இந்த வெயில் காலம் தொடங்கியதில் இருந்தே மாரியின் வேதனை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போனது. இரவும் பகலும் அவளது மனத்துக்குள் இருந்த ஊமை வலியும் கூடியபடியே இருந்தது.

யாரிடம் சொல்வாள்? எப்படி சொல்வாள்? ஒரு காலத்தில் ஊரார் எல்லோரும் தங்களின் குறைகளை, ஏக்கங்களை, ஆசைகளை, வேதனைகளை இவளிடம் சொல்லி உருகினர். நெடுஞ்சாண் கிடையாய் இவளது கால்களில் விழுந்து கதறினர். சிலர் இவளை வாய்க்கு வந்தபடி ஏசினர். ‘நீ என்ன கல்லா?' என்று ஆத்திரப்பட்டனர். கல்லா என்று தன்னிடமே கேட்கும் இந்த மனிதர்களின் விசித்திரகுணம் இவளுக்கு ரொம்பவும் பிடித்துப்போய் இருந்தது. அப்போதெல்லாம் தலைகால் புரியாத கர்வத்தில் மந்தகாசப் புன்னகையோடு வீற்றிருப்பாள்.

எல்லாம் ஒரு காலம். அவை ஒரு கனவு போல் மாறிவிட்டது இன்று. பரிவாரங்கள் புடைசூழ, முகத்தில் தேஜஸ் ஒளிர, காட்டுக்கும், ஊருக்கும் காவல் தேவதையாய் அருளை வழங்கிக்கொண்டிருந்தவள் இந்த வெயில் காலத்திற்குப் பயந்து நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கொடுமையை அவளால் யாரிடம்தான் சொல்ல முடியும்?

வெயில் தலையை பிளந்து கொண்டிருந்தது. முகத்தில் வியர்வை ஆறாய் பெருகுவதைப்போல உணர்ந்த மாரியம்மாள் அதை துடைக்கலாம் என்று இடது கையை உயர்த்தினாள். உள்ளங்கை உடைந்து நொறுங்கிப் போன முழங்கையைப் பார்த்தபின்புதான் தனக்கு கை உடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டதே உரைத்தது. கடந்த கால நினைவுகளில் மூழ்கிவிட்டால் இப்படித்தான் உடைந்த கையின் வலிகூட மறந்து விடுகிறது அவளுக்கு.

இப்போது கை வலி அவளை முகம் சுளிக்க வைத்தது. "ஐயோ... அம்மா' என்று பல்லைக்கடித்து முனகினாள். ஊரே அம்மா... தாயே... என்று இவளிடம் முறையிட்டதெல்லாம் இவளுக்குள் மீண்டும் நிழலாட, வேதனை பலமடங்கு கூடியது.

அதெல்லாம் வசந்தகாலம், அது மீண்டும் வரும் நாளுக்காகத்தான் இந்த வேதனைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறாள் பாவம். திரும்பி இடது புறம் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆலயத்தைப் பார்த்தாள். கம்பீரமாக, நெடு நெடுவென உயர்ந்து நிற்கிறது கட்டடம். தளம்போட்டு முடிந்து, பூசு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. எல்லாம் முடிய எப்படியும் இன்னும் ஐந்தாறு மாதங்களாவது ஆகலாம்.

“வர்ற ஆடி மாசம் கும்பாபிசேகம் பண்ணிடணும்... அக்கம்பக்கத்து ஊர்க்காரங்களெல்லாம் அசந்துபோறமாதிரி செய்யணும்'' என்று கவுன்சிலர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பது மாரியின் காதிலும் விழுந்துகொண்டுதான் இருந்தது. ஆடி மாதத்திற்கு இன்னும் நான்கு மாதங்கள் முழுதாய் இருந்தன. அதுவரை இந்த மொட்டை வேப்பமரத்தடியில் எப்படி உட்கார்ந்திருக்கப்போகிறோமோ என நினைத்ததும் குப்பென்ற வேர்த்தது மாரிக்கு.

பேசாமல் பழைய கோயிலிலேயே இருந்துவிட்டிருக்கலாம் என்று நினைத்தவளுக்கு அவ்வப்போது மழைக்கு ஒழுகினாலும் அதுவே தேவலாம் போல இருந்தது.

