”த்தூதூ… என்ன நெனப்பிது?”

நினைக்க நினைக்க பயமேறியது. உடல் நடுங்கியது. முகத்தை மறைத்திருந்த கம்பளியை ‘சடரென’ தூக்கி எறிந்து விட்டு, தலையை இடது கையால் பிடித்தபடி படுக்கையில் அமர்ந்தேன். பெருவிரலும், ஆள்காட்டி விரலும் தலையை அழுத்தி பிடித்தபடி இருந்தது. மூடிய கண்களை மற்ற விரல்கள் மறைத்தன. ஜீரோ வாட்ஸ் பல்பின் மங்கலான ஒளி அறை முழுதும் படர்ந்திருந்தது.

“அய்யோ… நெனைக்கவே பயமா இருக்கே?, என்ன பண்ணுறது?” புலம்ப புலம்ப மூச்சிரைத்தது.

”உப்ப்ப்… உப்ப்ப்” என மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் காற்று வெளியேறியது. அதற்கேற்ப வயிறு முன்னும், பின்னும் சென்றது. வேர்த்து விறுவிறுத்த முகத்தில் மெல்ல கண்ணீர் வடிந்தது. கோடு கோடாக வடிந்த கண்ணீர் சூடாக இருந்தது. அதனைத் துடைக்க வேண்டுமென நினைத்தாலும், துடைக்க மனம் வரவில்லை.

“நான்?”

இந்த வார்த்தை வாட்டி வதைத்தது. நாளையை எண்ணி நானும் பயந்து கொண்டிருக்கிறேன். நானில்லா உலகை நினைக்க மறுக்கிறேன்.

”நூறு நூறு ஆண்டுகள் ஓடும். ஆனால் நான்?”

“நான் செத்தால் என்னாவேன்?” … ”நானில்லா உலகம் இல்லாமலா போகும்?”

“இல்லை வேணாம். இத பத்தி யோசிக்காம மைண்ட் ஆ டைவர்ட் பண்ணு”

”என்னை போலத்தானே என் தாத்தனும், பாட்டனும் இம்மண்ணில் வாழ்ந்திருப்பான்? அவர்கள் எங்கே??”

“அய்யோ… யோசிக்காதடா”

எனக்குள் நானே மாறி, மாறி சொல்லிக் கொண்டேன். எப்போதிருந்து, எங்கிருந்து பயம் தொற்றியது எனத் தெரியவில்லை. மரண பயம் மா ரணமாக மனதில் பதிந்தது. நினைக்க நினைக்க பயம் கூடியது.

"கடவுள் நம்பிக்கை இருந்திருந்தா கூட எல்லாம் கடவுள் செயல்னு நம்பி கடந்து போயிடலாம். ஆனா அதுவும் இல்லாம போச்சு. அதனால தானா இந்த பயமே”

டிக்… டிக்… டிக்… என நொடிகள் கடக்கும் சுவர் கடிகார சத்தம் கேட்டது. கண்களை மெல்ல திறந்து, விரல் வழியாகப் பார்த்தேன். மணி 11.40 எனக் காட்டியது.

பயத்தில் இருந்து விடுபட்டு ஆக வேண்டும். தூங்கலாம் என நினைத்ததும், தூக்கம் வருமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே தூக்கத்தில் இருந்து எழுந்து புலம்பிக் கொண்டிருந்ததால், படுக்க பயமாய் இருந்தது. டிவியை ஆன் செய்து, ரிமோட்டை எடுத்தபடி படுக்கைக்கு அருகே இருந்த சோபாவில் அமர்ந்தேன். ஒவ்வொரு சேனலாய் மாற்றி, மாற்றி வந்தேன். எதனையும் பார்க்கப் பிடிக்கவில்லை.

போனில் பேஸ்புக்கில் நுழைந்தேன். அதிலும் மனம் கொள்ளவில்லை. போனை சோபாவில் எரிந்து விட்டு, சாய்ந்து அமர்ந்தேன். பீரோ கதவுக் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. தேங்கி நின்றிருந்த கண்ணீர் உடைந்து கொட்டியது.

’இறப்பை தூரத்தும் பிறப்பே வாழ்க்கை’ என பல சமாதானங்களை சொன்னாலும் மனம் ஏற்க மறுத்தது. இறுதியாய் “சாவு எப்போதோ வந்து தொலையட்டும், இந்த பயம் தொலைந்தால் போதும்” என்றிருந்தது.

