அவர்கள் தப்பி வந்துவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். தங்கள் நிலை மறந்து, கடமை துறந்து, கால வெளிகளைக் கடந்து வந்துவிட்ட இருவரைப் பற்றி இப்படியல்லாமல் வேறெப்படிச் சொல்ல முடியும்? அவர்களுக்குள்ளான வேறுபாடுகள் அற்றுப் போய் எழுகின்ற நேசத்துக்காக இருவரும் பேருவகை கொண்டனர்.

அந்த வனாந்திரத்தையும் நதியையும் நதியின் இரண்டு கரைகளிலும் எதிரெதிரே நின்று கொண்டிருந்த இரண்டு நடுகற்களையும் அவர்களையும் தவிர அவ்வுலகில் வேறெதுவும் இல்லை. நதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கர்ணனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் பீஷ்மர். அவனது ஆழ்ந்த சிந்தனையைக் கலைக்க முற்பட்டவராய், “என்ன யோசிக்கிறாய் கர்ணா?” என்றார் அவர்.

பிதாமகரின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தான் கர்ணன். என்றாலும் பிறரது போலிப் பணிவுக்கும் இவன் கொண்ட மரியாதைக்கும் வேறுபாடு இருப்பதாகவே கருதினான். பிதாமகரது கேள்விக்கு அவர் பக்கம் திரும்பி மெல்லிய புன்னகையுடன் பதில் சொல்லலானான்.

“ஜென் கதையொன்றைக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்படித்தான் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது. தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. நீந்திக் கடக்க முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அக்கரையில் துறவி ஒருவர் நிற்பதைப் பார்க்கிறான் இளைஞன். அவரிடம் “அக்கரைக்கு நான் வரவேண்டும். எனக்கு வழி சொல்லுங்கள்” என்று கேட்கிறான்”

“துறவி சொன்ன வழி யாது?”

”அதற்குத் துறவி “தம்பி, நீ அக்கரையில் தானே நின்று கொண்டிருக்கிறாய்?” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாராம்”

“ஹா ஹா ஹா. இந்தக் கதையின் மூலம் நீ கூற விரும்புவது என்ன?”

”நமக்கு நடுவிலிருக்கும் நதியைக் குறித்து யோசிக்கிறேன்”

“இப்போது நமக்கு நடுவில் நெருப்புதான் இருக்கிறது” வெளிச்சத்துக்கும் குளிர் காய்வதற்காகவும் அவர்கள் வைத்த நெருப்பை பீஷ்மர் குறிப்பிடவில்லை என்பது கர்ணனுக்குத் தெரியும்.

கர்ணனது கண்கள் பிரகாசமாயிருந்தது. அவன் தனக்குப் பிடித்த மாதிரியான நீல வர்ணத்தில் சிறு கட்டம் போட்ட சட்டையும் கருப்புப் பேண்ட்டும் அணிந்திருந்தான். பீஷ்மர் கருப்பு நிற டீஷர்ட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டையும் அணிந்திருந்தார். மெலிந்த தேகத்தில் உடலெங்கும் பரவிய வெள்ளை ரோமத்தினால் அவர் ஒரு கிழட்டுச் சிங்கம் போல் அல்லாமல் பிறந்து சில தினங்களே ஆன சிங்கக் குட்டி போலத் தோற்றம் கொண்டிருந்தார். இடுங்கி ஒடுங்கிப் போயிருந்த அவரது கண்கள் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை என்பதில் கர்ணன் ஏமாற்றமடைந்திருந்தான் என்றுதான் கூற வேண்டும். அவனது பார்வையின் ஊடுருவலை பீஷ்மர் மிகச் சாமர்த்தியமாக எதிர் கொள்கிறார் என்பதில் அவன் சோர்வடைந்திருந்தான்.

“நமக்கு நடுவில் இருக்கும் எது குறித்தும் நான் சிந்திப்பதில்லை கர்ணா. ஏனென்றால் அதற்கான எந்தக் காரணமும் எனக்கு வாய்த்ததில்லை” என்றவாறே சிகரெட்டை எடுத்த பிதாமகருக்கு வெம்மை தந்து கொண்டிருந்த தீயின் சுள்ளியை எடுத்து பற்ற வைத்துக் கொடுத்தான் அவன்.

நன்றிப் புன்னைகையை உதிர்த்தவாறே ஆழ்ந்த இழுப்பொன்றை வெளித்தள்ளி விட்டு அவனை நோக்கி ஒரு சிகரெட்டை நீட்டினார் பீஷ்மர்.

”நான் புகைப்பதில்லை” என்றான்.

”ஓ அப்படியா?”

“ஆம். உங்கள் முன்னால்”

“நெவர் மைண்ட்” அவர் இன்னும் சிகரெட்டை நீட்டிய வண்ணம் இருப்பதைக் கண்டு அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டான்.

“கர்ணா. நீ காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்” அவனுடனான உரையாடலுக்குத் தன்னை தயார் செய்து கொண்டிருந்தார் பீஷ்மர்.

அவன் அவரை உற்று நோக்கினான். அவரது கண்கள் ‘முடிந்தால் வெல்’ என்று சவால் விட்டுக் கொண்டிருந்தது.

“அது ஒருவழிப் பாதை”

“அப்படியா?”

“ஆம் பிதாமகரே. முன்னகரும் காலத்தில் பின் நோக்கிப் பயணிக்க இயலாது. அது பலவாறாக வாழ்க்கையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் காலத்தைக் கணிக்கும் கருவிகளை நான் நம்புவதில்லை”

“ஏன்?“

“பிகாஸ் ஐ டோண்ட் பிலீவ் இன் மை பிஸிகல் ஏஜ். எனது உண்மை வயதை விட பதினைந்து வருடங்கள் குறைத்துக் காட்டுவதாகவே உணர்கிறேன்”

“வெறும் பதினைந்து வருடங்கள் தானா?” என்று கேட்ட பீஷ்மரின் குரலில் பரிகாசம் இல்லை.

