மூணு நாளாப் பெய்த மழை விட்டு சற்று ஓய்ந்திருந்தது. மரங்களின் இலைகளிலிருந்து சொட்டுச் சொட்டாகச் சொட்டிக்கொண்டிருந்த நீர்த்துளிகள் இன்னும் கோடு கிழித்து சிறு ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. ஈரத்தின் சில்லிப்பை சிறகுகளை விசுறி காயப் பண்ணும் முயற்சியில் பறவைகள் சடசடவென ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. மழை அடங்கி விட்ட இடை வெளியில் இரை தேடும் முஸ்தீப்பில் அவை ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்படி ஒரு அடை மழை அடித்து ஓய்ந்து விட்டிருந்தது. ஓயாது பெய்த மழை இலைகளையும் பழுப்புகளையும் அள்ளிப் போட்டு குப்பைக் காடாக ஆக்கிவிட்டிருந்தது. மழையுடன் கூட்டுச் சேர்ந்து அடித்த காற்றில் முறிந்த கொப்புகளும் கிளைகளும் பாதையை அடைத்து போக்குவரத்தைத் தடை படுத்திக் கொண்டிருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக புறப்பட்ட மனிதர்கள் கொப்புகளையும் கிளைகளையும் அகற்றிய படியே தம் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். ஈரமண்ணின் மணம் நாசியத் துளைத்துக் கொண்டிருந்தது. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்த மேகங்கள் ஒன்று கூடும் முயற்சியில் ஓடிக் கொண்டிருந்தன. கிழக்கின் மூலையில் திரண்டு கொண்டிருந்த கரு மேகங்கள் இன்னுமொரு மழை வரக் கூடுமென அறிவுறுத்திக் கொண்டிருந்தன. கிடைத்த அவகாசத்தில் காரியமாற்றும் உந்துதலில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

Poor lady அந்த குடிசைப் பகுதி மழையில் நன்கு பாதிப்படைந்திருந்தது. நைந்து போன ஓலைக்கீற்றுகளின் தாங்கு சக்தியை மீறி நீர் உட்புகுந்து அனைத்தையும் நனைத்து விட்டிருந்தது. மழையைத் திட்டிய படியே வீரியமின்றி விசிறியடித்த சூரியக் கதிர்களில் அவற்றைக் காய வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நண்டும் சிண்டுமான சிறு குழந்தைகள் நீண்ட ஒதுங்கியிருப்பின் பின்னான சுதந்திரத்தில் ஹோவெனக் கத்தியபடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

சின்னாத்தா மெள்ள வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள். ஈரலிப்பைக் கால்கள் உணர உடல் ஒரு முறை சில்லிட்டுத் தூக்கிப் போட்டது. சிலு சிலுத்து வீசிய காற்று ஈரலிப்பை அள்ளி வந்து முகத்தில் வீசியது. தொடர்ந்த மழைகாரணமாக வயல் வேலையும் இல்லாது பண வரவு தடைப் பட்டு விட்டிருந்தது. அன்னாடம் காச்சியான அவளிடம் இருந்த ஒரு சிறங்கை அரிசியும் நேற்று கஞ்சியாக மாறியதுடன் முடிந்து விட்டது. நேற்றைய பசியில் ஒரு நேரத்தைக் கஞ்சி தீர்த்து விட்டது. அதன் பின் பசிவந்தபோதெல்லாம் பச்சைத்தண்ணீரைக் குடித்தே சமாதானமாகிக் கொண்டிருந்தாள். மழை விட்டு விடும் விட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு இப்போது தான் நிறை வேறி யிருந்தது. இனி வயல் வேலை தொடங்கு மட்டும் யாரிடமும் கடன் வாங்கித் தான் பிழைக்க முடியும். பக்கத்து வீட்டுச் செல்லம் இவளை கண்டதும் முகத்தை தோள்பட்டையில் இடித்து திரும்பிக் கொண்டாள். நான்கு நாளைக்கு முதல் வயற்காட்டில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முத்தி குடுமி பிடிச் சண்டையில் முடிந்து விட்டிருந்தது. அந்தரம் அவசரத்திற்கு அரிசி சாமான் என்று கடன் வாங்கக் கூடிய உறவும் இன்று உதவாத நிலையில் இருந்தது. இன்னும் நாலு நாள் ஆகும் இந்தப் பகை நீங்கி சுமுகம் திரும்ப, அது வரை ஆளையாள் பார்க்கும் போதெல்லாம் இந்தச் சிலுப்பல் மட்டும் நிலைத்திருக்கும். அவர்களுக்கிடையிலுள்ள அரசியல் அது. அவர்களின் வாழ்க்கையையும் சுவைப் படுத்திப் போகும் விடயங்களிலொன்று இந்தச் சண்டையும் சச்சரவும். செல்லத்தின் புருஷன் வெளியில் வரவும் இவள் சர்க்கென்று உள்ளே பகுந்து கொண்டாள்.