“புதுசா கோயில கட்டறம்னு நம்மள இப்டி வெயில்லயும், மழையிலயும் சாகடிக்கிறாங்களே'' என்று பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த சிங்கங்களைப் பார்த்து முனகினாள் மாரி. இவளது புலம்பல் காதுகளில விழாதது போல அமைதியாக காட்டையே வெறித்துக்கொண்டிருந்தன அந்த சிங்கங்கள். அதைப் பார்த்ததும் ஆத்திரம் பொங்கியது அவளுக்கு.

“சே... நன்றி கெட்ட சிங்கங்கள்... ஒரு வார்த்தை ஆறுதலாக சொன்னால் என்ன'' என்று பொறுமிக் கொண்டவள் தன் பழைய சொர்க்கத்தை மீண்டும் நினைத்துப்பார்க்கத் தொடங்கினாள். கடந்த ஆறு மாத காலமாக அது ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல்.

இவள் இந்த ஆலயத்திற்குள் குடியேறிய நாளிலிருந்து ராஜமரியாதையுடன்தான் வாழ்ந்து வந்தாள். அப்போது இவளுக்கு பணிவிடை செய்ய கன்னியம்மாள் என்ற கிழவி இருந்தாள். அவள் இவளது ஆலயத்திற்கு வரும்போது கிழவியாக இல்லாமல் நல்ல வாளிப்பாகத்தான் இருந்தாள்.

கன்னியம்மாவின் வீட்டுக்காரன் குடித்து கும்மாளம் போடும்போதெல்லாம் இவளிடம் முறையிட தினமும் வருவாள். அடி, உதை, ஏச்சுக்கள் தாங்காமல் கதறுவாள். இந்த நரகத்திலிருந்து விடுதலையே கிடையாதா என்று உருகி உருகி இவளிடம் வேண்டுவாள். தினமும் விளக்கேற்றி, சூலத்தில் எலுமிச்சைக் குத்தி கால்களில் விழுவாள். அமாவாசையானால் சேவல் அறுத்து ரத்தபலி கொடுத்துவிட்டு தன்னை காக்கும்படி இவளிடம் நம்பிக்கையோடு வேண்டுவாள்.

குடித்து குடல் வெந்து ஒருநாள் போதையிலேயே பரலோகம் போன கணவனின் சாவுக்கு ஒரு வாரம் அழுதவள், அவனிடமிருந்து மாரிதான் தனக்கு விடுதலை கொடுத்ததாக நம்பி, நன்றிக் கடனாக இவளின் கோயிலை தினமும் பெருக்கி, கழுவி, விளக்கேற்றிவிட்டுப் போனாள். குழந்தை பெறாத, கட்டு விடாத கன்னியம்மாவின் மதர்த்த உடலும், பளபளக்கும் மாநிறமும் சிலருக்கு எச்சிலை ஊரவைக்க, பாதுகாப்புக்காக ஆலயத்தையே சுற்றிக்கொண்டு கிடந்தாள். கழுவ, பெறுக்க, துடைக்க என ஆலயத்திலேயே பகலை ஓட்டியவள், இரவின் தொல்லைகளை சமாளிக்க, ராத்திரிகளிலும் ஆலயத்திலேயே படுக்கத் தொடங்கினாள். பாதுகாப்புக்காக மஞ்சள் சேலை, மஞ்சள் ரவிக்கை உடுத்தி, கழுத்தில் கருப்பு மணிகளை அணிந்து மாரியம்மாளாகவே தன்னையும் மாற்றிக் கொண்டாள்.

மாரிக்கும் அது வசதியாக இருந்தது. பகலில் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு, இரவில் தனிமையில் வீற்றிருக்கும் இவளுக்கு ஒரு துணையாக கன்னியம்மாள் இருக்கட்டுமே என்று அமைதியாக அவளை ஏற்றுக்கொண்டாள். கட்டான உடலோடு வந்த கன்னியம்மாள், ஆடிமாத இரவுகளில், தலைக்குக் குளித்து, கோவிலுக்குள் உடை மாற்றும்போது அவளது மேனியை அவளே ரசிப்பாள். மாரியின் நிமிர்ந்த முலைகளையும், தனது முலைகளையும் மாறி மாறிப் பார்ப்பாள், ஒத்த வடிவில் கல் போன்று "திண்'ணென்று நிற்கும் தன் முலைகளைப் பார்த்து அவளுக்கு சில நேரங்களில் பெருமையாகக்கூட இருக்கும்.

