இன்று கல்லூரியில், இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபச்சார விழா. வண்ணமிகு ரங்கோலி வரவேற்பு அறையை நிரப்பியிருந்தது. ஒலிபெருக்கிகள் முழுமூச்சில், "முஸ்தபா... முஸ்தபா"வை காற்றில் கரைத்துக் கொண்டிருந்தது. கோலம் போடும் சாக்கில் சிலர். கோலம் பார்க்கும் சாக்கில் சிலர். தன் ஆளை இன்று புடவையில் பார்க்க முடியும் என்பதாலேயே கல்லூரிக்கு வந்த சிலர். மும்மரமான கடலை சாகுபடியில் சிலர். இப்படி கல்லூரி வளாகம் முழுதும் கூட்டங்கள். ஆனால் முன்பு இருந்த உற்சாகம் இல்லை அவர்களிடம்.

உதடுகள் சிரித்தாலும் உள்ளங்கள் ஊமையாய்.... இன்று கண் முன்னே இருக்கும் எதுவும், நாளை நமதில்லை. ஒன்றாய் அமர்ந்து அரட்டை அடித்த மணல்மேடு, வெயிலுக்கு ஒதுங்கிய வேப்பம்பட்டு ஸ்டேஷன் மரங்கள், "மடையா! மடையா!!" என்று நம்மை செல்லமாய் கண்டிக்கும் பிரின்ஸ்சி, எதற்கெடுத்தாலும் "come and meet me later" என்று சொல்லும் maths professor., ஒற்றை நோட்டு புத்தகம் வைத்தே, நாலு வருட படிப்பையும் முடித்த "நாய்" selva, காடாய் வளர்ந்திருக்கும் முடியை,ரஜினி ஸ்டைல் என்று தானே நினைத்துக்கொண்டு கோதிவிடும் "காடு" vijay, எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் "நித்திய கண்ணாலன்", இவர் அறிவு ஜீவியா? இல்லை பைத்தியகாரரா?" என்று சில நேரம் சிந்திக்க வைத்த திலகர்.

இவர்கள் யாரும், இவை யாவும், நாளை முதல் அன்னியம். நான்கு வருட வாழ்க்கையை ஒரே நொடியில் மறக்கச் சொல்லும் நிதர்சனம். கண்களை முடிக்கொண்டு என் நான்குவருட கல்லூரி வாழ்க்கையை மறுமுறை ஓட்டிப் பார்த்தேன்.

Sad love "விஸ்வநாதன்...".

அவள் குரல் கேட்டு கண் திறந்தேன்.

எதிரே அவள்..........

ஆம்! அவளே தான். எந்த பெண்ணின் பெயரை நான் அதிகம் உச்சரித்திருப்பேனோ, எந்த பெண்ணின் பார்வையில் உலக இன்பங்கள் அனைத்தும் ஜனித்ததாக நினைத்தேனோ, அவள்.

சில நேரங்களில் எனக்கேத் தோன்றும், கடற்கரை மணலின் எண்ணிக்கையை விட, நான் அவளை நினைத்துக் கொண்டிருந்த நிமிடங்கள் அதிகப்பட்டிருக்குமோயென்று.

அவளின் இருக்கை, எனக்கு போதிமரமாய்த் தெரிந்தது. அவள் பெயர் என் password ஆனது. அவள் குப்பைகள் கூட, பொக்கிஷமாய் தெரிந்த நாட்கள் அவைகள்.

அவள் ஒரு முறை எதையோ எழுத வாங்கி,பின் திருப்பித் தந்த பேனாவை, அதன் பிறகு இன்று வரை உபயோகிக்கவில்லை, ஏன் தெரியுமா? அவள் ரேகைகள் அழிந்து விடும் என்பதால். இதைப் பார்த்த நண்பர்கள் சொன்னார்கள், பைத்தியக்காரனென்று.

'காதலில் பைத்தியமாய் இருப்பதிலும், ஓர் சுகம் இருக்கத்தானே செய்கிறது'.

'பெண்ணே! வா நீ என்றழைத்தால் வருவாயா நீ! தா நீ என்றால் தருவாயா இதயத்தை!' என்றெல்லாம் திலகரின் field theory வகுப்பில், நான் எழுதிய நோட்டு புத்தகத்தின் கடைசிப் பக்கங்கள் சொல்லுமடி என் காதலின் ஆழத்தை!.உங்களுக்கு தெரியுமா? அவளை நேசிக்க ஆரம்பித்த பிறகு தான், என் பெயரையே நேசிக்க ஆரம்பித்தேன். ஆஹா! அவள் உச்சரிப்பில் தான், என் பெயர் எத்தனை அழகு.

"இப்படியே சொல்லிட்டு இரு! வேற எவனாவது தள்ளிட்டு போகப்போறான்.அப்புறம் என்ன, தாடி தான், கவிதை தான்... மச்சி! சொல்றத கேளு. உன் காதலை அவகிட்ட சொல்லிடு'

'எப்படிடா? ஒரு வேளை அவள் நட்புன்னு சொல்லிட்டா?'

'டேய்! இவளை எனக்கு பிடிக்கும்கிறது, நட்பு. இவளை மட்டுமே எனக்கு பிடிக்கும்கிறது, காதல். நீ இதுல இரண்டாவது ரகம். சொல்லப்படாத காதல், வழங்கப்படாத நீதி இரண்டுமே ஆபத்து தான். சொல்லிடு. இதுயென்ன கொலை குற்றமா?'

