Last dayஇன்று உலகம்
என் முன்னே வண்ணங்கள் மறைந்து
வெண் திசையாக உருக்கொண்டது

தாகம் என்னைத் தின்றெடுக்க
என் உயிர்ச்சாறையெல்லாம் கொட்டி
கோடிழுத்தேன்
அலையலையாய் புரண்டெழுந்து ஆரத்தழுவியது

இளைப்பாற நிழல் வேண்டி
கைகளை வெட்டி நட்டுக் காடாக்கினேன்

உருண்டு விளையாட
மார்புகளை வீசியெறிய மலைகளாயின

சலனமற்ற பரப்பில்
கண்களை எடுத்து
ஆற்றில் விட்டேன்
மீன் குஞ்சுகளென
துள்ளிப் பெருகின

என்னுடன் உரையாட
நாவை அறுத்து வானில் எறிந்தேன்
சிறு பறவை ஒன்று
கானத்துடன் பறக்கிறது

ஒரு நாள்
உங்கள் முன்னும்
உலகம் இல்லாமல் போகலாம்


மாலதி மைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It