2005- ஏப்ரல் 25 -மாலை -6 மணி காட்சி

"சந்திரமுகி" பார்த்து விட்டு வீடு நோக்கி போகும் போதே உள்ளே பல விதமான எண்ணங்கள்.. ரசாயன மாற்றங்கள். கண்களுக்குள், சந்திரமுகியில் கண்கள் உருண்டு கொண்டே இருந்ததை எத்தனை சிமிட்டினாலும் வெளியேற்ற முடியவில்லை.

வீட்டில் எல்லாரும் ஊருக்கு போயிருப்பது மனதுக்குள் பெல் அடித்தது. துணைக்கு தங்க வைக்க நண்பன் கமலை கூப்பிடலாமா என்று கூடத் தோன்றியது. சிறு இருட்டை மனதுக்குள் சுமந்து கொண்டு சென்று வீடடைந்தேன். எல்லா அறைகளிலும் லைட்டை ஆப் பண்ணி விட்டு என் அறையில் போர்வையை இழுத்து மூடி படுத்தேன். எல்லா தெய்வங்களையும் ஒரு முறை நினைத்து பத்திலிருந்து தலைகீழாக ஒன்று வரை நான்கு முறை சொல்லி தூக்கத்தின் வாயிலில் எட்டிக் குதிக்கும் வேளையில் காலிங் பெல்லை யாரோ அடித்தார்கள்.

திடுக்கிட்டு விழித்தேன்.

நன்றாக தூங்குபவனை திடுக்கிட்டு எழ செய்தால் கூட ஒரு வகை நிதானம் இருக்கும். தூக்கத்துள் செல்லும் அந்த தூக்க விழிப்பு நிலையில் அரக்க பரக்க எழுவது.. தலை கீழ் சேட்டைகளில் குரங்கின் வால் செவிக்குள் நுழையும் ஓசைக்கு சமமானது. எழுந்தமர்ந்து இதயம் துடிப்பதை துல்லியமாக கேட்க முடிந்தது. காலிங் பெல் சத்தம் அதிகமானது. கண்கள் நிலை குத்த சத்தம் வந்த திசையில் முகத்தை திருப்பி உற்றுக் கேட்டேன். தொடர்ந்து இப்படி யாராவது பெல் அடிப்பார்களா... அத்தனை நடுக்கத்திலும் புத்தி கொஞ்சம் வேலை செய்தது. என்ன ஆனாலும் சரி கதவை மட்டும் திறக்கக் கூடாது. சடுதியில் மூளை முடிவெடுத்தது. எனக்கு எப்போது வேர்க்கத் தொடங்கியது என்று தெரியவில்லை. அடிவயிற்றில் எதுவோ கவ்விக் கொண்டிருந்தது.

காலில் பெல் தொடர்ந்து ஆம்புலன்ஸ் சைரனைப் போல அடிக்க, என்ன செய்வதென்றே தெரியாமல்... கட்டிலில் சுவரோரம் போர்வையை மூடிக் கொண்டு ஒரு பேயைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன். வேகம் அதிகமான சத்தம் பட்டென்று நின்று போனது. சத்தம் நின்று போன பின்னால்தான் பயம் இன்னும் அதிகமானது. எதுவோ நம்மை நெருங்கி விட்டது என்று உணர முடிந்தது. மனதுக்குள் விதவிதமான கோர முகங்களின் வடிவம் இன்னதென இல்லாத உருவத்தில் என் மூளையில் உருவாகத் தொடங்கின.

சத்தம் இதோ மறுபடியும் கேட்க போகிறது என்று நம்பிய எனக்கு சத்தம் கேட்காத அவநம்பிக்கை தொண்டைக்குள் எச்சில் அறுக்க வைத்தது. மெல்ல அப்படியே செய்வதறியாமல் சரிந்து கட்டிலில் படுத்தேன். கால்களின் நடுக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அப்படி நடுங்குவது கூட ஒரு வகை பாதுகாப்பை தருவதாக நம்பினேன்.

கண்களை இறுக மூடிக் கொண்ட எனக்கு தூங்குவது போல நடிக்க வேண்டுமாய் இருந்தது. சற்று நொடிகளில் போர்வைக்கு மேல் என் மீது ஏதோ சுமை கூடியது. நான் சுதாரித்துக் கொண்டு எழ முற்படுகையில்... முடியவில்லை.

பொணம் கனம்.. மூச்சு விட சிரமப் படுத்தியது. நான் திமிர திமிர என் மீது கிடந்த கனம் கச்சிதமாக என் கால்களை பின்னி என்னை கட்டிலோடு அழுத்தியது. நான் யாவ்........ அ......யோ அயோ......." என்று கத்திக் கொண்டே என்னன்னவோ செய்தேன். தத்தளித்தேன்.
கை கால்களை வேகமாய் அசைக்க முற்பட்டு மெல்ல அசைக்க முடிந்து எதையோ உதைத்து விட்டு எழுந்தது போல பெருமூச்சு வாங்க அமர்கையில் அறையின் லைட் அணைக்கப் பட்டிருந்தது.

