மெர்சியும், கலையரசியும் ஆரம்பப் பள்ளி முதலே நெருங்கிய தோழிகள்.

ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புக்குப் போகும் போது, ஏதோ ஒரு காரணத்தால் கலையரசியை அவளது பெற்றோர்கள் டவுனில் உள்ள மகளிர் பள்ளியில் சேர்த்து விட்டனர்.

தோழியைப் பிரிந்து மெர்சிக்கு தனியாகப் பள்ளிக்குச் செல்வது ஏதோ ஒன்றை இழந்ததைப் போல் இருந்தது.

டவுனில் கலையரசி போகும் பள்ளியிலே மெர்சியையும் அவளது அம்மா சேர்த்து விட்டார். இருவரும் ஒன்றாகவே பள்ளிக்குச் சென்றார்கள், ஒன்றாகவே விளையாடினார்கள். நாட்களும் இவ்வாறே கடந்தது. இருவருக்கும் இந்த ஆண்டு பொதுத் தேர்வு இருப்பதால் அதிக கவனம் செலுத்திப் படித்தார்கள்.

மெர்சியின் அப்பா குஜராத்தில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்தார். மெர்சி ஒவ்வொரு மாதமும் அப்பாவுக்கு கடிதம் எழுதுவது வழக்கம்.

"அன்புள்ள அப்பாவுக்கு, நீங்கள் எப்படி இருக்கீங்க? நாங்க எல்லோரும் ஊரில் நலம். நான் ஸ்கூல்ல நல்லாப் படிக்கிறேன், தம்பியும் நல்லாப் படிக்கிறான். அம்மாவும் நல்லா இருக்காங்க, நீங்கள் எங்களை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். நேரத்துக்கு சாப்பிடுங்க. எனக்கும் தம்பிக்கும் பரிச்சை முடிந்தவுடன் நாங்க எல்லாரும் உங்ககிட்ட வருவோம்" என்று அப்பாவுக்கு கடிதம் எழுதிவிட்டாள் மெர்சி. மெர்சியின் அம்மா ஊரின் தெற்கே உள்ள வயக்காடுகளில் வயக்காட்டு வேலைக்குச் செல்வாள்.

அவர்கள் ஊரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வசதி இல்லை. அதனால், டவுனில் உள்ள பொத்தைக்கு அருகில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தான் குடி தண்ணீர் வரும். அதற்காகவே அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாயில் இப்போது உடைப்பு ஏற்பட்டு, அதில் சாக்கடையும் கலந்த தண்ணீர் வருகிறது. இந்த சம்பவம் நடந்தேறி இரண்டு வாரங்கள் ஆகிறது. இதுவரை பஞ்சாயத்து போர்டில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை. குடிதண்ணீர் எடுப்பதற்கு மக்கள் ஊர் ஊராக அலைகிறார்கள்.

"வேண்டும்… வேண்டும்… குடிக்க நல்ல தண்ணீர் வேண்டும்."

"கலக்காதே… கலக்காதே… குடிதண்ணீரில் சாக்கடையைக் கலக்காதே." என்று ஊரின் எல்லையில் உள்ள திருச்செந்தூர் ரோட்டில், தண்ணீர்க் குழாயை பஞ்சாயத்து போர்டு சரி செய்யக் கோரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

ஊரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் மணியம்மாள், எவ்வளவோ சொல்லியும் பஞ்சாயத்து போர்டில் கேட்பவர்கள் யாருமில்லை.

அன்று ஊரில் உள்ள இளைஞர்களோடு வார்டு உறுப்பினர் மணியம்மாள் பஞ்சாயத்துத் தலைவரை பார்க்கச் சென்றார்.

"சார்... எவ்வளவு தரம் தான் மனு கொடுக்கனும், எப்போம் தண்ணிக் குழாய சரி செய்யப் போறீங்க... ஊர்ல எல்லாரும் கேள்வி மேல கேள்வி கேக்காங்க தெரியுமா? இன்னையோட இரண்டு வாரம் ஆயிட்டு சார்…" என்று மிகவும் கோபத்தில் கேட்டார் வார்டு மெம்பர் மணியம்மாள்.

