நடுவண் மற்றும் தமிழக அரசுகளின் தேர்தல் நாடகங்கள்

நாகப்பட்டிணம் மீனவர்களான ஜெயக்குமார் சிங்களப்படையினரால் நடுக்கடலில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டவுடன் கடற்கரை மாவட்டங்களில் மீனவர்கள் கொதித்தெழுந்து போராட்டங்களை நடத்தினர். அப்போது அதுவரை மீனவர் பிரச்சினையில் எந்த தலையிடும் செய்யாத, அச்சமூகத்தினர் மீது எந்த அக்கறையும் காட்டாத பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுஸ்மா ஸ்வராஜ் ஜெயக்குமாரின் வீட்டிற்கு சென்று, தான் இந்த பிரச்சினையை தமிழக மீனவர்கள் என்று பார்க்காமல் இந்திய மீனவர்கள் என்று பார்ப்பதாகவும் உரிய மட்டத்தில் எழுப்பப்போவதாகவும் கூறினார். நடுவண் அரசு முன்னதாக நடந்த சம்பவங்களை கடுமையாக எடுத்து கொண்டிருந்தால் இந்த இரு சம்பவங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் நடுவண் அரசு, இதற்கு மேலும் மௌனமாக இருந்தால் தமிழர் மீது அது கடைப்பிடித்து வரும் காழ்ப்புணர்வு அம்பலமாகிவிடும் என்று வெளியுறவுச் செயலர் நிருபமா ராவை இலங்கைக்கு அனுப்பியது.

கொழும்பு சென்ற நிருபமா ராவ் ராஜபக்சே அரசிடம் தனது கண்டனத்தை தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கை அரசு இவ்விவகாரத்தில் இலங்கையின் கப்பற்படை சம்பந்தபடவில்லை என்றும் மூன்றாவது நபர் யாரோ செய்துள்ளனர் என்று சமாளித்தாகவும் அதற்கு நிருபமா ராவ் இலங்கை கப்பற்படை சுட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரங்களை அளித்து இனிமேலும் இந்திய அரசு இது போன்ற செயல்களை பொறுத்துக் கொள்ளாது என்று வன்மையாக கண்டித்தாகவும் செய்திகள் வெளியிடப்பட்ட‌ன. தமிழக முதல்வர் கருணாநிதியும் தமிழக மீனவர்கள் எல்லை மீறிச் சென்று மீன் பிடித்தால் அவர்களை கைது செய்து சட்டப்படி நடத்தலாமே தவிர சுடக்கூடாது, துன்புறுத்தக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து நாகப்பட்டிணம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 112 பேர் இலங்கை தமிழ் மீனவர்களால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டனர்.

இதன் எதிரொலியாக மீனவர்கள் பல மாவட்டங்களில் போராட்டங்களில் போராட்டங்களை நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தனர். ஆளும்கட்சியான திமுகவே உலக மகா ஊழல் புகழ் கனிமொழியின் தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்தினர். இதற்குப் பின்னர் இப்பிரச்சினையில் அதுவரை மௌனமாக இருந்த மன்மோகன்சிங் திருவாயைத் திறந்து வார்த்தை முத்துக்களை கொட்டினார். இதுபோன்ற நடத்தைகளை அண்டைய நாடுகள் மத்தியில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

இவை அனைத்தும் மீனவர்களின் மத்தியில் எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே நடைபெறவுள்ள தமிழக தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் நாடகங்கள் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மீனவர் பிரச்சினை, கச்சத்தீவை இந்தியா தாரை வார்த்தற்கு பின்னர் துவங்கவில்லை. அதற்கு முன்னரே 1950களிலிருந்தே இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் கச்சத்தீவை இந்தியா தனது விரிவாதிக்க நலன்களுக்காக தாரை வார்த்ததிலிருந்து அதிகரிக்கத் தொடங்கியது எனலாம்.

இதுவரை கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையில் 539 மீனவர்கள் சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான கொலைகளுக்கு இந்திய தண்டனைச்சட்டத்தின்படி காவல்துறையினரால் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு சரி அதற்கு அப்பால் சிங்களப்படையினர் மீதோ பொறுப்பு அதிகாரியின் மீதோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அதற்கு காரணம் இந்தியாவின் விரிவாதிக்க நலன்கள்தான். இதை படிக்கும்போது தாய்நாட்டை விமர்சிக்கலாமா என்ற கேள்வி எழலாம். எனவே தொடர்ந்து படிக்கும் முன்னர், சில அடிப்படையான விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம்.

