மே மாதத்தின் உக்கிரமான வெயில், காலை பதினொரு மணிக்கே சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அனல் பறந்து கொண்டிருந்த சாலையில், எதிரே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து வருவதுபோல நெளிசல்களுடன் வந்து, தம்மைக் கடப்பதை வேடிக்கை பார்த்தபடி, குளிரூட்டப்பட்ட காரின் முன் இருக்கையில், பவித்ராவும், சீனுவும் அமர்ந்து கொண்டிருந்தனர்.

couple 363“அப்பா.. பொள்ளாச்சிக்கு இன்னும் 12 கி. மீ.. ன்னு போட்டிருக்கு.. , அங்க போய் எனக்கு கூல்டிரிங்ஸ் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கே.. ஞாபகம் வெச்சுக்கோ.. !” காரினை ஓட்டிக் கொண்டிருந்த வேல்முருகனை, சீனுவின் குரல் உசுப்பியது.

பின்பாட்டு போல.. “எனக்கும் வேணும்.. ” மகள் பவித்ராவின் குரல்.

சாலையிலிருந்து கண்களை விலக்கி, இருவரையும் பார்த்த வேல்முருகன், “கண்டிப்பா வாங்கித் தர்றேன். ஆனா.. கூல் டிரிங்ஸ் வேண்டாம், இந்த ஊர்லே இளநிதான் நல்லா இருக்கும். எல்லாரும் அதைக் குடிப்போம்.. என்ன.. ?”

“இளநி ஒண்ணும் வேணாம்.. எனக்கு கூல்டிரிங்ஸ்தான் வேணும்.. ” சீனுவின் முகத்தைச்சுழித்துக் கொண்டு, செயற்கைஅழுகையுடனான அவனது குரலில், பிடிவாதம் தெரிந்தது.

அவனிடத்தில், மீண்டும் ஏதோ சொல்ல வேல்முருகன் எத்தனித்தபோது, பின் இருக்கையிலிருந்து, இந்துமதி சீறினாள்.

“சீனு.. ஒரு தடவை சொன்னா கேக்கமாட்டே.. , அதவும் அப்பா டிரைவிங் பண்ணும்போது, அவர்கிட்டே சும்மா, சும்மா பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல.. !”

“இல்லம்மா.. கூல் டிரிங்ஸ் வாங்கித்தர்றேன்னு அப்பாதான் முதல்லே சொன்னாரு.. அதைத்தான்மா நான்.. ” அவன் வார்த்தைகளை முடிப்பதற்குள், “ஷட்டப்.. , ” ஓங்கிய குரலில் அவனை அடக்கினாள் இந்துமதி. சீனு, தனக்கு சாதகமாய் பவித்ராவும் ஏதாவது பேசினால் நன்றாயிருக்குமே.. ’ என்று எண்ணமிட்டபடி அவளைப் பார்த்தான். பவித்ராவோ, அவனை நட்டாற்றில் விடும்விதமாக, வெகு சீரியஸாக சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேல்முருகன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

முள்ளுப்பாடி அருகில் வரும்போதே, சாலையின் இருமருங்கிலும் இருந்த புளியமரங்களின் நிழலில் இளநீர்க் கடைகளும், கொய்யாப் பழக் கடைகளும் இருந்தன. வசதியாய் இடமிருந்த ஒரு கடையின் முன்பாக தனது காரினை நிறுத்தினான் வேல்முருகன். எல்லோரும் இறங்கினர்.

இளநீர்க் கடைகளை விட, பிரமிட்கள் போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், பசுமையும், வெளிர் மஞ்சளுமாய் இருந்த கொய்யாப் பழங்கள், இப்போது சீனுவின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. மெதுவாய் பவித்ராவிடம், கிசுகிசுப்பான குரலில், “கொய்யாப்பழம் சூப்பரா இருக்கில்லே.. அம்மாகிட்டே கேக்கலாமா.. ?”

“ஊம்.. கேக்கலாம்.. நீயே கேளு.. ”

குழந்தைகளின் பேச்சு காதில் விழுந்தாலும், இந்துமதி அதனைக் கேட்காதவள் போல, “இப்படி வாங்க.. ” என்று கூறியபடியே, இளநீர் விற்கும் கடைக்கு அவர்களைத் தள்ளிச் சென்றாள்.

சீவிய இளநீரை, குழந்தைகளுக்கும், இந்தமதிக்கும் ஆளுக்கொன்றாய் ஸ்ட்ரா போட்டுக் கொடுத்த கடைக்காரர், “உங்களுக்கு ஸ்ட்ரா வேணுமா சார்.. ?”

வேணாம்.. அப்படியே கொடுங்க.. என்று வாங்கிக் கொண்ட வேல்முருகன், அண்ணாந்து குடிக்கத் துவங்கினான். ‘அப்பா எப்படி துளியும் சிந்தாமல் அப்படியே குடிக்கிறார்.. ’ என குழந்தைகள் இருவரும் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

காரில் ஏறுமுன், “வாங்க.. ” என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டுபோய், சில கொய்யாப் பழங்களையும் பேரம் பேசி வாங்கிக் கொண்டாள் இந்துமதி. நான்கு பெரிய பழங்களை மட்டும் துண்டுகளாக அறுத்து வாங்கி, தின்று கொண்டே வந்து காரில் ஏறினர். கார் புறப்பட்டது.