"இந்த பாருங்க மெம்பர் அக்கா, உங்களுக்கே தெரியும்... தண்ணி பைப்பு உடைஞ்சி இருக்கது தண்டவாளத்துக்கு கீழ… அதுல கை வைக்கனும்ன்னா ரெயில்வேகாரனுவகிட்ட அனுமதி வாங்கனும். நானும் பஞ்சாயத்து தலைவர்-ன்னு அவனோள் கிட்ட பேசிட்டு தான் இருக்கேன், கொஞ்சம் பொருத்துக்காங்க அக்கா" என்றார் பேரூராட்சித் தலைவர்.

"சீக்கிரம் ரிப்பேர் பன்னுத வேலையப் பாருங்க சார்…" என்று அவர் கூடவே வந்த ஊரின் இளைஞர்களோடு வெளியே வந்தார் மணியம்மாள்.

"வேண்டும்… வேண்டும்... குடிக்க நல்ல தண்ணீர் வேண்டும்."

"கலக்காதே கலக்காதே குடிதண்ணீரில் சாக்கடையைக் கலக்காதே."

"சரி செய்... சரி செய்… குடிதண்ணீர் குழாயைச் சரிசெய்…" என்று போராட்டம் தொர்ந்து கொண்டிருந்தது. மெம்பர் மணியம்மாள் எப்படியோ சமாதானம் செய்து, போராட்டத்தை நிறுத்தி வைத்தார்.

காலையில் பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகள் எல்லோரும் ஊர் வாயிலில் நடந்த ஆர்பாட்டத்தைப் பார்த்து விட்டுச் சென்றார்கள். அந்தப் பகுதிகளில் தண்ணீருக்குத் தான் பஞ்சமே தவிர, கல்விக்குப் பஞ்சமில்லை. நான்கு மேல்நிலைப் பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள், மூன்று நடுநிலைப் பள்ளிகள் இருக்கிறது. நான்கு மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று அரசு மேல்நிலைப் பள்ளி, மற்றொன்று கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி, மீதி இரண்டு மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ஸ். ஆங்கில வழிப் பள்ளியில் படிப்பவர்களை 'மெத்தப் படிப்பு' என்று ஊரில் உள்ள இளைஞர்கள் வேடிக்கையாக அழைப்பதுண்டு. இதுவரை ஒன்றோ இரண்டோ மாணவர்கள் தான் ஆங்கில வழிக் கல்வியில் படித்துள்ளனர். இப்படி வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் என ஒரு பன்முகத்தைக் கொண்டிருந்தது அவர்கள் ஊர். 

போராட்டத்தை பார்த்துக் கொண்டே மெர்சியும் கலையரசியும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் டவுனுக்குப் போகும் அரசுப் பேருந்து வந்தது. டவுனுக்கு வேலைக்குப் போகும் ஆட்கள் ஏறிக் கொண்டனர், அவர்களோடு தோழிகள் இருவரும் ஏறிக் கொண்டனர்.

இவர்கள் பஸ்ஸில் ஏறியதும், "காசா... இல்ல ஓசா..." என்று நக்கலாகக் கேட்டார் நடத்துனர்.

நடத்துனர்களுக்கு மாணவர்கள் இலவச பஸ் பாஸைக் காட்டினால் அப்படி ஒரு கோபம் வரும். பஸ் கிளம்பியதும் சிறிது தூரத்தில் மீண்டும் நின்றது. எட்டிப் பார்த்தாள் கலையரசி. அது 'ரயில்வே கிராசிங்'. கேட் கீப்பர் கேட்டை அடைத்து விட்டார்.

"நான் ஏற்கனவே சொன்னேன் தான.. சீக்கிரம் போவோம்னு, கேட்டயா ட்டீ இப்போம் ரெயில்வே கேட்ட அடைச்சிட்டாரு பாரு, இன்னைக்கு லேட்டுதான் போ..." என்றாள் மெர்சி. ரெயில்வே கிராசிங்கைப் பார்த்து கலையரசியும் சற்றே சலித்துக் கொண்டாள்.