நாட்டுப்பற்று, தேசபக்தி என்ற சொல்லாடல்களுக்கு தவறான பொருளையே ஊடகங்கள் பரப்பி வருகின்றன. தாய்நாடு இன்னொரு நாட்டின்மீது படையெடுக்கும் போதோ அதை வெற்றிக்கொள்ளும்போதோ பெருமிதம் கொள்கின்றனர். இந்த அடிப்படையில் நாடு வல்லரசாக திகழ்வதை பெருமையாக கொள்கின்றனர். தாய்நாடு மற்றொரு நாட்டினை நியாயமான உணர்வுடன் கண்டிக்காமல் இருப்பது தேசிய வெறியாகும். வல்லரசு என்பதே மற்ற நாடுகளை மிரட்டி அடிபணிய வைப்பது, போர் தொடுப்பது, நாடுகளை அடிமைப்படுத்துவது இராணுவரீதியாக தலையிடுவது போன்றவற்றை இடைவெளியில்லாமல் மேற்கொள்ளுவது ஆகும். இதனால்தான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த வல்லரசுகளும் உலகம் முழுவதும் வெறுக்கப்படுகின்றன. ஆனால் இங்கே வல்லரசு ஆவதற்கும் மற்ற நாடுகளின் மீது விரிவாதிக்கம் செய்வதற்கும் பல ஆண்டுகளாக மூளைச்சலவை செய்யப்பட்டு வருகிறது. இந்த புரிதலுடன் தொடர்ந்து சில கசப்பான உண்மைகளை அறிந்து கொள்வோம்.

தெற்காசிய நாடுகளில் இந்தியாதான் வலிமையான நாடு. தெற்காசிய மண்டலத்தில் தனக்குப் போட்டியாக எந்த நாடும் அரசியல் இயக்கங்களும் வளர்ந்து வருவதை இந்தியா விரும்புவதில்லை. இதற்காக‌ ரா என்ற உளவுப்பிரிவு அமைப்பு தொடர்ந்து வேலை பார்த்து வருகிறது. பாகிஸ்தானை பிளவுப்படுத்தி வங்கதேசத்தை உருவாக்கியது இந்தியாதான். சிக்கிம்மை இந்தியாவில் இணைத்ததும் இதனைத் தொடர்ந்து நேபாளத்தை கட்டுபடுத்துவதும் இதே நோக்கங்களுக்காகத்தான். இலங்கையைப் பொறுத்தவரை அது உருவானதிலிருந்தே தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க அனைத்துவிதமான வழிகளையும் கையாண்டது. இந்திராகாந்தியின் காலத்தில் இலங்கை அரசு அமெரிக்காவை சார்ந்திருந்தது. முழுமையாக அமெரிக்காவின் கட்டுபாட்டுக்குள் வந்து விடுவதைத் தடுக்கவும் அமெரிக்கா இலங்கைக்குள் காலடி வைப்பதையும் தடுக்கவுமே இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாராள மனதுடன் தாரை வார்த்தது. கச்சத்தீவை தாரை வார்த்தபோது அதற்கு ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தது. இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுதான் அது. மற்றபடி கச்சத்தீவுடன் சம்பந்தப்பட்டிருந்த அதனுடன் உயிரோட்டமான உறவு கொண்டிருந்த மீனவர்களையோ மற்ற யாரையுமோ இந்தியா கண்டுகொள்ளவில்லை.

அப்படி மேற்கொள்ளப்பட்ட மீனவரின் உரிமைகள் என்ற பெயரில் கண்துடைப்புக்காக சேர்க்கப்பட்ட பிரிவுகள் யாவன;

1974 ல் இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட உடன்பாட்டின்படி,

•      இந்திய – இலங்கை எல்லைக்கோட்டிலிருந்து தத்தமது நாட்டை நோக்கியுள்ள நீர்த்தொகுதி, தீவுகள், கண்டமேடை, கடல் தரைக்கு கீழுள்ளவை ஆக அனைத்து மீதும் முழுமையான இறைமையும் ஒப்பாரும் மிக்காறும் இல்லா ஆதிக்கமும் இரு நாடுகளுக்கு அவரவரது எல்லைகளுக்குள் உண்டு (விதி 4, 26 ஜூன் 1974 உடன்பாடு)

