திருந்தன. அதற்கும் மேலாக டாக்டர் கொடுத்து விட்டுப்போன துண்டுச் சீட்டு. அவர் கார்த்திகாவின் அப்பா அம்மாவிற்காக காத்திருந்தார். இனியும் தாமதம் கூடாது......

அன்று மாலை சைக்கிள் எடுத்துக்கொண்டு படுகைக்குப் போனார். கார்த்திகாவின் வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்படவில்லை. கதவு இருக்க வேண்டிய இடத்தில் ஒரு மூங்கில் தட்டியும் பூட்டு இருக்கவேண்டிய இடத்தில் ஒரு சணல் முடிச்சும் இருந்தன. கார்த்திகாவுக்கு ஆதரவு அவளுடைய ஆயாவும் தாத்தாவும். சாப்பாட்டுக்கு காசுதேடும் வேலையை ஆயாமட்டும் செய்தாள். அதனால் அவள்தான் பேசினாள்.

பிழைப்புத் தேடி கார்த்திகாவின் அப்பனும் ஆத்தாளும் திருப்பூருக்குப் போயிருப்பதாகவும் அடுத்த வாரத்தில் பெரியசாரை வந்து பார்ப்பார்கள் என்றும் சொன்னாள். அக்கம்பக்கத்து ஆளுகள் சொம்பை எடுத்துக்கொண்டு டீ வாங்கிவர ஓடினார்கள். அந்த வாரக் கடைசியில் பெரியசார் சொந்த ஊருக்குப் போக வேண்டியிருந்தது. செவ்வாய்க்கிழமை காலையில் அவருடைய அறைக்குள் நுழைந்தபோது அந்த செய்தியை பியூன்தான் சொன்னான்.

சனிக்கிழமை இரவு கார்த்திகா என்ற ஆறாம் வகுப்பு பெண் இறந்து போனதாகவும் அவளுடைய அப்பனும் ஆத்தாளும் ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் திருப்பூரிலிருந்து வந்தபிறகு சவ அடக்கம் நடந்ததாகவும் சொன்ன போது அவருடைய கவனம் மேசைமேல் சென்றது. அங்கே பெரிய டாக்டர் கொடுத்த துண்டுச்சீட்டு இன்னும் படபடத்துக் கொண்டிருந்தது.

- மு.குருமூர்த்தி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It