இரயில் நிலையத்தில் கிராசிங்காக காத்திருந்த நாகர்கோவில் - திருநெல்வேலி பேசேஞ்சர் ரயில் திருநெல்வேலிக்குக் கிளம்ப ஆயத்தமானது. 

ரெயில்வே கேட்டின் மறுபக்கத்தில் பிணத்தை எடுத்துக் கொண்டு சுடுகாடு செல்வதற்காகவும் சிலர் வருத்தத்தோடு காத்திருந்தனர். 

"இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி நிக்க முடியும்? ஒரு மேம்பாலம் கட்டினா நல்ல இருக்கும்…" என்றார் ஊரில் இருந்து சின்னஞ்சிறு குழந்தைகளை எல்.கே.ஜி.க்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர் தங்கவேல் அண்ணன். திருநெல்வேலி பேசஞ்சர் கிளம்பியதும் கேட்டைத் திறந்து விட்டார் கேட் கீப்பர். 

பஸ் ரெயில்வே கேட்டைத் தாண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் செல்வதற்குள் மணி எட்டரை ஆகிவிட்டது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டும். பள்ளி நுழைவாயிலில் அன்னை மேரி மாதா உருவச் சிலை இருக்கிறது. தினமும் அதில் கைவைத்து ஜெபம் செய்து தான் உள்ளே செல்வார்கள் இருவரும்.

இந்த வாரம் கடைசி சனிக்கிழமை என்பதால், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடைகளில் மளிகை சரக்குப் பொருட்கள் அதிகம் வாங்கி வைப்பார்கள் கடைக்காரர்கள். கேரளாவில் இருந்து வரும் பக்தர்கள் மாதா கோவில் திருவிழா முடிந்ததும், அவர்கள் வந்த வேனில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற மளிகைப் பொருட்கள் அனைத்தும் வாங்கிச் செல்வார்கள். அதனால், தேவாலயத்தின் அருகில் உள்ள மெயின் ரோடு எப்போதும் பரபரப்பாக இருக்கும். அன்று பள்ளிக்கூடமும் பரபரப்பாக இருந்தது.

பள்ளிக்கூடத்தை நெருங்கியவுடன் இந்த வார இறுதியில் என்ன செய்யப் போகிறோம் என்ற சிந்தனையில் நடந்தாள் மெர்சி. "கலையரசி நாளைக்கு சனிக்கிழமை. நான் நம்ம பக்கத்து ஊருக்கு நல்ல தண்ணி பிடிக்கப் போகனும், நீயும் என்கூட வாயேன்?" என்றாள் மெர்சி.

"நான் வருவேனா -ன்னு சந்தேகமா இருக்கு? எங்க வீட்ல என் தம்பி தான் தண்ணி பிடிக்கப் போவான். நான் எங்க அம்மட்ட சொல்லி கேட்டுப் பாக்கேன் சரியா…." என்றாள் கலையரசி.

தேவாலையத்தை ஒட்டிய பள்ளி என்பதால், தேவாலயம் அமைந்துள்ள சுவரிலும் பள்ளியின் வாசகங்கள் எழுதியிருந்தன. 

"தீண்டாமை ஒரு பெருங் குற்றம்."

"தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்."

தினமும் இந்த வாசகத்தைப் பார்த்து கொண்டே இருவரும் பள்ளிக்குள் செல்வார்கள். 

அன்றைய வகுப்பு ஆரம்பித்ததும் 'அணுக்கருப் பிளவு' என பெரிய எழுத்துக்களால் எழுதினார் அறிவியல் ஆசிரியர் ஏஞ்சலின். "பிள்ளைங்களா 'அணுக்கருப் பிளவு' அப்படின்னா என்னன்னு தெரியுமா?" 