சாலையின் ஓரத்திலிருந்த மைல்கல், பொள்ளாச்சிக்கு இன்னும் ஐந்து கி. மீ இருப்பதாகக் காட்டியது. மிதமான வேகத்தில் கார் போய்க் கொண்டிருந்தது. திடீரென வேல்முருகன் கத்தினான், “இந்து.. அங்கே லெப்ட் சைடுல பாரு.. ”

துணுக்குற்றவளாய் இந்துமதியும், குழந்தைகளும் குறிப்பிட்ட இடத்தைப் பார்க்க, சாலையின் ஓரத்தில் ஒரு கிழவி..

நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தாள். கால்கள் பின்னிப் பின்னி விலகின. அவளது அக்குளில் வைத்திருந்த கந்தல் துணிமூட்டையொன்று கீழேவிழுந்த விநாடியிலிருந்து, ஏதோ பிடிமானம் தேடிக் கொண்டிருப்பது போல, கைகள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவள் இந்த விநாடியில் கீழே விழுந்துவிடுவாள்.. என்று அவர்கள் நினைக்க.. , நினைக்க.. , கிழவி அப்படியே தரையில் சரிந்தாள். அதே விநாடியில், வேல்முருகனும் பதறிப்போய் முப்பது அடி தூரத்திலேயே வண்டியை நிறுத்தி விட்டான்.

நல்லவேளை.. அவள் வலப்புறமாக சாலையில் விழுந்திருந்தால், தார்ச்சாலையின் கடுமை, அவள் மண்டையைப் பிளந்திருக்கும். இடப்புறமாக, தரையோடு இருந்த புதர்ச் செடியின் மீது விழுந்ததால் ஆபத்தில்லை.

அவனுக்கு பின், சாலையில் வந்த வாகனங்கள், கிழவியைக் கடந்து சென்றபோதும், எதுவும் கிழவியின் அருகே நிற்கவில்லை. சொல்லப் போனால், அப்படி ஒரு மனுஷி, தரையில் விழுந்து கிடக்கிறாள் என்று, வாகன ஓட்டிகள் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. வந்த வேகம் குறையாமல் பறந்து கொண்டிருந்தன.

வேல்முருகனுக்கும் அப்படிப் போக மனமில்லை. அதே சமயம், “ஏங்க.. என்னாச்சுன்னு போய்ப் பாருங்க.. ” இந்துமதியின் குரலும் அவனை விரட்டியது.

காரிலிருந்து இறங்கிய வேல்முருகன் கிழவியிடம் ஓடினான். குழந்தைகளை இறங்கவேண்டாம் என்று சொல்லி விட்டு, தண்ணீர் குப்பியுடன் இந்துமதியும் தொடர்ந்தாள்.

கிழவி, லேசாக வாயைப் பிளந்தபடி மூர்ச்சித்துக் கிடந்தாள். வியர்வையின் ஈரத்தோடு, மாநிறமாய் இருந்த அவளது முகத்தில், பார்த்தீனியச் செடிகள் உராய்ந்ததில் சிவப்பாய் சில வரிகள், அவளது முகச் சுருக்கங்களோடு இழைந்து கிடந்தன. ரவிக்கைகளற்ற தோள்பட்டையிலும், தோல் சுருங்கிக் கிடந்த கைகளிலும் அப்படியே.

அம்மா.. இங்க பாருங்க.. உடம்புக்கு என்ன பண்ணுது.. ? கொஞ்சம் கண்ணு முழிங்க.. !” வேல்முருகனின் பதட்டமான குரல், கிழவியை சற்றும் உசுப்பவில்லை. கண்களும் திறக்கவில்லை. இப்போது என்ன செய்வது. ? கேள்வியுடன், அவன் இந்துமதியிடம் திரும்பினான்.

குப்பியிலிருந்து, தனது கைகளில் வடித்த தண்ணீரை மெதுவாக, அவள் தெளிக்க.. , கிழவியின் முகத்தில் சிறியதாய் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ‘அப்பா.. உயிருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை.. ’ இருவரிடமிருந்தும் ஆறுதலாய் ஒரு பெருமூச்சு. !

கிழவி இப்போது லேசாய் ஏதோ முணங்குவது போலிருந்தது. “இந்து.. கொஞ்சம் தண்ணி குடிக்க வை.. , ” என்றபடியே குத்துக் காலிட்டு, அமர்ந்த வேல்முருகன், கிழவியின் தலையை லேசாகத் தூக்கி, தனது வலது தொடையின் மீது தாங்கிக் கொள்ள, பசியோ.. தாகமோ.. இந்து புகட்டிய தண்ணீரை எதிர்ப்பின்றி, கிழவி வேகமாகக் குடித்தாள். இப்போது மிக பலவீனமான ஒரு ஏப்பம் அவளிடமிருந்து வெளிப்பட்டது.