அப்போதெல்லாம் மாரியும் தன் முலைகளை ஒருமுறை கன்னியம்மாளுக்குத் தெரியாமல் குனிந்து பார்த்துக்கொள்வாள். தனது அவயங்களை அளவோடு, அழகாக படைத்தவனுக்கு அப்போது நன்றி சொல்லிக்கொள்வாள். சில இரவுகளில் உறக்கம் பிடிக்காமல் தவிப்பும், தகிப்புமாய் படுக்கையில் புரளும் கன்னியம்மாள் நடு இரவுகளில் மாரியின் முன்நின்று கண்மூடி, உருக்கமாய் வேண்டி, விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, முறிந்துவிழும் கிளையைப்போல படுக்கையில் விழுவாள்.

விடியற்காலையில் தொடங்கும் பக்தர்களின் முறையீடுகளையும், குறைகளையும் கேட்டு அருள்பாலிப்பது, அவர்களின் நேர்த்திக் கடன்களை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வது என பொழுதுகள் விடிவதும், மறைவதுமாக, ஓடிய ஓட்டத்தில் மாரி மாற்றமில்லாமலேயே இருக்க, கன்னியம்மாள் மட்டும் முடி நரைத்து, உடல் தளர்ந்து, பார்வை குறைந்தாலும் சேவகத்தைத் தொடர்ந்தாள்.

கன்னியம்மாளுக்கு முதுமையின் தளர்வுகள் தொடர்ந்தபோதும் மாரிக்கு அவள் ஒரு குறையும் வைத்ததில்லை. வெள்ளிக்கிழமைகளில் மாரியின் உடைகளைக் களைந்து பெருமூச்சோடு மஞ்சள் நீர் ஊற்றி, சந்தனம், குங்குமம் பூசி, மாலை சூட்டி, சூடம் கொளுத்தி, காலில் விழுந்து வணங்கி விரதம் இருந்து எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக்கொண்டாள். பெருமூச்சு விட்டுக்கொள்ளும் கன்னியம்மாளைப் பார்க்க பாவமாக இருக்கும், அதே நேரம் பெருமையாகவும் இருக்கும் மாரிக்கு. இப்படியே ஓடிய பரபரப்பான வாழ்க்கையில் ஒருநாள், ஆற்றில் வராமல் வந்த வெள்ளத்தைப் பார்க்க, ஆவலோடு போன கன்னியம்மாள், ஆசை மிகுதியில் புது வெள்ளத்தில் குளிக்க, அதிகமான வெள்ளத்தால் ஆற்றோடு போய்விட்டாள்.

“கோயில்ல பூச பண்றவளே ஆத்துல பூட்டாளே... இன்னா தப்பு தண்ட்டா பண்ணாளோ... மாரியாத்தாளே கங்கையில காவு வாங்கிட்டா...'' என்று ஊர் பேசியது. அதைத் தொடங்கி வைத்தவன் ஒரு காலத்தில் கன்னியம்மாவிடம் துடைப்பக்கட்டையால் அடிவாங்கிய கவுன்சிலர் கோவிந்தசாமி.

ஊர் பேசுவதைக்கேட்டு பதைத்துப்போனாள் மாரி. வாழ்நாள் பூராவும் தனக்கு சேவை செய்த கன்னியம்மாளை தான் காவு வாங்கவில்லை என்பதை யாரிடம் எப்படி சொல்வது என புரியாமல் தவித்தாள் மாரி. ஊர் நாட்டாமையின் கனவிலாவது சொல்லிவிடலாம் என நினைத்தாள். அந்த முயற்சியும் இவளுக்கு கைகூடவில்லை. தன்னால் ஒரு உண்மையையே யார் கனவிலும் சொல்ல முடியாதபோது, சிலர் கனவில் "ஆத்தா சொன்னதாக' எது எதுவோ செய்கிறார்களே, பராசக்திக்கும், காமாட்சிக்கும் மட்டும் அது எப்படி முடிகிறது என்று நினைத்து பொறாமைப் பட்டுக்கொண்டாள் மாரி.

கன்னியம்மாள் இல்லாதது மாரிக்கு பெரும் குறையாக இருந்தது. அவள் போனபிறகு ஒன்றிரண்டு மாதங்கள் கோயிலைப் பெருக்கி விளக்கேற்றிய சோனமுத்துவுக்கு, இவள் மீதான பக்தியைவிட நாட்டுச்சரக்கின்மீதான பக்தி கூடிவிட, சாராய உறைகளை மடியில் கட்டிக்கொண்டு சதா கவிழ்ந்து கிடந்தான்.