"யுரேனியம் உட்கருவினை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது ஒப்பீட்டளவில் இரண்டு சிறு உட்கருக்களாகப் பிளவுற்று, சில நியூட்ரான்களையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. கனமான அணுவின் உட்கரு, பிளவுற்று இரண்டு சிறு உட்கருக்களாக மாறும் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்களைத் தருகிறது.

இது தொடர்ந்து நடைபெறுவதால் இதனை, கட்டுப்பாடான தொடர்வினை, கட்டுப்பாடற்ற தொடர்வினை என இரண்டாகப் பிரிக்கலாம். கட்டுப்பாடான தொடர்வினை அதற்கு உதாரணம் அணுஉலை.

கட்டுப்பாடற்ற தொடர்வினை அதற்கு உதாரணம் அணுகுண்டு. 

அணுகுண்டு -ன்னா தீபாவளிக்கு வெடி வெடிக்கிற அணுகுண்டு இல்ல. இது வேற அணுகுண்டு." என்றார்.

"இரண்டாம் உலகப்போர் உச்சகட்டத்தில் இருந்த போது ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்களும் அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. பல லட்சம் மக்கள் செத்துப் போயிட்டாங்க.

நம்ம ஊருக்கும் நாம இப்போம் படிக்கிற பாடத்திற்கும் தொடர்பு இருக்குது பிள்ளைங்களா" என்று பாடத்தை விளக்கினார் அறிவியல் ஆசிரியர்.

சற்றே யோசித்தவர் "கலையரசி உன்னோட பிறந்த நாள் ஏப்ரல் மாசம் 26 -ம் தேதி தான?" என கலையரசியிடம் கேட்டார். தாமதிக்காமல் உடனே "ஆமாம் டீச்சர் 26 ஏப்ரல் 1986 தான் என்னோட பிறந்த தேதி" என்றாள் கலையரசி. "சரிமா... இந்த பாடம் எடுக்கும் போது வரலாற்றுல அந்த நாள்ல என்ன நடந்துச்சுன்னு ஞாபகம் வந்துச்சு அதுதான்..." என்று அந்தப் பாடத்தின் கேள்விகளை அவர்களுக்கு விளக்கினார்.

மெர்சியை விட கலையரசி படிப்பில் மிகவும் கெட்டிக்காரி, வகுப்பில் எப்போதும் அவள்தான் முதல் மாணவி. ஆசிரியர்கள் அவளது அறிவின் கூர்மையைப் பார்த்து வியந்தது அதிகம்.

"இந்தப் பிள்ளைக்கு நல்ல புரிஞ்சுக்கிட சக்தி இருக்கு டீச்சர், என்ன பாடம் எடுத்தாலும் டக்ன்னு பதில் சொல்லுதா" என்று பிற ஆசிரியர்களிடம் அவளது வகுப்பு ஆசிரியர் ஸ்டெல்லா கலையரசியைப் பற்றி பெருமையாகக் கூறுவதுண்டு.

மாலையில் இருவரும் வீட்டிற்குப் போகும்போது மெர்சி கலையரசியிடம் கேட்டாள்,

"நம்ம ஊர்ல இந்த தண்ணிப் பிரச்சினை எப்போம் தான் தீருமோ?"

"இப்படி வாரா வாரம் வெளி ஊருக்கு குடிதண்ணி பிடிக்கப் போனா எப்படி நம்ம நல்லா படிக்க முடியும்?"

"ஊர்ல மணியம்மா அக்கா வார்டு மெம்பரா இருந்து என்ன கிடைச்சிருக்கு? அவங்க பஞ்சாயத்து போர்டுல பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டணும்டீ..." என்றாள்.

"மெர்சி, நம்ம ஊரு மெம்பர் எல்லா வேலையும் நல்லாதான் செய்றாங்க. இப்பேம் பைப்புல உடைப்பு இருக்கது நம்ம ரெயில் ரோட்டுக்குக் கீழ, அதனால தான் ரிப்பேர் பண்ண நேரம் ஆகுது." என்று யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பேசினாள் கலையரசி..