வயிறு தீயாகக் கனிந்து கொண்டிருந்தது. ஒரு சுண்டு அரிசி கிடைத்தாலும் போதும் என்ற மன நிலையில் இருந்தாள். மழை இப்படியே விட்டு விட்டால் நாளைக்கு ஏதாவது வேலை கிடைத்து விடும் . இன்றைய பொழுதைப் போக்காட்டி விட்டால் எல்லாம் சரி வந்து விடும். அவள் மனம் கணக்குப் போட்டபடி யாரிடம் உதவி கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்தது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் அன்னாடம் காச்சிகள். காசு பணமாக இல்லாவிட்டாலும் அரிசி பருப்பாக ஏதாவது கிடைக்கக் கூடும். தேவையில்லாமல் அவள் புருஷன் நினைவில் வந்தான். இரண்டு வருடங்களின் முன் அவளை விட்டு விட்டு எவளோடோ ஓடிப் போன அவன் நினைவு வந்து தொலைத்தது. பிள்ளை இல்லை பிள்ளை இல்லையென்றே அவளைத் துவைத்தெடுத்த அவன் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டிருந்தான். இருக்கிற நிலமைக்கு பிள்ளையிருந்திருந்தாலும் பிறகென்ன ... முகத்தை கோணலாக்கி அழகு காட்டிக் கொண்டாள். ஓடுறதுக்கு ஒரு சாட்டு வேணும். அவனுக்கு பிள்ளை யில்லாதது ஒரு சாட்டு, பாவி மனுஷன் ... மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள். அவன் இருக்கும் வரை இவ்வளவு கஷ்டம் இருந்ததில்லை. நாலு நாள் வேலை வெட்டியில்லை என்றாலும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

வயிற்றுப் பசியில் முகத்தைச் சுருக்கியவள் தலையை சிலுப்பி பழைய எண்ணங்களைத் துரத்தி விட்டாள். நாலு வீடு தள்ளியிருந்த பொன்னம்மாக்காவின் நினைவு வந்தது. யாராவது போய் கிடைக்கக் கூடிய உதவியையும் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் முந்திக் கொள்ள வேண்டுமென நினைவு தட்டியது. எத்தனை வயிறு பசியில் எரிந்து கொண்டிருக்கின்றதோ ? அன்னாடம் காச்சிகள் ..ஒருவருகொருவர் உதவி செய்வதும் உதவி பெறுவதும் வழமையாகி விட்டிருந்தது. வெளியில் வந்தவள் முத்தத்தில் கால் வைக்கும் பொழுதே மீண்டும் மழை பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டது. அடச்சீ ..என அலுத்துக் கொண்டவள் குடிசையின் தாழ் வாரத்திலேயே குந்திக் கொண்டாள்.

அடை மழை பிடித்துக் கொள்ள தெருவில் சென்றவர்கள் கிடைத்த தாழ்வாரங்களில் ஒதுங்கிக் கொண்டார்கள். இவள் குடிசையிலும் ஒருவன் ஒதுங்கிக் கொண்டான். குடித்திருந்தான். தனக்குள் ஏதோ புலம்பிய படி மெலிதாகத் தள்ளாடிக் கொண்டிருந்தான். நாலு வீடு தள்ளியிருக்கும் சின்னான். குடும்பமோ குட்டியோ இல்லாத தனிக் கட்டை. வேலை கிடைத்தால் செய்து கள்ளுக் கடையிலேயே அனைத்தையும் விட்டுக் கொண்டிருந்தான். அந்த மாலை மங்கிய வெளிச்சத்திலும் அவன் முகத்தையும் அதன் உணர்ச்சிகளையும் பார்க்கக் கூடியதாயிருந்தது. யாரையோ அவன் திட்டிக் கொண்டிருந்தான். கள்ளுக் கடையில் யாருடனும் பிரச்சனைப் பட்டிருப்பானோ ? அவன் உளறல்களில் இருந்து அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பிடி குடித்து செலவழிக்கவும் சிலருக்கும் பசியில் துடித்து மடியவும் சிலருக்கும் விதியிருப்பது அவளை வேதனைப் படுத்தியது. அவன் கையில் இருந்த பையில் இருந்து வந்த வாசனை மூக்கைத் துளைத்தது.

சாப்பாடு வாங்கி போறான் போல எண்ணியவள் , அந்த வாசனையை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டாள். அந்த வாசனை இன்னும் அவள் பசியைத் தூண்டி விட்டது. ஒரு ஆவேசம் வந்தது போலவே அந்தப் பையை அவள் பார்த்துக் கொண்டிருப்பதை அவனும் கவனித்து விட்டிருந்தான். அவனை போலவே அன்னாடம் காச்சிகளின் பசியை அவனும் உணர்ந்திருந்தான். 'என்னா.. வாணுமா ? ' அவன் வார்த்தைகளை முழுமையாகப் புரிந்து கொண்டவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவன் தன்னைத் தான் கேட்கின்றான் என்பதைப் புரிந்து கொண்டவள் பசியின் ஆசையையும் தனது வெட்கம் கெட்ட நிலையையும் வெளிப்படுத்த முடியாது தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். 'இந்தா துண்ணு ' பையை அவளிடம் நீட்டியவனையும் பையையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆசை வெட்கம் அறியாது பையை வாங்கியவள் குடிசையின் கதவைத் திறந்து உள்ளே போனாள். கதவை மூடாமலே விட்டு சிமினி விளக்கை கொளுத்தி வைத்தாள். பையைத் திறக்கப் போனவள் வாசலில் நிழலாடுவதைப் பார்த்து 'மழை கொட்டுது உள்ளே வா' என்றாள். அவன் உள்ளே வந்ததையும் பொருட்படுத்தாது அள்ளி அள்ளி தின்னத் தொடங்கினாள்.

இரண்டு நாள் பசி அவளை இயந்திரமாய் இயக்கியது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் சரிந்து கிடந்த முந்தானையின் இடையில் துள்ளித் திமிறிய சதைகளின் திரட்சி தட்டுப் பட்டது. போதையில் துடித்த நரம்புகளில் புது அலை துடித்துப் பரவியது. தற்செயலாக அவன் கண்களைப் பார்த்தவள் அவன் கண்கள் போகும் இடத்தை கவனித்தாலும் அதைப் பொருட்படுத்தாது சாப்பிடுவதிலேயே குறியாயிருந்தாள். சாப்பிட்டவள் பாதியை அவனுக்காக சுத்தி வைத்தாள். அவன் தலையிலிருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. கொடியிலிருந்த துவாலையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். கொடுத்த கையை இழுத்து அவளை மல்லாக்காக சரித்தவன் அவள் மீது படர்ந்தான். அவன் பசி அடங்குவதற்காக அவள் காத்துக் கொண்டிருந்தாள். மழை மண்ணை நனைத்து ஈரப்படுத்திக் கொண்டிருந்தது.

- இளந்திரையன் (
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It