பக்தர்களின் வரவும் முன்புபோல இல்லாததால் பகலிலேயே "போர்' அடிக்கத் தொடங்கிவிட்டது மாரிக்கு. நாட்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தபோதுதான் இவளின் காதுக்கு அந்த செய்தி வந்தது. பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் எட்டி மரத்தின்கீழ் அருள்பாலித்துக்கொண்டிருந்த கொள்ளாபுரியம்மனுக்கு புதிய ஆலயம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது இவளுக்கு பொறாமையாகக்கூட இருந்தது.

இவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் எட்டிமரத்தின் கீழ்தான் இருக்கிறாள். பாதி மழையிலும், பாதி வெயிலிலும் கிடக்கும் அவளைப்பார்க்க சில நேரங்களில் இவளுக்கே பாவமாகக்கூட இருக்கும். தனக்கு சிறிய கோயிலைக்கட்டி, குடி வைத்த ஊர்க்காரர்களை நினைத்து இவள் பெருமை கொள்வாள். அதற்காகவே இந்த ஊர் மக்களுக்கு நல்லதே நடக்க வேண்டுமென்று நினைப்பாள். அப்போதெல்லாம் கொள்ளாபுரி அம்மனை கண்களில் பெருமைமிளிர ஒரு பார்வை பார்ப்பாள். அவளோ எந்த சலனமும் இன்றி இருப்பாள். இரண்டு முழ துணியால் சுற்றப்பட்ட வெறும் பலகைக்கல்தான் அவள். ஆனால் மாரியோ பட்டுப்புடவை உடுத்திய தேஜஸ் வீசும் வடிவழகி.

அதனால் கொள்ளாபுரிக்கு புதிய ஆலயம் கட்டத் தொடங்கியபோது மாரிக்கு கொஞ்சம் அல்ல, நிறையவே பொறாமையாக இருந்தது. பெங்களூர்க்காரர்கள் சிலபேர் சேர்ந்து, பணம் வசூல் செய்து வேலையைத் தொடங்கினர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொள்ளாபுரியின் ஆலயம் வளர்ந்து, மொசைக் போட்டு, மின்விளக்கு வசதியுடன், "நூதன கும்பாபிஷேகம்' அமர்க்களப்பட்டது. எருமைக் கிடாய் வெட்டி, மண்டலப்பூசையும் முடிந்து ஜம்மென்று ஆலயத்திற்குள் உட்கார்ந்துவிட்டாள் கொள்ளாபுரி. துணைக்கு வேறுசில சிலைகளையும் வைத்தனர்.

அந்த புதிய ஆலயம் எழுந்தபிறகு, மாரியைவிட கொள்ளாபுரியைப் பார்க்கவே அதிகமாகப் போனார்கள் பக்தர்கள். நாளடைவில் இவளை மறந்து அவளையே சுற்றத் தொடங்கினர். மாரிக்கு பொறாமை தாளவில்லை. எல்லோரையும் வசியம் செய்து திருப்பிக் கொண்டாளே "சக்காளத்தி' என்று உள்ளுக்குள் புழுங்கினாள்.

ஆடி மாதம் ஒரு நாள் மட்டும் ஆட்டுக்கடா வெட்டி, சேவல் அறுத்து, பொங்கலிட்டு இவளிடம் வேண்டிக்கொள்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்ட மக்கள், நாளடைவில் தன்னை மறந்து விடுவார்களோ என்ற வேதனையில் உருகத் தொடங்கினாள். இவளோடு சேர்ந்து இவளது ஆலயமும் கவனிப்பின்றி உருகத் தொடங்கியது. அதற்குள் கொள்ளாபுரி ஆலயத்தை முன்னின்று கட்டிய பெரியசாமி உடலில் சர்க்கரை அதிகமாகி, ஒருநாள் திடீரென மாரடைப்பால் சிவபதவி அடைந்துவிட, கொள்ளாபுரி அம்மன் ஆலய கவனிப்பும் கேள்விக்குறியானது. இப்போது இரண்டு பேருமே காட்டில் முகத்தைத் திருப்பிக்கொண்டு வீம்பாய் உட்கார்ந்திருக்க, ஊர்க்காரர்கள் ஊரின் தொடக்கத்தில் இருக்கும் கிராம தேவதையான பொன்னியம்மன் ஆலயத்தை புதுப்பிக்கத் தொடங்கி விட்டனர்.

