மிகக் கவனமாக சிவரஞ்சனியின் வீட்டைக் கடந்து விடுகிறோம்.

நான்....என் நண்பர்கள்....எதிரிகள்.....பக்கத்து வீட்டுக்காரர்கள்......எதிர் வீட்டுக்காரர்கள்.. இன்னும் சொல்லப் போனால் எங்கள் வீதியே அப்படி ஆகி விட்டது. பதில் இல்லாத போது கேள்விகள் பயம் தானே. அப்படி ஒரு கேள்வியாய் சிவரஞ்சனி மாறிப் போயிருந்தாள்.

முன்பெல்லாம் அவள் வீட்டை கடப்பதற்காகவே காத்து நீண்டிருந்தது ஒரு வரிசை என்றால் அது அழகான எதுகை மோனை.

வேண்டுமென்றே அவள் வீட்டு வாசல் நிழலில் சைக்கிளை நிறுத்தி விட்டு, " யக்கா சைக்கிள் நிக்கட்டும்; பின்னால ஒரு வேலை.....வந்தர்றேன்" என்று சிவரஞ்சனியின் அம்மாவிடம் கத்தி சொல்லிப் போனது இன்னமும் பகல் நீண்ட காட்சியாக உள்ளே பதிந்திருக்கிறது.

எங்களைப் பார்க்கும் போதெல்லாம் "ஏய் சிவரஞ்சனி, எந்திரிச்சு உள்ள போ" ன்னு அவ அம்மா கத்தும். அவளும் கண்களை உருட்டிக் கொண்டு, "இதே வேலையா போச்சு..... கொஞ்ச நேரம் வெளில நிக்க விடறீங்களா....வெளிய வந்து நின்னா போதும்....ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு வந்து பேச்சு குடுக்கறது...." என்று தூவென துப்பியது இன்றும் காற்றில் அலைகிறது. ஆகச்சிறந்த காலச் சம்பவங்கள் அது.

மழைக்கு ஒதுங்க அவ வீட்டு வாசல் தான். வெய்யிலுக்கு ஒதுங்க அவ வீட்டு வாசல் தான். பனிக்கு ஒதுங்கவும் அவ வீட்டு வாசல் தான். சரியான காரணம் இல்லாமல் ஒருத்தியைப் பிடிக்குமென்றால் அது சிவரஞ்சனி தான். இதற்கும் அவள் பேசும் மொழியில் கெட்ட வார்த்தைதான் நிரம்பி இருக்கும். தெரு குழாய் அருகே நைட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு அவள் சண்டையிட ஆரம்பித்தால் கட்டங்கரேலென்று இருக்கும் அவள் கால்கள் தொடை வரை தெரிவது சற்று அச்சுறுத்தலாகவே இருக்கும். அவளிடம் என்ன பிடித்ததென்று எங்களுக்கும் தெரியவில்லை. அவளுக்கு ஏன் எங்களைக் கண்டாலே பிடிக்கவே இல்லை என்று அவளுக்கும் தெரியவில்லை.

எல்லாமே மாறிப் போனது.

அவளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம். மின்சாரத் துறையில் அரசாங்க வேலை அவன் கணவனுக்கு. மூன்று மாதங்களுக்கு முன் பாதுகாப்பில்லாமல் மின்கம்பத்தில் வேலை செய்த போது ஏற்பட்ட விபத்தில் அவன் சிக்கி கரிக்கட்டையாய் செத்துப்போனான். அடுத்த வாரத்திலேயே அவள் பிறந்த வீடு வந்து விட்டாள். அதன் பிறகு தான் அந்த மாற்றம் நடந்தது.

அவள் முகம் அழுது அழுது வீங்கி பிறகு வீங்கிய முகமாகவே மாறி போய் விட்டது. நாங்கள் அந்த வாசலில் நின்றாலும் நடந்தாலும் அமர்ந்தாலும் கடந்தாலும் அவள் எதுவும் சொல்வதில்லை. எங்களை புன்சிரிப்போடு பார்க்கத் தொடங்கினாள். வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தாள். நிலாவைப் பார்த்து நிலா தொடர்பான பாடல்களை முணுமுணுத்தாள். ஊதிப் பெருத்திருந்த பலூனில் தன்னை நுழைத்துக் கொண்டவள் போல வெற்றிடம் அசைய நடந்தாள். தெரு நாய்களுக்கு சோறு போட்டாள். கண்கள் சிமிட்டாத காட்சியை அவளிடம் இருந்து நால்புறமும் கவ்வி எடுத்துக் கொண்டே இருந்தது. "இங்க நிழல் இருக்கு.. சைக்கிள் நிறுத்துக்கோங்க"ன்னு வலிய வந்து வாய் மட்டும் அசைய சொன்னாள். பிடித்து வைத்த பிள்ளையாராய் எப்போதும் வாசலிலேயே அவள் அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் எதையோ தேடிக் கொண்டேயிருந்தது. கறுத்த முகத்தில் கண்கள் இடுங்கி ஒரு மண்டையோட்டு கறியோவியம் போல மாறி இருந்தாள்.