லேசாக கண்களைத் திறந்த கிழவி, சுட்டுக் கொண்டிருந்த வெயிலின் உக்கிரம் தாளாமல், மீண்டும் கண்களை சுருக்க.. இந்துமதி அவள் முகத்திற்கு நிழல் விழும்வகையில் வந்து நின்று கொண்டாள். “அம்மா.. இங்க பாருங்க.. நீங்க எங்க போகணும்.. ?” என்று கேட்ட வேல்முருகனின் குரலைத் தொடர்ந்து, அவள் எழுந்திருக்க முனைவது உடலசைவிலிருந்து தெரிந்தது. கைத்தாங்கலாக அவளை எழுப்பி நிற்க வைத்தான் வேல்முருகன்.

கிழவியின் முகம் ஓரளவு தெளிவடைந்திருந்தது.

சராசரி உயரமிருந்த கிழவிக்கு ஏறக்குறைய எழுபது வயதிருக்கலாம். வயதுக்காலத்தில் நல்ல திடகாத்திரமானவளாய் இருந்திருக்க வேண்டும். வயதின் முதிர்வால், திருத்தமான முகவெட்டும், உடற்கட்டும், இப்போது சற்றே தளர்ந்திருப்பதாகத் தோன்றியது. அவள் கட்டியிருந்த வெள்ளைச் சேலை, பழையதாகி, பழுப்பேறியிருந்தாலும், அதில் அழுக்கெதுவும் இல்லை.

வேல்முருகன் கேட்ட கேள்விக்கு, கிழவி இன்னும் பதில் சொல்லவில்லை. அவள் சற்றே ஆசுவாசப்படட்டும் என்று நினைத்தபடி, கைத்தாங்கலாக, காருக்கு அழைத்துவந்து, இந்துமதி உதவி செய்ய, பின் இருக்கையில் ஏற்றிவிட்டான் வேல்முருகன்.

இப்போது என்ன செய்வது.. ? கேள்வியுடன், அவன் இந்துவைப் பார்க்க, “பொள்ளாச்சியில் இறக்கி விட்டுவிடலாம்” இந்துமதி சொல்ல, அவன் வண்டியைக் கிளப்பினான். ‘இந்து சொல்வது சரிதான். தாங்கள் போய்க் கொண்டிருக்கும் திசையில்தான் கிழவியும், போய்க் கொண்டிருந்தாள், பொள்ளாச்சிக்கு முன்னதாக வேறு எதுவும் கிராமங்கள் இல்லை’.

காரினுள் நிலவிய குளிர்ச்சி, கிழவிக்கு மிகுந்த ஆசுவாசத்தையும், தெம்பையும் கொடுத்திருக்க வேண்டும். இப்போது சற்றே பிரகாசமடைந்திருந்த முகத்திலிருந்து ஒரு நைந்த புன்னகை இந்துமதியை நோக்கி வெளிப்பட்டது. வண்டியின் உள்கூட்டினைச் சுற்றிப் பார்வையிட்ட கிழவி, முன்சீட்டிலிருந்து திரும்பி, தன்னையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளையும், அவர்களின் கைகளிலிருந்த கொய்யாப் பழத்துண்டுகளையும் பார்த்துவிட்டு, மீண்டும் இந்துமதியிடமே பார்வையைத் திருப்ப, இந்துமதி அருகிலிருந்த பையிலிருந்து நறுக்கப்பட்ட பழத்துண்டு களை எடுத்து நீட்டினாள்.

மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்ட கிழவி, அவற்றை உண்ணத் தொடங்கினாள். பலநாள் பட்டினியோ.. ?

பொள்ளாச்சி நெருங்கிக் கொண்டிருந்தது. “ஏம்மா.. உங்க வீடு எங்க இருக்கு.. ? பொள்ளாச்சியிலே இறங்கிக்கிறீங்களா.. ?” இந்துமதியின் கேள்வியை மறுத்து, கிழவி வேகமாகத் தலையாட்டினாள். “நீங்க எங்க போறீங்க.. ?”

‘இதென்ன கிழவி எதிர்க் கேள்வி கேட்கிறாள். ஏதாவது மனநிலை பிறழ்ந்தவளா.. ? வம்பை விலை கொடுத்து வாங்கியது போலாகிவிடுமா.. ?’இந்துமதிக்குள் கேள்விகள் குறுகுறுத்தன.

இந்துமதியின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிழவியின் தீர்க்கமான பார்வை, அவள் தெளிவாகத்தான் இருக்கிறாள் என்று நம்பிக்கையூட்டியது.

“நாங்க.. பொள்ளாச்சியைத் தாண்டி, அங்கலக்குறிச்சியில் இருக்குற அம்மன் கோவிலுக்குப் போறோம்”

கிழவியின் முகத்தில் மலர்ச்சியும், கலவரமுமாக கலவையான உணர்ச்சிகள் தோன்றி, மறைந்தது. “என்னையத் தப்பா நெனக்காதீங்கம்மா.. தயவு செஞ்சு என்னையும் அங்கியே இறக்கிவுட்டுடுங்க.. , அதுதான் என்னோட சொந்த ஊரு.. ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான் அங்க போறேன். !”என்ற படியே பின்னோக்கி சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டாள் கிழவி.