பொன்னியம்மாள் சைவம். ஊருக்குள் நுழைகிற எல்லோருமே அவளை வணங்கிவிட்டுதான் வருவார்கள். வெளியே போகிறவர்களும் அவளைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டுதான் போவார்கள். வழியிலேயே வீற்றிருந்து போவோர், வருவோர் எல்லாரையும் ஆசீர்வதித்து அருள்பாலிப்பதால் அவளுக்கு எப்போதுமே பெருமிதம் அதிகம்.

"போற போக்குலதான அவளப்பாக்கறாங்க... ஆனா நம்மள எப்பவாவது பார்த்தாலும் தேடி வந்தில்ல பாக்கறாங்க' என்று மனதைத் தேற்றிக்கொள்வார்கள் மாரியும், கொள்ளாபுரியும்.

நாளாக நாளாக மாரியம்மன் ஆலயத்தின் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. மழைக்காலத்தில் ஒழுகத் தொடங்கியது. அதுவும் மாரியின் தலைமீதே ஒழுகத் தொடங்கியது அவளை எரிச்சல் படுத்தியது. ஈரம் சேர்ந்ததும் புற்று வளர்ந்தது. புற்றைப் பாôக்க கொஞ்சம் பேர் வந்தனர். அடுத்த வெயில் காலத்தில் அந்த புற்றும் காணாமல் போனது. மீண்டும் சீந்துவாரின்றி கிடந்தாள் மாரி.

பொன்னியம்மனும் பளபளக்கும் மொசைக் ஆலயத்தில் அருள்பாலிக்கத் தொடங்கி விட்டதால் அப்போதைக்கு ஒழுகும் ஆலயம் மாரியினுடையதுதான். நாட்கள் சோகை பிடித்ததுபோல நகர்ந்து கொண்டிருந்தன. இவள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஆடி மாதமும் வந்து விட்டது. நீண்ட நாட்களாக குளிக்காமல் நாறிக்கிடந்தவளின் தலையில் அந்த ஆடி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று குடம் தண்ணீரைக் கவிழ்தான் சோனமுத்து. உற்சாகம் தொற்றிக்கொண்டது மாரிக்கு. ஆலயத்தைப் பெருக்கி, கழுவி, மஞ்சள் குங்குமம் பூச எங்கும் பக்தி மணத்தது. மதியத்திற்குமேல் பொங்கல் கூடைகளுடன் வந்த பெண்களும், குழந்தைகளும் சிரிப்பும், சிணுங்கல்கலுமாய் மூன்று கல் அடுப்புகளைப் பற்ற வைத்து பொங்கலிட்டனர். ஆட்டுக்கடாவை இழுத்துவந்த ஆண்கள், கவுன்சிலருக்காக காத்திருந்தபோது மாரிக்கு எரிச்சலாக வந்தது. மாதக்கணக்காக பொங்கல், பூசையின்றி, ரத்த வாடையின்றி ஏங்கிக்கிடந்தவளின் நாக்கு ஊறும்போது, கவுன்சிலருக்காக காத்துக்கிடப்பவர்களை எரித்துவிடுவதைப்போலப் பார்த்தாள்.

இருட்டத் தொடங்கியபோது நான்கு சக்கர வாகனத்தில் வந்த கவுன்சிலர் பயபக்தியோடு இவளை வணங்கினார். ஆத்திரத்தில் முகத்தைத் திருப்பிக்கொள்ளலாமா என்று நினைத்த மாரி, அது முடியாமல் போக, உம்மென்று உட்கார்ந்திருந்தாள். இவளது மூன்றாவது கையின் கிண்ணத்தில் இருந்த குங்குமத்தை எடுத்து பக்தியோடு நெற்றியில் தடவிக்கொண்ட கவுன்சிலர் "பலி கொடுங்கப்பா' என்றார்.

எல்லாம் முடிந்து ஊர்மக்கள் திரும்பத் தொடங்கியபோது, ஆலயத்தை சுற்றிச்சுற்றி வந்த கவுன்சிலர், உடன் இருந்த சீனிமுத்துவிடம் மிகுந்த பணிவுடன் சொன்னார்,

“பங்காளி... கோயிலு ரொம்ப டேமேஜ் ஆயிச்சில்ல... இத இட்சிட்டு புதுக்கோயிலு கட்டலாமான்னு பாக்கறேன்... என்னால முடிஞ்சத போட்டு, அதுங்கூட கொஞ்சம் வசூல் பண்ணி கட்டிடலாமா?'' என்றார்.