"ஆஹஃ ஆஹ் ஆத் அயோ....அயோ" என அலறிக் கொண்டே அறைக்குள் அங்கும் இங்கும் நான் நடந்து ஓட... எங்கு நிற்கிறேன் என்றே மறந்து போனேன். அறைக் கதவு திறந்து கிடக்கிறது. அறையிலிருந்து பார்த்தால் தெரியும் ஹாலின் லைட் எரிந்து கொண்டிருக்கிறது. நான் அணைத்து விட்டு தானே வந்தேன். யோசித்தபடியே வேகமாய் ஹாலுக்கு சென்று ஸ்விட்சை ஆப் பண்ணி விட்டு மீண்டும் என் அறைக்குள்ளே ஓடி வரும் போது என் கழுத்தை பிடித்து யாரோ தள்ளியதை உணர முடிந்தது. மின்விசிறியின் வேகம் அதிவேகமாய் ஆனது. கழுத்தை பிடித்து தள்ளிய வேகத்தில் நிலை தடுமாறி சென்று கட்டிலில் விழுந்து போர்வையை இழுத்து தலையோடு போர்த்தி ஒளிந்து கொண்டேன்.

அறையின் லைட் அணைந்து அணைந்து எரிந்தது. அறைக்குள் திடும்மென சூழ்ந்த புழக்கம் மூச்சு திணற வைத்தது.

என் பக்கத்தில் தரைக்கும் வீட்டின் சீலிங்குக்குமான உயரத்தில் பாம்பை போல உடலால் உடலையே வளைந்து வளைத்து நெளிந்து நெளித்து ஒரு பெண் அரூபமாய் நிற்பதை போர்வை விலக்கிய குறுகுறு ஓரப் பார்வையில் பார்க்க முடிந்தது.

"ஆ...........ஹஹா........" என்று கத்தி உளறியபடி எழுந்து சுவரோரம் சரிந்து கை கால்களை உதறிக் கொண்டு........".....போ ப்ப்போ போ ப்ப்போ......" என்று சத்தமிடுகிறேன். சத்தம் எனக்கு கேட்கவில்லை. உலகமே செவிடானது போன்ற தோரணை என்னை சுற்றிலும்.

கழுத்தை முன்னால் தூக்கி தூக்கி, "ஹஆஹ் அஹ்ஹா ஹஹ்ஹ ஹா..... ஹா ஹா கா......கா......" என்று சிரித்துக் கொண்டே....." ஆ......ஆஅஹ்ஹ்ஹ அய்யோஓஓஓஓ அயோஓஓஓஓஓ" என்று அழுவதும்.......என்னை உற்று உற்று பார்த்தபடி முறைப்பதுமான அதன் செய்கைகள் அகோரமாய் என்னை சூழந்தது. கண்டிப்பாக பேய் தான். ஒருவேளை கற்பனையோ என்று கூட ஆழ் மனம் யோசித்தது. கண்களைத் தேய்த்து நன்றாக கூர்ந்து பார்க்கையில் அது வளைந்து நெளிந்து சதை தொங்கும் குதறலோடு சொரசொரப்பின் சொட்டுதலோடு அறைக்குள் ஒரு பாம்பை போல ஊர்ந்து கொண்டிருந்தது. நான் சுவரோரம் நடுங்கி வாய் கோணி முகம் நசுங்கி அமர்ந்திருந்தேன்.

"பாஆஆஅம்..................." என்று பட்டென தூக்கி வீசப்பட்டேன்.

என் அறையில் இருக்கும் பேப்பர் பேனா புத்தம் என்று எல்லாமே என் மீது வாரி இரைக்கப்பட்டது.

"ஆஅ ஆஹ்ங்...." என அணத்தும் சத்தம் அறையின் கழுத்தை பிடித்து மூச்சுத் திணற வைத்தது. மின்விசிறியின் சுழற்சி அதிவேகமானது. என்னை ஒரு பாம்பைப் போல் சுற்றி இறுக்கியது. அதற்கு முகம் இருக்கும் இடத்தில் வெறும் ஓட்டை தான் இருந்தது. நான் சேர்த்து வைத்திருக்கும் பேனாக்கள் என் மீது வந்து வந்து குத்தி குத்தி விழுந்தன. புத்தகங்கள் என்னை சம்மட்டியை போல் அடித்து சாய்த்தன. என் உடல் என் கட்டுப்பாட்டில் இல்லை.

கீழே அமர்ந்து ஒரு கையை, கன்னம் தலைக்கு அணை கொடுத்து ஒருக்களித்து படுத்துக் கொண்டு "ஏஏஏஏ ஈஈஈ ஏஈ... ஏஏஏஏ ..... என்று அடித் தொண்டையில் அணத்திக் கொண்டிருந்தது அது.

விடிகையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தேன் நான்.

("காகிதப்பூ" தொடரும்)

- கவிஜி

Pin It