"அது சரிதான் ஆனா, நம்ம ஊர்ல புதுசா ஒரு தண்ணித் தொட்டி கட்டதுக்கு அவங்க ஏற்பாடு பண்ணலாம் தான" என்றாள் மெர்சி.

"அவங்களால முடிஞ்சத செய்றாங்க, எப்படியும் நம்ம ஊருக்கு ஒரு உப்பு தண்ணித் தொட்டி கட்ட ஏற்பாடு பண்ணினா அவங்களுக்கு நல்ல பேரு கிடைக்கும், நீ வேனும்னா பாரு அவங்க கட்டுவாங்க" என்றாள் கலையரசி.

"ஆமாம் ட்டீ... எப்படியாவது இந்த பஞ்சாயத்து போர்டுகாரங்க ஒரு புது தண்ணி டேங்க் கட்டனும். இந்த ஊரோட ராசி எந்த இடத்துல போர் போட்டாலும் உப்புத் தண்ணிதான் வருது. பக்கத்து ஊர்ல பாரு எல்லா இடத்திலயும் நல்ல தண்ணி தான். அதனால, அவங்க நம்மள மாதிரி தண்ணி பைப்புல ஏதாவது பிரச்சினை வந்தா கவலைப்பட மாட்டாங்க" என்றாள் மெர்சி.

ஊரில் குடிதண்ணீர்க் குழாய் என தெருவுக்கு ஒன்று உள்ளது. அது போக வடக்குத் தெருவில் அந்தக் காலத்தில் தோண்டப்பட்ட நல்ல தண்ணீர் கிணறு, காலப்போக்கில் உப்புக் கிணறாக மாறி விட்டது. இப்போது அதில் தண்ணீரும் இல்லை. நடுத் தெருவில் உப்புத் தண்ணீர் அடிபம்பு இருக்கிறது. அடிபம்பை நூறு முறை அடித்தால் தான் ஒரு குடம் நிறையும். ஊரில் யாரும் தனியாக உப்பு வாங்க அவசியம் இல்லை. இந்தத் தண்ணீரை குழம்பில் கொஞ்சம் சேர்த்தால் போதும் அதுவே சரியான சுவைக்கு வந்து விடும்.

நடுத் தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஒரு சிறிய தண்ணீர்த் தொட்டி இருக்கிறது, சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. இப்போது அது தண்ணீர் இல்லாமல் பாழடைந்து விட்டது. லூத்ரன் தேவாலயம் பின்புறம் அமைந்துள்ளது அதன் கிணறு மற்றும் பம்ப்செட் ரூம். அதுவும் பாழாகி விட்டது. மேற்குத் தெருவை தாண்டிய காலனிப் பகுதியில் எந்த ஒரு அடிபம்பு வசதியோ, குடிதண்ணீர்க் குழாய் வசதியோ கிடையாது. ஒரு பாலைவனம் போல் காய்ந்த வனாந்தரப் பகுதி. மேற்குத் தெரு காலனி மக்கள் தண்ணீர் எடுக்க 'கக்கன் வானொலி நிலையம்' அருகில் உள்ள அடி பம்புக்குச் செல்வார்கள்.

அந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடியது. மக்கள் பக்கத்து ஊருக்குச் சென்று குடிதண்ணீர் பிடித்து வந்தனர். பக்கத்து ஊர்ப் பகுதிகளில் உள்ள கிணறுகள், அடிபம்பு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி என எல்லா இடங்களிலும் நல்ல சுவையான தண்ணீர் தான். அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை என ஒருபோதும் வந்ததில்லை. 

அன்றைய சனிக்கிழமை மெர்சி அவளது பழைய சைக்கிளில் இரண்டு குடங்களைக் கட்டி குடிதண்ணீர் கொண்டு வர பக்கத்து ஊருக்குச் சென்றாள்.

பாதை எங்கும் சொட்டுச் சொட்டாக தண்ணீர்த் தடம், அதுவே ஊரின் நிலைமையைக் கண்ணீர் சிந்திக் காட்டியது.