ஆழியாறு செல்லும் பிரதான சாலையிலிருந்து, கிழக்குப் பக்கமாகப் பிரிந்து செல்ல, வழிகாட்டிக் கொண்டிருந்தது கைகாட்டி. வாகனத்தின் வேகத்தை மெதுவாகக் குறைத்த வேல்முருகன், சாலையில் திரும்பி, சிறிது தூரம் சென்றவுடன், சாலையின் இருபுறமும் புதியதும், பழையதுமான வீடுகளும், கடைகளும் வந்தது. இன்னும் சற்று மேலே போக, இடதுபுறமாக ஒரு மண்சாலை பிரிந்தது. தூரத்தில் எங்கோ பறைகளும், தப்புகளும் அடிக்கும் ஓசையும் கேட்டது. வேல்முருகன் வாகனத்தை நிறுத்தினான்.

உறங்கிக் கொண்டிருந்த கிழவியை மெதுவாக உசுப்பினாள் இந்துமதி, “ஏம்மா.. நீங்க இறங்கவேண்டிய இடம் வந்தாச்சான்னு பாருங்க.. !”

அயர்ந்த தூக்கத்திலிருந்து கண்விழித்த கிழவி, சூழ்நிலை புரியாமல் சற்று தடுமாறுவது தெரிந்தது. காருக்குள் அமர்ந்தபடியே குனிந்து நிமிர்ந்து இடப்புறமும், வலப்புறமும் பார்த்துக் கொண்டாள். மெதுவாய்ப் பின்பக்கமும் திரும்பிப் பார்த்தாள். பழக்கமான இடம்தான் என்று தோன்றியிருக்க வேண்டும்.

“இங்கதான்மா.. இங்கியே எறங்கிக்கிறேன்.. , இந்த ரோட்டுலேயே கொஞ்ச தூரம் போனா, நீங்க கேட்ட கோயில் வந்துடும். நல்லபடியாப் போயிட்டு வாங்கம்மா.. !, ” இந்துமதி கதவைத் திறந்துவிட, காரிலிருந்து இறங்கிய கிழவி, நால்வரையும் பார்த்து கைகூப்பினாள். வேல்முருகன் சிரித்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினான். ஊரிலிருந்து வடகிழக்காக, இடப்புறம் பிரிந்து செல்லும் அந்த மண்சாலையில், கிழவி இறங்கி நடந்துபோவது தெரிந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து, மழைக்காலத்தில் அதிகமாகவும், மற்ற காலங்களில் குறைவாகவும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிற ஒரு காட்டாற்றின் கரையில் அமைந்திருந்தது அந்த அம்மன் கோவில். பிரகார மண்டபங்களும், வேலைப் பாடமைந்த தூண்களும் சிலநூற்றாண்டுப் பழமையை பறை சாற்றிக் கொண்டிருந்தன.

கோவிலைச் சுற்றிலும் பரந்த அளவில் இருந்த இடத்தில், சிறு மண்டபம், பலவிதமான சிலைகள், வேலைப்பாடுடன் கூடிய விளக்குத்தூண்கள், பாம்புப் புற்று, அதன் முன்னால் குத்திவைக்கப்பட்ட விதவிதமான உயரத்தில் வேல்கம்புகள், நீண்ட மைதானத்தை நோக்கியபடி கல்லினால் ஆன இருக்கைகள், சுமைதாங்கிகளைப் போன்ற அமைப்பிலிருந்தவற்றில் இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலிகள்.. , மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னனியில் தெரிகின்ற கோவிலின் கோபுரம்;;.. , செதுக்கி, முழுமைப்படுத்தப் படாமல் ஆங்காங்கே புழுதியும் மண்ணும் மூடிக்கிடந்த ஏராளமான சிற்பங்கள்.. ,

கோவில் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள், அலங்கார மின்விளக்குகள், கோவில் கோபுரத்திற்கும், சுற்றிலுமுள்ள பகுதிக்கும் இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்கோபுர விளக்குகள், குறுக்கும் நெடுக்குமாய் சென்று கொண்டிருந்த மின்சாரவயர்கள், நகரப்பேருந்திலிருந்து இறங்கி, கோவிலுக்கு வந்து கொண்டிருந்தவர்களின் கைபேசியிலிருந்து ஒலித்த விதவிதமான ரிங்டோன்கள்.. , என பழமையும், புதுமையும் கலந்து காட்சியளித்துக் கொண்டிருந்த அந்தக் கோவில், வேல்முருகனுக்கு பிரமிப்பைத் தந்தது. கையிலிருந்த கேமராவில், கோவிலில் இருந்தவற்றை விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுக்கத் துவங்கிவிட்டான்.

“ஏங்க.. முதல்லே போய் சாமியைக் கும்பிட்டு வந்துட்டு, அப்புறமா போட்டோ எடுங்க, வந்தவுடனே உங்க வேலையைக் காட்டணுமா.. ?” இந்துமதியின் குரலில் லேசான கண்டிப்பும், கிண்டலும்.