•      மேற்காணும் 4 ஆம் விதிக்குட்பட்டதாக, இந்திய மீனவரும் இறைவழிப்பாட்டு பயணிகளும் இது காலம்வரை கச்ச தீவுக்கு வந்து போய் அனுபவித்ததைப்போன்று தொடர்ந்தும் வந்து போய் அனுபவிக்க உரிமையுடையவர்கள். இப்பயணிகள், இவ்வாறு வந்து போக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்ளையோ நுழைவு அனுமதிகளையோ பெற வேண்டியதில்லை (விதி 5, ஜூன் 1974 உடன்பாடு)

•      இந்தியரினதும் இலங்கையரினதும் படகுகள் மற்றும் கப்பல்கள் இதுவரை காலமும் எவ்வெவ் உரிமைகளை ஒரு நாட்டவர், மற்றவர் நாட்டுக் கடலில் வழமையாக அனுபவித்தனரோ, அதே உரிமைகளையும் பாத்தியதைகளையும் தொடர்ந்து அனுபவிக்க உரித்துடையர் ( விதி 6, 26 ஜூன் 1974 உடன்பாடு)

இப்போது இந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளைக் காட்டி இதை அமல்படுத்தினால் போதும் இந்த பிரிவுகளை மீறுவதே பிரச்சினை என்று அனைத்து கட்சிகளும் கூறுகின்றனர். இது அடிப்படை பிரச்சினையை திசை திருப்புவதாகும். இலங்கை அரசு தனது கட்டுபாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காக அதன் விருப்பப்படி இந்த தீவு அளிக்கப்பட்டது. அதன் மனங்கோணாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டபடி செயல்படுகின்ற இந்திய அரசு ஒரு போதும் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தாது.

இன்னொருபக்கம் இந்த கச்சத்தீவை திரும்பப்பெற்று விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று ஒரு சேர கூக்குரலிடுகின்றனர். இது இல்லாத ஊருக்கு வழி தேடுவதாகும். இந்தியா தனது ஆதிக்கத்திலுள்ள ஒரு நாட்டிற்கு அது அனுபவிப்பதற்காக கொடுத்ததை திரும்ப பெறாது. எப்படி ஒரு மன்னர் தனக்கு கீழ்ப்பட்ட குறுநில மன்னருக்கு கொடுத்ததை திரும்ப பெற மாட்டானோ அதைப்போலத்தான் இதுவும். இந்தியா ஒருபோதும் தனது ஆதிக்கத்திலுள்ள இலங்கையிடம் முரண்பாடு வளர்த்துக் கொள்ளாது, அது இந்தியாவின் ஆதிக்க நலன்களுக்கு எதிராக செயல்படாத பட்சத்தில். கச்சத்தீவை திரும்ப அளித்து விட்டால் மீனவர் பிரச்சினை தீர்ந்து விடும் என்பது உண்மையல்ல‌.

மீனவர் அதிக மீன்களுக்கு ஆசைப்பட்டு இந்திய எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதாக இலங்கை அரசு கூறி வந்ததை இந்திய அரசும் கூறத் தொடங்கியுள்ளது. இது கடலைப்பற்றி அடிப்படை அறிவே இல்லாமல், பிரச்சினையை பாதிக்கப்படும் மீனவர் மீதே பழி போடும் குள்ள நரித்தனமாகும். முதலாவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லைப்பிரச்சினை என்பதே அடிப்படையில் தவறானதாகும். ஏனெனில் கடலில் சர்வதேச எல்லைக்கோடு 12 கடல் மைல் தொலைவில் உள்ளது. அதாவது 24 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூரமே 30லிருந்து 35 கிலோ மீட்டர்தான். ஆக இந்தியாவிலிருந்து சர்வதேச எல்லைக்கு செல்ல வேண்டுமென்றால் கடல் மைல்அளவுபடி(24 கிலோ மீட்டர்) இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று விடுவோம். அதேபோல் அங்கிருந்து தொடங்கினாலும் இந்திய கடல் எல்லைக்குள் வந்து விடுவோம். எனவே சர்வதேச எல்லை என்பதோ நாட்டு எல்லை என்பதோ இங்கே பொருந்தாத கோட்பாடாகும்.