"கோழை கூட பயத்துல கொலை செய்யலாம். ஆனா தைரியம் இருந்தா தான் காதல சொல்ல முடியும்'

'ஏய்! இது எதோ சினிமா வசனம் மாதிரி இருக்கு!'

'சினிமா வசனமே தான். ஏன் நான் சொல்ல கூடாதா?'

'வசனமென்ன! மரத்த சுத்தி டூயட்டே பாடு. ஆனா 'சேது'வா ஆகாம பாத்துக்க.'

'பொண்ணுங்க psycologyயே இதுதான்டா? காதல அவங்களா சொல்ல மாட்டாங்க? நாமே சொல்லனும்னு நினைப்பாங்க. நாம சொல்லிட்டா, பிடிச்சிருந்தா சரிம்பாங்க, இல்லயா? நட்பா தான் பழகனேன்னு சொல்லிட்டு கட் பண்ணிடுவாங்க'

காதல் என்னை கொல்வதற்கு முன்னால், அவளை கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதுவரை நாத்திகம் பேசிக்கொண்டிருந்த நான், என் காதலைச் சொல்வதற்கு முன் பிள்ளையார் கோவிலுக்கு சென்று, அவள் பெயருக்கு அர்ச்சனை செய்தேன். பிறகு தான் தெரிந்தது, தனக்கே பெண் கிடைக்காமல் தான், அரசமரத்தடியில் பிள்ளையார் உட்கார்ந்தது.

"மாமு! இனி மேல், முருகர், கிருஷ்ணர் கோவிலுக்குத் தான் போகனும். ஒன்னு இல்லன்னாலும், இன்னொன்னு கிடைக்குமுல்ல. இவ தான் பிடிக்கலன்னிட்டா? விட்டுட்டு வேற ஆளப் பாரு".

நண்பர்கள் எளிதாக சொன்னார்கள்.

காதலித்தவனுக்குத் தானே தெரியும், அதன் வலி.

"விஸ்வநாதன்". குரல் கேட்டு நிதர்சனத்திற்கு வந்தேன்.

"என்ன!" உதடுகள் வார்த்தைகளை ஜனிக்க மறுத்தன. என் காதலை புரிந்துக் கொள்ள முடியாதவள், எப்படியோ இதைப் புரிந்து கொண்டாள்.

"உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். function முடிஞ்சதும் wait பண்றீங்களா?".

'நான்' எப்படி 'நாங்க' ஆனேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

function முடிந்ததும் அவளுக்காய் காத்திருந்தேன். காதலில் தோற்றாலும், ஜெயித்தாலும், ஆண்கள் தான் காத்திருக்க வேண்டுமென்பது தான் விதியோ!.

நான் காதலிக்கும் போது காத்திருந்ததிற்கும்,இப்போது காத்திருப்பதிற்கும் எத்தனையோ வித்தியாசங்சள்.

அப்போது கண்ணில் காதல் இருந்தது, கால்களின் வலி தெரியவில்லை. இப்போது கருத்திலும் காதல் இல்லையேனோ மனதில் வலி தெரிகிறது.

'விஸ்வா!' நீ என்ன propose பண்ண போது, எனக்கு தெரியல. ஆனா இப்ப பிரியப் போறோம்னு நினைக்கும் போது தான், நானும் உன்னை love பண்றேன்னு புரிஞ்சுகிட்டேன். I love u daa'

மவுனத்தில் சில நிமிடங்கள்.... உதடுகள் தான் ஊனமாய் இருந்ததே தவிர உள்ளங்கள் ஒன்றோடு ஒன்று பேச முயற்சித்துக் கொண்டு தான் இருந்தன.

'விஸ்வா!என்ன... எதுவும் பேச மாட்டேன்ங்கற'.

'என்ன பேச சொல்ற. நான் காதலிக்கும் போது, உனக்கு காதல் வரல. நீ இப்ப காதலிக்கும் போது, என்னிடம் அந்த பழைய காதல் இல்ல. காதல் ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்துல வரணும். நீ காதலிக்கறேங்கறத்துக்காக நான் காதலிக்கறதும், நான் காதலிக்கறேங்கறத்துக்காக உன்னை காதலிக்க சொல்றதும், காதல் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காதலித்தால், அது காதல் இல்லை.

இப்போ உனக்கு வந்திருக்கு. எனக்கும் மீண்டும் காதல் வரலாம். உன் மேலேயே கூட வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைல நாம மீண்டும் சந்திச்சா, அப்ப முடிவு பண்ணலாம். இப்போதைக்கு என்னிடம் காதல் இல்லை. என்னை மன்னித்து விடு.'

என்னடி! பையன் என்ன சொல்றான்! okவா?'

'USல M.S படிக்க seat கிடைச்சிருக்குல்ல, அதான் திமிரா பேசறான். எதோ முன்னமே, என்னை propose பண்ணானே, அவன கல்யாணம் பண்ணிக்கிட்டா U.S ல செட்டில் ஆயிடலாம்னு பார்த்தா, ரொம்பத் தான் பேசிட்டான். நாம அடுத்த ஆளை பார்க்க வேண்டியது தான்.'

அதே நேரம், விஸ்வாவின் மனதில், அவனுடைய பழைய காதல் மெல்ல, மெல்ல மறுஜனனம் எடுக்க முயற்சித்திக்கொண்டிருந்தது.

- எஸ். தியாகராஜன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It