’இது சரிப்படாது, அவனையாவது பாக்கப் போலாம்’ என நினைத்தபடி சோபாவில் கிடந்த போனை எடுத்து அருணுக்கு போன் பண்ணினேன்.

“ஹலோ… ஏண்டா?” தூக்கத்தோடு கேட்டான்.

”உன்னப் பார்க்கணும்”

“இப்பதாண்டா படுத்தேன், இந்நேரத்துல என்னடா? காலையில பாக்கலாம்”

”இல்ல, இப்பவே பாத்து பேசணும்”

”பேசமா படுடா”

”டேய்… பயமா இருக்குடா… வா…”

”டேய்… ஹலோ” அவனின் அடுத்த வார்த்தை கேட்பதற்குள், போனை கட் பண்ணி விட்டேன்.

வரிசையாய் அடுக்கி வைத்தது போல ஒரே நேர் கோட்டில் தெரு விளக்குகள் வெளிச்சமிட்டன. தெரு விளக்கு உமிழ்ந்த மஞ்சள் ஒளி, சாலையில் இருளை விலக்கி வைத்தது. பல்பிற்கு அருகே பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. டியுப் லைட் வெளிச்சத்தில் பரணி பேக்கரி என்ற போர்டு தெரிந்தது. கடையில் காலி டேபிள்களும், ஆட்களற்ற சேர்களும் இருந்தன. கல்லா பெட்டி முன் ஓனரும், டீ பாய்லருக்கு பின் டீ மாஸ்டரும் நின்றிருந்தனர். கடைக்கு முன்பாக டூவிலரில் சாய்ந்தபடி, சாலையை பார்த்தவாறு நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

”வாலிபங்கள் ஓடும்
வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு
மாறாதம்மா” என ரேடியோவில் பாட்டு பாடியது. புகையை உள்ளே இழுத்து ஊதியபடி, சாலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் டூவிலர் வரும் வெளிச்சம் வந்தது. அப்படியே உடலை திருப்பி “அண்ணா, ரெண்டு டீ” என சொன்னேன்.

டூவிலர் என்னருகே வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அருண், சிகரெட்டைப் பிடுங்கி ரெண்டு பப் அடித்து விட்டு திரும்பத் தந்தான். டீக்கடைக்காரன் கொண்டு வந்த டீயை இருவரும் வாங்கி கையில் வைத்துக் கொண்டோம்.

”என்னடா பேய் கனவுகிது கண்டியா?” எனக் கேட்டபோது, அவன் வாயில் இருந்து புகை வெளியேறியது.

இல்லை” என நிலத்தைப் பார்த்தபடி சொன்னேன்.

”என்னைப் பாத்து பேசுடா, என்ன பயம்?”

அவன் என்னைப் பார்த்தபடி இருந்தான். நான் எதுவும் பேசவில்லை. கையில் இருந்த சிகரெட் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

”உசுர எடுக்காதடா, சொல்லித் தொலை”

”அதுதான் பயமா இருக்கு” நிதானமாக வார்த்தை வந்தது.

”என்னடா சொல்லுற?” பதறியபடி கேட்டான்.

டீயை குடித்தபடி எனது பயத்தை அருணிடம் விவரித்தேன். அவனும் பொறுமையாகக் கேட்டான்.

”நல்ல வேலை, தேதிக்கு சம்பளம், சொந்த வீடு, கடனில்லா வாழ்க்கைனு நிம்மதியா நீ இருக்க. பெருசா இல்லானாலும், பிரச்சனை இல்லாம தானே இருக்குற?

”ஆமாம்” என்பதற்கு அறிகுறியாய் தலையை ஆட்டினேன்.

”அதனால தான் உனக்கு இந்த வேண்டாத நெனப்பு எல்லாம் வருது. அப்படி எதுவும் இல்லாம, பிரச்சனை தொரத்துர வாழ்க்கை இருந்திருந்தா இதப்பத்தி எல்லாம் யோசிக்க மாட்ட”

”இருக்கலாம்”

யோசித்தவாறே ”ஆனா ஒன்னு, உன் பயத்துக்கு ஆசை தான் காரணம்” என்றான்.

”ஆசையா? அதுக்கும், இதுக்கும் என்ன சம்மந்தம்” என குழப்பத்தோடு கேட்டேன்.

"எப்படி சொல்லுறதுனு எனக்குத் தெரியல, ஏதோ எனக்கு தோணுனதா சொன்னேன். எதப் பத்தியும் யோசிக்காமா போய் நல்லா தூங்கு. காலையில எல்லா சரியாயிடும்” என்றபடி வண்டியைக் கிளப்பினான். இருளிலே கரைந்து மறைந்தான். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். என் எண்ணங்களும் அங்கேயே நின்றிருந்தது.

வெள்ளமாய் வெளிச்சங்கள் கடந்து செல்கின்றன. மேற்கு கிழக்கு சாலையின் குறுக்கே, வடக்கு தெற்காய் மேம்பாலம் இருந்தது. சாலையிலும், மேம்பாலத்திலும் வாகனங்கள் வேகவேகமாக கடந்து சென்றன. சிக்னலில் மஞ்சள் நிறமும், சிவப்பு நிறமும் மாறி மாறி எரிந்தது. சாலையில் இருந்து பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைவதும், வெளியேறுவதுமாய் இருந்தன. அந்த விடியற்காலையிலும் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. வானில் இருளைக் கிழித்து வெளிச்சம் மெல்ல படர்ந்து கொண்டிருந்தது.

’மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆசை கனவுகளை தூரத்தியோ, துன்பங்கள் சோகங்களை மறந்தோ, எதற்காகவோ எங்கோ, எதையோ தேடி, அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படியே நிற்பது போல இருந்தது’

அலுவலகத்திற்கு 3 நாட்கள் விடுமுறை சொல்லி விட்டு, போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தேன்.

‘எங்கேனும் தொலைந்திட வேண்டும், சுயம் துறந்து அலைந்திட வேண்டும்’ என்ற எண்ணம் இழுத்து வந்திருந்தது.

பேருந்து நிலைய வாயிலில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த ஒரு கர்நாடக பேருந்து நின்றிருந்தது.

”மைசூரு, மைசூரு” என நடத்துநர் ஆட்களைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த கூட்டம் இறங்கிய பின்னர், பத்திருபது பேர் பேருந்தில் ஏறினர். பேருந்து கிளம்பத் தயாராகி விட்டதற்கு அறிகுறியாய், மெல்ல நகர்ந்து வந்தது. அதில் ஓடிச் சென்று ஏறிக் கொண்டேன்.

”டிக்கெட், டிக்கெட்” என்றபடி நடத்துநர் என்னிடம் வந்தார்.

“எங்க போகணும்?”

“பஸ் எங்க போகுது?”

மைசூரு போகுது, நீ எங்க போற? என சற்று கோபமாக கேட்டான்

”மைசூருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” என பணத்தைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டேன்.

ஜன்னல் வழியாக சாலைகளையும், கடந்து செல்லும் ஊர்களையும் அமைதியாகப் பார்த்தபடி வந்தேன். மனிதர்களும், மரங்களும், வீடுகளும், நகரங்களும், காடுகளும் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன. மெளனம் மனதில் கூடு கட்டியது.

“இந்தப் பயணம் என் பயத்தை நீக்குமா?, நான் தேடும் பதில் கிடைக்குமா? என நிச்சயம் தெரியாது. ஆனா என் வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றத்தைத் தருமென” நம்பிக்கை வந்தது. பண்ணாரியை தாண்டிய பேருந்து, திம்பம் மலைப்பாதையில் வளைந்து நெளிந்து ஏறியது. அதிகாலை பொழுதின் இளமஞ்சள் வெயில் மரங்களுக்கு ஊடாக வெளிச்சக் கீற்றுகளை வீசியது. அந்த வெளிச்சம் பட்ட சாலைகள் மின்னியது. பேருந்து சத்தத்தில் ’கீச்… கீச்… கீச்…” என பறவைகள் சத்தமிட்டபடி பறந்தன. கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்துகள் திரும்பும் போது, காடுகள் பசுமை வண்ணம் போர்த்தியிருப்பது தெரிந்தது. ஜன்னலை லேசாகத் திறந்தேன். தென்றல் காற்று முகத்தில் அடித்தது. ஜில்லென குளிர் உடலை தாக்கியது.

”நிற்பதுவே, நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற
மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த
பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப்
பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும்
பொய்தானோ?”

என்றோ படித்த பாரதியின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. ”நானும் ஓர் கனவோ?” திரும்பத் திரும்ப கேட்டது. தொடர்ந்து பயமும், நடுக்கமும் தொற்றிக் கொண்டது. ’அறிவியல் கடவுள் தேவைகளை சுருக்கினாலும், மரணம் குறித்தான பயம் கடவுளின் இருப்பைத் தக்க வைக்கிறது’ எனத் தோன்றியது..

’குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதும், குழம்பிய மனதில் விடை தேடுவதும் ஒன்று தானோ?’. யோசித்து, யோசித்து தலை வலித்ததே மிச்சம். எந்த பதிலும், ஆறுதலும் கிடைக்கவில்லை. ‘மைசூரு போனதும், கோயமுத்தூருக்குப் பஸ் பிடிச்சு திரும்பப் போயிடலாம்’ என முடிவெடுத்தேன். கண்கள் எரியத் துவங்கின. ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி வந்த நான், ஒரு கட்டத்தில் தூங்கிப் போனேன். எப்போது தூங்கினேன் என்பது புலப்படவில்லை. எப்படியும் அரை மணி நேரத்திற்கும் மேல் கடந்திருக்கும்.

’சடார்’ என அடித்த பிரேக்கில் சீட்டில் இருந்து உந்தப்பட்டு, முன்னால் இருந்த கம்பியில் மோதி தூக்கம் கலைந்தது. அப்போது தான் தூங்கிப் போனதே தெரிந்தது. தூக்கம் கலைந்ததும் பிரமை பிடித்தது போல இருந்தது. எனக்கு என்ன ஆனது?

நெற்றிப் பொட்டை விரலால் இழுத்தபடி யோசித்தேன். ”எப்படி தூங்கினேன்?, எப்போது தூங்கினேன்?”

”தூங்கியது ஏன் எனக்கு நினைவும் இல்லை, தெரியவும் இல்லை. தூக்கம் வந்ததும் தெரியவில்லை, எப்படி என்னானது?” வெகு நேரம் யோசித்தேன்.

”மரணமும் இப்படித் தானோ?” திடீரென ஒரு கேள்வி மனதில் எழுந்தது. அந்த ஒரு கேள்வி அடுத்தடுத்து பல பதில்களைத் தந்தது.

“தூக்கம் வருவது எப்படி தெரியாதோ, அப்படி தான் மரணமும்… தூங்குவதும், விழிப்பதும் இயல்பானதே. அது தானே வாழ்க்கை?”

இந்த எண்ணங்களோடு அருண் சொன்ன 'ஆசை'யும் சேர்ந்து கொண்டது. ”நான் என்ற ஆசை தான் பயம் தந்திருக்கும்” எனத் தெரிந்தது.

”தூக்கத்திற்காக பயந்தோம்? அது வரும்போது வந்து தொலையட்டுமே”

”நானென்ற ஆசை துறந்தால் பயம் விலகி நிற்கும்”

”உறங்குவது போலும் சாக்காடு(சாவு), உறங்கி விழித்தால் பிறப்பு” எனப் புலப்பட்டது.

பேருந்து மைசூரை அடைந்தது. பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்தேன். பேருந்துகள் ஆட்களை இறக்கி, ஏற்றி சென்று கொண்டிருந்தன. சில அடி தூரத்தில் கோயமுத்தூர் பேருந்து நின்றிருந்தது. ”கோயமுத்தூரு, கோயமுத்தூரு” என நடத்துநர் கத்தி ஆட்களை அழைத்தான். ஊருக்குச் செல்ல மனமின்றி என்னைக் கடந்து சென்ற, ’கூர்க், மடிக்கேரி’ என ஆங்கிலத்தில் போர்டு போட்டிருந்த கர்நாடகா பேருந்தில் ஓடிச்சென்று ஏறி அமர்ந்தேன். ”உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழித்தால் பிறப்பு” மீண்டும் நினைவுக்கு வந்தது. அது நிம்மதியைத் தந்தது. அது போதுமானதாகவும் இருந்தது. அதனை பகுத்தறியும் மனதும் ஏற்று கொண்டது.

பேருந்து முன்னே சென்று கொண்டிருந்தது. பயம் பின்னால் தொலைந்து கொண்டிருந்தது.

- பிரசாந்த்.வே

Pin It