"டேய் அவ அலையறா.. மாட்டிக்காதீங்க...." என்ற பெருசு எங்களை சற்று பயமுறுத்தி தான் வைத்தது.

"அதில்லடா மாப்ள.. அப்பப்பன்னா ஒன்னும் பிரச்சனல்ல. மொத்தமா கட்டுடா தாலியன்னா என்ன பண்றது...." நண்பன் சொன்னது மண்டைக்குள் பாறாங்கல் முகம் விலக்கி பார்த்தது போல இருந்தது. புறப்பட்டு விட்ட அம்புக்கு வழி தெரியவில்லை என்பது போல அவளின் தோற்றம் அந்த வீதியை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ஒரு சூனியக்காரியின் தியரியை அவள் மேல் சுற்றினார்கள் ஊர் பெருசுகள். நான் சுத்தமாக அந்த வீட்டை தவிர்த்தேன். இப்படி சுற்றி கடைவீதிக்குப் போனாலும் போவேனே தவிர சிவரஞ்சனியின் வீட்டு வாசலைத் தாண்டிப் போவதில்லை.

அப்படியே எப்போதாவது போய் மாட்டிக் கொண்டால் அவள் கண்கள் என்னை பார்த்துக் கொண்டேயிருக்கும். நான் வழிசல் புன்னகையோடு வேகமாய் ஒரு பிசாசைக் கடப்பது போல கடந்து விடுவேன். அவள் எல்லாரையும் அப்படித்தான் பார்க்கிறாளாம். அலைச்சல் முத்தி விட்டதாம். கதை சொல்லும் ஊர்க்கிழவி வெத்திலை குத்திக் கொண்டே வசைச் சொல் ஒன்றையும் சேர்த்து ஒலி பரப்பியது.

நேற்றிரவு இரண்டாவது காட்சி சினிமா பார்த்து விட்டு சிவரஞ்சனியின் வீட்டைக் கடக்கையில் வாசலில் இருட்டைப் பிசைந்து செய்தது போல அமர்ந்து கொண்டு கண்களை சிமிட்டி சிமிட்டி இருட்டை பிடித்துக் கொண்டிருந்தாள். திக்கென்று ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது.

"என்ன்ன்ன யுத்தா.... பேசவே மாடேங்கிற....?" என்றாள் கிசுகிசுத்த குரலில்.

"என்ன பேசுவது...." குரலை சரி செய்து கொண்டே..." என்ன சிவரஞ்சனி....! இன்னும் தூங்கல...?" என்றேன்.. அதே கிசுகிசுப்போடு. உள்ளே நிரம்பியிருந்த ஒரு வித படபடப்பை தடுக்க முடியவில்லை.

தூங்கனும் என்று முனங்கியபடியே படக்கென்று அழ ஆரம்பித்த சிவரஞ்சனி... "என் கூட யாராவது பேசுங்கன்னுதான உத்து உத்துப் பார்க்றேன்....ஏன் யாருமே பேச மாட்டீங்கறீங்க.... என் புருஷன்தான செத்தான்....நானா செத்தேன்....!" என்று அதே கிசுகிசுத்த குரலில் அழுதவளை ஏனோ அப்படியே தனியாக விட்டுச் செல்ல மனம் வரவில்லை.

தொடர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தாள். நான் அவளருகே அமர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் அழுகை நின்றிருந்தது. அவள் முகம் தெளிவாகிக் கொண்டிருந்தது. அவள் மனதில் மரணத்தின் வடு காயத் துவங்கியிருக்கலாம். எனக்குள் ஓர் அமைதி ஆசுவாசப் பட்டது.

அந்த வாசலில் விடியலுக்கான முதல் கீற்று விழுந்திருந்தது.

- கவிஜி

Pin It