கெட்டவனுக்கும் நல்லவனுக்கும் இடையே தவிப்பது மிக அலாதியானது. அதில் ஒரு அரூப தன்னை கண்டடையலாம் என்பது எனது வாக்கு.
 
பிறப்புக்கும் சாவுக்கும் இடையே இருக்கும் நுனியை திருகி விட்டு வேடிக்கை பார்ப்பது மிக மிக அலாதியானது. அதில் ஒரு கழுத்து நீண்ட கதையைக் காணலாம் என்பதும் எனது வாக்கு. என் வாக்கில் எனக்கே நம்பியற்ற போதுதான் இம்மாதிரி செயல்களில் நான் ஈடுபடத் துவங்குவேன். 
 
எங்கள் வீதியில் 2ம் நம்பர் வீட்டில் இருக்கும் நான் ஒரு அப்பாவி. நான் ஒரு இன்னொசென்ட். யாரிடமும் பேச எதுவும் இல்லை என்ற கொள்கைக்கு எதிர்மறையாக எப்போதாவது சில காரியங்கள் நடக்கும். இன்னொரு வீட்டு மொட்டை மாடியில் காலாற நடந்து கொண்டிருப்பது ஆன்ம திருப்தி தருபவை. உள்ளாடையற்றது உலகம் போன்ற சிந்தனைகள் அப்போது தான் பிறக்கும். உயிரற்ற உடலின் செயல்கள்.... மாற்றத்தில் விளைபவை என்றும். 
 
எல்லா சரி தவறுகளையும் குலுக்கி போட்டு மாற்றி எடுக்கும் மாயத்தில் தான் மகத்தான சங்கதிகள் பிறக்கும்.
 
நான் வேறு ஒரு வேலையை செய்யும் போது வேறு ஒரு சிந்தனையில் மூழ்குவது எனக்கு நானே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று சொல்லலாம். பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வதை போல ஆகச் சிறந்த வாழ்தல் வேறொன்று உண்டோ என்று நானே புன்னகைக்கையில் சகிக்காது என் வீட்டுக் கண்ணாடி. அத்தனை நெளிவு சுழிவுகளில் காலத்தை நங்கூரமிடும் கேலியாகவே நம்புவேன். 
 
 நான் நேற்றிரவு மணி இரண்டுக்கு......சென்றது என் வீதியில் இருக்கும் 8ம் நம்பர் வீடு.
 
அங்கு எதற்கு சென்றேன் என்றால்....நேற்றைக்கு முன்னிரவு எந்த வீட்டில் இருந்தேன்...அதற்கு முன்னிரவு எந்த வீட்டில் இருந்தேன்.....  குறைந்த பட்சம்....போன வாரம் எந்த வீட்டுக்கு சென்றிருந்தேன் என்றாவது, கொஞ்ச நாட்களாக இப்படித்தான் என்பதையாவது சொல்ல வேண்டும். 
 
எனக்கு இரவுகளில் தூங்க பிடிக்காது. எங்கள் வீதியில் இருக்கும் ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து விடுவேன். ஒரு பிசாசைப் போல வெறி கொண்டு வீட்டில் அங்கும் இங்கும் அலைவேன். உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரர்களின் அருகே ஒரு அமானுஷ்யமாக நிற்பேன்.  உலகத்தையே கிழித்து விடுவது போல பேசுபவன் எல்லாம் தூங்குகையில் கிழிந்து போன வாயோடு உடல் சரிந்து பிணம் போல கிடப்பதைக் காணுகையில் இந்த மானுட வாழ்வின் மீதான நம்பிக்கைகள் அறவே அற்று கிழிந்து போன வரலாற்று சம்பவங்களாக மாறிப் போகின்றன....போன்ற  தத்துவங்களை குறித்துக் கொள்வேன். பெரும்பாலும் என் செத்த மூளையின் முதுகுப்புறத்தில் தான் இது அரங்கேறும்.
 
