சிறுக சிறுக வாரம் முழுக்க சேர்த்து வைத்த காசுகளோடு நுங்குகாரனுக்கு காத்திருந்த பால்ய நானாய் இன்று இம்மழைக்கு காத்திருக்கிறேன்.

எல்லா விதிப்படியும் இன்று இம்மழை வந்தே தீரும் என்பதில் எனக்கும் ஐயம் என்பதையெல்லாம் தாண்டி அத்தனை நம்பிக்கை இருந்தது. வேறு வழி இல்லாமல் போகையில் நம்பித்தானே ஆக வேண்டும்.

நான் வீட்டை நோக்கி ஓடத் துவங்குகிறேன்.

என் கண்களில்... வறண்ட நிலங்களின் வெடிப்புகள் மீண்டும் மீண்டும் கீறலிட நா வறண்ட தாகம் நான் வறளச் செய்தது.

மூன்று வார கால தவம் இது.

மேற்கே அந்த ஆற்றுத் தடத்தின் காலடியில் அமர்ந்து கண்கள் வெறிக்க கண்ட போது உள்ளம் கொதித்த கொப்புளங்களில் தாள முடியாத ஏக்கம் கொண்டேன். நொய்யல் ஓரம் சென்று ஆவலாய்த் தேடினேன். வழித்தடம் பயணிக்கும் மாய நீரென கானல் நீர் கண்களில் சுரக்கக் கண்டேன். யார் யாரோ சொன்னார்கள் என கிழக்கில் ஓடும் நீருக்குள் நின்று பார்த்தேன். அப்பப்பா நீருக்கு அத்தனை நிறங்களா.....?

சாய நிறம்.....கழிவு நிறம்......சாக்கடை நிறம்... கருஞ்சாந்து நிறம்....கோழி இறகு நிறம்... சில மண்டையோட்டு நிறம்... நுரை நுரையாய் காற்று சிதறல் நிறம்.....காற்று கதற மூச்சு அடக்கினேன். கண்கள் கதற வீடு திரும்பினேன்.

ஊறி சுற்றி ஓடும் நதியெல்லாம் விதி மாற்றி போனது. ஏறி குளமென்று சிலது இருந்தாலும்......தேங்கி நிற்க எனக்கு ஒப்பவில்லை. ஆகாய தாமரைகள் அடுக்கு மொழி சிக்கல்களென ஆங்காங்கே வலை பின்னியது.

இதோ முதல் துளி விழுந்து விட்டது. தேன் சொட்டும் சுவை அது. முகம் மறந்த யோசனையில் மூன்று வார கவலை இன்று மெல்ல களையும் என்பது வேதமென இருக்கும் என் பாட்டி சொன்ன கதைகளின் நுட்பமென துளிர்த்தது.

நான் காத்திருந்தேன்.......

கண்கட்டி வித்தைக்காரனைப் போல வானம் பார்த்தே காத்திருந்தேன். கருணை கொண்ட பெருவெளி சொட்டும் மழையே இதற்கு தீர்வென்று நம்பினேன். நம்பிக்கை ஜெயித்தது. வந்தே விட்டது கோடை மழை. ம்ஹும்.. கொடை மழை. என் செயல்பாடுகள் யாருக்கும் பிடிக்கவில்லைதான். அதற்காக ஊர் அறியா கடலிலும்.... நீர் அறியா பேரூரிலும் உறவாட சம்மதம் இல்லை. படித்துறையில் கடைசிப்படியில் சுருண்டு சாகும் புழுவுக்கு மாண்டும் காயும் சாபம் எப்படி நிகழ்ந்தது..?!

வீடடைகையில் தொப்பலாக தெப்பமாகி இருந்தேன். கண்களில் மழை மின்ன....ஓடி சென்று என் அறையில் வைத்திருந்த என் பாட்டியின் அஸ்தியை கலசத்தோடு எடுத்து வந்தேன். ஒரு பட்டாம் பூச்சியின் நினைவுகளோடு உள்ளிருக்கும் என் பாட்டியின் சாம்பலை எடுத்து என் வாசலில் மழையோடு கரைத்தேன். பாட்டி வாழ்ந்த நடந்த கிடந்த பேசிய பார்த்த இவ்வாசலின் பெருவெளியில் மழையோடு மழையாக அவள் கூறும் கதையோடு கதையாக கரைவதில் பெரு மகிழ்வு எனக்கு. ஊர் கிடக்கட்டும்.... ஊர். அது வசதிக்கு தகுந்தாற் போல வாழும்.

கரைய கரைய காகம் ஒன்று வீட்டு முற்றத்தில் மழையை கொண்டாடிக் கொண்டிருந்தது.

- கவிஜி

Pin It