Catகண்டேன்
அந்த வெண்ணிற பூனையை
கவிதைப் புத்தகம் வாங்கச் செல்கையில்

சந்தடி நிறைந்த சாலையில்
சற்றும் பயமில்லாது
கருமைப் புகை உடலில் படாது
கடுகளவும் தயக்கமின்றி
கம்பீரமாய் கடந்து சென்றது

வழிவிட்டன வாகனங்கள்

கசங்கிய உடை அணிந்த மனிதன்
கல்லெறிவதாய் ஓங்கிய கை கண்டு
ஒளிந்தது ஒரு கடை அருகில்

தேடிய புத்தகம் கிடைத்த திருப்தியில்
விரும்பிய பாடல்
முணுமுணுத்த வண்ணம்
தனியே திரும்பினேன்

சட் சட் டென
வாகனங்கள் நிற்க
உடன் கூடிய கூட்டத்தின் நடுவே

வெண்ணிற உடலில்
சிவப்பு வண்ணம் தெறிக்கப்பட்ட நிலையில்
துடி துடித்துக் கிடந்தது
அப்பூனை

ஓவிய உடலாய்
காணப்பட்ட பூனை
குற்றுயிராய் சாலையின் நடுவே

ஓவியப் பூனை
மனிதனைப் போன்றே
கைகால்களை உதறியது உயிரை வேண்டி

ஸ்தம்பித்துக் கிடந்த
கூட்டத்தினிடையே
வந்தான்
அக்கசங்கிய உடையணிந்தவன்
குழந்தையை அணைப்பதாய்
அப்பூனையின் உடல் தாங்கி
ஓரம் கொண்டு செல்ல

சாலை எப்போதும் போல்
இயல்பாய் சீரானது

மனம் தான் தொலைத்து விட்டது
ஒரு இனிய கவிதையினை
வெண்ணிறம் காண்கையில் எல்லாம்
தொலைந்த கவிதையினைத் தேடிய வண்ணம்


மதுமிதா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.