மிருகத்திலிருந்து வெகு தூரம் வந்து விட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் நமக்கு வாயில் சூடு போட்டு விடுவது போல இருக்கும்.. சில மனிதர்களின் தூங்கும் பொசிசன்கள். அத்தனை கேவலமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மனிதனும் விநோதமாகவே இருப்பார்கள். பார்க்க பார்க்க அறைக்கு அறை சுவாரஷ்யம் கூடும். நீங்கள் வகுத்து வைத்திருக்கும் எந்த நியாய தர்மங்களும் எனக்கு பொருந்தாது என்று மார்தட்டி கூறும் இடங்கள் அவை.. நான் கிட்டத்தட்ட உங்களின் ஆன்மா போல.... உலாவுகிறவன். 
 
நேற்றிரவு நான் அந்த 8ம் நம்பர் வீட்டுக்குள் வழக்கம் போல பூனை நடையில் சென்ற போது... முதல் முறையாக நான் தடுமாறினேன். தலை சுற்றி கண்கள் கட்டுவது பிடிக்கும் என்றாலும்.... பார்க்க பார்க்க அத்தனை ஆசையாக இருந்தது. இதுவரை எந்த வீட்டிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. அந்த வீட்டுக்காரன் தலைகீழாக நடந்து கொண்டிருந்தான். அவன் தலை நங் நங்கெனென்று  தரையில் பட்டு பட்டு நடக்கையில்... கணீர் கணீர் என்று நம் உள்ளே என்னவோ உடைந்தது. சுவற்றில் நீண்டிருந்த ஆணியில் அவன் பின்னந்தலை மாட்டி குத்தி இழுத்து விட ரத்தம் பீச்சி அடிக்கையிலும் அவன் நடையை நிறுத்தவேயில்லை. நான் பின்னாலேயே நடந்தேன். சப்தமற்ற இரவில் அவனின் தலையடி சுவடுகள் மட்டும் ரத்தத்தில் தோய்ந்து பிசுபிசுப்போடு நகர்ந்து கொண்டிருந்தது. பாதி மண்டையை உரசி எடுத்திருந்தது வீட்டின் தரை.
 
நடந்து நடந்தே விடிந்திருந்தது. வழக்கம் போல வீதியில் நான் இயல்பான இன்னொசென்ட்டாக நடந்து கொண்டிருந்தேன். ஒரே யோசனை.. "எதுக்கு தலைகீழா நடந்துகிட்டு இருந்தான்...!"
 
8ம் நம்பர் வீட்டைத் தாண்டுகையில்.... 
 
"இப்படி ஒரு கனவா..." என்று 8ம் நம்பர் வீட்டுக்காரனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் 9ம் நம்பர் வீட்டுக்காரன். இருவருமே அந்தப்பக்கம் பார்த்த மாதிரி நின்றிருந்தார்கள்.
 
எனக்கு அப்போது தான் புரிந்தது. நேற்று அவன் தலை கீழாக நடந்தது அவன் கனவில். ஆனால் அது எனக்கு தெரிந்திருக்கிறது. சற்று நடையை நிறுத்தி அங்கேயே ஓரத்தில் நின்று கவனமாக ஒரு வித நடுக்கத்தோடு (நடுங்குவது பிடிக்கும்) கவனித்தேன். பிறகு இன்னொன்றும் அவன் சொன்னது நன்றாக கேட்டது. 
 
"தலைகீழா நான் நடக்கற என் கனவுல அந்த 13 நம்பர் வீட்ல இருந்தானே அந்தப் பையன் என்னை பின் தொடர்ந்து பார்த்துகிட்டே வந்தான்ப்பா..." 
 
சட்டென்று ஏதேதோ புரிவது போலத் தோன்றியது.
 
கண்கள் விரிய வார்த்தை குளறி உதடு முனங்க என்னையே ஒருமுறை பார்த்தேன். 
 
"அப்போ நேத்து 8ம் நம்பர் வீட்டுக்கு போனது............தினமும் ஒவ்வொரு வீட்டுக்கா போறது.......????!!!!!" 
 
இன்னும் நிறைய கேள்விகளுடன் நின்ற என் தலையில் ஏதோ வழிவது போல உணர்ந்தேன்.
 
அங்கே ரத்த வாடை மெல்ல வீசத் தொடங்கியிருந்தது...கூட பெருங்காற்று இரையவும்....!
 
- கவிஜி
Pin It