இதைக்கேட்டதும் மாரியின் காதுகளில் தேன் பாய்ந்தது. உடல் விம்மி புல்லரித்தது. அதுவரை கவுன்சிலரை எரிச்சலோடு பார்த்துக்கொண்டிருந்த மாரி... பழைய கசப்புகள் மறந்து, இப்போது அருள்சொரியும் பார்வையும், புன்சிரிப்புமாக பார்த்தாள்.

“தலைவரே... பெர்சாமி கொள்ளாபுரியம்மா கோயில கட்டி செத்தாலும் பேரோட செத்துட்டாரு... லட்சுமணன் பொன்னியம்மா கோயிலக் கட்டி பேரு வாங்கிட்டாரு... நீ இந்த மாரியம்மா கோயில கட்னீனா உம்பேரும் நிக்கும்'' என்றான் சீனிமுத்து.

சீனிமுத்துவை குடிகாரன் என்று உள்ளுக்குள் ஏசிக்கொண்டிருந்த மாரி அன்று அவனையும் அருள்சொரியப்பார்த்தாள்.

“பங்காளி... என்னா செலவானாலும் பரவால்ல... உடனே ஒரு வாரத்துலேயே வேலய ஆரம்பிச்சுட்லாம்...'' என்றார் கவுன்சிலர்.

மாரிக்கு கும்மாளம் தாங்க முடியவில்லை. மனசு குதி குதி என்று குதித்தது. அவர்கள் போனதும் மனசு விட்டு சிரித்தாள். ஆலயத்தின் மேலிருந்த சிங்கங்கள் குனிந்து கீழே பார்த்தன.

“அட சோம்பேறி சிங்கங்களா... நமக்கும் நல்ல காலம் பொறந்திடுச்சி..'' என்றாள் மாரி. அதைக்கேட்டு அவை உற்சாகத்தில் வாலை ஒரு சுழற்று சுழற்றி கூரையில் அடித்தன. அங்கிருந்த காரை பெயர்ந்து சிதறியது. மாரி முறைக்கவும், வாலை சுருட்டிக்கொண்டு உட்கார்ந்தன.

அடுத்த ஞாயிறு காலையிலேயே ஊர்மக்கள் கூடினர். ஒரு இடது கையில் சூலம், மற்றொன்றில் உடுக்கை, ஒரு வலது கையில் குங்குமம் போக, மற்றொரு கையை உயர்த்தி அருள்பாலித்துக்கொண்டிருந்த மாரிக்கு பூசைப்போட்டு விழுந்து வணங்கினர்.

"என் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு' என்று மனசு பொங்க ஆசீர்வதித்தாள்.

ஆலயத்திற்குள் இருந்த தட்டு முட்டு சாமான்களை வெளியே கொண்டுபோய் வைத்தனர்.

“டேய் செலய அலுக்கா... உசாரா பேத்து எடுங்கடா'' என்றார் கவுன்சிலர்.

இரண்டுபேர் சிலையின் தலையையும் கைகளையும் பிடித்து லோசாக ஆட்டினர். அசைய மறுத்தது. கடப்பாரையை சிலையின் பீடத்தில் லேசாக இடித்து, சுண்ணாம்புக்காரையை மெதுவாக உடைத்தனர். மீண்டும் அசைத்தபோது சிலை லேசாக ஆடியது. ஒருவன் அடிப்பாகத்தையும், இன்னொருவன் கைகளையும் பிடித்து சற்று வேகமாக அசைக்க, சட்டென்று மாரியின் இடது கை அதிலிருந்த சூலத்தோடு உடைத்துக்கொண்டது.

“அய்யய்யோ... கைய ஒடச்சீட்டீங்களேடா... உசாரா எடுங்கடான்னு அப்பவே சொன்னனே..'' என்று பதறினார் கவுன்சிலர். மெதுவாக அசைத்து அசைத்து சிலையைத் தூக்கியவர்கள் அதைக்கொண்டுபோய் கோயிலுக்கு பக்கத்திலிருந்த வேப்ப மரத்தடியில் வைத்தனர். ஆலயத்தின் மீதிருந்த இரண்டு சிங்கங்களையும் பெயர்த்துக்கொண்டு வந்தனர். அப்போது ஒரு சிங்கத்தின் வலதுகால் உடைத்துக்கொண்டது.