இரண்டாவது கடல் என்ன தேசிய நெடுஞ்சாலையா? ஆங்காங்கே எல்லை போர்டுகள் நட்டு வைக்கப்பட்டிருக்குமா? கடலுக்குள் காற்று எந்த திசையில் இழுத்து செல்லுமோ, நீரோட்டம் எந்த திசையில் இழுத்து செல்லுமோ, போட்ட வலை எங்கு இழுத்து செல்லுமோ, மீன்கள் எந்த பகுதியில் உள்ளதோ அங்கேதான் மீனவரால் செல்ல முடியும். கடலின் போக்கை எத்தனையோ காரணிகள் தீர்மானிக்கின்றன. நவீன திசைகாட்டி கருவிகள் உள்ள மிகப்பெரிய கப்பல்களும் கலங்களுமே திசை மாறிச்செல்வதுண்டு. சாதாரண பைபர் படகில் செல்லும் மீனவர்கள் எப்படி கற்பனையான எல்லைக்கோட்டை கண்டுபிடிப்பர்?

அடிப்படைப் பிரச்சினை பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் இனப்பிரச்சினை. தமிழர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிதான் தமிழக மீனவரை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி இலங்கை அரசையும் அதனை தனது செல்வாக்கு மண்டலத்தில் வைத்திருக்கும் இந்தியாவையும் பார்க்க வைத்தது. தொடர்ந்து அதே காழ்ப்புணர்வுடன்தான் மீனவர்களை சுட்டுக்கொல்லப்படும்போது அலட்சியப்படுத்த வைக்கிறது.

ஒரு நாட்டின் குடிமகனை இன்னொரு நாட்டின் இராணுவத்தினர் சுட்டுக்கொல்வதை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது. ஆனால் இந்திய அரசு ஏன் 28 ஆண்டுகளாக, ஏன் இன்றும் கூட கண்டு கொள்ளாமல் அதை கடுமையாக எடுத்துக்கொள்ளாமல் உள்ளது? இந்திய அரசு தமிழக மீனவர்களை தனது நாட்டின் குடிமக்களாக என்றுமே கருதியது கிடையாது. அவர்கள் தொலைந்து போனால் கூட ஒரு வழக்கு கூட சட்டப்படி பதிவு செய்து தேடுவதில்லை. அவர்களே தேடிக் கண்டுபிடித்தால்தான் உண்டு.

இப்போது இந்திய மீனவர்களை அதாவது தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றால் துன்புறுத்தி சித்ரவதை செய்தால் இந்திய அரசு தட்டிக்கேட்காது; எந்த நடவடிக்கையும் எடுக்காது என இலங்கை அரசு புரிந்து கொண்டுள்ளது என்பதுதான் இதிலுள்ள வேதனையான விசயம். இந்திய அரசின் விரிவாதிக்க நலன்களுக்காக பகடைக்காய்களாக ஆகி விட்டனர் நமது மீனவர்கள். இதை இப்படியே விட்டு விட முடியுமா? தமிழக தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் சிங்களப் படையினரின் அட்டூழியங்கள் தொடங்கபோவது நிச்சயம். அனைத்து மீனவர்களும் இந்திய அளவில் ஒன்று திரண்டு போராடுவதன் மூலமே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்த எல்லைக்கோடு என்ற பிரச்சினையை இரு நாட்டு மீனவரும் பரஸ்பரம் பேசித் தீர்த்து கொள்ள வேண்டும். 

மத்தியில் ஆள்பவர்களுக்கு தமிழர்களைக் கண்டாலே ஆவதில்லை

எழுத்தாளர் ஜோடி குரூசிடம் ஒரு நேர்காணல்

(நேர்காணல் - சேது ராமலிங்கம்)

எழுத்தாளர் ஜோடி குரூசை பற்றி தமிழக வாசகர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருப்பினும் அவர் ஒரு மீனவ படைப்பாளி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் செய்தி. அவரின் உயிரோடு உணர்வோடு கலந்த படைப்பு ஆழி சூழ் உலகு ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ஓயவில்லை. அவர் சமீபத்திய படைப்பான தோணித்துறையும் அதே அதிர்வுகளை ஏற்படுத்தியது. சிங்களப் படையினர் மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் பிரச்சினையில் உணர்வுப்பூர்வமாக தலையிட்டு வரும் ஜோடி குரூசிடம் ஒரு நேர்காணல்.

கேள்வி: சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்சினையில் தாங்கள் அக்கறையுடன் ஈடுபாடு காட்டி வருகிறீர்கள். இதற்கு ஏதாவது சிறப்பு காரணங்கள் உண்டா?

