கட்டம் போட்ட சட்டை. மடித்து கட்டிய லுங்கி.

மூன்று பேருமே முக்கோண வட்டத்தில் நின்று அவர்கள் உயரத்தில் இருந்த ஸ்லேப் மீது சரக்கை, பாட்டில் டு பாட்டில் ஊற்றி அளவு பார்த்துக் கொண்டிருந்தார்கள். நுனி கோடு கூட அதிகமோ குறைச்சலா இல்லை. மூன்று பேருக்குமே சரியாக ஊற்றப்பட்டதிலிருந்து அவர்களின் அனுபவம் சரி பார்க்கப்பட்டது.

மூன்றில் ஒருவன் தலை நுட்பமான முயற்சியில் தானாக ஆடிக் கொண்டே இருந்தது. அவன் தனக்கான பாட்டிலை வாயருகே கொண்டு செல்கிறான். உடனே முகத்தை சுழித்துக் கொண்டு கையை கீழே இறக்கிக் கொள்கிறான். மீண்டும் கொண்டு செல்கிறான். இறக்கிக் கொள்கிறான். மற்ற இருவரும் வேகமாய் ஒரே மூச்சாய் அண்ணாந்து மடமடவென குடிக்கிறார்கள்.

அவன் மட்டும் வாயருகே கொண்டு சென்று குமட்டுவது போன்ற பாவனையில் முகத்தை ஆட்டுகிறான். குமட்டுகிறான்.

சட்டென எடுத்த அதிதீவிர முடிவொன்றில் எச்சில் ஊற, இடது கையில் ஊறுகாயை தடவிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து அந்த பாரின் ஓரத்தில் சென்று நின்று கொண்டான். அங்கே ஏற்கனேவே நாள்பட்ட வாந்தியும்... நாள் முழுவதுக்குமான உணவின் மிச்ச மீதியும்.....பாசம் பூத்த தண்ணியோடு தேங்கி....... ஈக்களும் கொசுக்களும் மொய்த்தபடி இருந்தன.

அந்த இடத்தில் ஜன்னலைப் பார்த்த மாதிரி நின்றவன் வாயருகே பாட்டிலை கொண்டு செல்வதும் குமட்டிக் கொண்டு மீண்டும் இறக்கி விடுவதுமாக இருந்தவன் ஒரு கட்டத்தில் இடது உள்ளங்கையில் அப்பி இருந்த ஊறுகாயை மூக்கருகே வைத்து நன்றாக வாசம் பிடித்தான். அதே நொடியில் வலது கையில் இருந்த சரக்கை வாய்க்குள் கவிழ்த்தான். சரக்கு கபகபவென தொண்டைக்குள் இறங்கியது. அடித்து முடித்த மறுநொடி பாட்டிலை கீழே இறக்க இறக்க குபுக்கென்று உள்ளங்கையளவு வாந்தியாக வெளிவந்தது. அது,அவன் தாடையில் இறங்கி கழுத்தை நனைத்து சட்டையில் திட்டுத்திட்டாக படர்ந்தது. வாந்திக்கான ஒரே ஒரு குமட்டலைத் தாண்டி இயல்பாகவே இருந்தான். பாட்டிலை அருகே இருந்த மேசை மீது வைத்து விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு, நண்பர்களிடம் வந்தவன் ஸ்லேபில் அவர்கள் வைத்திருந்த மிக்ஸரை ஒரு பிடி எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டான்.

ஏதேதோ பேசினார்கள். சிரித்தார்கள்.

இடையிடையே குபுக்கென்று கொஞ்சூண்டு வாந்தி வருவதும் பிறகு அதை துடைத்தபடியே மிச்சர் மீன் கீறி முட்டை சாப்பிடுவதும் மீண்டும் மூன்றாக பிரிக்கப்பட்ட கோட்டரை குடிப்பதுமாகவே இருந்தான்.

அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

" அதிகமாகிடுச்சு போல.. வாந்தி வந்துட்டேருக்கு..." இடையே கொக்கி போட்டேன்.

"அது வந்துட்டதாங்கருக்கும். வ்வேலைக்கு புதுசங்... எங்களுக்கு பழகிச்சுங் ... இவுனுகும் பழகிடுமுங்" என்றான் நண்பர்களின் ஒருவன்.

மூன்று பேருமே சாக்கடை அள்ளும் கார்பரேஷன் தொழிலாளிகள்.....என்று புரிய முடிந்தது.

சாப்படற போதுங்க.....சரக்கடிக்கற போதுங்க......தூங்கற போதுங்கூட கபுக் கபுக்குனு வாந்தி வந்தருமுங்.... ஆரம்பத்துல பயமாத்தாங் இருந்துச்சு.... இப்ப பயம் போய்டுச்சுங்..... உள்ளாரா போறது போயிட்டேருக்கும். வளிய வர்றது வந்துட்டே இருக்குமுங்........" என்று சொல்லி ஆபாயிலை சுருட்டி வாய்க்குள் போட்ட மறுவினாடி அதில் கால்வாசி வெளியே வந்தது.

அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்தன.

"வாந்தி வந்தா எல்லாருக்குந்தாங்கும்.. கண்ணு கலங்குமுங்......சோகத்துல நான் அழுவறேன்னு நினச்சுக்காதீங்...... நம்மலாம் தலையோட ஆளுங்.....எதுக்கும் பயப்பட மாட்டோம்..." சிரித்தான். சிரிப்பெல்லாம் போதை வழிந்தது.

"படிப்பா..... அதுக்கும் நமக்கும் வெகு தூரம்ங்க.. பள்ளியோடதுல... ஊருக்குள்ள... கோயிலுள்ள.. எங்க போனாலும் ஒதுக்கி ஒதுக்கியே வெச்சு.. ஒரு மாதிரி கேர் ஆகிடுச்சுங்....... படிச்சா எட்டாங்க்ளாஸ்க்கு எவன் வேலை குடுப்பான்... கொலத்தொல்லுக்கே வந்துட்டமுங்... எல்லாமே மல்லிகாவுக்காகத்தாங்..... அவளை நல்ல வெச்சுக்கணும்னு தான்..."

அவர்கள் மூவர் மீதும் இதுவரை நான் உணராத ஒரு வகை சோர்வு படர்ந்திருந்தது. நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பத்தி பேசுவதற்குள் அவனுக்கு மூன்று முறை குமட்டி விட்டது. ஒவ்வொரு முறை குமட்டும் போதும் அவன் கண்கள் கலங்கி வெளியே வந்து வந்து போனது.

"எங்கூர்காரங்களும் நம்மல படிக்க விடல..... நமக்கும் படிப்பு ஏரலங். கூட்டி கழிச்சுப் பார்த்தா இப்டி குடிச்சாதாங் வேலை செய்ய முடியுதுங். மூச்சுக்குள்ளார எப்பவும் சாக்கடை நாத்தம்தான் ஒரு மாதிரிக்கும். சரக்கு இல்லனா நாங்களாம் காலிங்....நாங் பரவால்லங்... கக்கூஸ் அல்லறவன்லாம்......"

அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் எப்போதோ மௌனமாகி இருந்தேன். ஒரு முறை அவர்களை சுற்றி ஆழமாய் மூச்சிழுத்தேன். இவர்களை இவர்களாகவே வைக்க எண்ணும் மானுட குலத்தின் நாற்றத்தை உணர முடிந்தது.

("காகிதப்பூ" தொடரும்)

- கவிஜி

Pin It