வேப்பமரத்தடியில் மாரி இடது கை ஒடிந்தாலும், கம்பீரமாய் இருப்பதைப்போன்ற பாவனையில் வலது கையை உயர்த்தி அருள்பாலித்துக் கொண்டிருக்க, ஆலயத்தை இடித்துவிட்டு புதிய ஆலயம் கட்டும்பணி தொடங்கியது. அடுத்த ஐப்பசி, கார்த்திகை மழையில் நனைந்து, ஊறி, உதறல் எடுத்து, ஜன்னி கண்டு ஒருவாறு சமாளித்த மாரி, அடுத்து வந்த சித்திரை வெயிலின், உக்கிரம் தாங்க முடியாமல் தவித்தாள். வெயில் காலத்தின் இடையிலேயே சுழற்றி சுழற்றி அடித்த மழையில் நனைந்து திணறினாள். பகலில் கொளுத்தும் வெயிலும், மாலையில் வெளுக்கும் மழையும் மாரிக்கும், சிங்கங்களுக்கும் சவாலாக இருந்தன. இந்த மொட்டை வேப்பமரம் கிளைகளின்றி இவளது பழைய ஆலயத்தைப்போலவே அலங்கோலமாய் இருந்தது.

ஆலயத்தின் எதிரே உள்ள ஆலமரத்தின் கீழே வைத்திருக்கலாம். அந்த ஆலமரம் ஒரு காலத்தில் இவளது பாதுகாப்பில், விரிந்து, பரந்து கிடந்தது. அதில் யாரும் கால் வைத்து ஏறமாட்டார்கள். சாமி மரம். ஒருமுறை அதன் இலைகளை ஒரு வியாபாரி ஏலம் எடுத்து, இலைகளை அறுக்கத் தொடங்கினான். நல்ல வெயில் காலம் அது. அந்த வியாபாரிக்கு திடீரென காய்ச்சல் கண்டுவிட, மாரியம்மனின் கோபம் என்று ஊர் பேச, பயந்துபோன வியாபாரி பாதியிலேயே ஓடிவிட்டான். அதெல்லாம் ஒருகாலம். ஆலயமே கவனிப்பின்றி கிடந்தபோது மரத்துக்கு சொல்ல வேண்டுமா? ஆல மரத்தில் ஏறி, அதிலுள்ள காய்ந்த கிளைகளை விறகுக்கு ஒடிக்கிறார்கள் ஆண்கள். பிள்ளைகள் விழுதில் தொங்கி ஊஞ்சல் ஆடுகின்றன. என்றாலும் இந்த வெயில் மழையிலிருந்து அது தன்னை ஓரளவாவது காத்திருக்கும் என்று நினைத்த மாரி, திரும்பி புதிய ஆலயத்தைப் பார்த்தாள்.

கம்பீரமாக நிற்கிறது கட்டடம். உள்பீடம், வெளிபீடம், வராந்தா. எதிரில் சூலங்கள் தாங்க பீடம். பார்க்கப்பார்க்க பெருமையாக இருந்தது. பெத்தவங்களுக்கு கஞ்சி ஊத்தாத கலிகாலம்னு சொல்றபோது, தனக்காக இத்தனை பெரிய ஆலயம் கட்டும் கவுன்சிலரை நினைத்து நினைத்துப் பெருமைப் பட்டாள்.

சீக்கிரம் வேலைகள் முடிந்து தன்னை உள்ளே உட்கார வைத்து, கும்பாபிஷேகம் நடத்திவிட்டால் போதும், தானுண்டு, அருள்பாலிக்கும் தன் வேலையுண்டு என இருந்து விடலாம் என நினைத்தபடி, தலைக்குமேல் நின்று காயும் சூரியனை எரிச்சலோடு பார்த்தாள்.

தாங்க முடியாத வெக்கையால் மேனி தகித்தது. பக்கவாட்டிலிருந்த இரண்டு சிங்கங்களையும் பார்த்தாள். ஒன்று வலதுகால் ஒடிந்த வேதனையில் படுத்துகொண்டிருந்தது. இன்னொன்று தூங்கி வழிந்துகொண்டிருந்தது. அதற்கு மூலம். ஒரு காலத்தில் இவை இரண்டும் இரவில் காட்டில் வேட்டையாடிவிட்டு, பின்னால் உள்ள குளத்தில் நீர் அருந்துவதாக மக்கள் பேசிக்கொள்வார்கள். இப்போது நகராமல் படுக்க வைத்த இடத்திலேயே படுத்துக்கிடக்கின்றன.