பதில்: ஒரு பாரம்பரிய மீனவரின் மகனாய் இருப்பதாலும், எம்மவரைப் பற்றிய அக்கறை எனக்கே இல்லை என்றால் வேறு யாருக்கு வரும் என்ற உந்துதலாலும், தொடர்ச்சியான எந்தப் போராட்டமும் ஒரு தெளிவான விடிவை எம் மக்களுக்கு இன்றுவரையும் வழங்காததாலும் என்னால் முடிந்தவரை இந்தப் பிரச்சினையில் பங்கு கொள்கிறேன். அடிக்கிறது வலிக்கிறதாம் என்று சொல்வதைவிடவும், அடிக்கிறது வலிக்கிறது என்பதற்கு வலியும், உயிரும் அதிகமல்லவா... என் பெற்றோர் எனக்குத் தந்த படிப்பும், நான் இதுவரையில் பெற்ற வாழ்வியல் அனுபவமும், என் மக்களுக்கான விடிவுக்காக பாடுபடுகிறதென்றால் அதைவிடவும் மன நிறைவு தரும் விசயங்கள் வேறு என்ன...

கேள்வி: கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையால் இதுவரை 600 மீனவர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் ஊனமுற்றுள்ளனர். இந்திய அரசு இன்றுவரை ஏன் எந்த திட்டவட்டமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

பதில்: மத்தியில் ஆள்பவர்களுக்கு தென் இந்தியர்களைக் கண்டாலே ஆகிறதில்லை, அது ஒரு நதி நீர் பங்கீடாக இருந்தாலும் சரி, வாழ்வாதாரப் பிரச்சினையாக இருந்தாலும் சரி...

தீபகற்பத்தின் தென் பகுதியில் இருப்பவர்களும் மனிதர்களே என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை, இராமாயண காலம் தொட்டே வரும் காழ்ப்புணர்வு. அவர்கள் வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு நெய்தலின் வாழ்க்கை புரிவதே குதிரைக் கொம்பு, இந்த லட்சணத்தில் அவர்கள் வந்து இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லப் போகிறார்களா...

வாழும் நிலம் வேறு, பேசும் மொழி வேறு, கலாச்சாரம் வேறு, வர்க்கம் வேறு, இதற்கிடையில் அரசியல் படுத்தும் பாடும் வேறு. அரசியல்வாதியும் சரி, அரசு அதிகாரியும் சரி, யாருக்கு மக்கள் என்றொரு கூட்டம் இருக்கிறது என்ற எண்ணம் இருக்கிறது. எல்லோருமே இந்திரலோகத்து சுந்தரிகளோடு குடித்தனம் நடத்துகிறவர்கள் போலல்லவா நடந்து கொள்கிறார்கள். பின் அடித்தள மக்கள் பற்றியோ, எல்லைப் புறங்களில் வாழ்பவர் பற்றியோ சிந்தனை யாருக்கு வரும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதெல்லாம் எமது பாட்டன் கணியன் பூங்குன்றனோடு போயாயிற்று. அரசோ, அரசின் அதிகார வர்க்கமோ அல்லது அடித்தள மக்களுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்வதாக பாவனை செய்யும் தொண்டு நிறுவனங்களோ யாருக்கும் பிரச்சினைகள் முடிவடைவதில் எந்த உடன்பாடும் இல்லை. பிரச்சினை, பிரச்சினையாகவே இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் நாம் நன்றாக குளிர்காய முடியுமென்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லாது இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் 600 பேர் இறந்தாலென்ன, 1000 பேர் ஊனமுற்றாலென்ன?

கேள்வி: இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தாலும், அதே போல பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய கடலுக்குள் வந்தாலும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆனால் இதே முறையை ஏன் இலங்கை அரசு கடைபிடிக்க மறுக்கிறது?

பதில்: இங்கு தான் மாபெரும் இந்தியக் கலாச்சாரம் வந்து இலங்கை மீனவர்களைக் காப்பாற்றுகிறது. ஏனென்றால் அவர்கள் இராவணனின் உறவினர்கள்... இந்திய அரசுக்கு அவர் தம் குடியுரிமை பெற்ற மக்கள் மேல் எந்த அக்கறையும் இல்லை என்பது தான் அப்பட்டமாகத் தெரிகிறதே...

கேள்வி: கச்சத்தீவை இந்தியா தாரைவார்த்ததினாலும், அது தொடர்பான ஒப்பந்தத்தினை இலங்கை அரசு மீறுவதால் தான் பிரச்சினை என அனைத்துக் கட்சிகளும் கூறுவது உண்மையா?

பதில்: நமது அரசு அதன் பிள்ளைகளைக் காப்பாற்றத் தவறுகிறது என்பதுதான் உண்மையே தவிர ஒப்பந்தம், அதன் மீறல் என்பதெல்லாம் தேவையில்லாத பிதற்றல்.