பக்கத்து ஊர் மக்களுக்கு சற்றே ஏளனம் கூட. "என்னப்பா உங்க ஊர்ல தண்ணி வரலயா?" என்றார் அங்குள்ள ஒரு பெரியவர்.

"ஆமாம்…. வீட்டு வேலை செய்ய எப்படியோ உப்புத் தண்ணி இருக்கு. ஆனா, குடிக்கத் தான் நல்ல தண்ணி இல்ல. அதான், உங்க ஊருக்கு தண்ணி எடுக்க வந்துருக்கோம்" என்றாள் மெர்சி மற்றும் அவளுடன் சென்ற மற்ற பிள்ளைகள்.

"சரி, எல்லாரும் வாங்க எங்க ஊர்ல எப்போவுமே நல்ல தண்ணி வரும். ஒன்னும் கவலைப் படாதீங்க. பஞ்சாயத்து போர்டுகாரன் சீக்கிரம் சரி பண்ணிடுவான்" என்றார் அந்தப் பெரியவர்.

அந்த ஊரில் உள்ள ஒரு சில இளைஞர்கள் குடங்களோடு தண்ணீர் பிடிக்க வருபவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசினார்கள்.

"ஏ என்ன...! சேரிப் பிள்ளைங்க நம்ம ஊருக்குத் தண்ணி எடுக்க வந்திருக்காங்க" என்றான் ஒருவன். இது எப்படியோ மெர்சிக்குக் கேட்டது, "ஏலேய்... என்னல சொல்லுத எங்க ஊருக்கு 'ஐவர் ராஜா கோட்டை' -ன்னு பேரு இருக்கு... தெரியுமால உனக்கு. நாங்க ஒன்னும் உங்க வீட்டுல வந்து தண்ணி எடுக்கல. நாங்க எல்லோரும் தண்ணி எடுக்கது இந்தப் பொதுத் தண்ணி டாங்கில.. இது எல்லாருக்கும் சொந்தம் தெரிஞ்சிக்க" என்றாள் கோபமாக.

அவனுக்கு 'பளார்' என்றது போல் இருந்தது அவளின் பதில்.

தெற்குத் தெரு மைக்கேல் அண்ணனும் அவர்களோடு தண்ணீர் எடுக்க சைக்கிளில் வந்திருந்தார். 

மைக்கேல் அண்ணன் வருவதைப் பார்த்த அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டான்.

மெர்சியின் சைக்கிள் அருகில் வந்தவர்,

"மெர்சி இந்த ஊர் சின்னப் பசங்க தான் இப்படி விவரம் தெரியாமப் பேசுதானுவ. நீ ஒன்னும் கவலைப்படாத நான் பாத்துக்கிடுதேன்" என்றார்.

"எனக்கு ஒன்னும் புரியல அண்ணேன், இவனுங்க ஏன் இப்படி பேசுதானுவ, நம்ம கிட்ட என்னத்த வித்தியாசம் கண்டானுவ" என்று அவளும் வீட்டிற்குக் கிளம்பினாள்.

குடிதண்ணீர் எடுத்து வீட்டுக்கு வந்தவள் பத்திரமாக இரண்டு குடங்களையும் அடுக்களையில் எடுத்து வைத்தாள். தனக்கு நேர்ந்ததை கலையரசியிடம் தெரிவிக்க நேராக கலையரசியின் வீட்டுக்குச் சென்றவள்,

"கலையரசி உங்க வீட்டுல கரன்ட் இருக்கா?" என்றாள்.

"இல்லட்டி இப்போம் தான் கரன்ட் போச்சி, நீ... தண்ணி எடுத்துட்டு வந்துட்டயா?" என்றாள் கலையரசி.

"ஆமா, இப்போம் தான் வந்தேன். அதுக்குள்ள கரன்ட் கட் பண்ணிட்டாங்க" என்று சலித்துக் கொண்டாள்.