“கர்ணா. உனது முதிர்ச்சி அப்படி. அது வியப்பானதாகும். உன்னிடம் இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இது சாதாரணமானது அல்ல. நீ முரண்களின் மொத்த உருவம். வெறுப்புக்குரிய சிறுபுத்தி படைத்தவன் நீ என்று தோன்றும் சமயங்களில் உன் ஒரு வாக்கியமே உன் முதிர்ச்சியைக் காட்டும். அந்தப் பொழுதுகளில் உன்னை மனதுக்குள் பாராட்டியிருக்கிறேன் ”

“நன்றி பிதாமகரே”

கர்ணன் ஒரு கணப்பொழுதில் அவர் கண்களில் அது மின்னி மறைந்ததைப் பார்த்தான். அது உண்மைதானா என்ற சந்தேகம் அவனை பீடித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது. அவனைப் புரிந்து கொண்ட பீஷ்மர் ‘என் கண்களும் ஒரு வழிப்பாதையே’ என்றவாறாக அவனது கண்களை எதிர்கொண்டிருந்தார். கர்ணனோ விடுவதாக இல்லை.

“இது உங்களுக்குப் புரியாது பிதாமகரே. சின்னச் சின்ன பாராட்டுதலுக்காக, சின்னச் சின்ன அங்கீகாரத்துக்காக, மரியாதைக்காக, அன்புக்காக ஏங்கித் தவிப்பதன் வேதனை உங்களுக்குப் புரியாது.”

”என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என்றா நினைக்கிறாய்? நீ என்னை அறிந்தவன் என்றல்லவா நான் நினைத்தேன். உண்மையில் உனக்கு எதுவும் செய்ய இயலாதது குறித்து எனக்கு வருத்தமே. அதற்காக நீ என்னை மன்னிப்பாய் என்றே நினைக்கிறேன்”

கண்கள் மூடிய நிலையில் ஒரு கையில் சிகரெட்டுடனும் மறு கையில் தாடியை நீவியபடியும் அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் கர்ணனுக்குள் ஆழமாகப் பதிந்தது. அவர் கண்களைத் திறந்திருந்தால் அவன் ‘அதை’ப் பார்த்திருப்பான்.

”கர்ணா” கண்கள் மூடிய நிலையிலேயே அவனை அழைத்தார்.

“சொல்லுங்கள் பிதாமகரே”

“கர்ணா!”

அவரது குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருந்த்தை உணர்ந்தான். அதை விரும்பாதவனாக பேச்சினை மாற்றி “மரணம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்றான்.

“இதில் எண்ணுவதற்கு என்ன இருக்கிறது? மரணத்தை எந்த சலசலப்புமின்றி என்னால் எதிர் கொள்ள முடியும். அதுகுறித்து எப்போதும் என்னுள் அச்சம் எழுந்தது இல்லை”

“ஓ...”

“மரணம் குறித்த உனது கருத்து யாது?”

இப்போது அவரது கண்கள் திறந்திருந்தது.

“என்னைப் பொருத்தமட்டில் அது ஒரு பெருவரம். அதை நான் மகிழ்வுடன் எதிர் கொள்வேன். இவ்வாழ்க்கையின் பேரிலக்கு மரணம்தானே. அதுதானே அல்ட்டிமேட். அண்ட் இட்ஸ் வெரி பொயட்டிக் டூ” என்றான்.

பீஷ்மரது மூளை இன்னொரு சிகரெட்டை நாடியது.

 “உங்களிடம் ஒன்று கூற வேண்டும். என்னைவிட பல அகவைகள் மூத்தவராயிருந்தாலும் உங்களை என் தந்தையாகவே கருதுகிறேன்”

’கர்ணா! என் அன்பு மகனே’ அவரது தொண்டை வரைக்கும் வந்த வார்த்தைகளை பிரயத்தனத்துடன் உள்தள்ளினார்.

”பட் ஐ மிஸ்ட் எ குட் பிரண்ட்” என்று சொன்ன பீஷ்மரது கண்களில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்தான் கர்ணன்.

அவரது கண்கள் ஒளி கொண்டிருந்தது. அதன் முழு வீரியத்தையும் கர்ணன் அப்போது உணர்ந்தான். பேரன்பைத் தவிர அந்தப் பார்வையில் வேறெதும் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. கர்ணனுக்காக பல யுகங்களாக பத்திரப்படுத்தியிருந்த அன்பினை எதிர்கொள்ள இயலாதவனாக அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டு,

“நானும்தான்” என்றான்.

இந்தப் பேரன்புக்காகத்தான் கர்ணனும் பல யுகங்களாகக் காத்திருந்தான்.

“மகனே கர்ணா” முன்னொரு காலத்தில் இது போன்றதொரு நதிக்கரையிலே பெண்ணொருத்தி வெடித்து அழுததை நினைத்துக் கொண்டான் அவன்.

 அன்பின் வெம்மையைத் தாங்கும் திறனில்லாத அவர்கள் இருவரும் அதன் கோர உதடுகளால் சுட்டெரிக்கப்பட்டு இன்பகரமான மரணத்தை அடைந்தார்கள்.

இவ்வாறாக கற்கள் சாம்பலானது மாதிரியான புனைவுகள் புராணத்தில் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தன என்பது சரிதம்.

- ஹரி ராஜா

Pin It