“சரி தாயே.. அப்படியே செய்வோம்.. ” வேல்முருகனும் அதே தொனியில் பதிலிறுத்துவிட்டு, கேமராவை பைக்குள் போட்டுக் கொண்டான். எல்லோரும் உள்ளே சென்று தரிசனம் செய்தனர். கர்ப்பக் கிரகத்திலிருந்த அம்மனை புகைப்படம் எடுக்கலாமா.. ? என்று கேட்டபோது, பூசாரி அனுமதிக்க மறுத்துவிட்டார்.

கோவில் மண்டபத்தை விட்டு வெளியே வந்த பக்தர்கள் நேராக, கோவிலின் வலப்புறம் ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையிலிருந்த மண்டபத்திற்கு சென்றனர். இவர்களும் பின்னாலேயே செல்ல, அவ்வளவாக சிற்பவேலைப்பாடுகள் இல்லாமல், ஏதோ பழைய வீடு போலத் தோற்றமளித்துக் கொண்டிருந்த, அந்த மண்டபத்தினுள் தனிப்பிரகாரம், கருவறை என்றில்லாமல், மண்டபத்தின் நட்ட நடுவில், ஆளுயரத்தில் நின்றுகொண்டிருந்தது ஒரு அம்மன் சிலை.. !,

‘ஒரே கோவிலில் இரண்டு அம்மன் சிலைகளா.. ? இருட்டில் பார்த்தால் அங்கே ஒரு இளம்பெண்தான் நிற்கிறாள் என யாரும் ஏமாறக் கூடும்.. !. பெரும்பாலும் கோவில்களில் இதுபோன்று சிலைகள் இருப்பதும், அதற்கு பூசைகள் நடப்பதும் வழக்கத்தில் இல்லையே.. !’ வேல்முருகனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

தரிசனத்திற்காக நின்ற மக்களுக்கு, பூசைகளை முடித்து வெளியே வந்த சற்றே வயதான பூசாரி, அனைவருக்கும் பிரசாதங்களைக் கொடுத்தார். தனக்கு முன்னே நீட்டப்பட்ட விபூதித் தட்டில், முழுதாய் ஒரு ஐம்பது ரூபாயைப் போட்டான் வேல்முருகன். பூசாரி துணுக்குற்று நிமிர்வது தெரிந்தது. அவன் நேசமாய் சிரிக்க, இப்போது பூசாரிக்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.

தரிசனத்திற்கு வந்தவர்கள் எல்லாம் யந்திரகதியில் வெளியே நகர, வேல்முருகன் அங்கேயே நின்றிருந்தான். அவனுக்காக இந்துமதியும், குழந்தைகளும் நின்றனர். தட்டினை, சிலையின் காலடியில் வைத்துவிட்டு, பணத்தையும், சில்லறைகளையும் இடுப்புவேட்டியில் கட்டிக் கொண்டு பூசாரி திரும்பினார். இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கும் வேல்முருகனைப் பார்த்து அவர் லேசாக அதிர்ச்சியடைவது தெரிந்தது.

“சாமி.. ஒண்ணுமில்லே.. இந்த அம்மனைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னுதான் நிக்கிறேன். எல்லா கோவிலுக்கும், சாமிக்கும் தலபுராணம்னு ஏதாவது இருக்குமில்லையா.. ? அதுவும் இந்தமாதிரி நான் எந்தக் கோவில்லேயும் பார்த்ததில்லே. ”

‘அப்பாடி.. நாம்; நினைத்தபடி.. இந்த ஆள், அறநிலையத் துறை அதிகாரியெல்லாம் இல்லை.. ’ என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருக்க வேண்டும். அவர் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். முகத்தில் லேசாக புன்னகை பரவியது. அடுத்து இன்னும் அரைமணி கழித்துத்தான் நகரப்பேருந்து வரும் என்பதால், அதுவரை கூட்டமிருக்காது என்றும் அறிந்திருந்த பூசாரி, வேல்முருகனுக்கு “தலபுராணம்” சொல்லத் துவங்கினார். “ஒரு ஐநூறு வருஷங்களுக்கு முன்னாலே.. ”, இந்துமதியும் கதை கேட்கும் ஆவலில் வேல்முருகனை நெருங்கி நின்று கொண்டாள்.