"நாங்க தண்ணி எடுத்துட்டு வரும்போது ஒரு பையன் எங்களப் பாத்து 'சேரிப் பிள்ளைங்க நம்ம ஊருக்கு தண்ணி எடுக்க வந்திருக்காங்க -ன்னு' சொன்னாட்டி" என்றாள்.

"புத்தி கெட்ட பயலுவ, பள்ளிக்கூடத்துல என்னத்தப் படிக்கானுவ இவனுவ... நீ வா நம்ம எங்க தோட்டத்துல இருந்து படிப்போம்" என்று கலையரசியின் வீட்டுத் தோட்டத்தில் இருவரும் பள்ளிப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தனர்.

ஊரில் மின்சாரம் அடிக்கடி தடைபடாது, இப்போது தடைபடக் காரணம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கனரக வாகனங்களில் வரும் பெரியப் பெரிய இயந்திரங்கள். இவை அனைத்தும் அவர்கள் ஊர் வழியே கூடன்குளம் செல்லக்கூடியது. கனரக வாகனங்களின் முன்னால் மின்சாரம் வாரியம் ஆட்கள் சாலையில் தாழ்வாகச் செல்லும் மின்சார வயர்களை தூக்கிப் பிடிப்பார்கள். அதற்காகத்தான் இந்த மின்சாரத் தடை.

அந்த வகையான இயந்திரம் இதற்கு முன்பு யாருமே பார்த்திராதது. ஜூராசிக் பார்க் படத்தில் வரும் டைனோசர் அளவுக்குப் பெரிதாக இருந்தது. மெர்சியும் கலையரசியும் இந்த கனரக வாகனங்களை பள்ளிக்குப் போகும்போது ரெயில்வே ரோட்டுக்கு கிழக்கே பார்த்திருக்கிறார்கள்.

ஊரின் முக்கில் உள்ள காப்பிக் கடையில் காப்பி குடிக்க வந்த பெருமாள் தற்செயலாக இந்த கனரக வாகனங்களைப் பார்த்தார். "ஏ...என்னத்தடே இவ்வளவு பெரிய மெசின கொண்டு போறானுவ?" என்று கேட்டார் பிச்சையிடம்

"அதை எல்லாம் ராதாபுரத்துக்கு தெக்க கொண்டு போறானுவ மாமா…! புதுசா கரண்ட் எடுக்கதுக்கு ஏதோ கட்டுதானுவலாம் அதான்."

"மாமா, அத பாத்தேலா...? இதுக்கு முன்னாடி இப்படி நீங்க ஏதாவது பாத்திருக்கேலா…! நம்ம நாரோயில்க்கு (நாகர்கோவில்) போற வழியில இருக்கும் ஆராமொழில (ஆரல்வாய் மொழி) இல்லாத காத்தாடியா, இப்போம் நம்ம ஊர சுத்திச் சுத்தி காத்தாடி போட்டுட்டானுவ. அந்த கரண்ட் நமக்குப் போதாதா? இத வேற கொண்டு வந்து நம்ம சோலிய முடிக்கப் போறானுவ போல" என்றார் பிச்சை.

குடிதண்ணீர் இல்லாமல் பல நாட்கள் அப்படியே தொடர்ந்தது. கலையரசிக்கும் மெர்சிக்கும் ஆண்டு இறுதித் தேர்வு இருப்பதால், இப்போதெல்லாம் குடி தண்ணீர் எடுக்க பக்கத்து ஊருக்கோ அல்லது தெற்கே உள்ள வயக்காடுகளில் துணி துவைப்பதுக்கோ செல்வதில்லை. 

அந்தக் கல்வி ஆண்டு தொடங்கியதும் தெரியவில்லை அதற்குள் ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி விட்டது. ஆனால், ஊரின் குடிதண்ணீர் பற்றாக்குறை இன்னும் தீர்ந்தபாடில்லை. இரண்டு மாதங்கள் கழித்து, தேர்வு முடிவுகள் வந்தன. அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் கலையரசி தான் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள். மெர்சியும் அதிக மதிப்பெண்கள் எடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தாள். ஆனால், கலையரசி அளவுக்கு இல்லை. அவர்கள் பள்ளியில் படித்த மாணவிகள் அணைவரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். 100% தேர்ச்சி என்ற பெருமை அவர்கள் பள்ளிக்குக் கிடைத்தது.