“ஒரே எடத்துல பட்த்துகினு இர்ந்தா மூலம் வராம... சூலமா வரும்? எங்கனா காலாற ஒலாத்திட்டு வரவேண்டியதுதான?'' என்று சிங்கத்தை முறைத்தாள் மாரி.

“பட்த்துகினு கீற எனுக்கே மூலம்னா... இத்தினி வர்சமா ஒரே எட்துல குத்தவச்சி சமானமா உக்காந்துகினு கீற உனுக்கு?'' என்று பார்வையாலேயே திருப்பிக்கேட்டது அந்த சிங்கம்.

சட்டென்று பார்வையை மாற்றிய மாரி எதிரே விரிந்து கிடந்த வனாந்திரத்தைப் பார்த்தாள். ஒரு காலத்தில் புளியமரங்களும்  புங்க மரங்களும், எட்டி, இலுப்பை, வேம்பு, பனை, ஈச்சம் மரங்களும் நிறைந்த காடு அது. முயல், நரி, சிங்கம், காட்டுப்பன்றி நிறைந்து திரியும். இப்போது வெட்ட வெளியாய் கிடந்தது. ஒன்றிரண்டு சாராய மரங்களும், பனை மரங்களும் மட்டும் நிற்கின்றன.

"இதுல எங்க வேட்டை ஆடுவது? வேட்டையாட காடுமில்லை, குளத்தில் குடிக்க நீருமில்லை' என்று நினைத்துக்கொண்ட மாரி, ஆலயத்தில் ஒயரிங் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

ஆலயப் பணிகள் நிறையும் தருவாயில் இருந்தது. வண்ணம் பூசியாகிவிட்டது. மொசைக், வண்ண விளக்குகள் மின்னின.

அப்போது முதுகையும், அக்குளையும் மாறி மாறி சொரிந்தபடி ஆலயத்தைச் சுற்றிப்பார்த்த சீனுவாச சாஸ்திரி, “ரொம்ப அமர்களமாக கட்டிட்டீங்க கவுன்சிலர். அம்பாளோட அருள் உங்களுக்கு பூரணமா கெடைக்கும்... அப்படியே சுத்தி ஒரு காம்பவுண்ட் கட்டி... கேட்டுக்குப் பக்கத்தில சின்னதா ஒரு புள்ளையார் கோயிலையும் கட்டிடுங்க... கணபதி இல்லேன்னா ஆலயம் பூர்த்தியாவாது... அத கட்டிட்டா நானும் தெனமும் வந்து புள்ளையாரப்பனுக்கு பூசய பண்ணி எங்காலத்தையும் ஓட்டிடுவேன்...'' என்றார்.

“சரி சாமி... கட்டிடலாம்'' என்றார் கவுன்சிலர்.

வேப்பமரத்தடியில் இருந்த மாரியம்மன் சிலையை உற்றுப்பார்த்த ஐயர் அலறினார். “இன்னா... கவுன்சிலரே... செலயோட கை ஒடஞ்சிபோயிருக்கே... பின்னமான செலய வணங்கக்கூடாதே... புது ஆலயத்தில இதயா வைக்கப்போறீங்க... கூடாது, கூடாது... புது செலய செஞ்சி வெச்சிடுங்க'' என்றார்.

பகீரென்றது மாரிக்கு. "ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரிய வெரட்னமாதிரி... நம்ம கத அவ்ளோதானா... அடடா எத்தன வருசமா இந்த சனங்களுக்கு நாம அருள்பா-க்கிறோம்... அந்த நன்றியை மறக்கமாட்டாங்க...' என்று சுதாரித்துக்கொண்ட மாரி அவர்களையே பயத்துடன் பார்த்தாள்.

“இந்த செலய இன்னா பண்றது சாமி'' என்று கேட்டார் கவுன்சிலர்.

“ஒடஞ்ச செல இருக்கக்கூடாது... எங்கனா கெனத்துல கொண்டுபோய் போட்டுடுங்க'' என்றார் ஐயர்.

உள்ளம் அதிர, விக்கித்துப்போன மாரி, கவுன்சிலர் என்ன சொல்லப்போகிறாரோ என்று அவரையே உற்றுப் பார்த்தாள்.

“சரி சாமி... அப்டியே செஞ்சிடறோம்..'' என்றார் அவர்.

அதைக்கேட்டதும் காதுகளில் இடிவிழ, கண்கள் இருள மூர்ச்சையானாள் மாரி.

- கவிப்பித்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It