குழந்தைகள் இருவரும் ஆற்றில் லேசாக ஓடிக் கொண்டிருந்த முழங்காலளவு தண்ணீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்த ஊருக்குன்னு இருந்த ராசா ரொம்ப கொடுமைக்காரனா இருந்தானாம். அவன் ராசாவாகிப் போனதாலே அவன் வெச்சதுதான் சட்டம். யாரும் கேள்வி கேப்பாரு இல்லையாம்.. , எல்லா நெலமும் ராசாவுக்குத்தான் சொந்தம். அதிலே வேலை செய்யறதுக்கு இருந்த ஜனக் கூட்டத்துக்கு அவங் குடுக்கறதுதான் கூலி. அரைப்பட்டினி, கொலப் பட்டினின்னுதான் ஜனக் கூட்டம் அடிமையா இருந்துச்சாம். எல்லை தாண்டிப் போனா தலையை சீவிடுவான் இல்லாட்டி அதா தெரியுதுபாரு சங்கிலி தொங்கற கல்லு. அதுலே கட்டிவெச்சு மனுசன் உயிரோட இருக்கும்போதே அவங்க தோலை உரிப்பாங்க. அப்படியுமில்லாட்டி மாறுகால் மாறு கை வாங்கிப் போடுவாங்க. சாகவும் முடியாம, பொழைக்கவும் முடியாம பொணமாட்டம்தான் இருக்கோணும். இந்த மாதிரி தண்டணைக்கு பயந்துகிட்டு, இங்கியே கிடந்து பொழச்சாங்க.. ! என்னைக்காவது ஒரு நல்ல கதி கெடைக்கும்னு நம்பிக்கையும் அவங்களுக்கு இருந்துச்சு.

அப்படித்தான் ஒரு நாளு, கீழத்தெருவிலிருந்த ஒரு கூலிக்காரனுக்கு ஒடம்பு முடியாமப் போனதினாலே, அவனோட மக, பதினெட்டு வயசுக்காரியான மகேசுவரி கதிர் அறுப்புக்கு வந்தா. அந்நேரம் பாத்து, காலங்காத்தாலே எங்கியோ போயிக்கிட்டிருந்த ராசா கண்ணுலே அவ பட்டுத் தொலைக்க, அப்படியே தூக்கிட்டுப் போயி அரமணையிலே போடுங்கடான்னு உத்தரவு போட்டுட்டான். ராசாவோட வாழ்க்கைலே இதெல்லாம் இல்லாம இருக்குமா என்ன.. ?

மகேசுவரியோட அப்பனுக்கு சேதி தெரிஞ்சு, நாயம் கேக்க அரமணைக்கு போனவன், உச்சிவெயிலு ஏறுறதுக்குள்ளே அரமணை வாசலுலே பொணமாத்தான் கெடந்தான். போலீசுக்காரங்க வந்து, வெஷம் குடிச்சு தானா செத்துப் போயிட்டான்னு கேசு எழுதிட்டுப் போயிடடாங்க.. !. ராசா போட்டு வெச்சுருக்குற உத்தரவு அப்படி.. !, ஊரு ஜனமெல்லாம் வாயிலேயும், வவுத்துலேயும் அடிச்சிகிட்டு, ஆதரவில்லாம அழுது பொரண்டு, பொணத்தைக் கொண்டுபோய் அடக்கம் பண்ணிட்டாங்க.. !”

இந்தமதிக்கு ‘திக்’கென்றிருந்தது. “ஐநூறு வருஷத்துக்கு முன்பு நடைபெற்றதாகச் சொல்லப்படும் வரலாற்றில், ‘போலீசுக்காரங்க’ எப்படி வந்தாங்க.. ?” பூசாரியிடம் கேட்டே விட்டாள்.

இப்போது விழிப்பது பூசாரியின் முறையாகப் போயிற்று. ‘பலபேருக்கு இந்தத் தலபுராணத்தை சொல்லியிருந்த போதும், யாரும் இப்படியொரு கேள்வியைக் கேட்டதில்லையே.. !’ பதிலாக எதைச் சொல்வது யோசிக்க அவகாசமில்லை. “எனக்குத் தெரியாது சாமி, எங்கப்பா எனக்கு சொன்னதைத்தான் இப்ப ஒங்களுக்கு சொல்றேன். ”

நம்பினால் நம்பு, நம்பாவிட்டால் போ.. என்பதுபோல பூசாரியின் குரலில் ஒரு சலிப்பு. , இந்துமதியை நோக்கிய வேல்முருகன், குறுக்கிடாதே’ என்பதுபோல தலையசைத்து சைகை காட்ட, அவள் ஓரடி பின்சென்றாள்.

தொடர்ந்து “சரிங்க சாமி, அரண்மணைன்னு சொல்றீங்க.. , அது இங்க எங்க இருக்கு.. நாம போயி அதையெல்லாம் பாக்க முடியுமா.. ?” தனதுமேல் சட்டைப் பையில் கைவைத்துக் கொண்டே வேல்முருகன் கேட்க, இந்துமதியின் கண்களிலும் ஆவல் மிகுந்தது.