மதிப்பெண் பட்டியலை சரி பார்க்க அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றார்கள் கலையரசியும் அவளது பெற்றோரும். கலையரசியைப் பார்த்ததும் வகுப்பு ஆசிரியர் ஸ்டெல்லா கலையரசியை வானளவுக்குப் புகழ்ந்துப் பாராட்டினார்.

"கலையரசி... நீ தான் நம்ம கல்வி மாவட்டத்தில் முதல் மாணவி, உன்னால நம்ம பள்ளிக்கூடத்துக்கு ரொம்பப் பெருமை, வாழ்த்துக்கள் கலையரசி..." என்றார் ஸ்டெல்லா டீச்சர்.

வெளியில் மதிப்பெண் பட்டியலை பார்த்துக் கொண்டிருந்த பிற மாணவிகளின் பெற்றோர்கள், "யாரு இந்த காலனில இருக்கிற பிள்ளையா முதல்ல வந்திருக்கா" என்று முணுமுணுத்துப் பேசினார்கள். அவர்கள் பேசியது கலையரசிக்கும் கேட்டது. "காலனின்னா என்ன உங்களுக்கு? எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைப்பா? முதல்ல எல்லோரையும் மதிச்சுப் பேசக் கத்துக்காங்க" என்றாள் கலையரசி. அவளது அம்மாவும் அவர்களைப் பார்த்து "பாத்தா படிச்ச ஆளூ மாதிரி இருக்கீங்க இப்படியா பேசுவீங்க..." என்று அவர்கள் வெட்கித் தலைகுனியும்படி கேட்டார்.

மெர்சி விடுமுறையில் குஜராத் சென்று விட்டாள். அதனால், பள்ளியில் கலையரசிக்கு என்ன நடந்தது என்பது எதுவும் தெரியாது.

"அன்புள்ள மெர்சிக்கு, நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க? நாங்க எல்லோரும் ஊர்ல நல்ல இருக்கோம். நீயும், நானும் அதிக மதிப்பெண்கள் எடுத்து, தேர்ச்சி பெற்று இருக்கிறோம். நான் தான் நம்ம கல்வி மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்துள்ளேன். நம்ம பள்ளியில் எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். அதில் ஒரு சங்கடமான சம்பவமும் எனக்கு நடந்தது. நம்முடன் படித்த அந்த திமிரு பிடித்த பிள்ளையோட அம்மா சொன்னாங்க 'இந்த காலனில இருக்கிற பிள்ளையா முதல் மார்க்கு எடுத்திருக்கான்னு, ' எங்க அம்மா அவர்களைப் பார்த்து, கோபமாகப் பேசிவிட்டார். நம்ம தலைமை ஆசிரியர் அந்தப் பிள்ளைக்கு நன்நடத்தை சான்றிதழில் 'Bad' என்று எழுதி விட்டார்.

சரி, நீங்கள் எப்போது ஊருக்கு வருவீர்கள். நம்ம ஊரில் இப்போதும் தண்ணீர்ப் பிரச்சினை அப்படியேதான் இருக்கிறது. நம்ம வார்டு மெம்பர் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (தண்ணி டாங்கி) கட்ட மனு அளித்திருக்கிறார். ஆனால், இன்னும் சில மாதங்களில் பஞ்சாயத்துத் தேர்தல் வரவுள்ளது. அதனால், அது நிறைவேறுமா எனத் தெரியாது. அப்படி வந்துவிட்டால் ஒவ்வொரு தெருவுக்கும் உப்புத் தண்ணீர்க் குழாய் வைத்து 24 -மணி நேரமும் தண்ணீர் வருமாம். என்றும் உன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் உன் அன்புத் தோழி... அன்புடன் கலையரசி." என மெர்சிக்குக் கடிதம் எழுதினாள்.

- பாண்டி

Pin It