கேள்வி: கச்சத்தீவை திரும்ப பெற்றுவிட்டால் மீனவர்கள் பிரச்சினையின்றி மீன்பிடித்து வர முடியுமா?

பதில்: பிரச்சினைக்குரிய பகுதியில் நமது மீனவர்களுக்கான மீன்பிடி தளங்களே கச்சத்தீவின் வடகிழக்கே, ஈழப்பகுதிகளை ஒட்டியுள்ள ஊடுதாவு, நெடுந்தீவுச் சல்லி வாடைய குண்டு போன்ற பகுதிகள்தாம், இந்த நிலையில் கச்சத்தீவை மீட்டுவிட்டால் மட்டும் மீன்பிடி தளங்கள் கிடைத்துவிடுமா என்ன?

கேள்வி: கப்பல் படை அதிகாரிகளும் இந்திய அரசு அதிகாரிகளும் மீனவர்கள் அதிக மீன்பிடிக்க ஆசைப்பட்டு எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் இந்திய எல்லையைத் தாண்டக்கூடாது என்று அவர்கள் கூறி வருகின்றனர். இதைப்பற்றி தாங்களின் கருத்து என்ன?

பதில்: மக்களின் பாதுகாப்புக்காகத்தான் படைகள் இருக்கின்றன. ஆனால் அந்த எண்ணத்தை தென் பகுதியில் முகாமிட்டிருக்கும் படைகள் மறந்து வெகுகாலம் ஆயிற்று. ஒத்திகை நடத்துவதும், விறைப்பான உடை உடுத்தி, புரியாத மொழியில் பேசி மக்களை மிரட்டுவதும் தான் இன்றைய அளவில் இவர்களது குறிக்கோள். நடப்பதோ மீன்வேட்டை, கடலில் எல்லை தாண்டுவதென்பது ஒரு சாதாரண நிகழ்வு.

கேள்வி: மீனவர்களைச் சுடக்கூடாது. அவர்களை சட்டப்படி நடத்துங்கள் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இப்போது இலங்கை அரசு மீனவர்களை கைது செய்யத் தொடங்கியுள்ளது. மீனவர்கள் பிரச்சினையின்றி மீன்பிடிக்க வழியில்லையா?

பதில்: கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா... இங்கு நமது அரசு கைது செய்தவர்களுக்குத் தான் ராஜ வரிசையில் உபசரிப்பும், சாப்பாடும், நம்மவர்களை அவர்கள் நடத்தும் முறையோ நாயிலும் கேவலம், கைதாகி இம்சைப்பட்டு அவமதிக்கப்படுவதை விட இறந்தே போகலாம் என்பதுதான் எம்மவரின் கூற்று.

கேள்வி: கடலுக்குச் செல்லும் மீனவர்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க சட்டப்படி இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா?

பதில்: அரசியலை முன்னிறுத்தி, அடுத்து வரும் தேர்தலையும் முன்னிறுத்தி ஒரு சில தேடல்கள் நடைபெறுகின்றன. சட்டப்படி நடவடிக்கை... என்பதெல்லாம் இலங்கை மீனவருக்கும், அமெரிக்க மீனவருக்குமே கிடைக்கும். மனித உரிமை எம்மவருக்கு அல்ல.

கேள்வி: ஒரு நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் தத்தம் தொழிலில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு சட்டத்தினால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறார்கள். அதுபோல மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சட்டம் உள்ளதா?

பதில்: ஆள்பவர்களுக்கு பாரம்பரிய மீனவர்கள் இந்தியத்தாயின் குடியுரிமை பெற்ற மக்கள் என்ற எண்ணமே இல்லை, பின் எங்கிருந்து சட்டம் பாதுகாப்பு எல்லாம்... கடற்கரை மேலாண்மைத் திட்டம் வந்து மீனவர்களை கடற்கரையிலிருந்து விரட்டுகிறது, கடல் மீன்பிடிச் சட்டம் வந்து கடலுக்குள்ளிருந்தும் மீனவர்களை விரட்டுகிறது.

கேள்வி: ஐ.நாவின் கடல் சட்டத்தை எந்த நாடாவது மதிக்கிறதா? அச்சட்டத்தில் மீனவருக்கு பாதுகாப்பு கிடைக்குமா?

பதில்: தென் இந்திய பாரம்பரிய மீனவர்களுக்கு எங்கிருந்தும், எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை.