முதலாளி என்னை சீக்கிரமாக வீட்டுக்குப் போக அனுமதி கொடுத்துவிட்டார். சம்பள நாள் வேறு. சொல்லவா வேண்டும்? அன்று எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எப்போதும் என்னைப் பார்த்து சிரிக்காத எங்கள் டைப்பிஸ்ட் லலிதா கூட என்னைப் பார்த்து சிரித்தாள். மாலை நான்கு மணிக்கே கிளம்பி விட்டேன். டவுண்பஸ் பிடித்து எங்கள் ஸ்டாப் வந்து சேர சரியாக முக்கால் மணிநேரம் தான். பஸ்ஸில் சரியான கூட்டம். அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஏதோ விசேஷம் என்று பேசிக்கொண்டார்கள். எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. கிடைத்திருக்கும் நேரத்தை எப்படி அனுபவிக்க வேண்டும் எப்படி உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. பஸ் மெல்ல மெல்ல ஊர்ந்தது.

இறங்கியவுடன் பாய் கடைக்கு சென்று ஆற அமர பஜ்ஜி சாப்பிட வேண்டும். பின்பு இரயில்வே ஸ்டேஷன் சென்று இரவு பத்து மணி வரை யாருமற்ற அந்த அமைதியில் ஆழ்ந்துவிட வேண்டும். நமது நாட்டை எப்படி முன்னேற்றி உலகத்தின் வல்லரசாக மாற்றுவது என்பது பற்றி எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவில் நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருக்கிறேன். எப்படி சர்வாதிகாரி ஆகப் போகிறேன் என்ற என் கனவு தனி. அதை பிறகு சிந்திக்கலாம் என்று இருக்கிறேன். இப்போதைக்கு சர்வாதிகாரி ஆன பிறகு நான் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். இரவு யாருமற்ற எங்கள் ஊர் இரயில்வே ஸ்டேஷனில் சொரசொரப்பான சிமெண்ட பெஞ்சில் படுத்துக்கொண்டு வானில் உள்ள நிலாவையும் நட்சத்திரங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நான் சிந்தனை உலகில் உலா வருவது என் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காமல் போனது. முதன்முதலாக பக்கத்து வீட்டு ஓய்வு பெற்ற தமிழய்யா என்னை இரயில்வே ஸ்டேஷனில் மோன நிலையில் பார்த்துவிட்டு வீட்டில் போட்டுக் கொடுத்துவிட்டார்.

என் தந்தை புலம்ப ஆரம்பித்து விட்டார்.

"படிப்பிலும் கெட்டி இல்லை, பொறுப்பும் இல்லை" என்றார்.

"இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்தறீங்க"

"ஸ்டேஷனில் என்னடா பண்ணறே நைட்டெல்லாம்"

"யார் சொன்னா"

"யார் சொன்னா என்னடா, டிகிரி பெயிலாகிவிட்டு வீட்டில் சும்மா இருக்காம வேலைக்கு போடான்னா இரயில்வே ஸ்டேஷனில் தனியாக உட்கார்ந்து பத்து மணி வரை என்னடா பண்றே"

நான் மெளனமாக இருந்தேன். முந்தின நாள் இரவு பக்கத்து வீட்டு தமிழ் வாத்தியார் நாராயணன் யாரோ சில பல் போன கிழடுகளோடு இரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து, வரப்போகும் கம்பன் கழக விழாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது. எனக்கு அவர் மேல் கடுங்கோபம் வந்தது. இரண்டு திருக்குறளையும் சில கம்பராமாயண பாட்டுக்களையும் வைத்துக்கொண்டு தன் காலத்தையே ஓட்டி விட்ட நன்றிகெட்ட நாராயணன். (அடைமொழி எங்கள் பள்ளியில் நாங்கள் வைத்த பெயர். அது போன்ற பல பெயர்கள் உண்டு. ஒரு வாத்தியார் பெயர் பூட்ஸ்மேன். தினமும் பூட்ஸ் போட்டுக்கொண்டு வரும் அவர் கோபம் வந்தால் பூட்ஸ் காலால் மாணவர்களை உதைப்பார் என்று ஒரு வதந்தி உண்டு.)

"ஒழுங்காக கடைக்கு வேலைக்கு போயிட்டிருக்கியா? டிகிரி முடிச்சிட்டு எதாவது வேலைக்கு போற வழியை பாரு. பேங்க் கிளார்க் பரிட்சை அப்ளிக்கேஷன் வாங்கிட்டயா"

"இல்லை"

"துரைக்கு வேற என்ன வேலை, நாட்டை முன்னேத்தற வேலையோ" சலித்துக்கொண்டார் அப்பா.

உண்மையில் அதுதான் என் வேலை என்று நினைத்துக்கொண்டேன். அவரின் நண்பர் கடைக்குத் தான் நான் வேலைக்கு போகிறேன். வேலையை எல்லாம் கட் அடிக்க முடியாது என்று அப்பாவுக்குத் தெரியும். சட்டென்று ஒரு திருப்பத்தில் விழித்துக் கொண்டேன். என் அருகில் நின்ற ஒருவரின் தோளில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்திருக்கிறேன். அவரும் ஏதும் சொல்லவில்லை. பரவாயில்லை மனித நேயம் இன்னும் முற்றாக அழிந்து போய்விடவில்லை என்று எண்ணிக்கொண்டேன். கடை வீதி முக்கில் பஸ் திரும்பியது. அடுத்து ஸ்டாப் என்னுடையது. இறங்கிக்கொண்டேன்.

மெயின் ரோட்டில் இருந்து சற்று திரும்பினால் கேசவன் தியேட்டர். அதற்கு எதிரில் பாய் கடை. பஜ்ஜி ஞாபகம் வந்து எச்சில் ஊறியது. என்னைப் பார்த்ததும் பாய் சிரித்துக்கொண்டார். ரெகுலர் கஸ்டமர் அல்லவா?

"வாங்க ஸார்"

வெட்கமாக சிரித்தேன். இவன் நம்ப பஜ்ஜிக்கு அடிமை என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு பஜ்ஜியை எடுத்து என்னிடம் கொடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லும்படி கேட்டுக்கொண்டார் பாய். ஒரு பஜ்ஜியை வாயில் போட்டுப் பார்த்தேன். பாய் எமத்திருடன். எல்லாம் செக் செய்து தான் வெளியே விடுவான் என்று எனக்கு தெரியும். உண்மையில் பஜ்ஜியை அனுபவித்து சாப்பிட வேண்டும். என் ஸ்டைல் என்னவென்றால் அது வெங்காய பஜ்ஜி என்றாலும் சரி, வாழைக்காய் பஜ்ஜி என்றாலும் சரி, மாவு தனியாகவும் உள்ளிருக்கும் வாழைக்காய் தனியாகவும் பிரித்து விடுவேன். பிறகுதான் சாப்பிடுவேன். முட்டைதோசை சாப்பிடும்போதும்கூட முட்டையை தனியாகவும் தோசையின் மாவு பகுதி தனியாகவும் பிரித்து சாப்பிடுவது தான் எனக்கு பிடிக்கும். பாய் என்னை பார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படி என்னால் சாப்பிட முடியாமல் போனது. பிறகு இரண்டு பஜ்ஜியை எடுத்துக்கொண்டு ஒதுங்கினேன். கேசுவலாக சட்டை பாக்கெட்டை தொட்டு பார்த்த நான் அதிர்ந்துப்போனேன். பர்ஸை காணோம்.

எல்லா பாக்கெட்டையும் தேடிப்பார்த்தேன். இல்லை. பஸ்ஸில் தான் யாராவது எடுத்திருக்க வேண்டும். சம்பள பணம் வேறு. முழுசாக ஆயிரத்து முன்னூறு ரூபாய். பிக்பாக்கெட் விட்டுப் பார்த்தால் தான் அதில் உள்ள மனக்கஷ்டம் புரியும். குற்றங்களை பற்றி பேசும்போது கூட சாதாரண பிக்பாக்கெட் என்கிறோம். ஆனால் அது பணத்தை பறிக்கொடுத்தவரின் மனதில் ஏற்படும் பாதிப்பை சொல்லி புரிய வைக்க முடியாது. அதனால்தான் பொதுஇடத்தில் மாட்டிக்கொள்ளும் பிக்பாக்கெட்டை மக்கள் சவட்டி எடுத்துவிடுகிறார்கள. இத்தனை எண்ணமும் என் மனதில் ஒரு கணத்தில் வந்துப்போனது. சரி. இப்போது பஜ்ஜிக்கு என்ன பண்ணுவது? ஒரு துண்டை ஏற்கனவே பிய்த்து வாயில் போட்டிருந்தேன். இல்லையென்றாலும் திருப்பி கொடுத்து விடலாம். கடன் சொல்லுவது என்றாலும் வெட்கமாக இருக்கிறது.

பாய் தெரிந்தவர்தான் என்றாலும் யாராவது தெரிந்தவர் நண்பர் வந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்று நின்றிருந்தேன். பழிகாரப் பாவிகள். யாரையும் காணோம். இந்த மாதிரி நேரத்தில் எவனும் வரமாட்டான். ஆனால் அன்று லலிதாவுடன் நூலக வாசலில் (லலிதாவும் அகஸ்மாத்தாய் அந்த பக்கம் கோயிலுக்கு வந்தவள் வேறு வழியில்லாமல் நின்று பேசினாள் என்பது தான் உண்மை) பேசிக்கொண்டிருந்தபோது சொல்லி வைத்த மாதிரி இந்த பாவிகள் அந்தப் பக்கமாக வந்ததும் இல்லாமல் அதில் ஒருவன் அப்பாவிடமும் போட்டுக்கொடுத்ததும் நடந்தது.

பலத்த யோசனைக்குப் பிறகு பாயிடம் சரணடைய முடிவு செய்தேன். விஷயத்தை கூறினேன். பாய் எதுவும் சொல்லவில்லை. பரவாயில்லை, அதனாலென்ன, நாளைக்குக் கொடுத்தால் போயிற்று என்று கூறிவிட்டார். பாயிக்காக இல்லாட்டியும் பஜ்ஜிக்காக நான் வருவேன் என்று அவர் நினைப்பது போல் நினைத்துப் பார்த்தேன்.

என் சந்தோஷமே போயிற்று. இரயில்வே ஸ்டேஷன் வந்து என் ஆஸ்தான சிம்மாசனத்தில் படுத்தேன். வழக்கமாக இருக்கும் கிழவர்கள் கூட அன்று இல்லை. பணத்தை தொலைப்பது என்பது எனக்குப் புதிதில்லை என்றாலும் நான் உழைத்து சம்பாதித்த பணம் இப்படி அநியாயமாக பிக்பாக்கெட் கொடுத்ததை என்னால் ஜுரணித்துக் கொள்ள முடியவில்லை. அப்பாவுக்கு பதில் சொல்வது என்பதும் கடினமாகி விட்டது. இன்று என்னுடைய சிந்தனையை தொடர்வது என்பது சாத்தியமில்லை என்று பட்டது. லஞ்ச லாவண்யங்களை நேற்று இரவே ஒழித்துக்கட்டி விட்டதால் இன்று மதக்கலவரங்களை ஒழிப்பது என்று முடிவு செய்திருந்தேன். அது இன்று முடியும் என்று தோன்றவில்லை.

"கடவுளே என்னை இப்படி சோதிக்கிறாயே இது நியாயமா? உண்மையில் நீ இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா" என்று வாய் விட்டு அழுதேன்.

Sleeping man "தம்பி குமார் அழாதே" என்று ஒரு பெண் குரல் மரத்தின் பின்னிருந்து கேட்டது.

"யார், யாரது"

"நான் தான் அம்மன்"

"பொய், யாரோ பெண் குரலில் பேசி என்னை ஏமாத்தறீங்க"

சட்டென்று மரத்தின் பின்னாலிருந்து வெளிப்பட்டாள் அம்மன். சர்வலாங்கரங்கலோடும் கையில் ஒரு வேலோடும். கண்ணில் கனிவு. தலையில் கிரீடம். கண்ணைப் பறிக்கும் சேலை, உடம்பெங்கும் மின்னும் நகைகள். எனக்கு உடம்பெங்கும் ஒரு நடுக்கம் ஒடியது.

"நிஜமாகவே நீதானா தாயே"

"ஆம் மகனே, உன் குரல் கேட்டே யாம் வந்தோம்"

எனக்கு சுயஉணர்வு வந்து கொண்டிருந்தது. மெல்ல கேட்டேன்.

"யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணாமல் நாட்டை முன்னேற்ற பாடுபடும் எனக்கு ஏன் தாயே சோதனைகள் வருகின்றன?"

"கஷ்டங்கள் யாம் உமக்கு அளிக்கும் சோதனைகள்"

"எங்கப்பாவுக்கு பதில் யார் சொல்லுவது?"

சட்டென்று சிரித்துவிட்டாள் தேவி."சரி, உனக்கு என்ன வேண்டும்" என்று வினவினாள். நான் பதில் எதுவும் சொல்லவில்லை. கடவுளின் வருகையை வைத்து நான் என்ன செய்யமுடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த பக்கமாக ஒரு சாமியார் ஊர்வலம் போனது. எல்லோரும் நீல வண்ண உடை அணிந்திருந்தனர். அவர்கள் வணங்கும் அந்த சாமியாரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒரு இயக்கமாகவே வளர்ந்துக்கொண்டிருக்கிறார். அந்த சாமியார் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு தேவி மீதான பக்தி அளவிடற்கரியது. நாங்கள் அந்த ஊர்வல கூட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்த ஒருவர் "என்னம்மா வேஷம் இன்னும் கலைக்கலியா? நைட் இரயில்வே ஸ்டேஷன் பக்கம் நிக்காதே" என்று கூறியவாறே சென்றார்.

"உன்னை நாடக கம்பெனியை சேர்ந்த பெண் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான்" என்றேன் நான். உடனடியாக சாதாரண உருவத்தில் வரவேண்டியதின் அவசியத்தையும் இல்லாவிட்டால் தேவியின் நகைகளுக்கு நான் பொறுப்பாக முடியாது என்றும் அவளுக்கு உணர்த்தினேன். தேவியும் ஒத்துழைத்தாள்.

"உனக்குத் தேவை உன் பர்ஸ்தானே" என்றாள் தேவி.

"எனக்கு உன் சித்து விளையாட்டுக்கள மேல் எல்லாம் ஆர்வம் இல்லை" என்றேன்.

"மனித உருவம் எடுத்து வரும்போது என்னாலும் சித்து விளையாட்டுக்கள் செய்யமுடியாது, மீண்டும் நீயாக என்னை கடவுளாக சொன்னால் தான் நான் கடவுளாக முடியும், என்ன வேண்டும் என்று சீக்கிரம் சொல்லு குழந்தாய்"

"நான் குழ்ந்தை இல்லை, எனக்கு வயது 20, இந்த நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நீ செய்யக்கூடிய ஒரு உதவி இருக்கிறது"

"என்ன அது? சொல், நான் மேலுலகுக்கு செல்லவேண்டும், தேவன் காத்துக்கொண்டிருக்கிறார்"

கடவுள் இருப்பது யாருக்கும் உறுதியாக தெரியாததாலும், ஆகவே மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் தண்டனை கண்டிப்பாக தருவார் என்ற கோட்பாட்டின் மேல் நம்பிக்கை யாருக்கும் இல்லாததாலும் தான் தவறுகள் நடக்கின்றன என்று நான் தேவியிடம் கூறினேன். ஆகவே பொதுவாக அடுத்தவர் தவறு செய்யும் போது மட்டுமே கடவுளை மனிதன் நினைப்பதாகவும் தான் தவறு செய்யும் போது வசதியாக கடவுளை மனிதன் மறந்துவிடுவதை நான் ஆதாரங்களுடன் கூறியதை தேவியும் ஏற்றுக்கொண்டாள்.

"நீ எனக்கு செய்யவேண்டிய உதவி ஒன்று உள்ளது" என்றேன் நான்.

"நீ உன் இருப்பை உலகுக்கு ஓங்கி ஒலிக்கவேண்டிய நாள் வந்துவிட்டது. நீ நான் சொல்வதை செய்யவில்லையென்றால் அடுத்து வரும் விரைவு வண்டியில் நான் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்" என்றேன். விருத்தாசலம் பேசஞ்சர் கேன்சல் ஆன விவரம் எனக்கு முன்னமே தெரியும். தேவிக்குத் தெரியாது என்றே எண்ணுகிறேன். நம் இரயில்வே என்கொயரில யாராச்சும் ஏதாவது தகவலை சுலபமாக வாங்கிடமுடியுமா என்ன?

"நீ சொல்ற மாதிரி நான் செய்கிறேன், நீ அந்த மாதிரி வீபரித முடிவைத் தேடவேண்டாம்"

"உடனடியாக கடவுள் நேரடியாக வருவதாக ஒரு விளம்பரம் கொடுப்போம். குறிப்பிட்ட நாளில் மக்கள் கூடியுள்ள சபையில் நீ தேவனையும கூட்டிக்கொண்டு சர்வலங்காரமாக தோன்றவேண்டும்" என்று என் யோசனையை தெரிவித்தேன்.

"இதுவெல்லாம் நடக்கற கதையா? எப்படி விளம்பரம் கொடுப்பது? யார் இடம் தேர்ந்தெடுத்து புக் பண்றது? செலவெல்லாம் யார் செய்வது?"

"தேவி, நீ கேட்பதும் சரியான கேள்விதான். நானும் என் பணத்தை பிக்பாக்கெட் விட்டுள்ள நிலையில் இது யோசிக்க வேண்டிய விசயம்தான்"

சட்டென்று எனக்கு சற்றுமுன் போன ஊர்வலமும் அந்த சாமியாரும் நினைவுக்கு வந்தனர். கண்டிப்பாக அவர் செய்வார். தேவிக்கு அவர் செய்யும் தொண்டு உலகிற்கே தெரியும். என்னை தெரிந்த தேவிக்கு அவரைத் தெரியாதது ஆச்சரியமாக இருந்தது. அவரைப் பார்ககலாம் என்று நான் தெரிவித்த யோசனையை தேவி ஏற்றுக் கொண்டாள் .ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த ஆசிரமத்திற்கு சென்றோம். சாமியாரிடம் தனியாகப் பேச வேண்டும் என்றோம். சாமியும் பெரிய மனது பண்ணி ஒத்துக்கொண்டது.

விஷயத்தை எல்லாம் அமைதியாக கேட்ட சாமியார் யாரையோ அழைக்க ஒரு இளைய சாமி சில பழங்களை கொண்டு வந்து வைத்து சாப்பிட சொன்னது. உடனடியாக அட்வடைஸ்மெண்ட் கொடுக்கலாம் என்னுடன் வா என்று என்னை அழைத்துக் கொண்டு தன்னுடைய ஆபிஸ்க்கு சென்று சாமியார் யாருக்கோ போன் செய்தார். நான் ரூமிற்கு வெளியே உட்கார்ந்து இருந்தேன். ஏதோ உள்ளுணர்வு உறுத்த சாமியார் பேசுவதை சன்னல் ஓரமாக சென்று உற்றுக்கேட்டேன். உள்ளே சாமியார் பேசுவது கேட்டது.

"ஆமாம் சார், பையனுக்கு இருபது வயதிருக்கும்,"

"......"

"பொண்ணும் ரொம்ப அழகு"

"......"

"பைத்தியம் மாதிரி நடிக்கிறாங்கன்னு நெனைக்கிறேன். அந்த பொண்ணை ரூமிலே போட்டு அடைச்சிட்டேன், பையன் வெளியே உட்கார்ந்திருக்கான்”

"......."

"திருடங்க இப்படி கூட வருவாங்களா"

அதற்கு மேல் என்னால் உட்கார முடியவில்லை. ரத்தம் தலையில் வேகமாக பாய்ந்தது. நான் பொங்கி எழுந்தேன். அடப்பாவிங்களா, தேவியையாடா அடைச்சி வைக்கறீங்க என்றவாறு சாமியாரை அடிக்கப் பாய்ந்தேன். எங்கிருந்தோ தோன்றிய சிஷ்ய கோடிகள் சிலர் என்னை பிடித்துக் கொண்டனர். நான் அவர்கள் பிடியில் இருந்து தப்ப துள்ளினேன்.

"நான் சொல்லாம தேவியால கடவுள் ஆக முடியாதுடா..என்னை விடுங்கடா" என்று கூச்சலிட்டேன். சட்டென்று பெஞ்சில் இருந்து உருண்டு விழுந்தேன்.

"தம்பி பத்து மணிக்கு மேல இங்க இருக்கக்கூடாது, எத்தனை முறை சொல்றது உனக்கு" என்றவாறு ஸ்டேஷன் மாஸ்டர் என்னை எழுப்பினார். அப்போதும் என் உடம்பு நடுங்கிக்கொண்டே இருந்தது.


- முத்து
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It