பூசாரியின் கண்களில் இப்போது லேசான ஏமாற்றம். , “அது இந்தக் கோயிலுக்கு பின்னாடிதான் இருந்துச்சு. அது அழிஞ்சு நிறையக் காலமும் ஆச்சு.. . ”

“சரி.. அப்புறம்.. ”

கதையைத் தொடர்ந்தார் பூசாரி, பொழுது சாயும்போது அரமணைக்கு திரும்பி வந்த ராசா, மொந்தை மொந்தையாக் கள்ளைக் குடிச்சுகிட்டான். நல்ல போதையேறிகிச்சு. காவக்காரங்க, சேவைக்காரங்களைக் கூப்பிட்டு, மகேசுவரியக் கொண்டு வாங்கடான்னான். வரமுடியாதுன்னு மொரண்டு புடிச்சு நின்ன அவளை பத்து ஆளுக சேந்துதான் இழுத்துகிட்டு வர முடிஞ்சது. ,

சண்டைக் கோழி மாதிரி வெறச்சுகிட்டு, பத்ரகாளி மாதிரி மொறைச்சுகிட்டு அவ நிக்கறதைப் பாக்க, ராசாவுக்கே கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. இருந்தாலும், ஒரு ராசாகிட்டே, கூலிக்காரி பலம் காட்டுறதா, இவளுக்கு பயந்துபோய் உட்டுட்டா அப்புறம் ராசாவை எவன் மதிப்பான்னும் ராசாக்கு தோணிப்போச்சு.

“எல்லாம் அவளை விட்டு வெலகுங்கடா.. ”ன்னு ராசா உத்தரவு போட, எல்லாம் தள்ளிப் போயி நின்னுகிட்டாங்க. சிம்மாசனத்துலேயிருந்து இறங்கின ராசா பக்கம் வரவர, மகேசுவரி வெலகி, வெலகிப் போயிகிட்டே இருந்தா.. , எலியை ஓடவிட்டு வெளையாடுற கடுவன் பூனை மாதிரி, ராசா தொரத்திகிட்டே ஓட, அவ நந்தவனத்துக்குள்ளே ஓடிப்போயிட்டா. பின்னாலேயே ஓடிப்போன ராசா, அவமேலே பாயுறதை எல்லாரும் பாத்தாங்க.. , அதுக்கப்புறம் ராசாகிட்டேயும் சரி, மகேசுவரிகிட்டேயும் சரி எந்த சத்தமும் வரலே.

இருட்டு மெதுவா இறங்கி, நெலாவும் மேல வந்துருச்சு. “அவ பொணத்தை எடுத்து எரிங்கடான்னு.. ”எப்பவும் உத்தரவு போடற ராசா, ரொம்ப நேரமா திரும்பி வரலேன்னதும், எல்லாருக்கும் சந்தேகம் வந்திருச்சு. மூத்த காவக்காரன் ஒருத்தன், பந்தத்தைப் பத்தவெச்சுகிட்டு, மெதுவா நந்தவனத்துக்குள்ளே போயிப் பாக்க.. , தலை நசுங்கிப் போயி செத்துக் கெடந்தாரு ராசா.. , பக்கத்துலேயே ரத்தம் வழியுற முகத்தோட, விரிச்சுப் போட்ட தலையோட, நெலா வெளிச்சத்துலே மின்னிகிட்டு, ஓங்காரக் காளியாட்டம் உக்கிரமா ஒரு காலு தரையிலே ஊணிகிட்டு, அங்க கிடந்த பாறைமேலே உக்காந்துகிட்டு, இருந்தா மகேசுவரி.

நெலகொலஞ்சு போன காவக்காரன், ஒண்ணுக்கு ஒழுகுற வேட்டியோட.. திரும்பி வந்து மூச்சு வாங்க, “காளியாத்தா.. மாதிரி நிக்குறா அவ.. , பாக்கவே பயமா இருக்கு.. எல்லாரும் வாங்கடான்னு.. ” கூவ, எல்லாருமா சேந்து போனாங்க.. , ராசா தலை ரத்தமும் சதையுமா நசுங்கிக் கிடந்தது. ஆனா, மகேசுவரியை இப்பக் காணோம். எல்லாப் பக்கமும் காவக்காரங்க தேடிகிட்டு இருக்கும்போது, திடீர்னு கருத்த வானத்துலேருந்து, சூரியனைக் கிள்ளிப்போட்ட மாதிரி ஒரு மின்னலும், ஓங்கார சத்தத்தோட இடியொண்ணும் நந்தவனத்துலே இறங்க, பாதிப்பேருக்கு கண்ணுபோச்சு. எல்லாரும் பயந்துகிட்டு தேடறதை நிறுத்திபுட்டாங்க.. ,

காளியாத்தாதான் மகேசுவரியா அவதாரமெடுத்து வந்து, கன்னிப் பொண்ணுகளை நாசாமாக்கிகிட்டு இருந்த ராசாவைத் தண்டிச்சுட்டதா மறுநாள் ஊர்பூராவும் பேச்சு. காவக்காரங்க சிலபேரு, “மகேசுவரி ஒரு வெளிச்சம் மாதிரி.. ” வானத்துலே பறந்து போனதைப் பாத்ததாகவும் சொன்னாங்க.. , இதனாலே, மகேசுவரியாப் பொறந்து வளந்தது எல்லாமே அம்மன்தான்னு எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சு.. , அதுக்கப்புறம், கொஞ்சநாள் கழிச்சு மகேசுவரி அம்மன் கனவுலே வந்து சொன்னதா.. ஊருக்குள்ளே எந்நேரமும் அழுதுகிட்டிருந்த ஒரு கல்தச்சன்தான் இந்த விக்கிரகத்தை அச்சுஅசலாக அப்படியே செஞ்சு கொண்டுவந்து இந்தக் கோயிலுக்கு கொடுத்தான்.

ராசா வாரிசுக பரிகாரத்துக்காக கட்டிக் கொடுத்த இந்த தனி மண்டபத்துலே அம்மனை வெச்சு கும்புட்டுட்டு வர்றோம்.

இப்பவும் கன்னிப் பொண்ணுக எல்லாம் மகேசுவரிஅம்மனுக்கு பொங்கல் வெக்கறதுன்னு இங்க தனியா ஒரு நோம்பு இருக்குது தம்பி.. !” பூசாரி முத்தாய்ப்பாக வார்த்தைகளோடு, தலபுராணம் முடிந்தது என்பதை உணர்த்தினார்.

“அப்ப அந்த அரண்மணை.. ?”

“ராசாவோட வாரிசுகள், தெய்வ வாக்குப்படி அதையெல்லாம் இடிச்சுட்டு, ஊருக்குள்ளே தார்சு வீடு கட்டிட்டு குடிபோயிட்டாங்க.. !” பக்தர்கள் சிலர் கூட்டமாய் உள்ளே வர, பூசாரியின் கவனம் அவர்களிடம் திரும்பியது. இந்துமதியும், வேல்முருகனும் வாயிலை நோக்கி நடக்கத்துவங்கினர்.

பூசாரியின் தலபுராணம் இந்துமதிக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. “ஏங்க.. ஐநூறு வருஷத்துக்கு முன்பு போலீசுக்காரங்க.. , தற்கொலைன்னு கேசு.. இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையேங்க.. !”

“அட மண்டூ.. , இன்னுமா உனக்குப் புரியலே.. !, ஐநூறு வருஷம்கிறதை, ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்.. னுங்கிற மாதிரி யோசிச்சு பாரு.. எல்லாம் சரியா வரும். அம்பது வருஷத்துக்கு முன்னேன்னு தலபுராணம் சொன்னா, அது வெறும் சம்பவமாப் போயிடும். ஐநூறு வருஷத்துக்கு முன்னே.. ன்னு சொன்னாத்தான் அது தல வரலாறாகும். இவங்களுக்கு இப்படி சொன்னாத்தான் வசதி. மரியாதை.. தெரிஞ்சுக்கோ.. !” இந்துமதிக்கு இப்போது தெளிவானது.

“அப்ப ராசான்னு அவரு சொன்னது.. ?”

“அது இந்தப் பக்கமிருந்த பழைய ஜமீன்தாரோ, பண்ணையாரோவாக இருக்கும். அவங்களையும் பழைய வழக்கப்படி ராசான்னுதான் ஜனங்க கூப்பிடுவாங்க.. !”

“அடடே.. பேசிகிட்டே போட்டோ எதுவும் எடுக்காம வந்துட்டமே.. இரு.. பூசாரிகிட்டே சொல்லி ரெண்டு போட்டோ எடுத்துட்டு வர்றேன்.. ” இந்துமதியின் பதிலுக்கு காத்திராமல் கேமராவை, பையிலிருந்து எடுத்தபடியே உள்ளே சென்றான்.

பூசாரியிடம் அனுமதி பெற்று, போட்டோ எடுக்க வசதியான, சிலையின் முகத்தில் நல்ல வெளிச்சம் படும்படியான கோணத்தை, தேடிக் கொண்டிருந்தான். பக்தர்கள் சிலர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பது இடையூறாக இருந்தது. கிடைக்கும் இடைவெளியில், ‘கிளிக்’கிவிட வேண்டும் என்று லென்ஸ் வழியாகப் பார்வையைப் பதித்தபடி காத்துக் கொண்டிருந்தான். பூசாரி, வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி அவசரமாய் வெளியேறிக் கொண்டிருந்தார். ஏதோவொரு உருவம், மகேசுவரி அம்மனுக்கு மிக அருகில் நின்று சிலையின் முகத்தை, உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

லென்சை இன்னும் சற்று 'ஜும்' செய்தபோது, சிலையின் முகமும், அந்த உருவத்தின் முகமும் இப்போது மிக அருகாமையில் எதிரெதிராய் தெரிந்தது. கோணம் அழகாய் இருக்கிறதே என்று அவனுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்ட அதேவிநாடி, இரண்டு முகங்களும் ஏறக்குறைய ஒரேமாதிரியிருப்பதும் அப்போதுதான் அவனுக்கு உரைத்தது.. , ‘கிளிக்’

கண்களிலிருந்து கேமராவை நகர்த்திக் கொண்டு நிமிர்ந்தான். இப்போது மகேசுவரி அம்மன் முகத்தை தனது இருகைகளாலும், சொட்டும் கண்ணீருடன் லேசாக வருடிக் கொண்டிருந்த, அந்த உருவத்தைப் பார்த்த வேல்முருகனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அது, இவர்களோடு காரில் வந்த அந்தக் கிழவிதான்.. !

- பொள்ளாச்சி அபி (sunpollachi@gmail.com)

Pin It